Search This Blog

17.7.08

பேய் பிசாசு, சூன்யம், கெட்ட நாள், நல்ல நாள், தீய நாள் என்பதெல்லாம் பொய்

மூடநம்பிக்கைகள் பலவிதம்



விஞ்ஞான விதியின்படி நமது பகுத்தறிவை உபயோகப் படுத்திப் பார்க்கையில் நமது நாட்டில் கொண்டிருக்கும் பல பொய் நம்பிக்கைகளுக்கு ஆதாரம் இல்லை என்று நாம் சொல்ல வந்தோம். முக்கியமாக நமது நாட்டார் தெரிந்து கொள்ள வேண்டிய விஷய மென்ன வெனில் நமது நாட்டில் தெரியாமையாலும், அறிவு விளக்காமையாலும், காட்டுமிராண்டிகள் கொண் டுள்ள பல நம்பிக்கைகளை நமது நாட்டார் அநேகர் கொண்டுள்ளனர். இவ்வித நம்பிக்கைகளுக்கு, புராதன நம்பிக்கை என்று வழங்குவார்கள். இவ்வித நம்பிக்கைகள், விசாரணை முதிர முதிர பொய் நம்பிக்கை என்று ஏற்படும். விசாரிக்காத வரை, இந்த நம்பிக்கைகள் கொள்ளுவது சகஜ, கடவுள், ஆன்மா, மோட்சம், நரகம், பேய், பிசாசு, மணி மந்திரம், பூசை நைவேத் தியம், பிரார்த்தனை, பலி இவைகளைப் பான்ற நம்பிக் கைகள். மனிதன் குழந்தைப் பருவத்தை அடைந்திருந்த காலையில் எழுந்த எண்ணங்களாகும். அந்தக் காலங்களில் பிரகிருதங்களில் நடக்கும் சம்பவங்களுக்குத் தன்னைப் போன்ற கர்த்தா இருக்கலா மென்று எண்ணுவான். இதற்கு Anthropomorphism (அதாவது மனிதனைப் போன்ற கர்த்தர் ஒருவனோ, பலரோ உளதாக எண்ணுவது) என்று பெயர். இந்த மனப்பான்மை நமது நாட்டில் ஒவ்வொருவருடைய மனதில் குடி கொண்டுள்ளது. இந்த மனப்பான்மையால்தான் நோய்கள், மந்திரத்தால் போகு மெனவும், தங்கள் கோரிக் கைகள் கடவுள், தெய்வம், பேய், பிசாசுகளால் பூசை, நிவேதனம், பிரார்த்தனை, பலி முதலிய காரியங்களால் கைகூடி வருமெனவும் எண்ணி வருகின்றார்கள். இவ்வித எண்ணத்தால் சரியான காரண காரிய முறையப்படிச் சிகிச்சை செய்து கொள்ளாமல் வாந்தி பேதியால் 6,00,000 (ஆறு லட்சம்) பேரும், சுரத்தால் 10,00,000 (பத்து லட்சம்) பேரும், பாம்புக் கடியால் 6000 பேரும் வருஷாவருஷம் சாகின்றார்கள்! ஒரு காலத்தில் அம்மை குத்துவதற்கு முந்தி அம்மையால் சாகும் மாந்தருக்குக் கணக்கே இல்லை.

அம்மை குத்தியவுடன் உடுக்கை, சிலம்பு, வேப்பிலை, விளக்கு வைத்துப் பார்த்தல் முதலிய பயனற்ற காரியங்கள் யாவும் பறந்தோடிப் போயின. இன்றைக்கும் நமது நாட்டில், பாமர மக்கள் வாந்தி, பேதி, மகாமாரி என்று வழங்கும் கொள்ளை நோய், விஷ சுரம் இன்னும் கொடிய நோய்கள் மாரியாத்தாவால, வெள்ளை சேலைக்காரியால் உப்பாடைச் காரியால், பச்சை அம்மனால், பேயாண்டியால், அண்ணன் மார், கன்னி மாறாமல் இருளன், வீரன், காட்டேரியால் உண்டாகின்றனவென எண்ணி வருகின்றார்கள். இந்த எண்ணத்தை வளர்க்கவும், பாமர மக்கள் சாகவும், பூசாரி கள் என்றும், கனிப்பு எடுக் கின்றவர்கள் என்றும், மந்திரக் காரர்கள் என்றும் சூனியக்கா ரர்கள் என்றும் Mounte banks, Charlatans, Humbugs, Frauds மோசக்காரர் களும், தந்திரவாதிகளும், பித்தலாட்டக்காரர்களும் தோன்றி நமது நாட்டு மக்களை வதைத்து வருகின்றனர்.

நமது நிருபர்களில் பெரும் பான்மையோர் இந்தப் பித்தலாட்ட மோசங்களை அறியாமல் பாம்புக்கடி, மந்திரத்தால் நீங்கியதைப் பார்த்தேன். பிசாசைப் பார்த்தேன்; பேயை பார்த்தீர்களா? என, பலவித உபயோகமற்ற கேள்விகளைக் கேட்கப் புகுகின்றார்கள். இவர்களை ஒன்று கேட்கின்றேன். பாம்புக்கடி, மந்திரத்தாலும், மாலை இடுவதாலும் தீர்ந்த தென்றால், என்ன இந்தப் பாம்புக் கடியால் 6000 ஏழை மக்கள் வருஷா வருஷம் சாகின்றார்கள்? வைசூரி அதாவது அம்மை மாரியாத்தாள் (இவள் ஓர் பேய்) உண்டாவதென்றால், ஏன் ஜெர்மனியில் ஒருவருக்கா கிலும் அம்மை பல வருஷங் களாக வருவதில்லை? நமது நாட்டிலும் அம்மை குத்திக் கொண்டவர்களுக்கு ஏகபோக மாக அம்மை வருகிறதா?

நம்நாட்டில் குழந்தைப் பருவத்தில் ஆண் மக்களும் பெண் மக்களும் பத்துக்கோடி இருந்து வசிக்கின்றார்கள். இவர்களுடைய அறியாமையை நீக்கி, இவர்கள் அகால மரணமடையாமல், காப்பாற்ற முயலாமல், பேய் உளதா?, பிசாசு உளதா? எனும் வீண் கேள்விகளை நமது நிருபர்கள் கேட்பது வருந்ததக்கதேயா கும்? சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை போல் பாமர மக்கள் நம்பி மோசம் போகும் விஷயங்களைத் திரும்ப திரும் பக் கேட்பதில் பயனென்ன? நமது நிருபரை ஒன்று கேட்கின்றேன். யூரோப்பிலும் அமெரிக்காவிலும் சுமார் 50 கோடி மனிதர் வாழ்கின்றார்கள். நமது நாட்டில் 35 கோடி பேர் இருக்கின்றார்கள். இவ் விரு திறத்தாரில் மந்திரத்திலும், மாயத்திலும், தந்திரத்திலும் நம்பிக்கை இல்லாத 50 கோடி மக்களில் 1000 பேருக்கு வருஷ மொன்றுக்கு 10, 12 பேர் சாவானேன்? நமது 35 கோடி யில் வருஷமொன்றுக்கு 1000 பேரில் 30,40,50,60 ஆவது சாவானேன்? இது ஒன்றே போதும், மந்திர தந்திரங்கள், பேய் பிசாசு, சூன்யம், கெட்ட நாள், நல்ல நாள், தீய நாள் என்பதெல்லாம் பொய் என்பதற்கு.

இந்தப் பொய் நம்பிக்கைகளும், தப்பு எண்ணங்களும் ஏன் நமது நாட்டில் தெரிந்த வர்களுக்கும் கூட, இருந்த வருகிறதென்றால் விசாரணை இன்மையாலென அறிக. சம்பவங்களின் காரணகாரிய முறையை அறியாமல் நமது நிருபர்களுக்கு நம்மைக் கேட்கும் கேள்விகள் பலவும் எழு கின்றன. இதன் விஷமாக நாம், அறிந்து கொள்ளவேண்டியது என்னவெனில், சம்பவங்கள் நிகழ்வது சாதாரண காரண காரிய முறையால் உண்டாகின் றன என்ற எண்ணத்தைப் பெறவேண்டும். மழை, காற்று, புயல், பனி, வெளிச்சம், இருள், பிறப்பு,இறப்பு, தன்னாமை, வயது போன்ற பிரகிருத சம்பவங்கள் யாவும் எந்தக் காரணங்களால் உண்டாகின் றனவோ, அவை போன்ற காரணங்களால், நமக்கு விளங்காத சம்பவங்களும் உண்டா கின்றன என்ற மனப்பான் மையை வளர்க்கவேண்டும். காக்கை கா என்றதாம். அப்பாவென்று கணவனைக் கட்டிக்கொண்ட மாதிரி விசா ரிக்காமல் மந்திர தந்திரங்களில் பேதை நம்பிக்கை வைப்பதால் வரும் குழப்பமாகும். நமது பாமரமக்களுக்கு ஓர் நம்பிக் கையுண்டு. இந்த நம்பிக் கைக்குக் காரணம் விசாரிக்காத தோழர்கள் என அறிக. இதனைச் சற்று விளக்கிக் காட்டலாம். பாம்பு கடித்தது உண்மை; மந்திரித்தது உண்மை; கடித்தவன் சாகாமல் பிழைத்தது உண்மை எனவும் வைத்துக் கொள்வோம். ஆனால், கடித்த பாம்புக்கு அந்த வேளையில் சாக வைக்கப் போதுமான விஷம் அதன் வாயில் இருந்ததற்கு அத் தாட்சி என்ன? பாம்பால் கடிக்கப்பட்டவர்களில் 100-க்கு எத்தனை பேர் மந்திரத்தால், பிழைத்தவர்கள்? 100-க்கு 70-க்கு 60 தா? 50 தா? 30 தா? பத்தா? இந்தக் கணக்கு ஏற்படுகின்ற வரை மந்திரத்தால் பிழைத்த தாகச் சொல்வது அபாயமே ஆகும்.

இன்னொரு விஷயம் இது சம்பந்தமாகக் கவனிக்கத் தக்கது. மந்திரக்காரரே, அவன் பாம்பால் கடியுண்டு இறந்தும் இருக்கின்றான். விஷப் பாம்பின் வாயில் இல்லை என்று நம்பி, கடிக்கப்பட்டவன் இறந்தும் இருக்கின்றான். பல நாளாக விஷமுண்ட சந்நியாசி ஒரு நாள் இறந்தும் இருக்கின்றான்.

இந்தத் திருஷ்டாந்தங்களால், பாம்பு கடித்த விஷம் உண்ணுவதும், மந்திரத்தாலும், யோக அப்பியாசத்தாலும் நீங்கியதென்பது விசாரணை இன்மையாலெழும் மருளென விளங்குகிறது. இந்தக் காட்சி களெல்லாம் illusion என்ற பித்தலாட்டம் இருந்து இருக்க லாம். நமது நிருபர்களை ஏமாற்ற அரவு தீண்டினாலும், மந்திரக்காரனும் கடித்த மாதிரியாகவும் நடித்திருக்கக் கூடும். பிழைத்த மாதிரியாகவும் நடித்திருக்கக் கூடும். அல்லது Flight of hand என்றும் கைச் சாடையால் விஷமுண்டது போல சந்நியாசிகள் ஜாடை காட்சியும் செய்து இருக்க லாம். இந்த ஜாடைகளைத் தெரிந்துகொள்வது, மெய்ஞ் ஞானிகளுக்கும் கஷ்டமென் றால் நமக்கு நேரும் கஷ் டத்தைச் சொல்ல முடியுமா? Hindin என்ற ஜாடைக்காரன் செய்துவந்த ஜால வேடிக் கைகளை இன்னும் கூட சிலவற்றை அறிய முடிய வில்லை என்றால் தந்திரச் சாமிகளின் சமார்த்தியத்தைத் தெரிந்துகொள்வது லேசான காரியமாகுமா?

ஒரு நிருபர் இப்னாடிஸம், மெஸ்மரிஸம் என்றால், மெஸ்மரிஸமென்ற வார்த்தை தற்போது வழங்குவதில்லை. கை ஜாடையால் தூங்க வைப்பதற்கு இப்னாடிஸ மென்று சொல்வார்கள். இதில் ஒன்றும் விசேடமில்லை. பிள்ளைகளைப் பெற்ற தாய்மார், அனுதினம் தங்கள் குழந்தைகளை ``இப்னோ டைஸ் செய்து தூங்க வைக் கின்றார்கள். ``னலா, லலா, லலயை என்ற பாட்டுப் பாடி யும், ``ஆராரோ ஆரிராரோ`` என்னும் பாட்டாலும் நமது பிள்ளைகளைத் தூங்கவும் வைக்கின்றோம். அதன் அழு கையையும் தணிக்கின்றோம். அதே மாதிரியாகவே சிற்சில கை ஜாடையால் சில நோயாளி யின், நோயின் பாதையைச் சற்றுத் தணியச் செய்கின் றார்கள். இது Suggestion என்று வழங்கும். தேள் கடித் தால், கோழி இறக்கையைச் சிகிச்சை கொண்டாகிலும், வேப்பிலையைக் கொண் டாகிலும் துடைப்பக் குச்சியைக் கொண்டாகிலும் அடுத்தடுத்துத் தொட்டால் சற்று உபாதை நீங்குமென்று சொல்கின்றார்கள். இதனுடன் அர்த்தமில்லாத சில வார்த் தைகளையும், சொல்கின் றார்கள். இந்த வார்த்தைகளின் சத்தமும், தொடும் ஸ்பரிசமும் சேர்ந்து பாதிக்கப்பட்டோனுக்கு ஒரு வித ஆறுதலை உண்டாக்கினும் உண்டாக்கலாம்.

ஆனால் எனக்குப் பல தடவை தேள் கொட்டிய போது, மந்திரம் பயன்படவுமில்லை; தந்திரமும் பயன்பட வுமில்லை. இரவு எல்லாம் கஷ்டப்பட்டேன். சிலருக்கு Suggestion பயன்படுவதில்லை என்கிறார்கள். இதன் விஷய மாக 50, 60 பாதிரிமார்கள் சேர்ந்து ஒரு ரிபோர்ட்டு, அறிக்கை விட்டிருக்கின்றனர். இதில் கண்டுள்ள விஷயங் களால் மந்திரம், தந்திரமாக இருக்கலாமென்று அபிப்பிராயப்படுகின்றார்கள்.

நமது நிருபர்களுக்கு கடைசியில் தெரிவித்துக் கொள்வ தென்னவெனில், தரித்திரம், பஞ்சம், நோய், அறியாமை, கல்லாமை இன்னும் பல நிறைந்துள்ள நமது நாட்டில், இவைகள் குறையுமாறு உழைப்பது சிறந்ததாகும் எனத் தெரிவித்துக் கொள்ளுகின்றேன். பொய் நம்பிக்கை, துர்ப்பழக்கம், அடிமைத்தனம், சுதந்திரமில்லாமை, சமத்துவ மில்லாமையால் துன்புறும் நமது தோழர்களைக் கைதூக்கி விட இதைவிடச் சிறந்த பணி இவ்வுலகில் இல்லை என அறிந்து உழைப்பார்களெ னவும் கோருகின்றோம்.

----------------------- ம. சிங்காரவேலர் அவர்கள் எழுதிய கட்டுரை

2 comments:

அறிவகம் said...

நல்ல பதிவு வாழ்த்துக்கள்

tamiloviya said...

நன்றி தோழ்ரே.தொடர்ந்து கருத்து தெரிவிக்கவும்.