கடவுள் - சாதி - ஜனநாயகம் என்கிற முப்பேய்களையும் விரட்டினால் தான் நல்வாழ்வு!
நம்முடைய நாட்டையும் அதில் வாழும் மக்களையும் பிடித்திருப்பவை மூன்றுவிதமான பேய்கள்; முதலாவது பேய் கடவுள்.
பேய் என்றால் என்ன? இல்லாத ஒன்றை இருப்பதாகக் கருதிக் கொண்டு பயப்படுகிறார்களே அதுதான். நம் பெண்களை யார் பிடித்திருக்கிறான் என்று கேட்டால் பேய் ஆடிக்கொண்டு என்னைச் சாயபு பிடித்திருக்கிறான் என்கிறது; சாயபு எப்படி வந்து பிடித்தான் என்றால், எப்பொழுதோ ஒரு காலத்தில் சாயபு ஒருவன் கிணற்றில் விழுந்து செத்துப் போனான். அவனுடைய ஆவி பேயாக அலைகிறது; அதுதான் பிடித்துக் கொண்டு ஆட்டுகிறது என்பார்கள்!
குழந்தைகளைப் பேய் பிடிக்காமல் இருப்பதற்காக இரும்புத் துண்டையும் கல்லையும் பக்கத்தில் போட்டு வைக்கிறார்கள்! படித்த பெண்களே பேய்க்குப் பயப்படுகிறார்கள் என்றால் படிக்காத மற்ற தற்குறிப் பெண்களைப் பற்றிக் கேட்கவா வேண்டும். இதுபோல் தான் கடவுள் என்பதும்! இவர்களுடைய அறியாமையை ஒழிப்பது எப்படி? இந்த நோயை வளர விடலாமா? அழித்தால்தானே மக்களுக்குத் துணிவும், அறிவும் பிறக்கும்; இதை ஒழிக்க யார் முன்வருகிறார்கள்?
அடுத்தது சாதிப்பேய்! இது யாரிடம் காணமுடிகிறது? பெண்களை ஒரே மாதிரி உடையணிவித்து நிறுத்தி வைத்து ஒருவெளி நாட்டுப் பெண்ணை விட்டுப் பரிசோதிக்கச் சொன்னால் இவள் பார்ப்பனச் சாதிப்பெண்! இவள் பறை சாதிப்பெண்! இவள் சூத்திரசாதிப்பெண்! என்று கண்டு பிடிக்க முடியுமா? மனித இனத்தில் சாதி ஏது?
நாயில் சாதி உண்டு; குதிரையில் சாதி உண்டு. மாடு, ஆடு போன்றவற்றில் சாதி உண்டு. மனிதர்களில் வேற்றுமை ஏது? நிறத்தில் மாறுபாடு காணக் கூடும்; வெள்ளைக்காரனுடைய நிறத்திற்கும் நீக்கிரோக்களின் நிறத்திற்கும் வேறுபாடு உண்டு. சைனாக்காரன் இதைப் பார்த்தால் இவன் வேறு சாதி! அவன் வேறு சாதி என்று இடத்தை நிறத்தைப் பார்த்து வேண்டுமானால் சொல்லலாம். இங்கே எப்படிச் சாதியைக் காட்ட முடியும்?
இங்கு வாழும் பார்ப்பானும் பாரதமாதாவின் புத்திரன்! பறையனும் பாரதமாதாவின் புத்திரன்! பறையனுக்குப் பார்ப்பான் பெண் கொடுத்திருக்கிறான். அவர்களுக்கும் பிள்ளை குட்டி பிறந்திருக்கிறது. பார்ப்பானும் திருட்டுப் புரட்டு, ஃபோர்ஜரி முதலிய எல்லாக் காரியத்திலும் கைதேர்ந்தவனாக இருக்கிறான்; மற்றவர்களும் இருக்கிறார்கள்; இதில் எப்படித் தனிச்சாதி என்று பிரித்துக்காட்ட முடியும்?
மக்களை ஏய்த்துப் பிழைக்க வேண்டும் என்பதற்காகப் பார்ப்பனர்கள் அமைத்துக் கொண்ட ஆணவம் - திமிரைத் தவிர வேறு என்ன சொல்ல முடியும்? மக்களை மானமற்ற முறையில் வைத்துக் கொண்டு அடிமையாகப் பயன்படுத்த சாதி பயன்படும்!
மலேயாவில் இருக்கிற பார்ப்பானும் இங்கிலாந்து சீமையில் இருக்கிற பார்ப்பானும் பன்றி மாடு கறி தின்கிறான்; குடிக்கிறான்! எது உயர்ந்த சாதிக்கு ஏற்காதோ அத்தனையும் தின்கிறான்! அங்கே சாதியைப் பேசுவதில்லை! இங்கே வந்தால் தான் அவன் உயர்ந்த சாதி, இவன் தாழ்ந்த சாதி என்கிறான். இது மக்களை ஏய்ப்பதைத் தவிர வேறு என்ன?
பேயும் - சாதியும் எப்படி மனிதனைக் கோழைகளாகச் செய்வதற்குப் பயன்படுத்தப்படுகின்றனவோ அவைபோலவே கடவுள் என்ற பேயும் ஆகும். ஒவ்வொருவர் வீட்டிலும் கடவுள் இருக்கிறது! காலையில் எழுந்து சிவ சிவா என்று கல்லில் முட்டிக் கொண்டால் தான் பக்தி என்கிறார்கள். ஆனால் ஆத்திகன் என்று ஒருவன் இருந்தால் அவனிடம் ஒழுக்கமோ, நாணயமோ, நேர்மையோ அறவே காண முடியவில்லை.
கடவுளை நம்பினால் ஒருவன் ஏன் பூணூலை மாட்டிக் கொண்டு பார்ப்பான் என்ற உயர்ந்த ஜாதியாக இருக்க வேண்டும்? ஒருவன் ஏன் கீழ்சாதியாக இருக்க வேண்டும்? கடவுளுக்குப் பயந்து எவன் ஒருவன் ஒழுக்கக்கேடான காரியத்தைச் செய்யாமல் இருக்கிறான்? எவ்வளவு கீழ்த்தரமான எண்ணத்தில் நடக்க வேண்டுமோ அத்தனையும் செய்துவிட்டுச் சண்டப்பிரசண்டம் செய்கிறானே! கடவுளோடு கடவுளாகத் தூக்கி வைக்கப்பட்டு இருக்கும் சங்கராச்சாரியாலேயே ஒழுக்கம் உண்மை சமாளிக்க முடியவில்லை என்றால் மற்றவர்களால் எப்படி முடியும்?
கடவுள் நம்பிக்கை அதிகமாக இருக்கக்கூடியவனும், அவன் அன்றி ஓர் அணுவும் அசையாது என்று சதா நம்பி வாழ்பவனும் பணப்பெட்டியைப் பூட்டிவிட்டுத்தானே வருகிறான்? பக்தியில் மூழ்கிக் கடவுள் நம்பிக்கை கொண்டவன் வீட்டைப் பூட்டாமல் போனதைப் பார்த்திருக்கின்றீர்களா? கடவுள் நம்பிக்கை இருக்கும் போது வீட்டிற்கு ஏன் பூட்டு போட்டுப் பூட்டி இருக்கிறதா இல்லையா என்று இழுத்துப் பார்த்துச் செல்ல வேண்டும்? அவன் (கடவுளாக) தான் இருக்கிறானே! திறந்து போடட்டும்; பார்க்கட்டுமே?
அடுத்து பத்திரிகை நோய். தமிழ் நாட்டில் இருக்கிற மக்கள் மடையர்களாக அயோக்கியனாய் வருவதற்குக் காரணம் பார்ப்பன பத்திரிகைகள் தான். நம்முடைய வளர்ச்சியை எல்லாம் தடைப்படுத்தி வருவன பத்திரிகைகளும் அவற்றை நடத்தும் பார்ப்பனர்களுமேயாகும். எவ்வளவோ காரண காரியத்தோடு பேசுகிற இந்தக் கூட்டத்தைப் பற்றி எழுதமாட்டான்! இங்கே வந்திருக்கும் இவ்வளவு பெரிய கூட்டத்தைப் பற்றி ஒரு வரி கூடப் போடமாட்டான்! சங்கராச்சாரியாரும் ஒரு சந்தில் நான்கு பேரை அழைத்துப் பேசி; கொண்டிருந்தால் நான்கு கலம் (பத்தி) அய்ந்து கலம் எழுதுவான் அல்லது நம்மைச் சில காலிகள் தாக்கிப்பேசினால் அதை முதலில் பக்கத்தில் போட்டுப் பெருமையடைவான்! நம்மைத் திட்டுகிறவனும் சுகமாக திட்டுகிறான். பார்ப்பானிடம் கூலி வாங்கிக் கொண்டுதானே திட்டுகிறான்? அவன் பேச்சைப் போடும் போது நம் கண்ணில் விரலை விட்டு ஆட்டினார் என்று எழுதுவான்! உள்ளே படித்துப் பார்த்தால் எங்கே விரலைவிட்டு ஆட்டினான் என்பது இருக்காது!
சாதி ஒழிந்தால் பார்ப்பானுக்குப் பிழைப்புப் போச்சு! சாதியும் நம் கடவுள்களும் நம்மை விட்டுப் போனால் பார்ப்பான் செத்தான் என்றுதான் சொல்ல வேண்டும். மக்கள் ஒழுக்கக்கேடாய், முட்டாள்களாய் இருப்பதெல்லாம் பார்ப்பான் இருக்கும் வரையில்தான். அவன் ஒழிந்தபிறகு இந்த நாட்டு மக்கள் அறிவுத்துறையில் முன்னேறி உலகமக்கள் முன்னணியில் நிற்கமுடியும். இதற்குப் பாடுபடாமல் சட்டசபைக்குப் போய் சம்பாதிக்கிறேன் என்றால் எப்படி முடியும்?
வெள்ளைக்காரன் இருந்தபோது சட்டசபை என்றால் அதற்கு ஒரு மரியாதை இருந்தது. அவன் போன பிறகு குச்சக்காரிகளின் வீட்டில் நுழைவது போல நினைத்தவன் எல்லாம் போகும் படியான நிலைமை ஏற்பட்டு விட்டது. முன்பு சில தகுதியுள்ளவர்கள் இருந்து மக்களுக்கு வேண்டியதைச் சாதித்தார்கள். இப்பொழுது இன்னார் இன்ன காரியத்தைச் செய்தார்கள் என்று சொல்ல முடியுமா?
காங்கிரஸ் ஒரு கொள்ளைக்காரனுடைய ஸ்தாபனம். அவன் மெஜரிட்டிப் (பெரும் பான்மை) பலத்தோடு இருக்கிறான். அங்குள்ள அரசமைப்புச் சட்டம் மனுதர்ம சாஸ்திரமே என்ற ஆதாரத்தை வண்டி வண்டியாகச் சொல்கிறேன். அந்தச் சட்டத்தை ஒழிக்க வேண்டுமென்றும் கூறுகிறேன்.
அரசமைப்புச் சட்டத்திற்கும், இந்தச் சட்டசபைக்கும் கட்டுப்பட்டு நடப்பேன் என்று கையெழுத்துப் போட்டுவிட்டுப் போகிறான் என்றால் அவனுக்கு மனம் இருக்கிறதென்றா எண்ணுகின்றீர்கள்? அரசியல் கட்சி நிபுணன் (வல்லுநன்) என்று கூறிக்கொண்ட கம்யூனிஸ்டுகளாலேயே ஒன்றும் செய்ய முடியவில்லை என்றால் நீ மட்டும் என்ன சாதிக்கப் போகிறாய்? அய்ந்து கோடி இங்கே பத்து கோடி அங்கே என்றால் போதுமா? நீ போய்ச் சாதிக்க என்ன செய்தாய்? பார்ப்பனர்கள் பெரிய உத்தியோகத்தில் இருந்து கொண்டு நம்முடைய இனத்தின் உயிரை வாங்கிக் கொண்டிருக்கிறார்களே! அதற்குப் பரிகாரம் என்ன செய்தாய்?
எதிர்க்கட்சி என்று எதற்காக இருக்க வேண்டும்? அதனால் என்ன நன்மை ஏற்படுகிறது? அடிக்கிற கொள்ளையில் பங்கு போட்டுக் கொண்டு தின்பதைத் தவிர வேறு உருப்படியான காரியம் ஒன்றும் தெரியவில்லையே? நீ தின்கிறாய்; அதற்காகவா மக்கள் ஓட்டுப் போட்டார்கள்? அவர்கள் வாழ்வை வளமாக்க வேண்டாமா?
உங்கள் நாட்டிலே பார்ப்பனர்கள் செய்கிற அக்கிரமத்தைப் போல் இங்கேயும் செய்கிறார்கள். ஆதலினால் நாம் எல்லோரும் சேர்ந்து ஒரு தனி மாநாடு கூட்டிப் பார்ப்பனர்களை விரட்டுவோம் என்று என்னை அழைக்கிறார்கள். நம் நிலையே சரிபடுத்த முடியவில்லை. இதைவிட்டு எப்படி நாம் அங்கு போய்ப் பார்ப்பது?
ஆகவே தோழர்களே! நம் சமுதாயம் முன்னேற வேண்டுமானால் அதற்கு முதலாவதாக காரியம் பார்ப்பானை நம் வீட்டுக்கு வராமல் விரட்டுவதுதான். நம்முடைய செல்வம் அவனுடைய கையில் சிக்காமல் காப்பாற்றப்படுவதுதான் என்றாலும், நாம் மூடப் பழக்கங்களை விட்டொழிக்க வேண்டும். அதற்காக நிறைய நம் புத்தகங்கள், பத்திரிகைகள் படிக்க வேண்டும்.
சென்னையில் இருக்கும் திராவிடர் கழகத்தை எடுத்துக் கொண்டால் சைதைதான் (சைதாப்பேட்டை) எதிலும் முன்னணியில் நிற்கும் கழகக் கொள்கையைப் புரிந்து கொண்டு மற்றவர்களுக்குப் பாடுபட வேண்டுமென்ற எண்ணமும் இவர்களுக்கு உண்டு. இன்று நடத்தப்பட்ட விழா மிகவும் ஆடம்பரமான முறையில் அதிகப் பொருள் செலவில் செய்திருக்கிறார்கள். இவ்வளவு ஆடம்பரம் தேவையில்லை. இவைகளைக் குறைத்துக் கொண்டு அந்தப் பணத்தை ஏதாவது பயனுள்ள காரியத்திற்குப் பயன்படுத்தினால் நல்லது என்று கூறினேன். இவர்கள் கேட்கவில்லை.
----------------------------------------------- 11.08.1958 சென்னை சைதையில் தந்தை பெரியார் சொற்பொழிவு: ”விடுதலை”, 12.08.1958
0 comments:
Post a Comment