Search This Blog

15.7.08

மறைமலை அடிகள்

தமிழ்க்கடல் மறைமலை அடிகளாரின் பிறந்த நாள் இந்நாள் (1876). தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை என்று போற்றப்படக் கூடியவர் - ஆரியத்தின் கடும் எதிரி - இந்து மதம் வேறு - தமிழர் சமயம் வேறு என்பதில் உறுதியாக இருந்தவர்.

சென்னைப் பச்சையப்பன் கல்லூரி மண்டபத்தில் 1933 திசம்பர் 23, 24 ஆகிய நாள்களில் தமிழ் அன்பர் மாநாடு நடை பெற்றது. சென்னைப் புத்தகால யப் பிரச்சார சங்கத்தார் இம் மாநாட்டை ஏற்பாடு செய்திருந்த னர். அதன் தலைவர் கே.வி. கிருஷ்ணஸ்வாமி அய்யர், பொக்கிஷதார் எஸ். ராமஸ்வாமி அய்யர், வரவேற்புச் சபைத் தலைவர் உ.வே. சாமிநாதய்யர் மற்றும் பொறுப்பாளர்கள் எல்லாம் பார்ப்பனர்களே. அம்மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு மறை மலை அடிகளார் அவர்களுக்கு கே.வி. கிருஷ்ணஸ்வாமி அய்யர் 22.12.1933 இல் தந்தி ஒன்றை அனுப்பினார்.

அதற்கு மறைமலை அடிகள் அளித்த பதில்தான் மிகமிக முக்கியமானது.

கடிதங்கள், அழைப்புகள், தந்தி ஆகியவற்றிற்கெல்லாம் உங்களுக்கும், டாக்டர் உ.வே. சாமிநாதய்யர் அவர்களுக்கும் நன்றி தெரிவிப்பதோடு, தூய தமிழை வளர்க்க விரும்பாத எந்தத் தமிழ்க் கூட்டத்திலும் கலந்துகொள்வதற்கு எமது மனம் இடந்தரவில்லை என்பதை மிகவும் வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். பண்பட்ட பழைய மொழிகளெல்லாவற்றி லும் தமிழ்மொழி ஒன்றுதான் இன்னும் தன் பண்டை நலஞ் சார்ந்த புகழோடு வாழ்கின்றது. பிற மொழிக் கலப்பு அதன் தூய தன்மையினைக் கெடுக்குமென்றும், அதன் வளர்ச்சியினை குன்றச் செய்யும் என்றும் யாம் உறுதியாக நம்புகின்றோம். ஆதலால் எமது தனித்தமிழ்க் கொள்கையினைக் கடைபிடிக்காத உங்களுடைய மகாநாட்டிலே கலந்துகொள்ள முடியாமையினைப் பொறுத்துக் கொள்வீர்களாக! என்று பதில் எழுதியவர் தான் நமது போற்றுதலுக்கும், மதிப்புக்கும் உரிய தமிழ்க்கடல் மறைமலை அடிகளார் அவர்கள். சுவாமி வேதாசலம் என்ற தம் பெயரை மறைமலை அடிகள் என்று மாற்றிக் கொண்டவர்.
சைவக் கொள்கையால் மாறு பட்டு இருந்தாலும்கூட, தந்தை பெரியார் அவர்களைப் பெரிதும் போற்றி மதித்தவர். இந்தி எதிர்ப் புக்களத்தில் தந்தை பெரியார் அவர்களுக்குத் துணை நின்றவர்.

தந்தை பெரியார் அவர்களைப் பல்லாவரத்துக்கு அழைத்துச் சென்று தாம் அரிதிற் சேர்த்துக் குவித்த நூல்கள் கொண்ட நூலகத்தைக் காட்டி மகிழ்ந்தவர்.

அவர் உடலால் மறைந்திருக்கலாம்; தமிழ் உணர்வால் நம்மோடு நிறைந்திருக்கிறார். இனம் எது - இனப் பகைவர் யார் என்பதை இனம் பிரித்துக் காட்டிய அந்தத் தமிழ்க் கடலின் நினைவைப் போற்றுவோம்!

குறைந்தபட்சம் தமிழன் வீட்டுப் பிள்ளைகளுக்குத் தமிழில் பெயரைச் சூட்டும் உணர்வு கிளர்ந்தெழட்டும் - அதுதான் அந்தப் பெருமகனாருக்கு தமிழர்கள் காட்டும் உண்மையான மதிப்பாகும்.

----------- மயிலாடன் அவர்கள் "விடுதலை" 15-7-2008 இதழில் எழுதிய கட்டுரை

3 comments:

bala said...

//Age: 40
Gender: Male
Astrological Sign: Scorpio
Zodiac Year: Sheep
Industry: Education
Location: பழனி : தமிழ்நாடு : India
About Me
நாங்கள் ஜாதி ஒழிப்புக்காரர்கள்.ஜாதி ஒழிய உதவுபவர்கள் எங்கள் சொந்தக்காரர்கள்//


தமிழ் ஓவியா அய்யா,
எல்லாம் சரி தான்.உங்க ப்ரொஃபைலில் எதுக்கு உங்க ராசி விருச்சிகம்(scorpio) மாதிரி சமாசாரங்களை போடணும்.நீங்களெல்லாம் ஒரு பெரியாரிஸ்ட்,பகுத்தறிவு வாதி,வெட்கமாக இல்லையா.

பாலா

தமிழ் ஓவியா said...

அய்யா பாலா வலைப்பதிவு துவங்கும் போது "வலைப்பதிவு" பற்றி எனக்கு எதுவுமே தெரியாது. நண்பர் அரசெழிலன் அவர்கள்தான் துவக்கிக் கொடுத்தார். ராசி பற்றியெல்லாம் எனக்கோ நண்பர் அரசெழிலனுக்கோ நம்பிக்கையில்லை. புதுச்சேரி வலைப்பதிவர் பயிற்சிப்பட்டறைக்கு சென்று அவர்தான் முதலில் பயிற்சி எடுத்துக்கொண்டார். அவருக்கும் அதுதான் முதல் அனுபவம். எனது புரபைலை அதற்குப் பின் சரிபார்க்க இயலவில்லை. அதனால் அதைக் கவனிக்க வில்லை. இதோ இப்போதே மாற்றிவிடுகிறேன். நாங்கள் கணனித்துறைக்கு புதுசு. வல்லுநர்களெல்லாம் கிடையாது. ஒவ்வொன்றாக கற்றுக்கொண்டு வருகிறோம்.
சுட்டிக்காட்டியதற்கு மிக்க நன்றி.
பேச்சில் மட்டுமல்ல செயலிலும் பெரியாரிஸ்டாகவே வாழ்ந்துவருகிறோம்.

தமிழ் ஓவியா said...

பாலா,
எனது ப்ரொஃபைலில் மாற்றம் செய்ய முயற்சி செய்தேன். எனக்கு தெரியவில்லை. நண்பர்களின் உதவி பெற்று மாற்றிவிடுகிறேன். மாற்றுவதற்கு தெரிந்தவர்கள் உதவலாம். நன்றி.