Search This Blog
24.7.08
இந்துமத எதிர்ப்புக்கு பார்ப்பனத் துவேஷம் காரணமல்ல!
உங்களுக்கு யார் குரு
1927-ஆம் வருஷம் தோழர் காந்தியார் சென்னை மாகாணத்திற்கு அழைத்து வரப்பட்டு பிரசாரம் செய்யப்பட்ட காலையில் அவர் சென்ற இடங்களிலெல்லாம் திராவிடர்கள் அவரோடு இந்துமத சம்பந்தப்பட்ட கொள்கைகளைப் பற்றி வாதங்கள் செய்தார்கள். இதற்குக் காந்தியார் ஒவ்வோர் இடத்திற்கும் ஒரு மாதிரி பதில் சொன்னார். திருப்பூரில் வருணாசிரம தர்மம்தான் தனது இந்துமதக் கொள்கையென்றும், வருணப்படிதான் அவனவன் வேலை செய்ய வேண்டும் என்றும் சொல்லிவிட்டார்.
அப்போது ஒருவர் அப்படியானால் நான் எந்தக் காலத்திற்குத்தான் இந்தச் சூத்திர இழிவிலிருந்து நீங்குவது என்று கேட்டு விட்டார். அதற்கு காந்தியார் 7 தலைமுறை பிராமண சம்பந்தமாகவே பிறந்தால் பிராமணனாகலாம் என்று பதில் சொன்னார். அதனால் கோயமுத்தூரிலும் சிறிது கிளர்ச்சி ஏற்பட்டது. அங்குக் காந்தியார் சர்.ஆர்.கே.ஷண்முகம் வீட்டில் இறங்கி இருந்தார். இந்தக் கிளர்ச்சியைப் பற்றி தோழர்கள் காந்தியாரும் சி.ராஜகோபாலாச்சாரியாரும் பேசும்போது ஆச்சாரியார் சண்முகம் செட்டியாரும் அந்தக் கொள்கைக்காரர்கள்தான் (இந்து மத விரோதி தான்) என்று சொன்னார். அதற்குக் காந்தியார் என்ன சண்முகம் நீங்களும் அப்படியா? என்று கேட்டார். அதற்கு ஆர்.கே. ஷண்முகம் ஆம் என்றார். அப்படியானால் உங்களுக்கு யார் குரு என்றார். அதற்கு உடனே ஆர்.கே.எஸ். ஈ.வெ.ராமசாமிதான் என்றார். காந்தியாருக்கு தூக்கிப் போட்டது போல் ஆகி நம்ம ராமசாமி நாயக்கரா என்றார். அதற்கு ஆச்சாரியார் நாயக்கர் இன்று நேற்றல்ல, அவரை எனக்குத் தெரிந்த காலம் முதலே அதாவது 1915-ஆம் வருஷம் முதலே அவர் லோகாயதவாதி (மெட்டீரியலிஸ்ட்) என்று சொன்னார். அப்படியானால் அவரைக் கண்டு இது விஷயமாகப் பேச வேண்டும் என்றார் காந்தியார். தோழர் எஸ்.ராமநாதன் அவர்கள் காந்தியார் கூப்பிடுவதாகச் சொல்லி என்னைப் பெங்களூருக்கு அழைத்துப்போய் இதைப் பற்றி காந்தியாருடன் பேசவும் வைத்தார்.
மற்றொரு சம்பவம் சுமார் 20 வருஷத்திற்கு முன்பு தோழர் வரதராஜூலு நாயுடு அவர்கள் தலைமையில் பேசும்போது, நான் சாவதற்கு முன் சடங்குகளை ஒழிப்பேன். ஒழிக்க முடியாவிட்டால் சாகும்போது இந்துவாகச் சாகமாட்டேன்; சடங்கில்லாத மதக்காரனாகத் தான் சாவேன் என்றும் சொல்லி இருக்கிறேன்.
ஆதலால் இந்துமத எதிர்ப்புக்கோ, இந்துஸ்தான் எதிர்ப்புக்கோ, ஆரியர் திராவிடர் என்கின்ற உணர்ச்சிக்கோ பார்ப்பனத் துவேஷம் காரணமல்ல என்பதையும் மக்கள் மீது உள்ள பரிதாபமே காரணம் என்பதையும் இவற்றிலிருந்தாவது மக்கள் உணர்வார்கள் என்று கருதுகிறேன்.
-------------------- பெரியார் எழுதியது 'குடிஅரசு', 8.9.1940
Labels:
பெரியார்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment