Search This Blog

28.8.22

மறந்தும் 'பிராமணன்' என்று சொல்லக்கூடாது! 'பார்ப்பனர்' என்றே சொல்ல வேண்டும்!! - பெரியார்

சாதி ஒழிப்பு!


 

சாதி ஒழிய வேண்டும் என்பதே, சாதியின் பெயரால் இருக்கிற வேற்றுமைகள் ஒழிந்து சமத்துவமான நிலை வரவேண்டும் என்பதுதானே? அந்தச் சமத்துவமான நிலை, பங்காளி என்கிற பேதம் கூட இல்லாத இடத்திற்குத்தான் வந்து சேரும். சாதி ஒழிப்புக்கு ஆதரவாகத் தொழிலாளர்கள் நடக்கிறார்கள்.

 

மறந்தும் 'பிராமணன்' என்று சொல்லக்கூடாது; 'பார்ப்பனர்' என்றே சொல்ல வேண்டும். அது கஷ்டமாக இருந்தால் ஆரியர் என்றாவது சொல்லுங்கள்; "பிராமணர்" என்று சொல்லாதீர்கள்; நம் ஆட்களின் சரக்கு கொஞ்சம் தரக்குறைவாக இருந்தால்கூட அதை ஆதரிக்க வேண்டும். ஆதரித்தால் அதுசரியாகிவிடும். அரசியலில் கூட நமக்குச் சாதகமாக நம் ஆட்களை ஆதரிக்கும் உணர்ச்சி உள்ளவர்களை ஆதரிக்க வேண்டும். அதற்கு எதிராக உள்ளவர்கள் யாராக இருந்தாலும் எதிர்க்க வேண்டும். அப்படிச் செய்வதன் மூலம் என்ன ஆகும் என்றால், அப்படி நடந்தால்தான் செல்வாக்கு என்று கருதி இன்னின்ன மாதிரி நடந்து கொண்டால்தான் வாழமுடியும் என்று எண்ண வேண்டிய நிலைக்கு வந்து தீருவார்கள்! இதில் பார்ப்பனரைப் பார்த்துப் பழக வேண்டும்.

 

பஸ்ஸில் ஒரு பார்ப்பனர் முத்துராமலிங்கத் தேவர் உயர்ந்த மனிதர், அவரைக் கைது செய்தது அக்கிரமம் என்று பேசியதாகச் சொன்னார்கள். காரணம் என்ன? முத்துராமலிங்கத் தேவர் யார்? எப்படிப்பட்டவர் என்று தெரியாது; ஆனால் எதற்குப் பேசுகிறான்? அந்த எதிர்ப்பு காமராசருக்குச் சேரும். காமராசரை அவர்களுக்குப் பிடிக்கவில்லை; அதனால் பேசுகிறார்கள்; இந்த இனப்பற்றை நாம் உணர்ந்து பழக வேண்டும்; நீதி........ ஆனஸ்ட் என்பது இப்போது தேவையில்லை; நாம் வாழ்வது எப்படி என்பதுதான் நீதியாக இருக்க வேண்டும்.

 

ஒழுக்கத்தைப் பற்றிக் கூடச் சொல்லும்போது சொல்வேன்; ஒரு பணக்காரன் தன் வசதிக்கு ஒன்றை ஒழுக்கம் என்று எழுதி வைத்துக் கொண்டால் அதைக் கட்டிக் கொண்டு நாம் ஏன் அழவேண்டும்? ஆகவே நம்முடைய இலட்சியம் நம் இனத்தைப் பற்றிக் கவலை கொண்டதாகவே இருக்க வேண்டும். அந்த வழியிலே பழகவேண்டும். அதோடு நமக்குள் ஒற்றுமை வேண்டும் ஒருவர் பைத்தியக்காரத்தனமாக இருந்தாலும் விட்டுக் கொடுத்து நடக்க வேண்டும். நம்முடைய பத்திரிகைகளை வாங்கிப் படிக்க வேண்டும். மற்றவர்களையும் படிக்க வைக்க வேண்டும். நம்முடைய கருத்துக்களை விவாதிக்கவும் சிந்திக்கும்படியும் மற்றவர்களைச் செய்தால் அது அப்படியே பிடித்துக் கொள்ளும்.

 

மற்றவர்கள் கஞ்சன் என்று சொன்னாலும் சிக்கனமாக நடக்க வேண்டும். குழந்தைகளும் ஆடம்பரத்தைக் காட்டாமல் வளர்க்கப்பட வேண்டும். காசு இருக்கிற வரையில் தான் மானம், ஒழுக்கம் இவை இருக்கும். பொருளாதாரத்தைப் பெருக்குவது என்பதற்குச் செலவைச் சுருக்குவது முதல் அடிப்படையாகும்.

 

தொழிலாளி என்பவனும் தன் வாழ்க்கைக்குத் தேவையானதைக் கேட்பவனாகவே இருக்கிறான். விலைவாசி 3% உயர்ந்ததென்றால் உயர்த்திக் கொடு என்கிறான். 3% ஆகவே சோற்றுக்கு வீட்டு வாடகைக்குக் கணக்குப் பார்த்துக் கொடுப்பதே தொழிலாளித் திட்டமாக இருக்கிறது. ஆகவே அதிகக் குழந்தைள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கூடுமான வரையில் கடன் வாங்கக் கூடாது. அதுவும் தொழிலாளி என்பவனுக்கு இது முக்கியம்.

 

                              ----------------------------- 13.10.1957- அன்று திருச்சியில் எஸ்.ஆர்.எம்.யு. நடத்திய பெரியார் பிறந்த நாள் விழாவில் தந்தை பெரியார் சொற்பொழிவு: "விடுதலை", 24.10.1957

0 comments: