Search This Blog

9.7.08

தேவஸ்தான மசோதா




சென்னை மாகாணத்தில் தேவஸ்தானங்களும், தர்ம ஸ்தாபனங்களும், இந்து மத ஸ்தாபனங்களும், மொத்தத்தில் கோடிக்கணக்கான வரும்படி உடையவைகளாயிருந்தும், அவைகள் குறிப்பிட்ட காரியங்களுக்கு உபயோகப்படாமல் பெரும்பாலும் பிராமணர்களும், தாசி, வேசி முதலிய விபச்சாரிகளும், வக்கீல்களும், அனுபவிக்கவும் - தேவஸ்தான "ட்ரஸ்டி" என்போர்களும், மடாதிபதி யென்போர்களும், சமயாச்சாரி என்போர்களும், லோககுரு என்போர்களும், மகந்துக்கள் என்போர்களும் சுயமாய்த் தங்கள் இஷ்டம்போல் அனுபவிக்கவும் - கொலை, களவு, கள் குடி, விபச்சாரம் முதலிய பஞ்சமா பாதங்களுக்கு உபயோகப்படுத்தவும், சோம்பேறி களுக்கும், விபசாரத் தரகர்களுக்கும், பொங்கிப் போடவும், உபயோகப் படுத்திக் கொண்டு வருவதைத் தென்னிந்தியர்கள் வெகுகாலமாய் அறிந்து வந்திருக்கிறார்களென்பதை நாம் கூறத் தேவையில்லை.

அதன் பலனாய், "காங்கிரஸ் கான்பரன்ஸ்" என்று சொல்லப்படும் ராஜீய ஸ்தாபனங்களின் மூலமாயும், பல சமய சபைகள் மூலமாயும், இவ்வக்கிரமங்களையெல்லாம் அடக்கிக் கோடிக்கணக்கான வரும்படி யுள்ள சொத்துக்கள் ஒழுங்காய் பரிபாலிக்கப்படவும், அதன் வரும்படிகள் குறிப்பிட்ட விஷயங்களுக்குக் கிரமமாய் உபயோகிக்கப்படவும், மீதியிருந்தால் இந்துமத சம்பந்தமான ஒழுக்கங் கற்பிக்க பொது ஜனங்களுக்கு உபயோகப்படவும் தக்கதான ஓர் சட்டம் செய்ய வேண்டியது நமது அரசாங்கத்தின் முக்கியக் கடனென்றும், கொஞ்சமும் காலதாமதம் செய்யாமல் உடனே செய்யப்படவேண்டியது மிகவும் அவசியமானதென்றும், இதுவரை செய்யாமல் அரசாங்கத்தார் கவலையீனமாயிருந்தது பெரிய குற்றமென்றும், இதற்கு முன் இதற்காக ஆயிரத்தெட்டு நூற்றுப்பதினேழிலும், ஆயிரத்தெட்டு நூற்று அறுபத்திமூன்றிலும் அரசாங்கத்தாரால் செய்யப்பட்டிருக்கும் இந்து மத தர்ம சொத்துக்கள் பரிபாலன சட்டம் போதுமான அளவு பந்தோபஸ்தளிக்கக் கூடியதாயில்லையென்றும், பல தீர்மானங்களைச் செய்து அரசாங்கத்திற்கு அனுப்பியுமிருக்கிறது.

உதாரணமாக, ஈரோட்டில் 1915 வருஷம் ஜுலை மாதம் 24, 25 தேதிகளில் டாக்டர் டி.எம்.நாயர் அவர்கள் அக்கிராசனத்தின் கீழ் நடந்த கோயமுத்தூர் ஜில்லா இரண்டாவது கான்பரன்ஸ் என்னும் ராஜீய மகாநாட்டில் 8 வது தீர்மானமாக அடியிற்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

அதாவது " தர்ம ஸ்தாபனங்கள் மத சம்பந்தமான தேவாலயங்கள் சரிவர பரிபாலனம் செய்யப்படாததால் கிரமமாய் நடக்கும் வண்ணம் இப்போதிருக்கிற சட்டத்தைக் கொஞ்சமேனும் தாமதிக்காமல் சீர்திருத்தம் செய்து மாற்றிவிட வேண்டுமென்று கவர்ன்மெண்டாரை இக்கூட்டம் வற்புறுத்துகிறது" (இந்தத் தீர்மானத்தை சிறீமான் வி.வி.நரசிம்ம ஐயர்தான் பிரேரேபித்திருக்கிறார் என்பது நமது ஞாபகம்)

இவற்றை அனுசரித்தே சர்க்காரிலுள்ள இது சம்பந்தமான அதிகாரம், ஒரு இந்திய மந்திரியின் கைக்கு வந்ததும் அதற்கு வேண்டிய ஏற்பாடுகள் செய்து, "சென்னை இந்துமத பரிபாலன மசோதா" என்னும் பெயரால் ஓர் சட்டத்தை இயற்றி பொதுமக்கள் பிரதிநிதியென்று சொல்லும் சட்டசபை அங்கத்தினர்களின் சம்மதம் பெற்று நிறைவேற்றி அமுலுக்குக் கொண்டுவரப்பட்டிருக்கிறது.

இந்தச் சட்டமானது மேலே குறிப்பிட்டபடி தர்ம சொத்துக்களை அதன் கிரமமான உபயோகத்திற்கு அன்றி, தங்களுடைய சுயநலத்துக்காக உபயோகித்துக்கொண்டு வந்த சில மடாதிபதிகளுக்கும், பொதுமக்கள் தர்ம சொத்தைத் தங்கள் வகுப்பார்களே உண்ணவேணூம் என்னும் கருத்தின் பேரில் சூழ்ச்சி செய்து பொதுமக்களிடம் பணம்பறித்து, தங்கள் வகுப்பார்க்கே பொங்கிப்போட்டுக் கொண்டிருந்த சில சமயாச்சாரிகளென்போரான சில பிராமணர்களுக்கும், அதன் பலனாய்த் தின்று கொழுத்துத் திரிந்து கொண்டிருக்கும் சில திண்ணைத் தூங்கிகளுக்கும், இவர்களின் தீச்செயல்களுக்கு அனுகூலமாயிருந்து, பணம் பறித்துக் கொண்டிருந்த வக்கீல்கள், பஞ்சமாபாதகத் தரகர்கள், முதலியவர்களுக்கும் விரோதமாயிருந்தபடியாலும் இக்கூட்டத்தார் பெரும்பாலும் பிராமணர்களென்று சொல்லப்படுவோராயிருந்து விட்டபடியாலும், இவைகளுக்கு ஏராளமாக சொத்துக்கள் விட்டவர்களும், இன்னமும் கொடுத்துக் கொண்டிருக்கிறவர்களும், பிராமணரல்லா தாராயிருப்பதனாலும் இந்த சட்டமானது பிராமணர்களுக்கு விரோத மாகவும் பிராமணரல்லாதார்களுக்கு அனுகூலமாகவும் இருப்பதாக ஏற்பட்டுப் போய்விட்டது.

இதனால், இக்கூட்டத்தைச் சேர்ந்த பிராமணர்களெல்லாம் ஒன்றுசேர்ந்து இந்தச் சட்டமானது மதத்திற்கு விரோதமானது என்றும், மதமே போய்விட்டதென்றும், சர்க்காரார் இந்துமதத்தில் பிரவேசித்து விட்டார்களென்றும், ஜஸ்டிஸ் கட்சி மெம்பர்களும் மந்திரிகளும் இச்சட்டத்தை உண்டாக்க அனுகூலமாயிருந்தார்களென்றும், பொய்யழுகை அழுதும், பொய்ப்பழி சுமத்தியும், தங்கள் ஜாதிப் பத்திரிகைகளான, ",ந்து", "சுதேசமித்திரன்", "சுயராஜ்யா" முதலிய பிராமணப் பத்திரிகைகள் மூலமாய்ச் சூழ்ச்சிப் பிரசாரம் செய்தும், பிராமணரல்லாதாரான சில அப்பாவிகளை ஏமாற்றியும், பிராமண கீர்த்திக்கு ஆசைப்பட்ட சில பயங்கொள்ளிகளைச் சுவாதீனம் செய்து கொண்டும் இச்சட்டத்தை ஒரேயடியாகத் தொலைத்துவிடத் தங்களாலான முயற்சிகளெல்லாம் செய்து பார்த்தார்கள்.

ஜஸ்டிஸ் கட்சி மந்திரிகள், மெம்பர்கள் முதலானவர்களுடைய உறுதியினாலும், முயற்சியினாலும், சிறீமான்களான ஈ.வெ.ராமசாமி நாயக்கர், வரதராஜுலு நாயுடு முதலியவர்கள் இந்தச் சட்டத்தின் அனுகூலத்தைப் பொது ஜனங்களுக்கு எடுத்துக்காட்டி - இந்து மதத்திற்கும் இந்துமத பரிபாலனத்திற்கும் இச்சட்டத்தால் யாதொரு கெடுதியும் உண்டாகாது என்றும், ஆனால் "ஊரார் முதலைத் தின்று வாழ்வதுதான் தர்மமென்ற" கொள்கையை உடைய பிராமண மதத்திற்குத்தான் ஒரு சமயம் ஆபத்து வந்தாலும் வரலாம் என்றும் பத்திரிகை மூலமாகவும், பிரசங்க மூலமாகவும் பொது ஜனங்களுக்கு வெளிப்படுத்தியதன் பேரில், பிராமணர்களின் விஷமப் பிரசாரம் ஒருவாறாய் வெளிப்படையாய்க் குறைந்தது என்றாலும் இன்றைக்கும் ரகசியத்தில் எவ்வளவோ தந்திரங்களும், மந்திரங்களும் நடந்து கொண்டுதான் வருகின்றன.

,தற்கு அனுகூலமாய் நமது மடாதிபதிகளும், மகந்துக்களும் பொது ஜனங்களின் தர்மப் பணத்தை அள்ளி புளியங்கொட்டை போல் அரைத்துக் கொண்டுதான் வருகிறார்கள்.

ஹைக்கோர்ட்டிலும் இச்சட்டம், சட்டப்படி செல்லாதென்றும், இதைத் தள்ளிவிட வேண்டுமென்றும் வியாஜ்யம் தொடுத்திருக்கிறார்கள். இச்சட்டத்தில் என்ன கெடுதல் இருக்கிறது என்பதையாவது, இந்தச் சட்டத்தின் எந்தப் பிரிவின்படி இந்துமதத்திற்கோ தர்மபரிபாலனத்திற்கோ என்ன ஆபத்திருக்கிறது என்பதையாவது இதுவரை எந்த பிராமணரும் எடுத்துச் சொன்னதேயில்லை. " மதம் போச்சு ; தர்மம் போச்சு; இந்துமதத்தில் சர்க்கார் பிரவேசிக்கிறார்கள்" என்று பொய்யழுகை அழுகிறது தவிர வேறொன்றும் சொல்வதே கிடையாது.

எந்த உலகத்தில் மதவிஷயங்களை அரசாங்கத்தார் திருத்த பிரவேசிக்காதிருக்கிறார்கள் ? 1817 - லும், 1863 - லும் பிரவேசித்த காலத்தில் இந்த ஜாதியார் எங்கு போயிருந்தார்கள். அரசாங்கத்தார் தாமதமின்றி உடனே பிரவேசித்துத் தக்கது செய்யவேண்டும் என்று காங்கிரஸிலும், கான்பரன்ஸிலும் தீர்மானித்த காலத்தில் இந்த ஜாதியார் எங்கு போனார்கள்?

" சட்டம் செய்யும் அதிகாரம் நம் கைக்கு வந்துவிடும் நம்மிஷ்டம் போல் ஜாதிக்கே எல்லா உரிமைகளும் இருக்கும் படியாகச் சட்டம் செய்து கொள்ளலாம் " என்று நம்பியிருந்தார்கள் போலும் அல்லது பிராமணரல்லாதார் இவற்றைக் கவனியாமல் இன்னும் பிராமணர்களே ஏகபோகமாய் உண்ணூம்படி விட்டுக் கொண்டிருப்பார்கள் என்று நினைத்தார்கள் போலும். எந்தக் காரியத்திற்கு நாம் அரசாங்கத் தாரிடம் போகாமல் இருக்கிறோம் ? நம்முடைய சாமிக்கு நாமம் வட கலையா, தென் கலையா என்பதை சர்க்காரிடம் போய்த்தான் தீர்மானித்துக் கொள்ளுகிறோம். மடாதிபதியார் இவரா, அவரா என்று தீர்மானிக்க சர்க்காரிடம்தான் போகிறோம்.

நாம் கோவிலுக்குள் போகலாமா, வேண்டாமா என்பதற்கு சர்க்காரிடம்தான் போகிறோம். என் ஜாதி பெரியதா, உன் ஜாதி பெரியதா என்பதற்கு சர்க்காரிடம்தான் போகிறோம். ஏழ்மைப்பட்ட தேசத்து " பொது ஜனங்களின் பணம் வருஷம் ஒண்ணரைக் கோடி ரூபாயுக்கு மேல் மதத்தின் பேரால் வசூலித்து அயோக்கியர்களுக்கும், பஞ்சமா பாதகத்துக்கும் உபயோகப்படுத்துவதைக் கவனிக்க ஒரு சட்டம் வந்தால் அதுகூடாது" என்று சொல்லுபவர்கள் யோக்கியர்களா ? நமக்குள் நாமே பார்த்துக் கொள்ளக்கூடாதா என்றால் இது விஷயத்தில் நமக்குள் என்ன யோக்கியப் பொறுப்பு இருக்கிறது ?

10 லட்சம், இருபது லட்சம் போட்டு " நீ கோயில் கட்டிக் கொடுத்து சொத்தும் விட வேண்டும் - நான் செங்கல்லை அடுப்பில் போட்டுச் சூடேற்றி ஈரத்துணி மேல்போட்டு ஆவியுண்டாக்கி, சுடுசாதம் என்று வெறும் பாத்திரத்தைச் சாமிக்கு வைத்து ஆராதனை செய்ய வேண்டும். அது சாதத்தின் ஆவியா, சுடு செங்கல் ஆவியா என்பதைக் கூட நீ பார்க்கக்கூடாது, பார்த்தால் பாவம் " என்று சொல்லுகிற ஜனங்களை வைத்துக்கொண்டு நமக்குள் எப்படி சரிசெய்து கொள்ளுகிறது ?

வைக்கத்தில் தெருவில் நடக்க எத்தனை பேர் ஜெயிலுக்கு போக வேண்டிவந்தது? கல்பாத்தியில் தெருவில் நடக்க 144 யார் வேண்டுகோளின்பேரில் போடப்பட்டது ? அதற்காக சர்க்காரிடம் யார் போனது? நமக்குள் சரிபடுத்திக் கொள்ளக்கூடாதா? என்கிற யோக்கியர்கள் இந்த சமயம் ஏன் சர்க்காரிடம் போக விட்டார்கள் ? பொது ஜனங்கள் பணத்தில் நடத்தப்படும் வேதபாடசாலைகளில் பிராமணன்தான் படிக்கலாம். சூத்திரர்கள் படிக்கக்கூடாது என்று சொல்லுகிறபோது நமக்குள் சரிபடுத்திக் கொள்ளக்கூடாதா என்கிற பிரபுக்கள் எங்கே போயிருந்தார்கள் ? இவற்றை பிராமணரல்லாதார் தயவு செய்து கருத்தாய்க் கவனிக்க வேண்டும். பிராமணரல்லாதாருக்குள் கொஞ்சம் பிளவு ஏற்பட்டவுடன் சட்டசபையில் இந்து தேவஸ்தான சட்டத்தை மாற்ற பிராமணர்களால் தீர்மானம் கொண்டு வந்தாய்விட்டது.

இனி வரப்போகும் சட்டசபைக்கும் தேவஸ்தான சட்டத்தை மாற்ற சம்மதிக்கும் அங்கத்தினர்களுக்குச் சாதகமாய் பிரசாரம் செய்யவும், அவர்கள் செலவுக்குப் பணம் கொடுக்கவும் மகந்துகளும், மடாதிபதிகளும் இப்போதிருந்தே ஏற்பாடு செய்து வருகிறார்கள். சுயராஜ்யக் கட்சி பிரசாரத்திற்கு இந்தப் பணம்தான் தாண்டவமாடும்.

சில பிராணமரல்லாதாரும் இப்பொழுதிருந்தே இதற்குச் சம்மதம் கொடுத்து மகந்துகள் தயவையும், மடாதிபதிகள் தயவையும் சம்பாதித்துக் கொண்டு வருகிறார்கள். பிராமணரல்லாத ஓட்டர்களே! ஜாக்கிரதை! ஜாக்கிரதை! கோட்டை விட்டீர்களானால் பிறகு வெகு நாளைக்குப் பிடிக்க முடியாது.

--------------- தந்தைபெரியார் - "குடி அரசு" 22 .11 .1925

0 comments: