Search This Blog
25.7.08
'இந்து இந்தியா' முடியாத காரியம்
லாகூரில் நடைபெற்ற முஸ்லிம்லீக் மாநாட்டில் இந்நாட்டில் உள்ள இந்து - முஸ்லிம் பிரச்சினை உள்ளபடியே தீர்க் கப்பட வேண்டுமானால் இந்தியா முஸ் லிம் இந்தியா என்றும், மற்ற இந்தியா என்றும் பிரிக்கப்பட்டால்தான் முடியும் என முஸ்லிம் லீக் தலைவர் ஜனாப் ஜின்னா அவர்கள் கூறியதை ஆதரித்து நீதிக்கட்சித் தலைவர் பெரியார் ஈ.வெ. ராமசாமி அவர்கள் பத்திரிகைகளுக்கு விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
`முஸ்லிம் இந்தியா என்றும், இந்து இந்தியா என்றும் பிரிக்க வேண்டுமென ஜனாப் ஜின்னா கூறியுள்ள திட்டம் எனக்கொரு ஆச்சரியத்தையும் தரவில்லை. ஏனெனில் நான் இந்தியாவி லிருந்து திராவிட நாடு தனியே பிரிக்கப்பட வேண்டுமென்று கடந்த இரண்டு ஆண்டுகளாகவே வற்புறுத்தி வருகிறேன். ஆரிய ஆதிக்கமிக்க காங்கிரஸ் ஆட்சியின் இரண்டாண்டு அனுபவம் ஆரியரல்லாதார் உள்ளத்திலே திகைப்பை உண்டாக்காமல் இருந்திருக்க முடியாது.
இதனாலேயே பிரிந்து கொள்ள வேண்டுமென எண்ணம் உண்டாகி விட்டது. முஸ்லிம்கள், தனிநாட்டைப் பிரித்துக் கொண்டு தனி ஆட்சி நடத்த விரும்புவது இயற்கையாக எழும்பும் எண்ணமேயாகும். ஜனாப் ஜின்னா இந்தப் பிரிவினைக்குக் கூறும் காரணங்கள் மறுக்க முடியாதன. அவரது கோரிக்கையும் நியாயமானதே. காந்தியார் சதாகாலமும், பச்சையாகவே தாம் விரும்பும் சுயராஜ்யம், ராமராஜ்யந்தான் என்றும், தமது வாழ்க்கையின் லட்சியமே இந்து மதத்தைப் புனருத்தாரனம் செய்வது தானென்றும் கூறிக் கொண்டிருக்க, தோழர் சவர்க்கார் போன்ற இந்துமகாசபைத்தலைவர்கள் இந்துஸ்தானம் இந்துக்களுக்கே என்று போர் முழக்கம் செய்து கொண்டுமிருக்கக் கண்டபிறகு முஸ்லிம்கள் கைகட்டி, வாய் பொத்தி இருப்பார்கள் என்று யார்தான் எதிர்பார்க்க முடியும்?
இந்து - முஸ்லிம் பிரச்சினை தீர்க்கப்பட முடியாததோ என்று திகைக்கும் அளவில் இருக்கிறது. இதனைத் தீர்த்துக் கொள்ள ஜனாப் ஜின்னாவின் திட்டமே அறிவு ததும்புவது, நான் ஜனாப் ஜின்னாவின் கோரிக்கையை ஆதரிப்பதோடு மற்றொரு முக்கியமான அம்சத்தையும் வற்புறுத்த விரும்புகிறேன். முஸ்லிம்கள் முஸ்லிம் நாடு என இந்தியாவில் தனி நாடு பிரித்துக் கொள்ள முடியும். ஆனால், இந்துக்களால் முடியாது. ஏனெனில் இந்துக்கள் என்று கூறப்படும் தொகுப்பில் பலப்பல வர்க்கத்தார் உள்ளனர்.
நாலுகோடிக்கு மேலுள்ள திராவிடர்களுக்கும் இந்துக் கொள்கை கோட்பாடு என்று கூறப்படும் பார்ப்பனியத்திற்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை. மொழி, கலை, சரிதம், மார்க்கம், பழக்க வழக்கம் ஆகியவைகளில் ஆரியத்துக்கும் திராவிடத்துக்கும் தீர்மானமான மாறுபாடுகள் உள்ளன.
கடவுள்கள்கூட வேறு வேறு! எனவே முஸ்லிம் இந்தியா என ஜனாப் ஜின்னா கேட்பதுபோலவே, தமிழ், ஆந்திரம், கன்னடம், மலையாளம் ஆகிய மொழி வட்டாரங்களைக் கொண்டு திராவிட நாடு பிரிக்கப்பட வேண்டுமென நாம் கேட்க உரிமை இருக்கிறது. இந்து இந்தியா என பொதுவாகக் கூறுவது முடியாத காரியம். அதை ஒட்ட வைத்துக் காட்டினால் அது வெறும் பார்ப்பனிய ஏகாதிபத்தியமாகவே இருக்கும். அதனை திராவிடர் கடுமையாக முடிவு வரை எதிர்ப்பர். எனவே இந்தியாவிலிருந்து திராவிட நாட்டைத் தனியே பிரித்து விடுவது மிக அவசியமாகவும் அவசரமாகவும் செய்ய வேண்டியதாகும். நான் இதனை 1938 டிசம்பர் 28-இல் சென்னையில் நடந்த தென்னிந்திய நல உரிமைச் சங்க மாநாட்டுத் தலைமையுரையில் கூறியுள்ளேன்.
------------------------- தந்தை பெரியார் - 'விடுதலை' 29.3.1940
Labels:
பெரியார்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment