Search This Blog

15.7.08

இராவணன் தலை குறுக்கு வாட்டத்திலா? நெடுக்கு வாட்டத்திலா

ஒரு சம்பவத்தை இந்த நேரத்திலே உங்களுக்குச் சொல்ல வேண்டுமென்று நினைக்கின்றேன். 1967-லே அண்ணா அவர்கள் முதலமைச்சராக வந்தார்.

தருமபுரி மாவட்டம் நாகரசம்பட்டி என்ற ஊரில் பெரியார் இராமசாமி கல்வி நிலையம் என்ற பெயரில் பள்ளிக்கூடம் இருந்தது. உள்ளூர்க்காரர்கள் அந்தப் பள்ளிக் கூடத்திற்கு கட்டடம் கட்டித் தந்தார்கள். அந்தப் பள்ளிக்கூட கட்டடத் திறப்பு விழாவிற்கு பெரியாரையும் அழைக்கிறார்கள். முதலமைச்சர் அண்ணா அவர்களையும் அழைக்கிறார்கள்.

என்னுடைய தலைமையில் நடைபெற்ற விழா

அந்த விழாவிற்கு `விடுதலை ஆசிரியர் என்கின்ற முறையிலே என்னைத் தலைமை தாங்க அழைத்திருந்தார்கள். அந்த விழா மேடையில் அய்யா, முதலமைச்சர் அண்ணா, நான் ஆகியோர் இருக்கின்றோம். அண்ணா அவர்கள் பேசும் பொழுது சொன்னார்.: முதலமைச்சராக இருக்கின்ற எனக்கே என்ன சங்கடம் என்று சொன்னால், ``நாங்கள் கல்வித்துறையில் நிறைய செய்ய வேண்டியிருக்கிறது. பாடத் திட்டங்களிலேயே இப்படிப்பட்ட சங்கடங்கள் இருக்கின்றன.

அறிவுக்கு மரியாதை கொடுக்கிற மாதிரி இல்லை. மாணவச் செல்வங்களின் இயற்கை அறிவு கூர் தீட்டப்பட வேண்டும் என்று சொன்னார். அண்ணா அவர்களது வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தை, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களாகிய உங்களிடத்திலே நான் பகிர்ந்துகொள்கிறேன் என்று சொல்லி விட்டு அண்ணா சொன்னார்.

1967-ஆம் ஆண்டு நடந்த சம்பவம்


இது 1967-ஆம் ஆண்டு நடந்த சம்பவம். ரொம்ப சுவையானது. அண்ணா அவர்கள் முதலமைச்சரானவுடனே சொல்லுகின்றார்.

காஞ்சிபுரத்தில் உள்ள பள்ளிக்கூடத்தில் படித்துக் கொண்டிருந்த எனது மகன், பள்ளிக்கூடத்தில் இருந்து அழுது கொண்டே வந்தான். அண்ணா கேட்கிறார் - ஏம்பா அழுது கொண்டே வருகிறாய் என்று. தமிழாசிரியர் ஓங்கி என் கன்னத்தில் அறைந்து விட்டார் என்று எனது மகன் சொன்னான். நீ ஏதாவது தவறாக நடந்தாயா? ஒரு போதும் தவறாக நடக்கக் கூடாது.

ஆசிரியரிடம் கட்டுப்பாடாக இருக்க வேண்டும்.


தமிழாசிரியர் பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார்
பிறகு என்ன நடந்தது என்று நான் கேட்டேன். பத்தாம் வகுப்பில் ஆசிரியர் கம்பராமாயணம் பாடத்தை நடத்திக் கொண்டிருந்தார். தமிழ் ஆசிரியர் அவர் வைதீக உணர்வு படைத்தவர்.
பதவுரை, கருத்துரை சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார். இராவணனைப் பற்றி சொல்லிக் கொண்டிருந்தார். இராவணன் எப்படிப்பட்டவன். அவனைப்பற்றி விளக்கிச் சொல்லிக் கொண்டு வரும்பொழுது பத்து தலை இராவணன் என்பதைப் பற்றிச் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார். பத்து தலை இராவணன், பத்து தலை இராவணன் என்று இராவணனைப் பற்றிச் சொல்லும்பொழுது என்னுடைய மகன் (அண்ணாவின் மகன்) வகுப்பில் எழுந்திருந்து ஒரு கேள்வி கேட்டான்.

அய்யா ஒரு அய்யம் என்று ஆசிரியரிடம் கேட்டான்

அய்யா ஒரு அய்யம், என்று தமிழ் ஆசிரியரிடம் கேட்டான். என்னப்பா சந்தேகம்? என்று ஆசிரியர் கேட்டார்.

இராவணனுக்குப் பத்து தலை என்று சொல்லுகின்றீர்களே! அது குறுக்கு வாட்டத்திலா? நெடுக்கு வாட்டாத்திலா? என்று கேள்வி கேட்டான். ஏனென்றால் இது ஆழமான சிந்தனை நீங்கள் நாடகத்தில் தான் பார்த்திருப்பீர்கள். இராவணனுக்குப் பத்துத் தலை இருந்தால் அதை எடுத்து மாட்டிக் கொண்டு வருவான். இராமாயண நாடகத்தில் இராவணனுடைய தர்பார் நடக்கும். இப்படி திரும்புவார். அப்படித் திரும்புவார். அந்தத் தலைகளை அட்டையில் செய்திருப்பார்கள் - அல்லது பிளைவுட்டில் செய்திருப்பார்கள்.

இராவணன் காட்சி முடிந்தவுடனே படுக்க வேண்டுமா? இல்லையா? படுக்கச் சொன்னால் என்ன ஆகும்?

ஒருக்களித்து இராவணனால் படுக்க முடியுமா? அய்ந்து தலையும் தரையில் இடிக்கும்.
அந்தப் பக்கம் திரும்பிப் படுத்தால் அந்தப் பக்கம் இருக்கின்ற தலை இடிக்கும்.
ஆகவே வாழ்நாள் முழுக்க மல்லாந்தே படுத்திருந்துவிட்டு, இப்படியே எழுந்திருந்து வந்திருப்பாரா?

இராவணன் தலை குறுக்கு வாட்டத்திலா? நெடுக்கு வாட்டத்திலா?


இவ்வளவு நாள் இராவணனாலே இப்படி இருக்க முடியுமா? சரி - அதைவிட வசதி என்னவென்றால் ஒரு தலைமீது இன்னொரு தலை என்று சட்டிப்பானை, அடுக்கிற மாதிரி இருந்திருந்தால் வரிசையாக ஒரு தலைமீது இன்னொரு தலை இருந்தால் ரொம்ப வசதியாக இருக்குமே என்று நினைத்த என் மகன் இராவணனுக்குத் தலை குறுக்கு வாட்டத்திலேயா? அல்லது நெடுக்கு வாட்டத்திலேயா? என்று கேட்டான்.

தமிழ் ஆசிரியர் ஓங்கி என் மகனை அறைந்தார்

தமிழ் ஆசிரியருக்கு இந்தக் கேள்வியைக் கேட்டவன் யார் என்று தெரிந்து போய்விட்டது. தமிழாசிரியருக்கு கோபம் வந்து ஓங்கி ஓர் அறை என் மகனை அறைந்து ``உங்க அப்பனையே போய்க் கேள்! என்று சொல்லி விட்டார். என் மகனும் அழுது கொண்டே வந்து, நடந்த இந்த சம்பவத்தை என்னிடம் சொன்னான். நீ அண்ணாதுரை மகன் என்ற காரணத்தினால்தானே இந்தக் கேள்வியைக் கேட்கின்றாய் என்று அவருக்குக் கோபம் ஏற்பட்டிருக்கிறது.

தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்குச் சென்றிருந்தபொழுது

இந்தச் சம்பவம் என் மனதில் அப்படியே இருந்தது. பிறகு நான் இந்தோனேசியா, தாய்லாந்து, பர்மா போன்ற தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு நான் போயிருந்தேன்.
அந்த ஓவியங்களில் இராவணனைக் காட்டி - எனக்கு விளக்கிச் சொன்னார்கள். அந்த ஓவியத்திலே இராவணன் எப்படி வரையப்பட்டிருக்கின்றான் என்று சொன்னால், நம்மூரில் தெருக் கூத்தில் நாடகம் நடக்கும் பொழுது இராவணனுக்கு குறுக்கு வாட்டத்தில் போல் பத்து தலை அங்குள்ள இராவணனுக்குக் கிடையாது. இராவணனுக்கு நெடுக்கு வாட்டத்தில்தான் ஒரு தலைக்கு மேல் இன்னொரு தலையை வைத்திருந்தான்.


இராவணன்தலை நெடுக்குவாட்டத்தில் இருந்தது

இந்தக் காட்சியை தாய்லாந்து நாட்டில் நான் பார்த்தேன். அங்கே இவைகளை ஓவியமாக வரைந்திருக்கின்றார்கள். அதைப் பார்த்தவுடனே எனக்கு இந்தச் சம்பவம் ஞாபகம் வந்தது.
பரவாயில்லை. இராமாயணக் கதை உண்டான பிறகு வந்த அறிவாளி இந்த நாட்டுக்காரன். இராவணனுக்கு இவ்வளவு பெரிய வசதிக் குறைவை ஏற்படுத்தக் கூடாது என்று நினைத்து அவன் செய்திருக்கின்றான்.

கொஞ்சம் வசதியாகவே இராவணனுக்கு தலை அமைக்கலாம் என்பதற்காக ஒரு தலைக்கு மேல் இன்னொரு தலையை வைத்தான் என்று அண்ணா அவர்கள் இந்தச் சம்பவத்தை எடுத்துச் சொன்னார்கள். ஆகவே கேள்வி கேட்பது என்பதுதான் மிகவும் முக்கியமானது.

பாடத்திட்ட முறையே மாற வேண்டும்

தந்தை பெரியார் அவர்கள் பாடத் திட்டத்தைப் பற்றியே ஒரு கருத்தைச் சொன்னார்கள்.
இப்பொழுது ஆசிரியர்கள் மாணவர்களைக் கேள்வி கேட்கிறார்கள். இந்த பாடத் திட்ட முறையே மாற வேண்டும் என்று தந்தை பெரியார் சொன்னார்.

அதற்குப் பதிலாக வகுப்பில் மாணவர்கள் ஆசிரியரைக் கேள்வி கேட்க வேண்டும். ஆசிரியர் மாணவர்களுக்குப் பதில் சொல்ல வேண்டும் என்று சொன்னார்.

மாணவர்களுடைய சந்தேகங்களை எல்லாம் போக்குகின்ற மாதிரி இருக்க வேண்டும். இதைக் கேட்டால் ரொம்ப பேர் ஆசிரியர் வேலைக்கே வர மாட்டார்கள். அதுவேறு விசயம்.
படிப்பறிவோடு, பகுத்தறிவும் மாணவச் செல்வங்களுக்குத் தேவை
அப்படிப்பட்ட ஒரு அறிவார்ந்த சூழ்நிலையிலே படிப்பறி வோடு பகுத்தறிவைப் பெறுங்கள். அந்தப் படிப்பறிவைப் பெறுவது வகுப்பிலே, பகுத்தறிவைப் பெறுவது இந்த மாதிரியான முத்தமிழ் மன்றங்களிலே.

இதிலேதான் நீங்கள் விவாதங்கள் கேள்விகளை கேட்டுக் கொள்ள முடியும். கருத்துக்களை பரிமாறிக் கொள்ள முடியும்.

இயற்றமிழ், இசைத் தமிழ், நாடகத் தமிழ் இந்த மூன்றுக்கும் பாடுபட்ட மூன்று பேருமே புரட்சி செய்தவர்கள்.

ஏன்? எதற்கு? என்று கேள்வி கேளுங்கள்

எனவே மாணவச் செல்வங்களே நீங்கள் வெறும் படிப்பறிவோடு நின்று விடா தீர்கள். பகுத்தறிவைப் பெற ஏன்? எதற்கு? என்று கேள்வி கேளுங்கள். அதற்கடுத்து தன்னம்பிக்கையோடு இருங்கள். உங்களுக்குத் தன்னம்பிக்கை எவ்வளவு அதிகமாக இருக்கின்றதோ - அந்த தன்னம்பிக்கை இருந்தால் மூடநம்பிக்கைதானே வெளியேறி விடும்.

நம்மாட்கள் என்ன செய்கிறார்கள்?

தேர்வுக்குத் தயாராகி வரும்பொழுது வேகமாக வீட்டில் இருந்து வெளியே வருவான். பழைய கால வீடுகளில் குனிந்துதான் போக வேண்டும்.
இங்கே இந்தப் பள்ளியின் தாளாளர் அவர்கள் நன்றாக உயரமாக வாசற்படியை வைத்திருக்கின்றார். சில பேர் வாசற்படியை எல்லாம் நன்றாக உயரமாக வைக்கிறார்கள். பழைய கால வீடுகளைப் பார்த்தால் சாதாரணமாக நாம் குனிந்துதான் உள்ளே போக வேண்டும். வீட்டு வாசற்படி சிறியதாக இருக்கும்.

இன்றைக்குப் பிள்ளைகள் நன்றாக வளர்ந்திருக்கின்றார்கள். அய்ந்தடி, ஆறடிகூட இருக்கின்றார்கள். ஆனால் பல இடங்களில் வாசற்படி இருக்கிறது பாருங்கள். அது மூன்றரை அடி, நான்கடிகூட இருக்கும்.

பழைய காலத்து வீடுகளில் நாம் யாரையாவது அழைத்தால் வாசற்படி முன்னாடியே ஒருத்தர் சென்ட்ரி டியூட்டி மாதிரி போட்டு வைத்திருப்பார்கள்.

`அய்யா குனிந்து வாருங்கள், பார்த்து வாருங்கள் என்று சொல்லுவார்கள். தேர்வு நேரத்தில் பிள்ளைகள் அவசரமாகப் படித்துவிட்டு, தேர்வைப் பற்றியே சிந்தித்துக் கொண்டு வேகமாகப் போகிறார்கள் பாருங்கள்.

வாசற்படியில் இடித்துக் கொண்டார் என்றால் உடனே நம்மாட்களுக்கு ஒரு மூடநம்பிக்கை வந்து விடும். தம்பி போகும்பொழுதே ஏதோ தடுக்கிறது என்று சொல்லுவார்.
இவனுக்கும் பழைய மனப்பான்மை! ஏதோ போகும்பொழுதே தடுக்கிறதே என்று சொல்லுவான். நாம் அதிக மார்க் வாங்க முடியாது போல இருக்கிறதே என்ற ஒரு தாழ்வு மனப்பான்மை ஏற்படுகிறது. தன்னம்பிக்கை இழக்கும் நிலை ஏற்படுகிறது. இந்தப் பகுத்தறிவுச் சிந்தனை இல்லாததினாலே ஏற்படுகிறது. தந்தை பெரியார்தான் கேட்டார். வாசற்படி அய்ந்து அடி இருக்கிறது. நீ ஆறு அடி இருக்கிறாய். வாசற்படிமீது நீ இடித்துக் கொண்டால் என்னமோ தெரியவில்லையே, என்னமோ தெரியவில்லையே என்று நினைத்துக் கொண்டிருந்தால் என்ன அர்த்தம்?

வாசற்படி 7 அடிக்கு வைத்துப்பார்

வாசற்படியை 7 அடி உயரத்திற்கு வை - எப்படி இடிக்கும் என்பதைப் பார்ப்போம் என்று தந்தை பெரியார் கேள்வி கேட்டார். நம்மாள் வீட்டிலே உட்கார்ந்திருப்பான். காலம் காலமாகப் பார்த்திருப்போம். பல்லி, உச், உச் சென்று சொன்னால் உடனே பல்லி சொல்லிச்சிங்க என்று சொல்லி விடுவார். பல்லி என்ன பன்மொழி புலவரா? உடனே அதற்கு அர்த்தம் சொல்லுவதற்கு. மணி அடிக்கிறது. எருமை மாடு கத்துகிறது. இதை எல்லாம் சகுனம் என்று சொல்லி பலன் பார்த்துக் கொண்டிருப்பான். உடனே காகா திடீரென்று சத்தம் போடுகிறது. அதைப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருக்கின்றான்.

பூனை குறுக்கே ஓடுகிறது. புலி ஓடுவதைப் பார்த்து அவன் பயந்தால்கூட பரவாயில்லை. பூனை எலி பிடிக்கப்போகிறது. நீ பஸ் பிடிக்கப் போகிறவன் வேகமாகப் போக வேண்டியதுதானே. நம்மாட்கள் பூனையைக் கண்டு பயப்படுகின்றான்.பல்லியைக் கண்டு பயப்படுகின்றான், ஆறறிவு படைத்த மனிதன். காரணம் என்ன? இவன் அறிவுக்கு விலங்கு போடப்பட்டு விட்டது. அந்த விலங்கை உடைப்பதுதான் பகுத்தறிவு.


-----------சென்னை தியாகராயர் நகர் நவபாரத் பதின் நிலைப்பள்ளியில் 2.7.2008 அன்று முத்தமிழ் மன்றத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் ஆற்றிய உரையிலிருந்து -"விடுதலை' 14-7-2008

4 comments:

யாத்ரீகன் said...

அண்ணா சொன்ன விஷயம் சின்னதாயினும் .. இந்த மாதிரி சின்ன சின்ன விஷயங்களில் குழந்தைகளை யோசிப்பதற்கு encourage செய்திருக்க வேண்டும் கல்வி முறை .. ஏன் திமுக அரசு அதில் கவனம் கொள்ளவில்லை ?!

PRINCENRSAMA said...

//நாங்கள் ஜாதி ஒழிப்புக்காரர்கள்.ஜாதி ஒழிய உதவுபவர்கள் எங்கள் சொந்தக்காரர்கள்
//
நானும் உங்கள் சொந்தக்காரந்தான். தொடரட்டும் தங்கள் பணி..
ஆசிரியரின் பேச்சு அருமை.

தமிழ் ஓவியா said...

1.யாத்திரீகன் அவர்களுக்கு,
வணக்கம். உங்களின் கருத்துக்கு மிக்க நன்றி. தங்களின் வினாவை கல்விஅமைச்சரின் பார்வைக்கு நானும் வைக்கிறேன்.
2.பிரின்ஸ்என்ராசு அவர்களே தங்களின் வலைப்பதிவை பார்த்தேன் மிக நன்றக இருந்தது. எமது வலைப்பதிவில் இணைத்துள்ளேன். பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். தொடர்ந்து கருத்து தெரிவிக்கவும்.
மிக்க நன்றி.

Thamizhan said...

ராமனை நம்பச் சொல்பவர்கள் ராவணனின் பத்து தலைகளையும் நம்பச்சொல்வார்கள் தானே!
இந்திய உச்ச நீதி மன்றம் ஒன்பது தலைகளைக் கொண்டு வந்து காண்பிக்குமா?
உச்ச நீதி மன்றமா அல்லது அவமானச் சின்னமா என்பது விரைவில் தெரிந்து விடும்.