Search This Blog

12.7.08

ராமராஜ்யம்

காங்கிரசார் கூறிவந்த ராம ராஜ்ஜியம், இப்பொழுது நடைபெற்று வருகின்றது. என்றைக்கு ராமராஜ்ஜியம் என்று காங்கிரசார் கூறினார்களோ, அன்றைக்கே, திராவிடர்கள் ராமராஜ்ஜியத்தை விரும்ப மாட்டார்கள் என்றும், ராமராஜ்ஜியத்தை அழிப்பதே திராவிடனின் லட்சியம் என்றும் நாம் சொல்லி வந்திருக்கின்றோம்.

அக்கிர(ம)காரக் குழந்தை 5 வயதில் இறந்தது, சூத்திரன் ஒருவன் செய்த தவமே அதற்குக் காரணம் ஆகும் என்று, `துஷ்ட நிக்ரஹ சிஸ்ட பரிபாலனான இராமன் தவஞ் செய்த சூத்திரனை, தலை வேறு உடல் வேறாகத் துண்டித்து நீதி வழங்கினான் என்பது வான்மீகர் கூறும் இராம ராஜ்ஜியம். குற்றம் ஒன்றிற்கே, குலவாரியாகத் தண்டனை வெவ்வேறு, என்பது இராம ராஜ்ஜியத்திற்கு அடிப்படையான மனுதர்ம சாஸ்திரம் கூறும் நீதி. இராம ராஜ்ஜியத்தை - மனுதர்ம சாஸ் திரத்தை, மனித குலம் ஏற்காது.

`வள்ளுவர் செய் திருக்குறளை
மறுவற நன் குணர்ந்தோர்
உள்ளுவரோ மனுஆதி ஒருகுலத்துக்கொரு நீதி

என்று காலஞ்சென்ற சுந்தரனார், கவிதை மொழியிலே, திராவிடர்க்கு உணர்த்தி சென்றார். நாமும் இம்முறை - இந்நீதி இருத்தல் கூடாது என்று எல்லா வகையாலும் எத் தனையோ ஆண்டுகளாக, எழுதியும் பேசியும் நடித்தும், திராவிடர்க்கு உணர்த்தி வருகின்றோம். ஆனால் திராவிடர்கள் உணர்ந்து விழிப்படைந்தார்களா?

இதோ ஒரு சாட்சி. காங்கிரஸ் ஆட்சி, மனு தரும ஆட்சியே என்று முழக்கமிடுகின்றது.
நாகப்பட்டினம் - வழக்கு மன்றத்தில், காங்கிரஸ் ஆட்சியில் நீதி தேவன் வழங்கிய நீதி என்று, தோழர் ஒருவர் நமக்கு எழுதியி ருக்கின்றார்.

பாதையில் தவறாக நடந்த குற்றத்திற்குப் பலர் ஆளானார்கள். அவருள் ஆரியர் திரா விடர் என்ற இருதிறத்தாருமுண்டு. ஆனால் இக்குற்றத்திற்கு ஆளான ஆரியர்களாகிய,
சுப்பிரமணிய அய்யர்
நடேச அய்யர்
சூர்யமூர்த்தி அய்யர்
குருமூர்த்தி அய்யர் ஆகியோருக்கு அணா எட்டு வீதமும் மற்றைய திராவிடர்களுக்கு ரூ.1, 2 வீதமும் அபராதம் விதிக்கப்பட்டிருக்கின்றது என்பது கடிதத்தின் சாரம்.
திராவிடர்களே! இன்னும் எவ்வளவு காலத்திற்கு இந்த மனுதர்ம ஆட்சியை ஏற்றுக் கொள்ளப்போகின்றீர்கள்?

------------------------ `குடிஅரசு' 1.11.1947

0 comments: