Search This Blog

13.7.08

மனிதனை மதிப்பது என்பது



தலைவர்களே! பெரியோர்களே! தோழர்களே!பணத்தால் ஒரு மனிதனை மதிப்பதென்றால் "ரிசர்வ் பேங்க்"கைத்தான் மதிக்க வேண்டும். படிப்பால் ஒரு மனிதனை மதிப்பதென்றால் பெரிய ‘லைப்ரெரி’யைத்தான் மதிக்க வேண்டும். அறிவால் ஒருவனை மதிக்க வேண்டுமானால் ‘என்சைக்ளோபீடியா’ ‘ரேடியோ’ ஆகியவற்றை மதிக்க வேண்டும்.

இப்படியாக அனேகவற்றை, ஜீவனில்லாதவைகளிலும் காணலாம்.ஆதலால், நாம் மனிதனை மதிப்பது, பேசுவது, நினைவுறுவது என்பவையெல்லாம் இவைகளை உத்தேசித்தல்ல. உலகிலுள்ள எல்லா ஜீவப் பிராணிகளும், மனிதர்கள் என்பவர்கள் உட்பட உருவத்தில் பேதம் இருந்தாலும், குணத்தில் பேதம் இருந்தாலும் நடப்பும், பயனும் அனேகமாய் ஒன்றுதான்.ஜீவன் என்றால் பிறத்தல், தன் நலனுக்காக வாழ்தல், இனத்தைப் பெருக்குதல், இறத்தல் ஆகியவைகளைக் கொண்டதேயாகும்.

இந்தத் தத்துவங்களைப் பார்த்தால் செத்த மனிதர்களும், இருக்கும் மனிதர்களும் ‘முக்காலே மூன்று வீசம் முக்காணி அரைக்காணி’ பேரும் அதற்கு மேற்பட்ட எண்ணிக்கை உடையவர்களும், மேற்கண்ட குணங்களையுடைய ஜீவப் பிராணி என்பதில் சேர்ந்தவர்களாகாமல் அவைகளினின்றும் உயர்ந்தவர்களாக கருதப்பட வேண்டிய மனிதத் தன்மை உடையவர்களாக இருக்க நியாயம் எங்கே இருக்கிறது?ஜீவன் என்றால், சுய உணர்ச்சி என்றுதான் கருத்து, சுய உணர்ச்சி என்பது தன்னைப்பற்றிய, தன் வாழ்வைப்பற்றிய, தன் பாதுகாப்பைப் பற்றிய உணர்ச்சி என்பதாகத்தான் முடியும். இத்தன்மையை உடையவர்களை ஜீவப் பிராணிகளில் நத்தை, சங்கு, ஈ, எறும்பு, பாம்பு, தேள், குயில், கழுகு, புலி, சிறுத்தை, குதிரை, யானை, ஆடு, மாடு, குரங்கு, மனிதன் என்பதாக மனிதனை மற்றவைகளோடு சேர்த்துச் சொல்லுவதற்கு அல்லாத தனிக்குணம் வேறு என்ன பெரும்பாலான மனிதர்களிடம் இருக்கிறது என்று கருதிப்பாருங்கள்.

மனிதனுக்கு ஆறு அறிவு இருக்கிறது என்று சொல்லுவது மனிதனை ஜீவப் பிராணிகளிடமிருந்து பிரிப்பதற்குப் போதுமான காரணமாகாது. சிந்திக்கிற குணம் எல்லா ஜீவப்பிராணிகளிடமும் இருக்கிறது. ‘ஜீவத் தன்மை’ எந்தெந்த ஜீவனுக்கு இருக்கிறதோ அவற்றிற்கெல்லாம் சிந்திக்கும் தன்மை உண்டு. ஆனால், அதில் அளவு வித்தியாசம் இருக்கிறது உண்மை. அதனால் எதுவும் வேறுபட்ட உயர்ந்த ஜீவனாக ஆகிவிடாது. அதன் பலனாலும் ஏதும் உயர்ந்ததாக ஆகிவிடாது.தேன் ஈக்களால், மக்கள் தேன் சாப்பிடுகிறார்கள். மாடுகளால், மக்கள் பால் சாப்பிடுகிறார்கள். ஆடு, கோழிகளால் மக்கள் ஆகாரம் அடைகிறார்கள். நாய்களால் காக்கப்படுகிறார்கள். கழுதை, குதிரை முதலியவற்றால் பொதி சுமக்க வைத்தும் சவாரி செய்தும் பயனடைகிறார்கள். இப்படி எத்தனையோ ஜீவன்களால் எத்தனையோ பலன் அடைகிறார்கள். இவற்றால் இவை உயர்ந்த ஜீவனாகக் கருதப்படுகின்றனவா? இல்லை. அப்படித்தான், மனித ஜீவனும், பல வழிகளில் பல காரணங்களால், வேறுபட்ட தன்மைகளால் ஒரு ஜீவனிடமிருந்து பிரிந்து காணப்படலாமே ஒழிய உயர்ந்த ஜீவனாகிவிடமாட்டான். மற்றபடி, எதனால் மனிதன் மற்ற ஜீவப் பிராணிகளுடன் சேராத உயர்ந்தவனாகலாம் என்று கேட்கப்படலாம். அதைச் சொல்லத்தான் இவ்வளவும் சொன்னேன்.ஜீவசுபாவ உணர்ச்சியான தன்மை உணர்ச்சியும் தன்னல உணர்ச்சியும் உள்ள மனிதன் இவற்றை (தன்னலத்தை) அலட்சியம் செய்து அதாவது தன்னைப் பற்றிய கவலையும் தனது நலத்தையும், தன் மேன்மைப்பற்றிய கவலையும், தனது மேல்வாழ்வின் தன்மை என்பதையும் அடியோடு மறந்து, மனித சமுதாய வாழ்வின் மேன்மைக்காகப் பணியாற்றவே மற்ற மனித ஜீவன்களுக்கு இருக்க முடியாத வசதி என்னும் தன்மை, தொண்டாற்றும் சக்தி ஆகியவை இருக்கின்றன என்று கருதி...தன்னலத்தையும், தன் மானாபிமானத்தையும் விட்டு, எவன் ஒருவன் தொண்டாற்றும் பணியை வாழ்வாகக் கொண்டிருக்கிறானோ, அவன் தான் மற்ற ஜீவப் பிராணிகளிடமிருந்து வேறுபட்ட மனிதத் தன்மை கொண்ட மனிதனாவான், மனித உரு ஜீவப்பிராணி என்பதில் எந்த மனிதனை மதிப்பதானாலும், நினைவு நாள் கொண்டாடுவதானாலும் இந்தக் குணத்திற்காகத்தான் இருக்கலாமே ஒழிய வேறொன்றுக்கும் ஆக இருக்க முடியாது.


---------------திருச்சி, தஞ்சை, கும்பகோணம் ஆகிய இடங்களில் 1945 மார்ச், ஏப்ரல் மாதங்களில் பெரியாரின் சொற்பொழிவு - ‘குடிஅரசு’ 14.04.1945

2 comments:

Thamizhan said...

வாழ்கின்ற பெற்றோருக்குச் சோறு போடாதவன்இறந்ததும் வாய்க்கு அரிசி போடுகிறான், ஆண்டு தோரும் திதி வைக்கிறான் --இவன் மனிதனா?
உயிருடன் இருக்கும் போது கவனிக்காத உறவினர் இறந்ததும் செய்யும் அமர்க்களம்-இவர்கள் மனிதர்களா?
ஒரு பூனைக்கும்,நாய்க்கும் காட்டும் அன்பைக் கூட அடுத்த மனிதர்க்குக் காண்பிக்காமல் இருப்பவர்கள்-மனிதர்களா?

மனித நேயமுள்ளவர்கள் தானே மனிதர்கள்.பெரியாரின் மனித இலக்கணம் எவ்வளவு சிறப்பாக இருக்கிறது.

தமிழ் ஓவியா said...

வாய்க்கரிசி போடவில்லையென்றால் தோசம் வந்துவிடும் என்று சொல்லி பார்ப்பான் தன் வயித்தை நிரப்பிக்கொள்கிறான். மூளைக்கு விலங்கு போட்டு தமிழனின் மூலதனம் முழுவதையும் சுரண்டிக் கொழுக்கிறான் பார்ப்பான். இதைசொன்னால் நாம் தீவிரவாதியாம். இந்து பயங்கரவாதிகள் ஓலம் இடுகின்றனர்.
தமிழா விழித்துக் கொள்.இல்லையேல் உன் குண்டித்துணியான கோவணத்தையும் உரிந்துவிடுவான் பார்ப்பான்.