Search This Blog

18.7.08

'இந்து' ஏட்டுக்கு மூக்குடைப்பு

'இந்து' பத்திரிகையில் 10 வயது பெண்ணோ அல்லது 12 வயது பெண்ணோ ஒருவனுக்கு கல்யாணத்திற்காக வேண்டும் என்று விளம்பரம் செய்திருந்தது. இதைப் பார்த்து ஒரு சீர்திருத்தக்காரர், "இந்து"வை ஒரு கேள்வி கேட்டார். அதாவது, ஓ! இந்துவே, நீர் சீர்திருத்தக்காரன் என்று முழக்கம் செய்கின்றனையே! இந்தக் காலத்தில் கூட 10 வயது 12 வயது பெண் ஒரு மாப்பிள்ளைக்குக் கலி யாணத்திற்காக வேண்டும் என்று விளம்பரம் செய்யலாமா? என்று கேட்டார். அதற்கு இந்துப் பத்திரிகை சொன்ன பதில் என்ன என்று பாருங்கள்.

10 அல்லது 12 வயது பெண்களை இப்போது விவாகம் செய்வது என்பதாகக் காணப்படுவதானது விவாகச் சடங்கல்ல. அது நிச்சயார்த்தத்திற்கு ஒப்பானது. பெண்ணையும் மாப்பிள்ளையையும் வீட்டிற்குள் விட்டுக் கதவு சாத்துகின்றோமே அதுதான் விவாகம் என்று அயோக்கியத்தனமாய் பதில் எழுதிற்று.

இதற்கு அந்தச் சீர்திருத்தக்காரர் என்ன பதில் எழுதினார் என்றால், ஓ! இந்துவே, 10 வயதிலும் 12 வயதிலும் கல்யாணம் செய்வதுபோல் கண்ணுக்குத் தெரிவதெல்லாம் கல்யாணம் அல்ல, அது நிச்சயார்த்தம் என்று சொல்ல வருவாயானால், அந்த 10, 12 வயது பெண்களின் நிச்சயார்த்தம் செய்யப்பட்ட புருஷன் செத்தால் தாலி அறுபட்டதாக பெயர் செய்து மொட்டையடித்து முக்காடு போட்டு மூலையில் உட்கார வைப்பதேன்? அதுகூட உங்கள் நிச்சயார்த்தச் சடங்கில் சேர்ந்த நிபந்தனையா? என்று கேட்டார். உப்புக் கண்டம் பறிகொடுத்த பார்ப்பனத்திபோல் 'இந்து' இதற்கு ஒரு மறுமொழியும் சொல்லாமல் வாயை மூடிக் கொண்டது.

------------------------'திராவிடன்' - 13-3-1928 - பக்கம் -7

0 comments: