Search This Blog

12.7.08

கோட்சே பேரவையா?தேசத் தந்தை என்று போற்றப்பட்டவர், எத்தனைக் கருத்து வேறுபாடுகள் கொண் டிருந்தாலும், மனதிலிருந்து அதனைத் தூக்கி எறிந்து இன்றளவும் நேசிக்கப்படும் ஒரு தலைவர்.

குமரி முதல் காஷ்மீர் வரை மக்களின் உள்ளங்களில் எல்லாம் குடி கொண்டிருந்த ஒரு கோமான்.
அவர்தான் காந்தியார்!

அன்பு அவர் கண்களில் ஒளியாக தென் பட்டது - அகிம்சை அவர் வழி முறையாகக் கொள்ளப்பட்டது.

அகிம்சைவாதிகள் மத்தியில் மட்டு மல்ல; தீவிரவாதிகளாக இருந்தாலும் - அவர்களிடத்திலும் ஒரு தாக்கத்தை ஏற் படுத்திய தனித் தன்மை வாய்ந்த தலைவர் அவர்!
அதனால்தான் அவரைக் கடுமையாக எதிர்த்து வந்திருந்தாலும் அவர் உயிர் கோழைகளால் குரூரமாகக் குடிக்கப் பட்டபோது ``இந்த நாட்டுக்கே காந்தி நாடு என்று பெயர் வைக்க வேண்டும் என்று புகழாரம் சூட்டினார். புத்துலகச் சிற்பியாம் தந்தை பெரியார்!
அந்தப் பெருமகனைப் படுகொலை செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஒரு தனி மனிதனுக்கல்ல - ஒரு கூட்டத் துக்கே ஏற்பட்டது என்றால், இன்று நினைத்தாலும் நெஞ்சம் படபடக்கும்.

அதுவும் ஒரு திட்டமிட்ட வகையில் அந்தக் கொலை அரங்கேற்றப்பட்டது என்றால் அதனை ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை.

நாதுராம் கோட்சே என்ற பெயரில் பார்ப்பனியப் பாசிசம் அந்தத் தலைவரின் உயிருக்குக் குறி வைத்தது. கொடூரமாகக் கொன்று தீர்த்தது!
அந்தக் கொலைக்குப் பின்னால் பெரிய மனுசர்கள் என்று உலா வந்தவர்கள் பின்புலமாக இருந்திருக் கிறார்கள் - அவர்களில் பலர் சட்டத் தின் சந்து பொந்துகளால் தண்டனையி லிருந்து தப்பித்திருக்கலாம்; ஆனால் மக்கள் மத்தியில் அந்த மனித உரு மிருகங்கள் இன்றைக் கும்கூட நிழலாடிக் கொண்டு தானிருக்கின்றன.

ஆண்டுகள் 60 ஓடி விட்டன - அந்த மாமனிதரின் மார்பு ரத்தம் பீறிட்டு மண்ணில் வீழ்ந்து!
அந்தக் கொலைக்கு நேரடியாகப் பொறுப்பான அந்த நாதுராம் கோட்சே என்ற ஆர்.எஸ்.எஸ். பார்ப்பானும் பின்னர் தூக்கலிடப்பட்டான். காலம் ஓடினாலும் அந்தக் கறைகள் அப்படியே தானிருக் கின்றன - அதனை எந்த சக்தியாலும், சூழ்ச்சியாலும் கழுவி முடியாது, முடியவே முடியாது.

அரசியலின் பெயராலே அந்தக் கூட்டம் ஆட்சிப் பீடம் வரை ஏறிய அவலம் இந்தப் `பாரதப் புண்ணிய பூமியில் தான் நிகழ்ந்தது.

தற்கொலை செய்து கொண்ட இட்லருக்குப் பிறகு அவன் பெயரைச் சொல்லிக் கொண்டு எவரும் ஆட்சிப் பீடத்தில் அமரவில்லை; முசோலினி மண்டையைப் போட்டு விட்ட பிறகு அவன் வழி வந்தவன் நான் என்று கூறி எவனும் அரசியலில் பரிண மிக்கவில்லை. ஆனால் இங்கே.. இங்கே இந்தப் `பாரத புண்ணிய பூமியில் என்ன நடந்தது?

ஆர்.எஸ்.எஸ்., என் ஆன்மா என்று மார்தட்டியவர்கள் பிரதமர் ஆனார்கள். இனி மேலும் ஆவோம் என்று எக்காளமிடுகிறார்கள்.

60 ஆண்டுகளுக்கு முன் காந்தியடிகளின் ரத்தத்தைக் குடித்த தாகம் இன்னும் அவர்களுக்குத் தீரவில்லை போலும்!

இதோ தமிழ்நாட்டில் பழனியில் `கோட்சே பேரவையைத் தொடங்கியிருக்கிறார்கள். ஏதோ பழனி என்ற ஊரில் மடடும் தோற்றுவிக்கப்பட்ட கிளை அமைப்பு அல்லவாம்! அது மாநிலம் தழுவிய அமைப் பாம்; மாநிலப் பொறுப்பாளர் கள் உண்டாம். அத்வானி, இல. கணேசன் போன்றோரின் ஆலோசனையும் ஆதரவும் உண்டு என்று அந்தப் பொறுப்பாளர்கள் புளகாங்கிதத்துடன் கூறுகின்றனர்.

நாதுராம் கோட்சே தேச பக்தரா? தேச விரோதியா என்று கருத்தரங்கமாம் - சுவ ரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. பழனியிலும் சுற்று வட்டாரப் பகுதிகளிலும்.
`காவல்துறை என்ன செய் கிறது பார்ப்போம்! என்று கொஞ்சம் வாலைச் சுழற்றிக் காண்பித்துள்ளார்கள். (Feeler) மக்கள் மத்தியில் பிரதி பலிப்பு என்ன என்று ஆழம் பார்க் கிறார்கள்.

ஒன்றும் நடக்கவில்லை என்று தெரிந்தால் ஊருக்கு ஊர் கிளைகளை உண்டாக்குவார்கள். காந்தியாரை அன்று கொலை செய்தது போதாது என்று நாள்தோறும் அவர்மீது பழிச்சேற்றை வீசுவார்கள்; மதக் குரோதங்களுக்குக் கத்தி தீட்டவார்கள்.

பா.ஜ.க., மத்தியில் ஆட்சியில் இருந்தபோது இதே ஆர்.எஸ்.எஸ். கூட்டம் என்ன செய்தது?
``மே நாதுராம் கோட்சே போல்தே! என்ற பெயரில் ஒரு நாடகத்தை மும்பையிலும், டில்லியிலும் அரங்கேற்றம் செய்யவில்லையா?

கோட்சேயை மகான் போலவும், காந்தியாரை அரக்கன் என்றும் அதில் சித்தரிக்கவில்லையா?
தமிழ்நாட்டில் அருப்புக்கோட்டையில் (23.9.2004) விநாயகன் ஊர்வலத்தில் ``கோட்சே என்று பெயர் பொறிக்கப்பட்ட நெற்றிப் பட்டையை அணிந்து ``கோட்சே வாழ்க என்று கோஷம் போடவில்லையா?


அமைதித் தென்றல் தவழும் தமிழ் மண்ணில் அமளித் தேரோட்டம் நடத்தப் பார்க்கிறார்கள்.
காவல்துறை கவனத்தில் எடுத்துக் கொண்டு இருக்கும் என்றே எண்ணுகிறோம்.
இல்லையென்றால் கருத்துக்குக் கருத்து சந்திக்க கருஞ்சட்டைப் பட்டாளம் களத்தில் இறங்கத் தயார்! தயார்!!

இது தந்தை பெரியார் பிறந்த மண்! திராவிட இயக்கத்தால் பக்குவப்படுத்தப்பட்ட பூமி மானமிகு கலைஞர் ஆளும் தளம்! ஆரியப் பருப்பு இங்கு வேகாது - எச்சரிக்கை! எச்சரிக்கை!!

------------------ 12-7-2008 "விடுதலை" ஞாயிறுமலரில் மின்சாரம் அவர்கள் எழுதிய கட்டுரை

3 comments:

bala said...

//ஆரியப் பருப்பு இங்கு வேகாது - எச்சரிக்கை! எச்சரிக்கை!!//

ஆமாங்க, திராவிடப் பருப்பு நல்லாவே எல்லா எடத்திலும் வேகுது பாருங்க.போங்கடா வெங்காய வெறி நாய்களா.

பாலா

tamiloviya said...

கோட்சே கும்பலில் ஒருவரான "பொறுக்கி" எடுக்கப்பட்ட பாலா வின் நரகல்நடையிலான எழுத்தைப் பற்றி வாசகர்களின் பார்வைக்கே விட்டுவிடுகிறோம்.

ஆனாலும் கோட்சேக்(பாலா)களின் கொக்கரிப்புகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. இந்த இந்துப் பயங்கரவாதிகளின் முகத்திரை விரைவில் கிழித்தெறியப்படும் மிக விரைவில். அதற்கு நாம் இன்னும் நமது பிரசாரத்தை வலிமைப்படுத்த வேண்டும். மானமுள்ள தோழர்கள் விரைந்து செயல்படட்டும்.

bala said...

//இந்த இந்துப் பயங்கரவாதிகளின் முகத்திரை விரைவில் கிழித்தெறியப்படும் //

தமிழ் ஓவியா அய்யா,

ஆ என்ன இன்னும் கூட முகத்திரையை கிழிக்கவில்லையா?என்னங்க இது?தாடிக்கார அய்யா எழுவது வருஷத்துக்கு முன்னாடியே கிழிக்க ஆரம்பித்தாரே.இவ்வலVஉ காலமா நீங்க கிழித்தது என்ன என்று மக்களுக்கு விளக்கமா சொல்லுங்கய்யா.

பாலா