Search This Blog

13.7.08

புத்த பிட்சுணியை அம்மன் ஆக்கியமை

``தூய்மையைப் பேணி வந்தால் நோய்கள் அண்டாது என்பதைக் கூறிய புத்தமத பிக்குணியை அம்மன் ஆக - மாரியம்மனாக மாற்றிக் கும்பிடச் செய்த கொடுமையை 1917-இல் விளக்கிய கட்டுரை

நம் நாட்டின் பிரதி ஆடி மாதத்திலும் அம்மனைப் பூஜிப்பது வழக்கம். ஆனால் தென்னாட்டு ஜனங்களின் கதையை நன்குணர்வது காண்கிலம். இந்த ஆடி மாதத்தின் அம்மன் விஷ யத்தைச் சுருக்கமாக வெளியிடுவம். சற்றேறக்குறைய 1500 வருடங்களுக்கு முன் புத்த மதத்தைச் சார்ந்தவரும், புறநாட்டை யரசுபுரிந்தவருமாகிய சந்திரவாகு என்பவருக்கு ஓர் பெண் குழந்தை பிறந்து வளர்ந்து வருகையில் அக்குழவிக்கு அம்பிகாதேவி எனப் பெயரிடப்பட்டது. அச்சிறுமி 16 வயதடைந்த போது திறமைவாய்ந்த தம் குல குருநாதராகிய ஸ்ரீ புத்தமுனிவரது கொள்கையில் மிக்கப்பக்தி முதிர்ந்து தான் புத்தமடத்தில் சேர வபேட்சித்தனள். அதற்குத் தந்தை, விவாகமான பிறகு மடத்திற் சேரலாமெனக் கூறினன். அம்மாது அதற் கிணங்காமையால் தாய் மாமனைக் கொண்டு கழுத்தில் தாலி கட்டச் செய்து, பிறகு புத்தமடாலயத்தில் அம்மாதைச் சேர்த்து விட்டான். அப்போது அம்பிகாதேவி தன் சிரசில் புத்த முனிவர் பத்மாசனத்திலிருந்தாற்போல் முடியொன்று செய்து வைத்துக் கொண்டு பூவரசமரம் அல்லது வேம்பு மரத்தினடியில் உட்கார்ந்து தவசு புரிந்து வரும்போது தன்னை வந்து தரிசிப்போர்க்குத் தனது குலகுரு புத்திரருடைய திரிபீடகம் என்னும் தருமத்தைத் திரி வாசகமாகப் போதித்து வந்தாள். இதைப்பற்றி அம்பிகாதேவியை `படகறி என்னும் வேம்படியம்பாள் என்றும் பெயரால் பலரழைக்க வாரம்பித்தார்கள்.


இவ்வாறு இந்தம்மாள் நானிக நாட்டை சேர்ந்தபோது அந்த நாட்டில் குழந்தைகளுக்கு அம்மை நோயும், பெரியவர்களுக்கு விஷ பேதி நோயும் கண்டு நஷ்டமடைவதைப்பற்றி அவ்வூர் ஜனங்கள் இந்தம்மாளிடமேகி மேற்படி வியாதிகளைப் போக்கக் கோரியதற்காக அந்தம்மை அந்த நாட்டில் பொய், கொலை, களவு, கள், காமம் என்னும் தீமைகள் பரவியிருப்பதால் கொடிய வியாதிகள் தோன்றின வென்றும், அவற்றைப் போக்க துன்மார்க்கங்களை விட்டு, நாடு, வீடெங்கும் சுத்தப்படுத்தி சுத்த கர்ப்பூர முதலிய சுகந்த வாசனை களை நிரப்பி, கசப்பான வேப்பிலைகளைத் தோரணங்கட்டி ஏழைகட்குப் பச்சரிசிமாவும் கூழும் கொடுத்துப் பசியாற்று தலினால் கொள்ளை நோய்கள் விலகுமென்பதாகப் போதித் தனள். இதனால் அந்த நாடு சுகப்பட்டதாம். மேற்படி வழக்கம் இந்தத் தென்னாட்டுத் திராவிடர்களுக்குள் பரவியேயிருக்கின்றது. ஆனால் வேத மோதிய வேதியரும், அவர் மக்களும் ஸ்ரீ புத்த முனிவரது கொள்கையை மாற்றி, போராட்டமான மதபேதங் களைப் புகட்டியும் ஜாதி பேதங்களை மாட்டியும் மேற்படி புத்தமத பிக்க்ஷுணியாகிய அம்பிகா தேவியை தங்கள் குல தெய்வமாகப் பூசித்து வருகிறார்கள். மூடமக்கள் அறியாமையால் அந்தம்மைக்கு ஆடு, கோழி முதலிய ஜீவர்களைப் பலி கொடுப்பதுபோல் வேதப் பிராமணர்கள் தங்களது ஸ்திரீகளின் மூலமாய் பூஜாலிக்குப் பணம் தந்து மறைவாக இருந்து கொண்டு மேற்படி தேவியை வணங்குகிற விந்தைகளை தென்திசைக் கிராமங்களிற் பரக்கக் காணலாம். மூடச் சிகாமணிகளை அத்தகைய பலி பூஜைகளியற்ற உற்சாகப்படுத்தும் வேதியர்களது மதியென்ன மதியோ? இதை வாசிக்கும் அன்பர்கள் கவனிக்க வேண்டும். இவ்வாறே நம் திராவிடர்களைப் பூர்வாசாரங்களி னின்று மாற்றி அநாச்சாரங்களைக் கையாளச் செய்தார்கள் போலும். நமது நாட்டையும், வீட்டையும் சுகிகரமாக வைத்தும், நல் உணவைக் கொண்டும், நற் சீலங்களை அனுஷ்டித்தும் வந்தால் கொள்ளை நோய்கள் அண்டா. இது தான் ஆடி மாதத்தின் அம்மையாரது நோக்கம். இப்பெரு நோக்கத்தை எம்மனோர் கவனியாமல் மேற்படி தேவிக்கு ஆடு, கோழி முதலிய ஜீவர்களைப் பலியிடுவதினால் பயனொன்று மில்லை. இதைப் பற்றி யாம் சிலர்க்குப் போதித்தே வருகிறோம். உத்தமர்கள் அக்கொடிய செயல்களை ஒழித்தே விட்டார்கள். இவ்வாறே தேவிக்குப் பலி பூஜை செய்பவர்கள் இவ்வியாசத்தை வாசித்த பிறகாவது அப்பூஜையை விலக்குவார்களாக.


----------------------------"திராவிடன்" 18.7.1917

0 comments: