Search This Blog

16.7.08

சமுதாய மறுமலர்ச்சி தேவை




ஒரு கழனியில் நெற்பயிரை எடுத்துக் கொண்டால், அந்த நெற்பயிரினுடைய உச்சியிலே சதிராடிக் கொண்டிருக்கின்ற மரகத வண்ண நெல்மணிகள் அரசியலுக்கு உவமை என்று ஆகுமேயானால், அதனுடைய பயிர்த்தண்டு பொருளாதாரம். அந்த நெல்மணிகளும், இந்தப் பயிர்த்தண்டும் கிடைக்க வேண்டுமேயானால், அடியிலே இருக்கின்ற உரந்தான் சமுதாய விழிப்புணர்ச்சி - சமுதாய மறுமலர்ச்சி

சமுதாயம் செப்பனிடப்படாமல் என்னதான் பொருளாதார மாற்றம் ஏற்பட்டாலும், அரசியலிலே பெறுகின்ற வெற்றிகள் கிடைத்தாலும் அது நிலைத்து நிற்க முடியாது என்பதுதான் என்னை ஆளாக்கியவர்கள் வளர்த்தவர்கள், நான் தலைவராக ஏற்றுக் கொண்டவர்கள் எனக்கும் நாட்டிற்கும் போதித்துள்ள தலை சிறந்த பாடமாகும்.
சமுதாயத்திலே மறு மலர்ச்சி தேவை என்று சொல்லும் பொழுது - பழைய வழக்கங்களில் மூடநம்பிக்கைகளில் நாம் ஒரு காலத்திலே நம்மையும் ஒப்படைத்துக் கொண்டிருந்தோம். அவைகளுக்கு மாறாக நடப்பது - ஆண்டவனுக்கு விரோதமான செயல். நாம் ஏற்றுக் கொண்டிருக்கின்ற சம்பிரதாயங்களுக்கு மாறான காரியம் என்றெல்லாம் கருதிக் கொண்டிருந்தோம்.

ஆனால், இன்றைக்கு நவீன உலகத்தில் நாமும் சேர்ந்து தேவையான பல விஞ்ஞான முன்னேற்றங்களை ஏற்றுக் கொண்டு, அந்த விஞ்ஞான சாதனைகள் மூலமாகப் புதியதோர் உலகத்தை படைக்க வேண்டும் என்கின்ற அந்த ஆர்வத்தை பெற்றிருக்கின்றோம்.
அய்ம்பது அல்லது அறுபது ஆண்டுகளுக்கு முன்பு வானத்திலே உள்ள நிலவு கவிஞர்களுக்கு மாத்திரம் கவிதைக்குப் பயன்பட்ட ஒன்றாக இருந்தது. ஆனால் இன்றைக்கு அந்த நிலவுக்கே பயணம் செய்து அங்குக் காலூன்றி அங்கே இருக்கின்ற கல்லை எடுத்துவந்து உலகெங்கும் காட்டுகின்ற அளவிற்கு விஞ்ஞானம் வளர்ந்திருக்கின்றது. இந்த உலகத்திலே ஏற்பட்டிருக்கின்ற மிகப் பெரும் மாறுதல் - முன்னேற்றம்!

அந்த முன்னேற்றத்தை நம்முடைய சமுதாயமும் பின் தொடர வேண்டும் என்கிற ஆசையிலேதான் தந்தை பெரியார் அவர்களால் ஒரு பேரியக்கம் தமிழகத்திலே உருவாக்கப்பட்டது - பேரறிஞர் அண்ணா அவர்களால் வளர்க்கப்பட்டது.


நிலவை அருகில் வரும்படி அழைத்து, அழுகின்ற குழந்தைக்குத் தாய்மார்கள் கண்ணாடியில் நிலவைக் காட்டிய காலம் ஒன்றிருந்தது. ஆனால், இன்னும் நூறு ஆண்டுக்குள் நிலைவைப் பிடித்துத் தா என்று அழும் குழந்தையை அழைத்துக் கொண்டு நிலவுக்கே சென்று இதுதான் நிலவு என்று காட்டுகின்ற அளவுக்கு விஞ்ஞானம் வளர்ந்தாலும் வியப்படைவதற்கில்லை.
இப்படி உலகத்திலே என்னதான் விஞ்ஞானம் வளர்ந்தாலும் கூட, நாம் இன்னும் சந்திரனையும் பூமியையும் ராகு கேது என்ற பாம்புகள் விழுங்குவதால் கிரகணம் ஏற்படுகிறது என்கின்ற கதையை நம்பிக் கொண்டுதான் இருக்கிறோம்.

அந்த நம்பிக்கையிலிருந்து விடுபட்டு ஒரு மறுமலர்ச்சி யுகத்திற்கு நாம் செல்ல வேண்டும் என்பதுதான் இந்த விழாவிலே நான் இளைய தலைமுறைக்கு விடுக்கின்ற அழைப்பாகும்.
எதையும் அப்படியே நம்ப வேண்டும் என்று கூறுவது பகுத்தறிவு வாதமல்ல, பகுத்தறிவு வாதத்தை எடுத்து வைத்து தந்தை பெரியார் அவர்கள், அவர் சொன்னார் இவர் சொன்னார் என்று
அறிவிழந்து தடுமாற்றம் அடைய வேண்டாம்
எவர் சொன்ன சொல்லானாலும் அதனையுன்றன் இயல்பான பகுத்தறிவால் எண்ணிப் பார்ப்பாய்!

என்ற கவிதை வரிகளை வெளியிட்டுத்தான் அவருடைய குடிஅரசு, பகுத்தறிவு போன்ற சுயமரியாதை இயக்க ஏடுகளை நாட்டில் நடமாடவிட்டார்.


சாமி சிதம்பரனார் என்ற ஆழ்ந்த பகுத்தறிவாளர் தீட்டிய அந்தப் பாடல் - சமுதாயத்திற்கு மறுமலர்ச்சி தேவையென்று தொடங்கப்பட்ட அந்தக் காலக்கட்டத்தில் தமிழ்நாட்டு மக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

----------------------------------------- முதல்வர் கலைஞரின் "இளைய சமுதாயம்" என்ற நூலிலிருந்து ஒரு பகுதி - (முதற்பதிப்பு 1996)

2 comments:

Thamizhan said...

ஒருவர் உன்னை எப்படி நடத்தவேண்டும் என்று நீ விரும்புகிறாயோ அப்படி நீ மற்றவர்களை நடத்து.
பெண்ணுரிமை என்று வரும் போது உன் மகளையும்,தங்கையையும் நினைத்துப் பார்.
பெரியாரின் இந்த இரண்டு மனித நேயக் கருத்துக்களை கடைப் பிடிப்பதில் நாம் ஒவ்வொருவரும் அடைந்துள்ள வெற்றியே சமுதாயம் நம்மால் அடைந்துள்ள பயன் ஆகும்.

தமிழ் ஓவியா said...

மிக்க நன்றி தோழரே. தங்களின் பின்னூட்டங்கள் நல்லநல்ல கருத்துக்களை சொல்கிறது.