Search This Blog

22.7.08

தமிழ்நாட்டின் சூயஸ் கால்வாய்!

``எங்களது அடுத்த திட்டம் `சேது சமுத்திரக் கால்வாய் திட்டம்தான் என்று அடுத்த பணியைப் பற்றிக் கூறினார், தூத்துக்குடி துறைமுகத்தின் தற்போதைய சேர்மன் திரு. கே.ஏ. சுந்தரம்.

ராமேஸ்வரத்தின் தென்புறக் கடற்பகுதியான மன்னார் வளைகுடாவும், வடபுறக் கடற்பகுதி யான பாக் ஜலசந்தியும் இந்தியாவிலிருந்து இலங்கையைப் பிரிக்கின்றன. தனுஷ்கோடி பகுதியிலிருந்து கடலை நோக்கினால் திட்டுத் திட்டான தீவுக் கூட்டங்கள் தெரியும். ஸ்ரீ ராமன் இலங்கைக்குச் செல்வதற்காக வானரப் படைகளின் உதவியுடன் கட்டிய அணை இது -பெயர்கூட `சேது அணைதான் என்று அங்குள்ள கைடுகள் கதையாகச் சொல்லிக் கொண்டு இருப்பார்கள். ஆங்கிலேயர்கள் இந்த அணைக்கு `ஆடம்ஸ் பிரிட்ஜ் என்று பெயர் சூட்டினார்கள்.

இந்தப் பிராந்தியத்தின் கடற்பகுதி முழுவதுமே ஆழமில்லாத பகுதிகள்தான். கிட்டத்தட்ட 11 அடிதான். சாதாரணமாக ஒரு கப்பல், கடலில் செல்வதற்குத் தேவையான குறைந்தபட்ச ஆழம் 30 அடி. எனவே, சென்னையிலிருந்தோ அல்லது விசாகை, கல்கத்தா போன்ற துறை முகங்களிலிருந்தோ ஒரு கப்பல் தூத்துக்குடிக்கு வரவேண்டுமானால், இலங்கைத் தீவை ஒரு பிரதட்சிணம் செய்து கொண்டு வரவேண்டும். இதனால் எரிபொருளும் காலமும் உழைப்பும் விரயமாகின்றன.

குறுக்குப் பாதையில் கப்பல்கள் செல்வதற் காக 1860-ல் கமாண்டர் டெய்லர் என்பவர் ஒரு திட்டம் தயாரித்துப் பிள்ளையார் சுழி போட்டார். அதற்கப்புறம் பலருடைய யோசனைகளும் திட்டங்களும் பரிசீலிக்கப்பட்டன. திட்டங்கள் தீட்டப்படுவதிலும் மாற்றப்படுவதிலுமே காலம் சென்று கொண்டிருந்ததே தவிர, ஒரு நூற் றாண்டு வரைக்கும் சேது சமுத்திரத் திட்டம் உயிர்ப்பிக்கப்படவே இல்லை.

ஆடம்ஸ் பிரிட்ஜ் பகுதியை ஆழப்படுத்தி, கால்வாய் வெட்டுவதே சேதுக் கால்வாய் திட்டம். பெரிய பெரிய மண்வாரிக் கப்பல்களைக் கொண்டு முதலில் இப்பகுதிக் கடலை ஆழப் படுத்தி, அகலப்படுத்திக் கால்வாய் அமைக்கப் படும். அலைகளால் மீண்டும் இப்பகுதி மேடாகாமல் தடுப்பதற்காகப் பெரிய பெரிய கான்கிரீட் ஸ்லாப்களை கிரேன்கள் மூலம் கடலில் இறக்கி, இருபுறமும் கரை போல் அமைக்கப்படும். இந்தக் கால்வாய் அமைக்கப்பட்டு விட்டால் சென்னை யிலிருந்து புறப்படும் கப்பல்கள் நேரே ராமேஸ்வரம் வழியாகத் தூத்துக்குடிக்குச் செல்ல முடியும்.

இதற்கான திட்டத்தைத் தயாரித்தவர் தூத்துக்குடி துறைமுகக் கழகத்தின் முன்னாள் தலைமைப் பொறியாளரும் நிர்வாகியுமான திரு. ஜே.ஐ. கோயில் பிள்ளை. இத்திட்டம் பாராளு மன்ற ஒப்புதலுக்காகக் காத்திருக்கிறதாம்.

இத்திட்டம் நிறைவேறினால், அமெரிக்கக் கண்டத்தின் பனாமா கால்வாயும் மத்திய தரைக் கடலையும் செங்கடலையும் இணைக்கும் சூயஸ் கால்வாயும், உலக நாடுகளின் பொருளாதாரத் தில் எத்தகைய முக்கிய இடம் வகிக்கின்றனவோ அவ்வளவு முக்கியத்துவத்தை சேது சமுத்திரக் கால்வாயும் பெற்றுவிடும்!


-------------- நன்றி: `ஆனந்த விகடன் 23.7.2008

0 comments: