Search This Blog
24.7.08
உண்மையைச் சொல்ல வந்தால் - தேசத் துரோகியா?
பொதுநல உணர்ச்சி
மக்களின் நன்மைக்கான காரியம் என்பதாக ஏதாவது ஒன்றைக் கண்டுபிடித்து அதைச் செய்யலாமா என்கிற கவலையோ இலட்சியமோ இல்லாமல், வெறும் கலாட்டாவில் பத்திரிகைகளில் பிரமாதப்படுத்தப்படுகின்றனவே அல்லாமல், உருப்படியான காரியம் எதையும் காண எவராலும் முடியவில்லை. வீணான வழியில் ஊக்கமும் உணர்ச்சியும் போய்க் கொண்டிருக்கின்றன.
படித்தவர்கள், படிக்காதவர்கள், தேசபக்தர்கள், அரசியல்வாதிகள் ஆகியவர்களின் காரியங்கள்தான் இப்படி இருக்கின்றன என்று பார்த்தால், இவர்களைத் தவிர மற்றவர்களான, பொது நலத்தில் - ஜீவகாருண்யத்தில் - தர்ம காரியத்தில் கவனம் கொண்ட மற்ற கனவான்களின் செயல்களும் இதைவிட மோசமான காரியங்களாகவே இருக்கின்றன.
பொதுக் காரியம் என்பதே நமது நாட்டில் கோவில் கட்டுவது, கும்பாபிஷேகம் நடத்துவது, பழைய கோவில்களைப் புதுப்பிக்கும் திருப்பணி செய்வது, அந்தச் சாமிகளுக்கு வாகனம், இரதம், தேர், உற்சவங்கள் செய்வது, சத்திரங்கள் கட்டி - வருகின்ற பக்தர்களுக்கும் பார்ப்பனர்களுக்கும் சாப்பாடு போடுவது, வேதப் பாடசாலை, தேவாரப் பாடசாலை முதலியவை கட்டுவது, இலட்ச பிராமண சமாராதனை, இலட்சத் தீபம் முதலியவைகளைச் செய்விப்பது ஆகிய காரியங்களே பொதுத் தர்மங்களாக நடைபெறுகின்றன.
ஏதாவது மக்களுக்குப் பிரச்சாரம் செய்வது என்றாலோ, ஆடு மீன் கோழி சாப்பிடக் கூடாது - சாப்பிட்டால் நரகம் என்றும்; திருநீறு பூசினால் பாவமெல்லாம் போகும் என்றும் மற்றும் இதுபோல் பிரச்சாரம் செய்வதும்; பொதுமக்களுக்கு ஏதாவது ஒழுக்கம் கற்பிக்க வேண்டுமானால் இராமாயணம், பாரதம், பாகவதம், திருவிளையாடல் புராணம் முதலிய புராணங்கள் படிப்பதன்மூலம் ஒழுக்கங்கள் கற்பிப்பதும் ஆகிய காரியங்களே மற்றவர்கள், பிரபுக்கள், நாகரிகமடைந்தவர்கள் ஆகியவர்களின் பொதுநல சேவையாக இருக்கின்றன.
இந்த நிலையில் இந்தியாவுக்கு இன்று வேண்டியது இன்னது என்று அறிந்தவர்கள் யாராவது இருக்கின்றார்களா என்பதை வாசகர்களே யோசித்து உணரவிட்டு விடுகின்றோம். ஆகவே தேச பக்தியும், கடவுள் பக்தியும் மனிதனை சுயநலஸ்தனாகவும், கண்மூடித்தனமாய்ப் பின்பற்ற வேண்டியதாகவும் செய்கின்றதே தவிர, மனித சமூகத்தின் - நாட்டின் முன்னேற்றத்தின் ஏ, பி, சி, டி-யைக் கூட காணச் செய்ய முடியவில்லை.
தேசபக்தி என்கின்ற வார்த்தையே வெள்ளைக்காரன் இராச்சியத்தில் உத்தியோகம் சம்பாதிப்பதற்கு ஏற்படுத்தப்பட்டதல்லாமல் வேறு எதற்காகவாவது ஏற்படுத்தப்பட்டு - வேறு ஏதாவது பலன் கொடுத்தது என்று யாராவது ஒற்றை விரலை நீட்ட முடியுமா? தேச பக்தியும், கடவுள் பக்தியும் மனித சமூகத்திற்கு என்ன பலனைக் கொடுக்கக் கூடியதாய் இருக்கின்றன, அல்லது கொடுத்தன என்றாவது யாராவது சொல்ல முடியுமா? மற்ற தேசத்தாரெல்லாம் விடுதலையடைய, சுதந்திரமடைய இந்த மாதிரிதான் நடந்தார்களா? மக்கள் முன்னேற்றம் அடையவும் அவர்களது கஷ்டமும் சரீரப் பிரயாசையும் அடிமைத்தனமும் ஒழியவும், மனிதத் தன்மை இன்னது மனிதனுடைய இயற்கைத் தன்மை இன்னது என்பவைகளை உணர்த்தி அவைகளை அடையச் செய்து கவலையற்று வாழச் செய்வதற்கு இதுவரை யார் என்ன கவலை எடுத்து என்ன காரியம் செய்திருக்கின்றார்கள்?
ஒவ்வொரு மனிதனும், பொது நலத்திற்குப் பாடுபடுகின்றேன் என்கின்ற ஏணியின் மூலம் சுயநலத்திற்குப் போகின்றானேயல்லாமல், உண்மையான பொது நலத்துக்காக வேலை செய்வதற்கு யார் இருக்கின்றார்கள்? இருந்தார்கள்? அல்லது அதற்காக வேண்டியது என்ன என்றாவது யார் அறிந்தார்கள்? வீணே சுயநலமும் குருட்டு நம்பிக்கையும் கொண்டவர்கள் செய்கையானது பல வழிகளிலும் இன்றைய தினம் நம் நாட்டை - ஜன சமூகத்தைப் பாழாக்கிக் கொண்டு வருகின்றதைத் தவிர வேறு ஒரு காரியமும் காண முடிவதில்லை. இந்த இலட்சணத்தில் யாராவது உண்மையைச் சொல்ல வந்தால் அவர்களை - தேசத் துரோகி என்றும் நாத்திகன் என்றும் மூளாவண்ணம் பேசுவதிம் குறைவில்லை.
--------- தந்தைபெரியார் - குடிஅரசு, தலையங்கம் - 21.12.1930
Labels:
பெரியார்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment