ராமன் பாலம் சர்ச்சை!
சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் மீண்டும் மக்கள் மத்தியில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்தத் திட்டத்தை இப்பொழுதுள்ள 6 ஆம் வழியில் நிறைவேற்றக் கூடாது என்று அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் செல்வி ஜெயலலிதாவும், சுப்பிரமணியசாமியும் உச்சநீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் இடைக்காலத் தடை விதிக்கப்பட்டு, மீண்டும் உச்சநீதிமன்றத்தில் விவாதங்கள் கிளம்பியுள்ளன.
வழக்கைத் தொடுத்தவர்கள் எடுத்து வைக்கும் விவாதத்தில் அறிவியலோ - பொருளாதார காரணங்களோ, அறிவார்ந்த சிறப்பான காரணங்கேளா இடம்பெறவில்லை.
இந்துக்களின் மத உணர்வை மய்யப்படுத்தி, அந்த உணர்வுக்கு எதிரானது என்று கூறி வருகின்றனர்.
அரசு சார்பில் வாதிட்ட மூத்த வழக்கறிஞர் நாரிமன் - அந்த நம்பிக்கை வழி பார்த்தாலும் - மதம் சார்ந்த கண் ணோட்டத்தில் பார்த்தாலும்கூட, ராமன் கட்டியதாகக் கூறப் படும் பாலத்தை அந்த ராமனே இடித்துவிட்டான் என்று கம்பராமாயணமும், பத்ம புராணமும் கூறியுள்ளதை எடுத்துக்காட்டி, உடைக்கப்பட்ட பாலத்தை யார் வழிபட முடியும்? ராமன் அம்பு எய்தி மூன்றாக உடைத்துவிட்டான் என்று அவர்கள் நம்பும் புராணங்களே கூறியுள்ள நிலையில், நினைவுச் சின்னம் என்ற பேச்சுக்கு இடம் எங்கே என்ற விவாதம் அர்த்தமிக்கது. இதற்கு வழக்குத் தொடுத்த வர்கள் சார்பில் என்ன பதில் கூறக்கூடும்? கம்பராமாயணம் பொய், பத்ம புராணம் உண்மைக்கு மாறானது என்று சொல்லப் போகிறார்களா? அப்படி சொல்லும் பட்சத்தில் புராணம், இதிகாசம் என்பவைகளைக் கணக்கில் எடுத்துக் கொள்ளக்கூடாது என்கிற அரசு தரப்பின் விவாதத்துக்கு வலு சேர்த்ததாக ஆகிவிடாதா?
அறிவியல் ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் வழி காண வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. அதன்வழி பார்த்தாலும்கூட, புராண, இதிகாசத் தகவல்களை, ஆதாரங்களாக எடுத்துக் கொள்ள முடியாதே! அறிவியல் ரீதி என் பதற்கு விளக்கம் - எதையும் விஞ்ஞானக் கண்ணோட்டத்தில் அணுகவேண்டும் என்பதுதானே!
ராமன், சீதை போன்ற பாத்திரங்கள் வரலாற்றுப் பாத்திரங்களல்ல - புலவர்களின் கற்பனைப் படைப்புகள் - அதுவும் பல ஆயிரம் ஆண்டுகளுக்குமுன் கற்பிக்கப்பட்டவை. இந்தக் கால வளர்ச்சிக்கும், சூழலுக்கும் அவற்றைப் பொருத்திப் பார்க்க முற்படுவது கண்டிப்பாக வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை தானே!
அரசியல் ரீதியாக அணுகவேண்டும் என்று நீதிமன்றம் கூறியதற்கு என்ன பொருளோ?
அப்படி அரசியல் ரீதியாக அணுகினாலும்கூட - 2001 ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அ.இ.அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில், மத்திய அரசு இப்பொழுது மேற்கொண்டுள்ள இதே ஆறாவது தடத்தில் தான் திட்டம் நிறைவேற்றப்படவேண்டும் என்று அதிகாரப் பூர்வமாகக் குறிப்பிட்டுள்ளதை அரசு சார்பில் வாதிட்ட மூத்த வழக்கறிஞர் ஆதாரப்பூர்வமாக எடுத்துக்காட்டியுள்ளாரே!
ஒரு திட்டம் நிறைவேற்றப்பட வேண்டுமானால், அது விஞ்ஞானக் கண்ணோட்டத்தில் சரியா? பொருளாதாரக் கண்ணோட்டத்தில் அதன் பயன் என்ன? என்று பார்க்க வேண்டுமே தவிர, புராணங்களில் என்ன கூறப்பட்டுள்ளது? மக்களின் மத நம்பிக்கை இந்தப் பிரச்சினையில் எத்தகையது? என்றெல்லாம் பார்க்க ஆரம்பித்தால், எந்த உருப்படியான செயலையும் எவராலுமே செய்ய முடியாது.
பூமிக்குப் பூமாதேவி - மலைக்குப் பார்வதி என்றும், தண்ணீருக்குக் கங்காதேவி என்றும், காற்றுக்கு வாயு பகவான் என்றும், நெருப்புக்கு அக்னி பகவான் என்றும், பன்றி முதல் ஆமை வரை உள்ள உயிர்கள் கடவுளின் அவதாரங்கள் என்றும், மனிதர்கள் பெரும்பாலும் உண்ணுகின்ற மீன் மச்ச அவ தாரம் என்றும், புராணங்கள் எழுதி வைக்கப்பட்டிருக்கும் ஒரு நாட்டில் எந்தத் திட்டத்தையுமே மேற்கொள்ள முடியாதே!
மத உணர்வு அடிப்படையில் புராணங்களை ஆதாரப் படுத்தி வழக்குத் தொடுக்கிறவர்கள் இன்றும் இருக்கவே செய்கிறார்கள் என்பதும், இத்தகைய வழக்குகளைக் கூட - இருப்பதிலேயே அதிக அதிகாரம் படைத்த உச்சநீதிமன்றம்கூட அனுமதிப்பதும், காலங்கடத்துவதும் பெருமைக்கு உரியதுதானா? என்பது அறிவார்ந்த வினாவாகவே இருக்க முடியும். காலதாமதம் திட்டத்தின் செலவினத்தை மேலும் உயர்த்திக்கொண்டே போகும் என்பதையும் நீதிமன்றங்கள் நினைத்துப் பார்க்கவேண்டும்.
------------- 25-7-2008 -"விடுதலை" தலையங்கம்
Search This Blog
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment