Search This Blog

17.7.08

ஜோசியத்தை நம்புபவர்கள் 30 கோடி ஏன் தரவேண்டும்? --நாட்டுநடப்பு

வந்துட்டாங்கய்யா....

அணுசக்தி ஒப்பந்தம் மின் உற்பத்திக்கே மிக அவசியம் என்கிறது காங்கிரசும், அதன் கூட்டணிக் கட்சிகளும். அந்த ஒப்பந்தம் கூடவே கூடாது, மின் உற்பத்தியைவிட முக்கியம் அமெரிக்காவுடன் ஒப்பந்தம் கூடாது எனும் சித்தாந்தம் என்கிறது இடதுசாரிக் கூட்டணி.

இதில் வேதனையான வேடிக்கை என்னவென்றால், பச்சை இந்து மதப் பிற்போக்குப் பாசிச வலதுசாரிக் கும்பலான பா.ஜ. கட்சி இதில் இடதுசாரிகளுடன் சேர்ந்து கொண்டுள்ள நிலை. யார் முதலில் வலதுகாலை எடுத்து வைத்துச் சேர்ந்தார்கள் என்பதை ஆராய்வதைவிட, இருவரும் இணைந்து இந்திய அரசைக் கவிழ்க்க முனைகிறார்கள் என்பதுதான் கவலை தரக்கூடியது. இவர்களுக்குள் குறைந்தபட்சத் திட்டம் (CMP) மன்மோகன்சிங் அரசு விலகவேண்டும் என்பதுதான்.


ரூ.25 கோடி என்றும், ரூ.30 கோடி என்றும் ஊடகங்களில் விலை கூறப்படும் செய்தி வந்துகொண்டிருக்கும் நிலையில், ஜோதிடமும் தன் அசிங்க மூக்கை அரசியலில் நுழைக்கிறது.
ஜூலை 9 ஆம் தேதி பகல் 11.45 மணியிலிருந்து 12 மணிவரை குடியரசுத் தலைவரை இடதுசாரிகள் சந்தித்தார்களாம். இது ராகுகால நேரமாம். அப்படிப்பட்ட நேரத்தில் ஆதரவைத் திரும்பப் பெறுவது என்கிற முடிவை அறிவித்ததால், இடதுசாரிகளுக்குப் பின்னடைவாம். அரசுக்கு ஆதாயமாம். வேதாகோபாலன் என்கிற அம்மையார் ஜோசியம் கூறியிருக்கிறார். அன்றைய நாளில் 12 - 1.30 ராகுகாலமாம். ஒன்றிரண்டு நிமிடங்களுக்கு முன்பு இடதுசாரிகள் தம் கருத்தைக் கூறியிருப்பதால், ராகுகாலம் தொடங்கிய நேரமாம்.
இடதுசாரிகள் சந்தித்துவிட்டு வந்த பின்னர், சமாஜ்வாடிக் கட்சியினர் பார்த்தார்களாம். அது நல்ல மரண யோகமாம். அதுவும் தேய்பிறைக் காலமாம். ஆனாலும், சதுர்தசியாம். சதுர்தசி நல்ல நாளான காலமாதலால் அய்க்கிய முற்போக்குக் கூட்டணிக்கு யோகமாக அமையுமாம். நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி கிடைக்குமாம்.

வாக்கெடுப்பு நடக்கும் நாள் சதய நட்சத்திரமாம். கும்ப ராசியாம். மூன்று கிரகங்கள் வலுவான கூட்டணி அமைத்துள்ளனவாம். அரசியல் நிலையை சூரியன் தான் எடுக்குமாம்; நம் நாட்டைப் பொறுத்தவரை சனிக் கிரகத்தின் வீடுதான் முக்கியமாம். ஜூலை 22 இல் சூரியனும் சனியும் மிகவும் வலுவாக இருப்பதால், நாட்டுக்கு நல்லதே நடக்குமாம். ஆளும் கூட்டணிக்கு நல்லதே நடக்குமாம்.

ஜோசியர் சொல்லி விட்டார்; ஜோசியத்தை நம்புபவர்கள் 30 கோடி ஏன் தரவேண்டும்? பேசாமல் மூலையில் அடங்கவேண்டியதுதானே!

------------- நன்றி: "விடுதலை" 17-7-2008

0 comments: