Search This Blog

20.7.08

ரஜினி மீது பாயும் இராமகோபாலன்
இந்து முன்னணியின் அமைப்பாளரான திருவாளர் ராம.கோபாலன் திடீர் என்று நடிகர் ரஜினிகாந்தின்மீது பாய்ந்திருக்கிறார். மதமாற்றத்துக்குத் துணை போகிறாராம் ரஜினி!
புதிராகத்தான் இருக்கும். ராம கோபாலன் கூறுவதைக் கேட்டால் சிரிப்பாகத் தான் இருக்கும்.
இயேசு கிறிஸ்துவின் பன்னிரண்டு சீடர்களில் ஒருவரான புனித தோமையார் பற்றி, சென்னை மயிலாப்பூரில் உள்ள கத்தோலிக்க கிறிஸ்துவ மறை மாவட்டம் ரூ.100 கோடி செலவில் திரைப்படம் எடுக்கப் போகிறதாம்.. அதில் திருவள்ளுவராக நடிகர் ரஜினிகாந்த் நடிக்க இருப்பதாக திருவாளர் ராமகோபாலன் கேள்விப் பட்டு கொப்பளித்து எழுந்துள்ளார்.

இயேசுவின் சீடரான புனித தோமையார் இந்தியாவுக்கு வரவேயில்லை. அவர் சென்னைக்கு வந்தார்; திருவள்ளுவரைச் சந்தித்தார். பரங்கி மலையில் நரபலி ஆசாமிகளால் கொல்லப்பட்டார் என்பதெல்லாம் கட்டுக்கதை என்று திருவாளர் ராம கோபாலன் ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார் என்று `குமுதம் ரிப்போர்ட்டர் (17.7.2008) வெளிப்படுத்தியுள்ளது.

டாக்டர் கிருஷ்ணசாமி அய்யங்கார் போன்றவர்கள் எல்லாம் கூறியிருக்கிறார்கள் என்று ஆதாரத்தோடு பேசுகிறாராம் திருவாளர் ராமகோபாலவாள்!

புனித தாமஸ் மலை என்று பெயர் மாற்றியது. அநீதியானது மட்டுமல்ல, அது ஒரு கட்டுக்கதையும்கூட; அதுபோல திருக்குறளில் கிறிஸ்துவ கருத்துகள் உள்ளன என்பதும் அபத்தமான ஒன்று. அது தொடர்பான போலி ஆராய்ச்சிகளை அருணவேல் முதலியார் என்பவர் அவரது புத்தகத்தில் கண்டித்துள்ளார் என்றெல்லாம் முடிபிளந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளார்.

இந்த வரலாற்று மோசடிப் படத்தில் ரஜினி திருவள்ளுவராக நடிக்கக் கூடாது. இந்தப் படம் மூலம் மக்களை மத மாற்றம் செய்ய பாதிரியார்கள் திட்டமிட்டுள்ளனர். `புனித தோமையார் படத்தில் ரஜினி நடித்தால் மத மாற்றத்துக்கு அவர் துணை போய் விடுவார். இதன் மூலம் ரஜினியைச் சாக்கடையில் தள்ளிவிடப் பாதிரியார்கள் முயற்சிக்கிறார்கள் என்றெல்லாம் வாய்வந்த போக்கில் உளறிக் கொட்டியிருக்கிறார். இந்தப் படம் வந்தால் கடுமையாக எதிர்ப்பார்களாம்; தேவைப்பட்டால் சட்டத்தின் உதவியையும் நாடுவார்களாம்.
ராம கோபாலன் கூற்றை மறுத்து அருட் தந்தை பால்ராஜ் லூர்துசாமி கூறிய கருத்துகளையும் `குமுதம் ரிப்போர்ட்டர் வெளியிட்டுள்ளது.`புனித தோமையார் என்ற இயேசு வின் சீடர் இருந்தாரா? அவர் இந்தியா வந்தாரா? படுகொலை செய்யப்பட்டாரா? என்கிற கேள்விகளை எழுப்பி அதுகுறித்து விவாதங்களில் ஈடுபடுவது ஒருபுறம் இருக்கட்டும்.

கிறித்துவத்தின்மீதும், `தோமையார் மீதும் விவாதங்களை வைக்கும் இந்து முன்னணி அமைப்பாளர் அதற்கான தகுதி உடையவர்தானா? என்பதுதான் அடிப்படையான கேள்வி ஏன்? முதல் கேள்வியும்கூட!

வரலாற்று ஆசிரியர்களின் துணை கொண்டு, கோதாவில் குதிக்கின்ற அவரை ஒரே ஒரு கேள்வி மூலம் நெட்டித் தள்ளிவிட முடியும்.

வரலாற்று ஆதாரங்களைக் கையில் எடுத்துக் கொண்டு புறப்படுகிறாரே - அதுபோன்றே வரலாற்று ஆதாரங் களைக் காட்டி ராமன் பிறப்பையும் ராமன் வரலாற்றையும் ஆய்வு செய் யும்பொழுது மார்பு நிமிர்த்தி கருத்துக்குக் கருத்து மோதலுக்குத் தயாராக இருந்ததுண்டா! அவர்கள் போற்றும் சுவாமி விவேகானந்தரிலிருந்து நீலகண்ட சாஸ்திரியார், பண்டித ஜவகர்லால் நேரு உள்பட அனைவரும் இராமாயணம், மகாபாரதம் கட்டுக்கதை என்று எழுதியிருக்கிறார்களே - அதனை ஏற்றுக் கொள்கிறாரா திருவாளர் ராம. கோபாலன்? `பஞ்ச தந்திரம் `அரேபியன் நைட் முதலிய கற்பனைக் கதை களைப் போன்றவைதான் இராமாயணமும், மகா பாரதமும் என்று பண்டித ஜவகர்லால் நேரு (Discovery of India பக்கம் 76-77) எழுதியிருக்கிறாரே

"இராமாயணம் ஒரு கட்டுக்கதைதான்; வால்மீகியின் கற்பனையின் விளைவாகவே இராமாயணம் உண்டாயிற்று" - என்று வரலாற்று ஆசிரியர் நீலகண்ட சாஸ்திரியாரின் ஆய்வுக்கு அக்கிர ராமகோபாலனின் பதில் என்ன?

யாரோ டாக்டர் கிருஷ்ண சாமி அய்யங்கார் எழுதியுள்ளார் என்று தோமையாரை மறுக்கும் இந்தக் கூட்டம் - வரலாற்று ஆசிரியர் நீலகண்ட சாஸ்திரியின் கூற்றை ஏற்று இராமன் கற்பனை, இராமாயணம் கற்பனைக் காவியம் என்று ஏற்றுக் கொள்ளத்தயாரா?இப்படியெல்லாம் அறிவுப்பூர்வமாக வினாவைத் தொடுக்கும் நேரத்தில் திரு வாளர் ராம. கோபால அய்யர்வாள் கூட்டம் தயா ராக ஒரு பதிலை வைத்துள்ளது. இந்த விஷயத்தில் எல்லாம் வரலாறு - கிரலாறு என்று பேசக் கூடாது. அது `இந்துக்களின் நம்பிக்கை என்று வழுக்கி ஓடுவதில்லையா?

அதே பதிலை தோமையார் விஷயத்தில் கிறித்தவர்கள் சொன்னால், ராம. கோபாலன் தன் முகத்தை எங்கே கொண்டு போய் வைத்துக் கொள்வார்.

மனித சமுதாயமே தோன்றாத கால கட்டத்தில் ராமன் பதினேழரை லட்சம் வருடங் களுக்குமுன் பாலம் கட்டினான் - அதுதான் சேதுபந்தனம்! அதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அடாவடித்தனம் பேசுவோர்கள் - இன்னொரு மத சம்பந்தமான விஷயம் என்று வருகிறபோது மட்டும் குறுக்குக் கேள்வி களையும் நெடுக்குக் கேள்வி களையும் கேட்க உரிமை படைத்தவர்கள்தானா?


அயோத்தியில் 450 ஆண் டுகளுக்குமுன் பாபர் மசூதி கட்டப்பட்டது என்பதற்கு வரலாற்று ஆதாரம் இருக்கிறது.

அதனை இடித்த இந்து ராம கோபாலன் வகையறாக்கள் அது ராமன் பிறந்த இடம் என்கின்றன ராமன் வரலாற்று மாந்தன் அல்ல - புராணக் கற்பனைப் பாத்திரம்
புராணக் கற்பனைப் பாத்திரத்துக்காக ஒரு வரலற்றுச் சின்னத்தை இடித்தவர்கள் தோமையார் விஷயத்தில் வரலாற்று ஆவணங்கள் பற்றிப் பேச அருகதை உடையவர்கள்தானா?
வரலாறு தங்களுக்கு உதவாத தருணத்தில் மட்டும் நம்பிக்கை என்னும் முக்காட்டுக்குள் ஒளிந்து கொள் வார்கள்.
``பேச நா இரண்டுடையாய் போற்றி! என்று ஆரியப் பார்ப்பனர்கள்பற்றி அபிடுபே வருணித்ததை அறிஞர் அண்ணா அவர்கள் அருந் தமிழில் ஓவியம் தீட்டிக் காட்டினார்.
பார்ப்பனர்களைப் பொறுத்தவரை அது என்றென்றைக்கும் பொருந்தக் கூடியதுதானே!

நடிகர் ரஜினிக்குத் தொழில் சினிமாவில் நடிப்பது; அதுவும் திருவள்ளுவர் பாத்திரத்தை அவர் ஏற்று நடிப்பது என்பது அவருக்குப் பெருமை சேர்க்கக் கூடியதே! அவரைப் போய் ராம. கோபாலன் மிரட்டுகிறார்.
படம் வரத்தான் போகிறது. அப்பொழுது பார்ப்போம் ராமகோபாலன் படை ஜெயிக்கிறதா? - ரஜினி படை ஜெயிக்கிறதா? என்று!

----------- 19-7-2008 "விடுதலை" ஞாயிறுமலரில் மின்சாரம் எழுதிய கட்டுரை

0 comments: