காஞ்சி சங்கர மடத்தின் ஆதரவோடு நடைபெறும் மாத இதழ் காம கோடி என்பதாகும். சங்கராச்சாரியார்கள், பார்ப்பனர்கள் துரும்பு அளவேனும் திருந்தினார்களா? இல்லை என்பதை அந்த இதழைத் தொடர்ந்துப் படித்து வருபவர்கள் அறிவார்கள்.
இம்மாத இதழில், வர்ஷா போஸ்லே எழுதுகிறார் என்ற தலைப்பின்கீழ் - ஜாதியின் நிலைப்பாடுபற்றி குறிப்பிடப்பட்டு இருப்பவை கவனிக்கத் தக்கதாகும்.
முந்நாட்களில் இந்தியாவின் ஹிந்துக்களிடையே இருந்த பலவீனமான பிரிவினர், இஸ்லாமுக்கு மதம் மாறினர். அது பிராம்மணிய அடக்குமுறையி லிருந்து தப்புவதற்காக அல்ல. ஆனால், இஸ்லாமியப் படையெடுப்பாளர் களுடைய சித்திரவதை, மதம் மாறாதவர்கள் மீது வரி விதிப்பு போன்ற கொடுமைகளால் நிகழ்ந்தது. உண்மையில், ஹிந்துக்களாகவே தொடர்ந்து இருந்தவர்கள் அதுவரையிலும் மாற்றத்திற்கு உள்ளாகிக் கொண்டிருந்த வர்ண முறையை இஸ்லாமியப் படையெடுப்புக்கு முன் நிலவாத, மிகக் கடுமையான (ஜாதி) அமைப்பாக உருமாற்றி விட்டனர். மகரிஷி வால்மீகி ஒரு வேடுவர். மகரிஷி வேதவியாசர் ஒரு மீனவப் பெண்ணிற்குப் பிறந்தவர். சாம்ராட் சந்திரகுப்தன், மயிலிறகுகளைச் சேகரிக்கும் தொழில் செய்த மூரியா எனும் பழங்குடிகளைச் சேர்ந்தவன். அசோகச் சக்ரவர்த்தி ஒரு பணிப்பெண்ணின் மகன். இந்தப் பட்டியல் நீளும். இப்படி சமூக அமைப்பை உருமாற்றியதன் நோக்கம் ஹிந்துக்களின் எண்ணிக்கை குறைவதை தடுத்து நிறுத்துவதும் - சநாதன தர்மமாகிய ஹிந்து வாழ்க்கை முறை சிதைவு அடைவதைத் தடுப்பதும்தான். இதனால்தான் அந்நியப் படை யெடுப்பு அலைகளிலிருந்தும் அந்நிய ஆட்சியாளரிடமிருந்தும் தற்காத்துக் கொண்டு, நிலை பெற்றிருக்க ஹிந்துக்களால் முடிந்தது என்று கூறப்பட் டுள்ளது.
(1) இதன்மூலம் என்ன கூற வருகிறார்கள்? இந்துக்களில் இருந்த பலவீனமான பிரிவினர் (இதிலும் பித்தலாட்டம்! ஒரு மதத்தில் பலகீனமான பகுதியினர் என்று ஏன் இருக்கவேண்டும்? அப்படியிருந்தால் அதற்குக் காரணமாக இருந்தவர்கள் பலமான பிரிவினர்கள்தானே? இந்து மதத்தில் பலகீனமான பிரிவினர் என்பது கீழ்ஜாதிகள், பலமான பிரிவு என்பது பார்ப்பனர்கள்தானே?) இஸ்லாமுக்கு மாறியதற்குக் காரணம் பார்ப்பனிய அடக்குமுறை அல்லவாம்! மாறாக இஸ்லாமியர்களின் சித்திரவதையும், மாறாதவர்கள் மீது வரிவிதிப்பு போன்ற கொடுமைகள் நிகழ்த்தப்பட்டதும் தான் காரணமாம்.
இந்து மதத்தை அமெரிக்காவரை சென்று பரப்பிய விவேகானந்தர் இதுபற்றி என்ன கூறுகிறார்? இஸ்லாமியர்களின் படையெடுப்புக்கே காரணம் இந்தப் பார்ப்பனர்கள்தான் என்றல்லவா - மட்டை இரண்டு கீற்றாகக் கிழித்துக் காட்டியுள்ளார்?
நெடுங்காலமாகத் தான் சேகரித்து வைத்திருக்கும் ஞானத்தைப் பிராமணன் இப்பொழுது பொது ஜனங்களுக்கு அளிக்கவேண்டும். இங்ஙனம் அவன் கொடுக்காத காரணத்தால்தான் முகம்மதிய படையெடுப்புகள் சாத்தியமாயின என்று கூறியிருக்கிறாரே விவேகானந்தர்.
(ஆதாரம்: ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் வெளியிட்ட சுவாமி விவேகானந்தர் சம்பாஷணைகள்)
இஸ்லாமியர்களின் அடக்குமுறைகள்தான் மதம் மாறியதற்குக் காரணம் என்று காமகோடி கதைப்பதற்கு ஆப்புக் கொடுப்பதுபோல, அந்த இஸ்லாமியர்களின் படையெடுப்புக்கே காரணம் இந்தப் பார்ப்பனர்கள்தான் என்று கசை அடி கொடுத்துள்ளாரே - இதற்குப் பதில் என்ன? அடுத்த காமகோடி இதழில் எதிர்பார்க்கலாமா?
(2) காமகோடி இதழ் அடுத்து சொல்லியிருக்கும் காரணம் விஷமத்தனமான சாமர்த்தியத்துக்கு எடுத்துக்காட்டாகும்.
இஸ்லாமியர்கள் படையெடுக்கும் காலம்வரை - இந்து மதம், அதன் வர்ணாசிரம முறைகள் மாற்றம் அடைந்து வந்தனவாம்.
வர்ணம் என்பது பிறப்பின் அடிப்படையில் தான் என்று இந்து மதம் வரையறுத்துக் கூறிய பிறகு, எப்படி அது மாற்றம் அடைந்து வந்திருக்க முடியும்?
பிறப்பின் அடிப்படையில் வர்ணாசிரமம் இல்லை என்று மாற்றிக் கொண்டார்களா? அதற்கு ஏதாவது ஆதாரம் உண்டா? பிரம்மாவே அவற்றைப் படைத்தான் என்று அறுதியிட்டவர்கள். அது மாற்றம் அடைந்து வந்ததாகக் கூற முயல்வது சரியான சந்தர்ப்பவாதம்தானே!
இஸ்லாம் படையெடுத்து வந்த பிறகு - அதுவரை மாற்றம் அடைந்து வந்த வர்ணமுறை - மிகக் கடுமையான (ஜாதி) அமைப்பாக உருமாற்றி விட்டனராம்.
விவாதத்துக்காகவே ஏற்றுக்கொள்வதானால் கடுமையான ஜாதி முறையை உருமாற்றியவர்கள் யார்? உயர் ஜாதி நிலையில் இருந்தவர் கள்தானே! கடுமையாக உருமாற்றினார்கள் என்றால், அதன் பொருள் ஜாதி அடுக்கில் கீழே கிடந்தவர்கள் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாகத்தானே பொருள் - அந்த நிலையில் மத மாற்றம் தவிர்க்க முடியாததானே!
அவ்வாறு ஜாதி முறையைக் கடுமையாக்கியதன் நோக்கம் என்னவாம்? ஹிந்துக்களின் எண்ணிக்கை குறைவதைத் தடுப்பதும்; சனாதன தர்மமாகிய ஹிந்து வாழ்க்கை முறை சிதைவு அடைவதைத் தவிர்ப்பதும் தானாம்.
ஹிந்து சமூக அமைப்பில் கடுமையான சனாதன முறை பின்பற்றப் படாமல் இருந்திருந்தால், மதம் மாறவேண்டிய அவசியம் யாருக்கும் ஏற்பட்டு இருக்காதே!
கீழ்ஜாதியாக ஒடுக்கப்பட்ட நிலையில் (அதாவது அவர்கள் சொல்லுவது போல சனாதனம் கடுமையாக ஆக்கப்படும் நிலையில்) பாதிக்கப்பட்டவர்கள் மதம் மாறுவார்களே தவிர அதிலேயே ஒட்டிக்கொண்டு இருக்கமாட்டார்கள் - அந்த நிலையில் சிதைவு அடையத்தானே அதிக வாய்ப்பு உண்டு. எதையும் தலைகீழாகப் புரட்டிச் சொல்வதுதான் அவர்களின் பாணியோ!
இந்து மதத்தைக் காப்பாற்றவேண்டும் என்று புறப்பட்டவர்கள் எல்லாம், ஆதிசங்கரரிலிருந்து "காமகோடி" வகையறாக்கள் வரை அதன்மீது வெறுப்புக்கொள்ளும் ஜாதி வெறித்தன செயல்களில்தான் ஈடுபட்டு வருகிறார்கள் என்பதுதான் உண்மை.
-------------"விடுதலை" தலையங்கம் - 12-7-2008
Search This Blog
12.7.08
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
அந்தக் காலத்திலே அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் படித்துப் பட்டம் பெற்ற பாபாசாகேப் அம்பேத்கர் குதிரை வண்டிக் காரராலும்,முடி திருத்துவோராலும் அவமானப் படுத்தப் பட்டார்.
அரசரின் உயர்நிலை ஊழியராக இருந்தாலும் அவருக்குக் கீழே வேலை செய்தவர்களால் அவமானப் படுத்தப் பட்டார்.
மகாத்மா காந்தியாராலும் அவமானப் படுத்தப் பட்டார்.
இத்தனை அவமானப்பட்டது நான் இந்து என்பதால் தானே,நான் இந்துவாகச் சாக விரும்பவில்லை என்று புத்த மார்க்கத்தைத் தழுவினார்.
இவ்வளவு பட்டும் இன்னும் இந்து மதம் ஜாதி மதமாகத் தானே இருக்கிறது.
Post a Comment