Search This Blog

24.7.08

வசியம் செய்ய முடியுமா?

மெஸ்மரிசம் என்று வழங்கும் கல்வி விஞ்ஞானமா? அதன் விவரமென்ன? கண் களுக்குத் தெரியாத பொருள் களைக் கண்டுபிடிக்கின்ற விஷயம் உண்மையா? தூரத்தில் நிகழும் அல்லது நிகழ்ந்த விஷயங்களைத் தெரிந்து சொல்லும் விஷயத்தில் உண்மை என்னவென்று வினவுகின்றார்கள்? இதற்கு முன்பு பல நண்பர்கள் இந்தக் கேள்விகளைக் கேட்டுமிருக்கின்றனர். இதனால் இந்த மெஸ்மரிசம் என்று அழைக்கப்படும் வித்தை அநேகர் மனத்தில் பதிந்து இருப்பதாகத் தெரிகிறது. இதற்கு முந்தியே நாம் மெஸ் மரிசம் இன்ன விஷயமென்றும், அது ஓர் போலி வித்தை என்றும், அதை விஞ்ஞானிகள் உதறித் தள்ளிவிட்டார்கள் என் பதையும், அதற்குப் பதிலாக இப்நாடிசம் என்ற வித்தையை வழங்குகின்றார்களென்றும் ``குடிஅரசு இதழ்களில் குறிப்பாகக் காட்டி வந்திருக்கின் றோம்.


இந்தப் பண்டைக்கால வித்தையை நமது நண்பர்கள் விவரமாக அறியுமாறு இங்கு எடுத்துரைப்போம். இந்த மெஸ்மரிசம் என்ற வித்தையை ஒரு காலத்தில் விஞ்ஞான மென்று சில விஞ்ஞானிகள் கூறிவந்திருக்கின்றனர். இது இன்று ஓர் போலி ஞானம் ஆகும். இவைகளை Pseudo Science என்று ஆங்கிலத்தில் வழங்குவார்கள். அவையாவன:

Telepathy - அதாவது ஒருவர் மனத்தில் தோன்றும் எண்ணங்கள், இன்னொருவர் மனத்தில் புலன்கள் வாயிலாக இல்லாமல் தோன்றுவது. அதாவது, தூரத்தில் நடக்கும் விஷயங் களைக் கண்கள் மூலமாக அல்லாமல் கண்டறிவது அதாவது இறந்தோர் சூட்சமத்தேகம் (Disembodied Spirits of the Dead) கண்களுக்குத் தோன்றுதல்; மேசை, நாற்காலி, வீட்டுச் சாமான்கள், கதவு, ஜன்னல், மனிதனால் அசைக்கப்படாமலே அசைதல், இந்தத் தோற்றங்களைப் பொதுவாக Occultism - அதாவது, மறைவான வித்தை கள் என்று அழைப்பதுண்டு. இந்தப் போலி வித்தைகளில் ஆபாசங்களைத் தெரிந்து கொள்ள மனமுடையவர்கள் இதுபற்றிய நூல்களை வாசிப்ப தோடு,

1. Hypnotism by Alber Moll (Scott)
2. Hollucinations and illusions by Edmund Parish (Scott)
3. Apparitions and thought Transference by Podmene (Scott)
4. Illusions by sully (Scott)
5. Newer Spiritualism by Podmene

முதலிய நூல்களைப் படித்த றியலாம். நமது பொதுமக்கள் இம்மயக்க வித்தைகளை உணர்ந்து மூட நம்பிக்கை களை விட்டொழிக்குமாறு கோருகிறோம். இம்மறைவான வித்தைகளின் போலி உண் மையைச் சுருக்கமாக எடுத்துரைப்போம்.

எனக்கு மூன்று இருபதும் பத்து வருஷமும் கிட்ட நெருங்கி வருகிறது. இதுகாறும் மறைவான வித்தையில் கூறும் தோற்றங்கள் ஒன்றுகட என் அனுபவத்தில் வந்த தில்லை. நான் வசித்து வரும் இடம் மூடநம்பிக்கைகளில் மிகுந்திருக்கும் மீன் பிடிப் போரால் கடந்த 2000 வருஷங் களாக வசிக்கப்பட்டு வரு கின்றது. என்னுடன் விளை யாடியவர்கள் அநேகர் மாண் டனர். இன்னும் சிலர் ஜீவித்து வருகின்றனர். இவர்களில் ஒருவராகிலும் சென்ற அறுபது வருஷங்களாகப் பேயையோ, பிசாசையோ செத்தவர் களையோ பார்த்ததாகச் சொன்னதில்லை. ஆனால் மாரி யாத்தாளுக்கும், காத்தவராய னுக்கும், அண்ணமார், தம்பி மார், கன்னிகளுக்கும் பூசைகள் போடுவதில் குறைச்சல் இல்லை.

என்ன பூசைகள் போட்டும், கும்பிட்டும், தெய்வங்கள் ஆடியும், எல்லைகளுக்குக் காவு கொடுத்தும் இவர்களை அகாலப் பிணி, மூப்பு, சாக் காடு விட்டொழிந்த பாடில்லை. மற்ற தொழிலாளிகளில் வருஷமொன்றுக்கு 1000 பேரில் 30, 40 சாவென்றால் இவர்களில் 1000-க்கு 60-க்கு மேல் வருஷா வருஷம் சாகின்றனர். இவர்களில் அம்மை, விஷ சுரம், வாந்தி பேதி வராத நாளில்லை. ஆனால் ஒவ்வொரு குப்பத் திலும் ஒன்று இரண்டு மாரி அம்மன் கோவில்கள் இருக் கின்றன. அவைகளுக்கு வருஷா வருஷம் செலவாகும் பணம் ரூபாய் 500 முதல் 1000 என்று சொல்லலாம். நான் வசிக்கும் இடம் நடுக்குப்பமென்பது. அதில் ஆண் - பெண் குழந் தைகள் 600 பேர் வசிக்கின்றோம். இதில் ஒரு கோவி லுண்டு. இதற்கு ஏறக்குறைய ஒரு லட்சம் ரூபாய் சொத் துண்டு. வருஷந்தோறும், இந்த மாரியம்மனுக்கு ரூபாய் 2000 செலவாகின்றது. ஆனால், ஒரு வைத்தியசாலைக்கு ரூபாய் 500 செலவு செய்யலாகாதாவெனில் அது கூடாதாம்! குப்பம் முழுமையும் நரகமாகவே இருக்கும்! இவர்களுடைய மூடத்தனத்தால் பிறக்கும் இரண்டு குழந்தைகளில் ஒன்று அகால மரணமடைகின்றது.

எங்களைத் தவிர மற்ற யாரும் 60 வயது அடைந்தவர்கள் இல்லை. இவ்வளவு விவரமாக ஏன் இந்தக் குப் பத்தாரின் நிலமையைச் சொல்ல வந்தேனெனில், இதே விதமாகவே நமது 29 கோடி நாட்டுப்புற மக்கள் இவ்வித மூடநம்பிக்கையில் ஆழ்ந்து வறுமை, பிணி, மூப்பு, சாக் காட்டால் கஷ்டப்படுகின்றனர் என்று விளக்கவென அறிக. எங்கள் குப்பம் நமது நாட் டிலுள்ள 15 லட்சம் கிராமங் களின் அடையாளமான கிராம மென அறிக. நாம் கூறிவரும் மூட நம்பிக்கைகளாகிய Spiritualism, Occultism என்னும் மாயா வித்தைகளால் நமது கோடானுகோடி மக்களுக்கு விளையும் தீமைகளையும் கேட் டையும், சிந்திக்கச் சிந்திக்க என்ன அபாய நிலைமையில் நமது நாடு இருந்து வருகின்ற தென்பது நன்கு விளங்க வில்லையா?

மதங்களின் மூட நம்பிக் கைகளால் விளையும் கேடு ஒரு பக்கமிருக்க மாயாவித்தைகளால் விளையும் கேட்டினைச் சொல்லவும் வேண்டுமோ? அதனை அறியாது ``புத்த குருக்கள் சொல்வது புத்த மதமல்ல, நாங்கள் சொல்வது தான் சரியான புத்த மதம் என்று ஒரு தோழர் நாம் எழுதிவரும் புத்தமத மூட நம்பிக்கைகளைக் குறித்துப் பரிகாசமாக `திராவிடனில் எழுதுகின்றார். மதங்கள் விஷயங்களில் நமது தோழர்கள் எந்த மதமாயினும் சரி, இவ்வளவு அபிமானமும் வைராக்கியமும் வைக்கும்வரை மூடநம்பிக்கைகள் நமது நாட்டைவிட்டு ஒழியாதென அறிக.

------------------- ம. சிங்காரவேலர் அவர்கள் எழுதிய கட்டுரை

0 comments: