Search This Blog

28.7.08

பெரியார் பெரும்படைக்கு சிறையில் இடமில்லை ----- சில நினைவுகள்




50 ஆண்டுகளுக்கு முன், ஜாதியை வலியுறுத்தும் அரசியல் சட்டத்தை எரிக்கும் போராட்டத்தை 26.11.1957 அன்று தந்தை பெரியார் நடத்தினார். போராட்டத்தின் தன்மை மற்றும் பெரியார் கட்டளையை நிறைவேற்றிய தொண்டர்களின் இலட்சிய வேட்கை குறித்து இக்காலத் தலைமுறைக்காக 1957 நவம்பர் - டிசம்பர் விடுதலையில் இருந்து சில பகுதிகள் இங்கே...

சட்டத்தை கொளுத்துங்கள்!

சாம்பலை மந்திரிக்கு அனுப்புங்கள்!!


"சட்டத்தை நிறைவேற்றிவிட்டதன் மூலம் அரசாங்கத்தினர் சாதியைக் காப்பாற்றித்தான் தீரவேண்டும் என நமக்கு சவால் விட்டு இருக்கின்றனர். இந்த சவாலுக்கு நீங்கள் சட்டம் கொளுத்தாவிட்டால் மனிதர்கள்தானா?
சட்டம் கொளுத்தின சாம்பலை சட்டம் செய்த மந்திரிக்கு அனுப்பிக் கொடுங்கள்!
சட்டம் கொளுத்தின மக்கள் இந்த நாட்டில் இருக்கிறார்கள் என்பதை அதன்மூலம் கொஞ்சமாவது தெரிந்து கொள்ளட்டும்!"


-------------- ஈ.வெ.ரா, விடுதலை



என் மகனுக்கு மாத்திரம் எதற்கு ஜாமீன்?

திருச்சி மாவட்டம் லால்குடி வட்டத்தில் சென்ற மாதம் 26ந் தேதி அரசியல் சட்டத்தாளைக் கொளுத்திய திராவிடர் தோழர்களில் 34 பேர்கள் மீது தொடரப்பட்டிருந்த வழக்குகள் 19.12.57ந் தேதி திருச்சி மாவட்ட மாஜிஸ்திரேட் அவர்களால் விசாரிக்கப்பட்டு தலா 2 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.

ஆங்கரை ஆண்டிமகன் தவசு, மைனராய் இருந்ததால் தவசு தகப்பனாரை அழைத்து உங்கள் மகனை ஜாமீனில் அழைத்துப் போகிறீர்களா? என்று கேட்டதற்கு ஆயிரக்கணக்கான தோழர்கள் சிறையில் இருக்கும்போது என் மகனுக்கு மாத்திரம் எதற்கு ஜாமீன்? என்று மறுத்துவிட்டார். இவரது இந்த பதில் நேகார்ட்டிலிருந்த எல்லோரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இச்சிறுவனுக்கு 12 வயது இச்சிறுவனையும் சேர்த்து நேற்று தண்டிக்கப்பட்டவர்கள்.
சிறுதையூர் மாரிமுத்து (திராவிட விவசாய சங்கச் செயலாளர்) பூவாளுர் தி.க. செயலாளர் வீராசாமி, வளவனூர் ஆரோக்கியசாமி ஆங்கரை ரத்தினம், அன்பில் கதப்பட நாட்டர் சிறுதையூர் சலாம் (பஞ்சாயத்து போர்டு தலைவர், உட்பட 35 பேர்கள் தோழர்கள் யாவரும் தண்டனையை மகிழ்ச்சியுடன் ஏற்று சிறையேறினர்.

லால்குடி வாளாடி பெருகமணி ஆகிய ஊர்களில் சட்டத்தாள் கொளுத்திய தோழர்களுக்கு சென்ற 16ந் தேதி ஜில்லா மாஜிஸ்திரேட் தலா 2 ஆண்டு கடுங்காவல் தட்ணனை விதிக்கப்பட்டது. கொளுத்த முயற்சி செய்தவர்களுக்கு தலா 18 மாதம் கடுங்காவல் விதிக்கப்பட்டது. முத்துச் செழியன் குழுவினர் மீதுள்ள வழக்குகள் முறையே 24, 26ந் தேதிகளுக்கு ஒத்திவைக்கப்பட்டன.

லால்குடி வட்டத்தைச் சேர்ந்த தோழியர்கள் சிறையில் பிரசவமான தோழியர் அஞ்சலை அம்மாள் உட்பட அனைவரும் கோர்ட்டுக்கு கொண்டுவரப்பட்டு அவர்கள் மீதுள்ள வழக்குகளும் முறையே 24, 26 தேதிகளுக்கு ஒத்திவைக்கப்பட்டன. தாய்மார்கள் திருச்சி துணைச் சிறையில் ரிமாண்டில் இருக்கிறார்கள்.

பெரியார் பெரும்படைக்கு சிறையில் இடமில்லை

லால்குடி வட்டாரத்தில் அரசியல் சட்டம் எரித்து கைது செய்யப்பட்ட தோழர்களை திருச்சிக்கு வானில் கொண்டு வந்து மாஜிஸ்திரேட்டிடம் ரிமாண்ட் வாங்கி திருச்சி மத்திய சிறைக்கு கொண்டு சென்றனர். சிறையதிகாரிகள் மத்திய சிறையில் இடமில்லையெனச் சொல்லிவிடவே அவர்களை திரும்பவவும் லால்குடி சப்ஜெயிலுக்கு கொண்டு சென்றனர் போகும் போது தொண்டர்கள் பெரியார் பெரும்படைக்கு சிறையில் இடமில்லை என ஒலி முழக்கமிட்டுக் கொண்டே சென்றனர். லால்குடி சப்ஜெயலில் அடைக்கப்பட்ட பின் இரவு 10.30 மணிக்கு கலெக்டர் சென்று மத்திய சிறையில் இடம் ஒழித்து வைத்திருப்பதாகவும் திரும்பவும் கொண்டு வருமாறும் லால்குடிக்கு செய்தி வந்தது. பின்னர் போலீஸ் வேன்கள் போதாமல் வாடகை லாரி பிடித்து இரவு 11 மணிக்கு மேல் மத்திய சிறைக்கு கொண்டு வந்தனர்.

சிறை மீளும் வீரர்கள் 30.11.1957 சனி, ஆர்.வி. ரங்கசாமி (ஈரோடு), பி.டி. சுப்பராயலு (கடலூர்)
லட்சுமி - சுப்பராயலு (கடலூர்), கி. நடேசன் (கடலூர்), கல்யாணி - நடேசன் (கடலூர்), மா. பலராமன் (கடலூர்), ஆ. வைத்திலிங்கம் (கடலூர்), வி. புருஷோத்தமன் (கடலூர்), மா. ஜானகி ராமன் (கடலூர்), எஸ்.ராமலிங்கம் (கடலூர்), கே. வேணு (கடலூர்), கோ. வெங்கட்ராமன் (புத்தூர்).

வருத்தத்தோடு...

நன்னிலம் தாலுக்கா தி.க. தி.வி.தொ.ச. உதவி செயலாளர் என்.வி.முருகப்பா 26.11.1957ந் தேதி மாலை 4 மணிக்கு வாழ்குடி சத்தி ரைஸ் மில் பக்கத்தில் இந்திய அரசியல் சட்ட புத்தகத்தைக் கொளுத்தினார். ஏராளமான பொது மக்கள் ஆதரவு தந்தார்கள். இந்த சட்டத்தின் தத்துவத்தை விளக்கி பொது மக்களுக்கு எடுத்து உரைத்துவிட்டுக் கொளுத்தினார். போலீகார் யாரும் வரவில்லை. என்னை இதுவரையிலும் தண்டிக்கவில்லை என்று வருத்தத்தோடு தங்களுக்கு தெரியப்படுத்துகிறேன் என்று அவர் எழுதியுள்ளார்.

உணவு தராத போலீசார்

கடந்த 26.11.1957இல் இந்திய அரசியல் சட்டத்தை எரித்து கைதான எடமேலையூர் தோழர்களின் வழக்குகள் 3.12.1957இல் பகல் 2 மணிக்கு மன்னார்குடி முதல் வகுப்பு மாஜிஸ்திரேட் முன் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. தோழர்கள் குற்றவாளிகள் எனத் தீர்ப்புக் கூறி தலா 6 மாதம் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டனர்.
தோழர்கள் 35 பேருக்கு காலை உணவுடன் மாலை 6.30 மணி வரை உணவு இன்றி துன்பப்பட்டார்கள். கழகத் தோழர்கள் வாங்கி வருகிறோம் என்றாலும் மறுத்துவிட்டனர் போலீசார். பலர் மயக்கமுற்று மாலை 4.45க்கு வீழ்ந்து விட்டனர். உடனே அவர்களுக்கு தோழர்கள் காப்பி வாங்கிக் கொடுத்து தெளிவு உண்டு பண்ணினர்.
அன்பு பின்பு மாலை 6.35 மணிக்கு போலீசாரால் உணவு அளிக்கப்பட்டது. அதன்பின் இரவு சுமார் 7 மணிக்கு அவர்கள் நீடாமங்கலம் ரயில் மூலம் அனுப்பப்பட்டனர். தேழர்கள் அனைவரும் திருச்சி மத்திய சிறைக்கு அனுப்பப்பட்டு இருக்கிறார்கள்.


சிறை சென்ற சிறுவர் - சிறுமி

நீடாமங்கலத்தில் சென்ற 26ந் தேதி அரசியல் சட்டத் தாளைக் கொளுத்தி கைது செய்யப்பட்ட தோழர் கே.ஆர்.குமார் அவர்களின் மகள் செல்விக்கு இரண்டு ஆண்டு தண்டனை விதிக்கப்பட்டு சென்னையிலுள்ள மைனர் பெண்கள் சிறைக்கு அனுப்பிவிட்டார்கள்.
மற்றும் இதுபோலவே, கலியபெருமாள், கோவிநத்ராஜ் ஆகிய இரு சிறுவர்களுக்கும் இரண்டு ஆண்டு தண்டனை அளித்து, ஒருவரை திருநெல்வேலிச் சிறைக்கும், மற்றொருவரை செங்கற்பட்டு சிறுவர் சிறைக்கும் அனுப்பி வைத்தார்கள்.
மன்னார்குடி வட்டத் தோழர்கள் 68 பேருக்கும் 6 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதென்று முன்னர் வந்த செய்தியில் 20 பேருக்கு மட்டுந்தான் தண்டனை விதிக்கப்பட்டதென்றும், மீதமுள்ள 48 பேர் மீதுள்ள வழக்கும் 7.12.1957ந் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டதாகவும் அறிவிக்கப்படுகிறது.

-------------------------- விடுதலை,. 2.12.1957


தங்கை சாகும் நிலையிலும் சிறை புகுந்த கர்மவீரர்

தன் உடன் பிறந்த தங்கை சாகும் தருவாயில் படுத்தபடுக்கையில் கிடக்கிறதே என்று கவலை தோய்ந்து கடமையை நிறைவேற்றத் தவறவில்லை வீரர் நாகை தாலுக்கா கிள்ளுகுடி தோழர் ப.குஞ்சப்பன் பெரியாரின் கட்டளையை நிறைவேற்றி சிறை சென்றார். கடமை வழுவாது சிறையிலிருக்கிறார் 2.12.1957இல் உடன் பிறந்த யசோதை இயற்கை எய்தினார் (இயற்கை எய்தின செய்தி அன்னாருக்குத் தெரியாது) கிள்ளுகுடி திராவிடர் கழகம் அவருக்கு ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

மகிழ்ச்சியுடன் சிறையேகினார்

வடுவூரைச் சார்ந்த காரைக்கோட்டை வாசிகளாகிய 26 நபர்களும் சிறுமங்கலம் தோழர்கள் 5ஆம் 31 நபர்கள் தண்டிக்கப்பட்டனர் காரைக்கோட்டை, பஞ்சாயத்து தலைவர் முருகையன் உள்பட ஏனைய தோழர்களுக்கும் (31 நபர்கள்) 6 மாத கடுங்காவல் தண்டனை கொடுக்கப்பட்டு லாரி மூலமாக திருச்சிக்கு அனுப்பப்பட்டனர். காரைக்கோடடைய்ச சார்ந்த 14 வயதுடைய உத்திராபதி என்ற பையனை மைனர் என்ற காரணம் காட்டி விடுதலையளிக்கப்பட்டனர். காரைக்கோட்டையைச் சேர்ந்த துரைசிங்கம் என்பவரின் தங்கை 7 வயதுடைய சரோஜா இறந்த செய்தியைக் கேட்டும் சற்றும் மனக் கலக்கமடையாது சிறை தண்டனையளிக்கப் பட்டதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் சிறையேகினார்.



1. நேரு எதற்கெடுத்தாலும் தமிழ்நாட்டவர்களை காட்டுமிராண்டி என்று அர்த்தமின்றி சொல்லி வருகிறார்.
2. இதை யாருக்கும் தைரியமாக எதிர்க்கின்ற துணிவு வருவதில்லை.
3. பெரியார் தான் நேரு அஞ்சி நடுங்கும் வண்ணம் சுடச்சுட பதில் தருகிறார்.
4. மற்றவர்கள் காட்டுமிராண்டி என்று அதிகார ஆணவத்துடன் சொல்லும் நேரு, பெரியாரிடம் சொல்லும் போது நடுங்கிக் கொண்டே தான் சொல்ல முடியும்.
5. பெரியாரிடம் தான் நேரு பயப்படுகிறார். பெரியாருக்குத்தான் வடநாட்டு ஆதிக்கத்தை நடுங்க வைக்கும் ஆற்றல் உண்டு என்பன போன்ற ஆழ்ந்த கருத்துடன் இந்த கார்ட்டூன் வரையப்பட்டிருக்கிறதைக்காண்க.

பெரியார் கைது

பெரியார் அவர்கள் சீரங்கம் பொதுக் கூட்டத்தில் பேசுவதற்காகப் புறப்பட்டு ஆயத்தப்படுகையில் சூபரிண்டென்ட் திரு.எஸ்.சோலை அவர்கள் பெரியார் மாளிகைக்கு வந்து பெரியார் அவர்களை கிரிமினல் புரொசீஜர் கோடு 151ஆவது பிரிவுப்படி (குற்றங்களைத் தடை செய்வதற்கான சட்டப்பிரிவு) உத்தேசிக்கப்பட்ட நவம்பர் 26ந் தேதி அரசியல் சட்ட புத்தகத்தைக் கொளுத்துவதைத் தடுப்பதற்காகக் கைது செய்வதாகக் கூறி தமது காரில் அழைத்துச் சென்றார்.
பின்னர் அடிஷனல் முதல் வகுப்பு மாஜிஸ்திரேட் திரு. இராமச்சந்திரன் அவர்கள் முன்பாக பெரியார் அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டு 8 நாட்களுக்கு ரிமாண்டில் வைக்கும்படி உத்தரவிடப்பட்டார்.
பெரியார் அவர்கள் திருச்சி மத்திய சிறையில் வைக்கப்பட்டுள்ளார்கள்.
பெரியார் அவர்கள் சீரங்கம் கூட்டத்தை முடித்துக் கொண்ட, எக்ஸ்பிரஸ் டிரெயின் மூலம் சென்னைக்கு வந்து நவ. 26ந் தேதி சென்னையில் எழும்பூர் பெரியார் திடல் (டிராம்ஷெட்) கூட்டத்தில் பேசி இறுதியில் அரசியல் சட்டத்தைத் தீயிட்டுக் கொளுத்தத் திட்டமிட்டிருந்தார்கள். இதைத் தடுக்கவே முன்னேற்பாடாக போலீசார் கைது செய்தனர் என்று நம்பப்படுகிறது.
நேற்று மாலை பெரியார் அவர்களைக் கைது செய்ய போலீசார் பெரியார் மாளிகைக்கு வரும்போத அங்கு கழகத் தோழர்கள் யாரும் இல்லை. எல்லோரும் சீரங்கம் கூட்டத்திற்குச் சென்று விட்டார்கள். பெரியார் கைது செய்யப்படும்போது, திரு.ஆனைமலை நரசிம்மன் அவர்களும் திருமதி. மணியம்மையார் அவர்களும் மட்டும் உடன் இருந்தார்கள்.
--------------------- விடுதலை, 26.11.1957

ஆம் கொளுத்தினேன்

சென்னை ஜியார்ஜ் டவுன் 4வது மாஜிஸ்திரேட் திரு.எஸ்.வரதராசன் முன்னி லையில் அரசியல் சட்டம் கொளுத்திய வீரர்களின் வழக்கு விசாரணை, இன்று காலை 11.15 மணிக்கு ஆரம்பமாகியது. தேசிய பாதுகாப்பு சட்டப்படி கைது செய்யப்பட்ட தோழர்கள் தோழியர்கள் அனைவரும் முக மலர்ச்சியுடன் வீற்றிருந்தனர்.

முதலில் தோழர் நடராஜன் அவர்களை கோர்ட்டார் அழைத்தனர்.
நீங்கள் பழைய ஜெயில் சி3 போலீஸ் ஸ்டேஷனுக்கு எதிராக அரசியல் சட்ட புத்தகத்தை கொளுத்தியது உண்மைதானா? என்று கேட்டதற்கு ஆம் கொளுத்தினேன் என்றார்.
போலீசார் மாஜிஸ்திரேட்டிடம் அவர் கொளுத்தின அரசியல் சட்ட நூலை காட்டினார்.
அடுத்து தோழர்கள் தாமோதரன் அபிபூடீன் ராமலிங்கம், வைத்தியநாதன், கன்னியப்பன், நெடுஞ்செழியன், கந்தசாமி ஆகியோர் மேலுள்ள வழக்குகள் தனித்தனியாக எடுத்துக் கொள்ளப்பட்டது.

தனித்தனியாக நீங்கள் அரசியல் சட்ட புத்தகத்தை கொளுத்த முயன்றீர்களா என்று கேட்டதற்கு கொளுத்தினோம் என்றனர்.
கடைசியாக தோழர் எம்.எஸ்.மணி தோழியர்கள் எம்.எஸ்.வள்ளியம்மாள் செண்பக வல்லி அம்மாள் (கையில் சிறு பையனுடன்) புரட்சிமணி ஆகியோர் மீதுள்ள வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

நீங்கள் சைனாபஜார் பூக்கடை போலீஸ் ஸ்டேஷன் முன்பாக கும்பலாக பெரியாரை விடுதலை செய் என முழக்கமிட்டுக் கொண்டும் புத்தகங்கள் ஆகியவைகளை எரிக்க முற்பட்டது உண்மையா? எனக் கேட்டனர் ஆமாம் உண்மை என அவர்கள் பதில் அளித்தனர்.
கடைசியாக போலீசார் மாஜிஸ்திரேட்டை நோக்கி தண்டணையளிப்பதில் சற்று தாராள மனப்பான்மை காட்ட வேண்டுமென கேட்டுக் கொண்டதற்கு இல்லை இது பெரும் குற்றம் என மாஜிஸ்திரேட் கூறினார்.

கடைசியாக மாஜிஸ்திரேட் கீழ் கண்டவாறு தண்டனை அளித்து தீர்ப்புக் கூறினார்.
தோழர் எம்.எஸ். மணி தோழியர்கள் எம்.எஸ்.வள்ளியம்மாள், செண்பகவள்ளி (கையில் சிறுவன்) புரட்சிமணி ஆகியோரைப் பார்த்து அபராதம் விதித்தால் கட்டுவீர்களா எனக் கேட்டதற்கு கட்டமாட்டோம் என அவர்கள் பதில் கூறினார்கள்.

தோழியர்கள் எம்.எஸ்.வள்ளியம்மாள், செண்பகவல்லி, புரட்சிமணி ஆகியோருக்கு 2 மாதம் கடுங்காவல் தண்டனையும் தோழர் நடராசன் அவர்களுக்கு 6 மாதம் கடுங்காவல் தண்டனையும் எம்.எஸ்.மணி, கே. கன்னியப்பன், தாமோதரன், நெடுஞ்செழியன், அபிபுடீன் ராமலிங்கம், கந்தசாமி, வைத்திய நாதன் ஆகியயோருக்கு 9 மாதம் கடுங்காவல் தண்டனை விதித்தார்.

தோழர்கள் மேற்படி தண்டனையை மகிழ்ச்சியுடன் ஏற்று சிறைவாசம் புகுந்தனர்.
கோர்ட்டில் ஏராளமான கழகத் தோழர்கள் வந்திருந்து வழக்கை கவனித்தனர்.

------------------------------- விடுதலை, 27.11.1957

சிறை செல்லும் முன் பெரியார் வேண்டுகோள்


நவம்பர் 25ந் தேதி நடக்கும் விசாரணையில் எனது முச்சலிக்க பாண்டு கேன்சல் ஆகி என்னைச் சிறைப்படுத்தும் படியான நிலைமை பெரும்பாலும் ஏற்படலாம். இந்தச் சமயத்தில் பொது மக்களுக்கு ஏதாவது சொல்ல வேண்டியது அவசியமாகும். நான் சிறைப்படுத்தப்பட்டு விட்டேன் என்பதாலேயோ அல்லது பொது மக்கள் கொளுத்துவார்கள் என்கிற எண்ணத்தால் அதைத் தடுக்க அரசாங்கத்தார் ஏராளமான மக்களைக் கைது செய்து விட்டார்கள் என்ற எண்ணத்தாலேயோ, புதிய சட்டத்தின்படி நீண்ட நாள் தண்டிக்கப்பட நேரிடும் என்ற அச்சத்தினாலேயோ யாரும் அதாவது கொளுத்த வேண்டியது அவசியந்தான் என்று கருதுகிறவர்கள், எந்த விதமான தயக்கமும் இல்லாமல் அரசியல் சட்டத்திலிருந்து பொறுக்கி எடுத்துப் போட்டிருக்கிற, நமக்குக் கேடான நாலைந்து பிரிவுகளைக் கொண்டு பிரசுரத் தொகுப்பைக் கொளுத்தியே தீர வேண்டியது முக்கியமான காரியம் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

இதைவிட முக்கியமான காரியம் ஒன்றை வணக்கமான வேண்டுகோளாகத் தெரிவித்துக் கொள்ளுகிறேன். அதை அவசியம் ஒவ்வொரு வரும் கவனிக்கவேண்டியது. என்னைரிமான்டு செய்வதனாலேயோ மற்றும் இப்பொழுது செஷன்சில் நடைபெறும் வழக்கின் பெயரால் என்னை நீண்டநாள் அரசாங்கத்தார் தண்டனைக்குள்ளாகி விடுவதாலேயோ பொது மக்கள்யாரும் ஆத்திரப்படுவதற்கோ, நிலை குலைந்து விடுவதற்கோ ஆளாகாமல் மிக்க மகிழ்ச்சியோடு அச்சேதியை வரவேற்க வேண்டும். எந்தவிதமான கலவரமோ, பலாத்காரமோ, பார்ப்பன சமுதாயத்தைச் சேர்ந்த ஆண்களுக்கோ, பெண்களுக்கோ, குழந்தைகளுக்கோ, துன்பம், வேதனை உண்டாகக் கூடிய எப்படிப்பட்ட பலாத்காரமான செய்கையும், கஷ்டம் உண்டாக்கக்கூடியதான செய்கை யையும் அதாவது ஆயுத பிரயோகமோ, அடிதடியோ, நெருப்புக் கொளுத்துதலோ, முதலிய ஒரு சிறு காரியம் கூட நடத்தாமலும் நடைபெறாமல் இருக்கும்படியும் ஒவ்வொரு வரும் நடந்து கொள்ள வேண்டும். நான் ஆயுதப் பிரயோகம் செய்ய வேண்டும் என்றும், அக்கிரகாரங்களை கொளுத்தப்பட வேண்டும் என்றும் சொன்னதும், சொல்லி வருவதும் உண்மை. ஆனால், அவை இப்பொழுது அல்ல. அதற்கான காலம் இன்னும் வரவில்லை. வராதென்றே ஆசைப்படுகி றேன். அப்படிப்பட்ட காரியங்களில் ஈடுபடு வதற்குக் காலம் எப்போதும் வரும் என்றால், அரசியல் சட்டத்தைக் கொளுத்துவது முதலிய பயனில்லை. வெற்றிக்கு அவை பயன் படவில்லை என்றது கண்டு, பலாத்காரத்தைத் தவிர வேறு வகையில்லை என்ற முடிவுக்கு வந்தபிறகுதான் நாம் அவற்றில் இரங்க வேண்டியவர்களாக இருக்கிறோம்.
ஆதலால் இந்த என்னுடைய தாழ்மையான வேண்டுகோளை ஒவ்வொருவரும் கருத்தில் வைக்கவேண்டும்.

இப்பொழுது எனக்கு ஏற்படக்கூடும் என்று என எதிர்பார்க்கப்படும். தண்டனையானது நம்முடைய அடுத்த திட்டங்களுக்கு வலுவான ஆதரவுகளையும், உணர்ச்சியையும், ஊக்கத் தையும், துணிச்சலோடும் வேகத்தோடும் ஈடுபடுவதற்குத் தூண்டுதலை உண்டாக்கு வதற்கு வலுமையான சாதனமாக அமையும், பொதுமக்கள் மீது எனக்கு பலமான ஆதிக்கம் இருக்கிறது என்று அரசாங்கமும் இந்தியாவி லுள்ள மற்ற மக்களும் எண்ணியிருக்கிற ஒரு எண்ணத்திற்குப்பாதகம் ஏற்படாமல் பொது மக்கள் நடந்து கொள்ள வேண்டும் என்றால், நான் மேலே வேண்டிக் கொள்கிறபடி எந்தவிதமான தண்டனைக்கு (ஏற்பட்டால்) பிறகு பொது மக்களிடையில் மேற்சொன்னபடி எந்தவிதமான கலவரமும் செய்யும் ஏற்படாமல் இருக்க வேண்டிக் கொள்கிறேன். அவர்களிடத்தில், போலீஸ்காரர்களிடத்தில், மரியாதையாகவும், கட்டுப்பாடாகவும் நடந்து கொள்ள வேண்டுமென்று வேண்டிக் கொள்கிறேன்.

--------------------- விடுதலை 28.11.1957

0 comments: