Search This Blog
8.7.08
நம்பிக்கை துரோகம்
தென்னாட்டில் பிராமணர்களின் கொடுமைகளை வெளிப்படுத்தி அவர்களால் அழுந்திக் கிடக்கும் பிராமரணல்லாதார் சமூக முன்னேற்றத்திற்குப் பாடுபடும் இயக்கங்களையும், தொண்டர்களையும் ஒழிப்பதற்கு தென்னாட்டு பிராமணர்கள், பிராமணரல்லாதாரிலேயே சில விபூஷணாழ்வார்களை தங்களுக்கு ஆயுதமாக உபயோகப் படுத்திக்கொண்டு வந்தது நமக்குப் புதிய சங்கதியல்ல.
சரித்திர காலம் எப்படியிருந்தாலும், நம் கண்ணெதிராகவே சென்ற 10 வருஷங்களாக நடந்த காரியங்களைக் கவனிப்போம். பிராமணரல்லாதார் நன்மைக்கென்று சந்தேகமற்ற தேசபக்தரான டாக்டர் நாயர் போன்றவர்களால் ஏற்படுத்தப்பட்ட, ஜஸ்டிஸ் கட்சியை ஒழிக்க, சில பிராமணரல்லாதாரைக் கொண்டே சென்னை மாகாணச் சங்கமென ஒன்றை உண்டாக்கச் செய்து, அதற்கு வேண்டிய செலவுகளுக்குத் தாங்களே பணம் கொடுத்தும், இந்தியாவில் மாத்திரமல்லாமல், இங்கிலாந்திலும் போய் சிறீமான் டி.எம். நாயர் அவர்களுக்கு விரோதமாக பிராமணரல்லாதாரைக் கொண்டு எதிர்ப்பிரசாரம் செய்வித்தும் உண்மைக்கு விரோதமாக சாட்சியம் சொல்லும்படி செய்ததுமில்லாமல், ஜஸ்டிஸ் கட்சியார் பிராமணரல்லாத வர்களுக்குப் பிரதிநிதிகளல்லவென்றும் நாங்கள்தான் சரியான பிரதிநிதிகளென்றும் சொல்லச்செய்து பணத்திற்கும், விளம்பரத்திற்கும் ஆசைப்பட்ட பல பிராமணரல்லாதாரை தங்களிஷ்டம்போல் ஆட்டுவித்துவரும் சூழ்ச்சிகளையும் நாம் நேரிலேயே பார்க்கிறோம்.
ஜஸ்டிஸ் கட்சிக்கு விரோதமாக ஏற்படுத்தப்பட்ட சென்னை மாகாணச் சங்கத்திற்கு முக்கிய கொள்கைகள் மூன்று. அவை, ராஜீய விஷயங்களில் காங்கிரஸைப் பின்பற்றுவது. தென்னிந்தியாவில் பிராமணரல்லாதார் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் அடைவது. பிராமணரல்லாதாருடைய முற்போக்குக்கான காரியங்களைச் செய்வது ஆகியவைகளே.
இக்கொள்கைகளே தென்னாட்டு தேசீய பிராமணர்கள் எல்லோரும் ஒப்புக்கொண்டு தாங்களும் பக்கத்திலிருந்து நிறைவேற்றி வைத்த தோடல்லாமல், தாங்களும் அதற்கு அனுகூலமாயிருப்பதாகச் சொல்லி நமது கூடவேயிருந்து ஜஸ்டிஸ் கட்சியின் செல்வாக்குக் குறைந்ததாக மதித்துக் கொண்டு, இப்போது " மீக்கு பெப்பப்பே, நீவு தாத்தாக்கு பெப்பப்பே" என்பது போல் அடியோடு பழைய சங்கதிகளை மறந்து வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் தேசத்திற்குக் கெடுதியென்று, ஞானோபதேசம் செய்ய வந்துவிட்டதோடு, இதற்கும் சில பிராமணரல்லாத விபூஷணாழ்வார்களை சுவாதீனமாக்கிக் கொண்டு, அவர்களைக் கொண்டே வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் தேசத்திற்குக் கேடு என்று சொல்வதோடல்லாமல், சத்தியத்தையும், மனசாட்சியையும் கூட மறக்கும்படி செய்து அவைகளைப் பலி கொடுத்து விட்டார்கள். ஜஸ்டிஸ் கட்சியை ஒழிக்க வேண்டிய அவசியத்திற்காக சென்னை மாகாணச் சங்கத்தின் மூலம், பிராமணரல்லாதாருக்கு வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் கொடுப்பது சிறீமான் சி. ராஜகோபாலாச்சாரியார் உட்பட பல தேசிய பிராமணர்களுக்கு அவசியமாயும் நாட்டுக்கு நன்மை பல பயப்பதாயும் பட்டது.
ஆனால், சென்னை மாகாண சங்கத்தின் மூலமாய் தங்களுக்கு வேண்டிய காரியங்களைச் சாதித்துக் கொண்டதாய் நினைத்துக் கொண்டவுடன், நமது பிராமண சகோதரர்களுக்கு, இப்போது வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் கொடுப்பது நாட்டுக்குக் கேடு விளைவதாய்ப் போய்விட்டது.
ஈரோட்டில், சென்னை மாகாண சங்க மகாநாடு நடைபெற்ற காலத்தில் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ தீர்மானம் உட்பட சகல தீர்மானங்களும், விஷயாலோசனைக் கமிட்டியில் சிறீமான்கள் சேலம் சி.விஜயராகவாச்சாரியாரவர்களாலும், திரு.வி.கலியாண சுந்திர முதலியாராலும், டாக்டர் வரதராஜுலு நாயுடுவாலும், வி.ஓ. சிதம்பரம் பிள்ளையாலுமே முக்கியமாய் தயார் செய்யப்பட்டது. அடுத்த நாள் மகாநாட்டிலும் சிறீமான் வரதராஜுலு நாயுடுவாலேயே பிரேரேபிக்கப்பட்டு நிறைவேறியது.
சிறீமான்கள் முதலியாரும், நாயுடுவும்தான் சென்னை மாகாணச் சங்கத்தின் பிரமுகர்கள். இவர்களை நம்பித்தான் பிராமணரல்லாதாரில் பலர் ஜஸ்டிஸ் கட்சியை விடுத்து சென்னை மாகாணச் சங்கக் கட்சியில் சேர்ந்தது.
பிராமணரல்லாத பாமர ஜனங்களும், தங்களது முன்னற்றத்திற்கு இவர்களைத்தான் எதிர்பார்த்திருந்தார்கள். இப்படியிருக்க இன்றையதினம் இவர்களின் நிலை என்னமாயிருக்கின்றதென்று யோசித்துப் பார்த்தால் எழுதவே கை நடுங்குகின்றது. தலைக்கு மேல் வெள்ளம் போகும்போது ஜாண் போனாலென்ன ? என்கிற தைரியம் நமது முதலியாருக்கு வந்துவிட்டது.
சிறீமான் நாயுடு அவர்களாவது, வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் கேட்க்காவிட்டாலும், அதை எதிர்க்காமல் சும்மாவாவது இருக்கிறார்.
வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்திற்குப் பதிலாக வேறு ஏதாவது மார்க்கமுண்டாவென்று யோசிக்கிறார். வேறு மார்க்கம் கிடைக்கா விட்டால், முடிவாய் அவர் என்ன செய்வாரென்கிற விஷயம் நமக்குத் தெரியும்.
நமது முதலியாரோ, துணிந்து " வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் சென்னை மாகாணச் சங்கத்தார் தற்கால நிலைக்கென கேட்டார்கள்; அந்தப்படியே கிடைத்தது. அதன் பயனை நாடு அடைந்து வருகிறது; தற்கால நிலைக்கென கேட்ட வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை என்றும் கேட்டுக் கொண்டிருத்தல் நியாயமாகுமா?" என்று சிலம்பொலியில் தர்மநியாயம் பேசுகிறார்.
சிறீமான் முதலியார் சென்னை மாகாணச் சங்கத்தின் மூலமாய் கேட்கப்பட்ட வகுப்புவாரி பிரதிநிதித்துவம் நமக்குக் கிடைத்துமாய் விட்டது போலும். நாம் அதை அனுபவித்தாய்விட்டதுபோலும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் எதை உத்தேசித்துக் கேட்டோமோ, அவைகள் சரிப்பட்டாகிவிட்டதுபோலும், இன்னமும் அது இருந்தால் நாட்டுக்குக் கெடுதி விளைவிக்குமென்பதுபோலும், ஆதலால் அதைக் கேட்கக் கூடாதென்பது போலவும் உபதேசிக்கிறார்.
இவ்வுரைகள், வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தையும் விடுதலை யுரிமையையும் அடைய உத்தேசங் கொண்டு ஆரம்பித்த "தேசபக்தன்" ஆசிரியரும், தொழிலாளர் நன்மைக்கென்று ஆரம்பித்த "நவசக்தி" ஆசிரியருமான சிறீமான் திரு.வி.கலியாணசுந்திர முதலியாருக்குத் தகுமா ? இது தருமந்தானா ? என்று கேட்கிறோம்.
ஜஸ்டிஸ் கட்சியை ஒழிக்க வேண்டியதற்கு மாத்திரம் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் வேண்டியிருந்தது. இப்போது வேண்டாமற் போய்விட்டது! இவ்வித நம்பிக்கைத் துரோகத்தில் நமது திரு.வி.கலியாண சுந்திர முதலியாரவர்களுக்கு ஏன் பங்கு இருக்க வேண்டும்?
பிராமணர்கள் சம்மதித்தால் தனக்கு வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் வேண்டும். அவர்கள் சம்மதிக்காவிட்டால் தனக்கு வேண்டாம் என்கிற கொள்கை நமது முதலியாருடைய கொள்கையாகலாமா ?
வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் கேட்பதில் நமது முதலியாருக்கு இப்போது உள்ள ஆட்சேபனைகள் அதற்கெனவே ஓர் சங்கத்தை ஸ்தாபித்த காலத்தில் எங்கே மறைந்து கிடந்தது? இவற்றையெல்லாம் கொஞ்சமும் நினைத்துப் பாராமல் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம், உரிமைப் போருக்கு விரோதமென்று சொல்கிறார். அவனவன் உரிமை, அவனவனுக்கு வழங்கப்படாமல் வஞ்சித்துக் கையில் பலத்தவன் காரியமாக்குவதுதான் உரிமைப் போரின் தத்துவம் போலும்.
சிறீமான் முதலியாரவர்களே இந்துக்களுக்குள் இதுபோழ்து மூன்று பிரிவுகள் இருக்கிறதாகவும், அவை பிராமணர், பிராமணரல்லாதார், ஆதி திராவிடர் ஆகிய இவர்களென்று ஒப்புக்கொள்ளுகிறார்கள். இவ்வகுப்புகள் அதனதன் உரிமையை ராஜரீகத்திலாவது, சமூக விஷயத்திலாவது, பிரஜா தர்மத்திலாவது சமமாய் அடைந்திருக்கிறதா ? என்று முதலியாரை வணக்கத்துடன் கேட்கிறோம். இவைகளுக்கில்லாத உரிமைப்போர் வேறு எதற்கு? மற்றும் யாருக்கு ?
துறவறத்திற்கு காவி வேஷ்டி உடுத்தி கொள்வது ஜனங்களை ஏமாற்ற எப்படி ஒரு சாதனமாயிருக்கிறதோ, அதுபோல் ராஜீயத்திலும் உரிமை - சுயராஜ்யம் என்கிற வார்த்தைகள் ஏழை மக்களை வஞ்சிக்கவும், மற்றும் பாமரர்களை ஏமாற்றவும் மற்றும் பல காரியங்களுக்கு உபயோகப்படுத்தக்கூடிய சாதனமாகப் போய்விட்டது.
இப்பொருள் கொண்ட சாதனங்களை சிறீமான் முதலியார் ஏன் உபயோகப்படுத்த வேண்டும்? இவற்றை நினைக்கும் போது நமது நாட்டின் பிற்கால வாழ்விலும், பிராமணரல்லாத சமத்துவத்திலும் நம்பிக்கையைவிட அவநம்பிக்கையே வலுத்து வருகிறது.
ஆனால், நமது கடமையை நினைக்கும்போது சும்மாயிருக்க முடியவில்லை.
--------------------------- தந்தைபெரியார் - "குடி அரசு" 20.12.1925
Labels:
பெரியார்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment