Search This Blog

16.7.08

அல்லா என்று ஆறுமுறை உச்சரித்த அத்வானி

யாரை ஏமாற்ற இந்தப் பேச்சு?

பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் பிரதமருக்கான வேட்பாளர் என்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ள திரு. எல்.கே. அத்வானி இப்பொழுதே பிரதமராக ஆகிவிட்ட மனப்பான்மையில் காய்களை நகர்த்த ஆரம்பித்துவிட்டார்.

பக்கத்தில் பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்ற நாடுகள் மத அடிப்படையில் முசுலிம் நாடுகளாக இருப்பதுபோல, இந்தியாவில் இந்து நாடு உருவாக்கப்படவேண்டும் - மதச் சார்பற்ற தன்மை என்பது கூடவே கூடாது என்று ஒய்யார மாகப் பேசிவரும் கூட்டம் - அத்வானி கம்பெனி என்பது கோலி விளையாடும் கோவணம் கட்டத் தெரியாத சிறுபிள்ளைக்கும்கூடத் தெரிந்த உண்மையாகும்.

இந்த நிலையில், சிறுபான்மையின மக்களை குறிப்பாக முஸ்லிம்களைத் தாஜா செய்யும் ஒரு வேலையில் அத்வானி இறங்கி இருப்பது - அவரின் பரிதாப நிலையைத்தான் பறைசாற்றுகிறது.

டில்லியில் பா.ஜ.க.வின் சிறுபான்மையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட எல்.கே. அத்வானி நாங்கள் சிறுபான்மையினர்க்கு எதிரிகள் அல்லர்; அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிதான் முஸ்லிம்களுக்குத் துரோகம் இழைத்துவிட்டது என்று நீலிக் கண்ணீர் வடித்துள்ளார். அந்த நிகழ்ச்சியில் அல்லா என்று ஆறுமுறை உச்சரித்தாராம்.

அறிவு நாணயம் என்பது இந்த இந்துத்துவா பேர்வழி களுக்குக் கிடையவே கிடையாது. இசுலாமியர்களுக்குச் சொந்தமான - 450 ஆண்டுகால வரலாறு படைத்த பாபர் மசூதியை அயோத்தியில் இடித்த கூட்டத்துக்குத் தலைமை தாங்கிய ஒருவரால் எப்படி இப்படி எல்லாம் பேச முடிகிறது? அந்த வழக்கின் முதல் குற்றவாளியான இவர் இஸ்லாமியர் களுக்காக மூக்கால் அழுகிறார் என்றால், அந்தச் சிறு பான்மை மக்கள் இத்தகையவர்களிடம் மிகவும் எச்சரிக்கையாகவே இருக்கவேண்டும் என்பதுதான் இதன் பொருளாகும்.

பாபர் மசூதியோடு இவர் திட்டம் நின்றுவிட்டதா? திருப்பதி யில் 1991 டிசம்பர் 29 அன்று தேர்தல் பிரச்சாரத்துக்கு வந்த அத்வானி என்ன பேசினார்?

காசியும், மதுராவும் எங்கள் அஜண்டாவில் இல்லை. ஆனால், இவை இரண்டும் எங்கள் கட்சியின் தேர்தல் அறிக்கையில் உள்ளது (தி இந்து, 30.12.2007) என்று பேசவில்லையா?
காசியிலும், மதுராவிலும் இருக்கும் முசுலிம்களின் மசூதிகளை இடிக்கும் திட்டம் இவர்களிடம் இருக்கிறது என்பதை இதன்மூலம் அவர் பகிரங்கப்படுத்தவில்லையா?
முசுலிம்கள் குடியுரிமையின்றியும் இந்தியாவின் வாழத் தயாராக இருக்கவேண்டும் என்றும் அவர்களின் மதத் தையும், கடவுள்களையும்கூட இந்து மயமாக ஆக்கிக் கொள்ளவேண்டும் என்றும், இராமனையும், கிருஷ்ணனை யும் கடவுளாக ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றும் கூறுகிற ஒரு கூட்டத்தின் தலைவர் தலைகீழாகப் புரட்டிப் பேசுகிறார்.


இப்படி அப்பட்டமாகத் திரித்துப் பேசுபவர், பொய்யென்று தெரிந்தும் புரட்டிச் சொல்கிற ஒருவர்தான் இந்தியாவின் பிரதமர் நாற்காலியில் உட்கார ஆசைப்படுகிறார்.
முகம்மது அலி ஜின்னாபற்றி நான்கு வார்த்தை புகழ்ந்து சொல்லியதற்கு அந்தக் கட்சியில் அவர் பட்ட பாடு கொஞ்சநஞ்சமல்ல! பகிரங்கமாக அத்வானி மன்னிப்புக் கேட்கவேண்டும் என்று வற்புறுத்தப்படவில்லையா? அதோடு அத்வானி அரசியலில் காணாமல் போய்விடுவார் என்கிற அளவுக்குப் பேசப்படவில்லையா?

இப்பொழுது அவர் பேசியிருக்கும் பேச்சுக்கூட- அவாள் வட்டாரத்துக்குள்ளேயே கடுகடுப்பை ஏற்படுத்தியிருக்கும் என்பதில் அய்யமில்லை.

முசுலிம் மக்களுக்காக கொடுக்கப்பட்டுள்ள சச்சார் குழுவின் பரிந்துரைகளை ஏற்கத் தயாரா? அதைப் பகிரங்கமாக அறிவித்துவிட்டு அத்வானிகள் - சிறுபான்மையினர் மீதான அக்கறையை வெளிப்படுத்தட்டும்!

16-7-2008 "விடுதலை" தலையங்கம்

0 comments: