Search This Blog

14.4.08

பஞ்சாங்கமா?

தமிழ்நாடு அரசு தைத் திங்கள் முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கமென அதிகாரப் பூர்வமாக அறிவித்துவிட்டது. இப்படி அறிவித்ததற்கு நியாயமான காரணங்களும், தமிழர் பண்பாட்டு மரபுகளும் உண்டு.

மறைமலை அடிகளார் தலைமையில் 1921-இல் கூடிய அறிஞர் பெருமக்கள் இதனை அறிவித்துள்ளனர். குடலைப்புரட்டும் முடைநாற்ற புராணக் கதையின் அடிப்படையில் அமைந்த பிரபவ தொடங்கும் ஆண்டு தூக்கி எறியபட்டது.

பகுத்தறிவாளர்கள் மட்டுமல்ல, தமிழ், தமிழர், தமிழ் பண்பாடு இவற்றின்மீது பிடிப்புள்ள அத்தனைப் பேரும் தை முதல் நாள் தமிழ் புத்தாண்டு அறிவிப்பை வரவேற்றுள்ளனர். உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் உவகைக் கடலில் மிதக்கின்றனர். பாழும் அரசியல் தமிழ்நாட்டில் சில அடிப்படை நியாயங்களையும் நேர்மைகளையும் உணர்வுகளை யும் கூட காயப்படுத்துகின்றனவே - என்ன செய்வது!

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் செல்வி ஜெயலலிதா, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, அ.இ. சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார், எம்.ஜி.ஆர். கழகத் தலைவர் ஆர்.எம். வீரப்பன், இலட்சிய தி.மு.க. பொதுச்செயலாளர் விஜய ராஜேந்தர், புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி. சண்முகம், பா.ஜ.க. மாநிலத் தலைவர் இல. கணேசன், இந்து முன்னணி இராமகோபாலன், இத்தகையவர்கள் சர்வதாரி ஆண்டு பிறப்புக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கின்றனர்.

ஆண்டின் பெயரே தமிழுக்கும், அதற்கும் ஒட்டும் இல்லை - உறவும் இல்லை என்பதைப் பறை சாற்றுகிறது.

இவர்கள் அனைவரும் பகுத்தறிவு, இனமானம், தமிழினவுணர்வு இவற்றிற்கு எதிரான முகாமில் நின்றுகொண்டு கணைவீசுகிறார்கள். என்றுதான் கருதப்படுவார்கள். இன்றைய தலைமுறை மட்டுமல்ல, எதிர்காலத்திலும் இவர்கள் தகுதியான விமர்சனத்தின் மூலம் வீழ்ந்து விடுவார்கள். ஒரு சிலரைப்பற்றிக் கவலையில்லை - இன்னும் சிலரும் இந்தப் பட்டியலில் சேர்ந்துவிட்டார்களே!

தமிழ்ப் புத்தாண்டு என்று கூறப்படும் இந்த 60 வருடம் குறித்து தந்தை பெரியார் எவ்வளவு எழுதியிருப்பார். - பேசியிருப்பார். `குடிஅரசு, `பகுத்தறிவு `விடுதலை, `அண்ணாவின் திராவிட நாடு எப்படியெல்லாம் எழுதியிருக்கும்?

அரசியல் காழ்ப்புக்கு முன்னே கொள்கையாவது கொத்த வரையாவது என்று குடை சாய்ந்து விடலாமா? இந்த நிலைக்கு நமது இரங்கலைத் தெரிவித்துக் கொள்வோமாக! சித்திரை முதல் நாளன்று கோயில்களில் பஞ்சாங்கம் படிக்கவேண்டாம், பூஜைகள் செய்யவேண்டாம் என்று தமிழ்நாடு அரசு இந்து அறநிலையத்துறை ஆணை பிறப்பித்து விட்டதாக பா.ஜ.க.வின் இல. கணேசனும், இந்து முன்னணியின் இராம. கோபாலனும் குதிக்கிறார்கள்.
அப்படியே அரசு ஆணையிட்டு இருந்தால், அது எப்படி குற்றமாகும்? அரசு, தான் பிறப்பித்த ஆணையின்படி நடந்துகொண்டால்தானே அதுதன் கடமைகளை சரிவர செய்திருக்கிறது என்று பொருளாகும்?

பஞ்சாங்கத்தைப்படிக்க விடாமல் தடுக்கலாமா என்று பஞ்சகசங்கள் பதறுகின்றன. இத்தகையவர்கள் பஞ்சாங்கம்படிதான் வாழுகிறார் களா? வானவியல் பஞ்சாங்கத்தை ஏற்றுக் கொள் கின்றதா?

கோள்கள் ஒன்பது என்று கூறிகிறார்களே, அந்தப் பட்டியலில் உள்ள சூரியன் நட்சத்திரமே தவிர, கோள் அல்லவே, ராகு, கேது என்று பஞ்சாங்கம் சொல்லு கிறதே. கோள்கள் பட்டியலில் அப்படி எந்தக் கோளும் கிடையவே கிடையாது என்று அறிவியல் அடித்துச் சொல்லுகிறதே - அதற்கு என்ன பதில்? புதிதாகக் கண்டு பிடிக்கப்பட்டுள்ள யுரேனஸ், நெப்டியூன், புளூட்டோ ஆகியவை பஞ்சாங்கத்துக்குள்ளே, சோதிடத்துக்குள்ளே கணக்கிடப்படவில்லையே! இந்த யோக்கியதையில் அய்யகோ, கோயிலுக்குள் பஞ்சாங்கத்தைப் படிக்கவிடாமல் தடுத்துவிட்டனர் என்ற அய்யன்மார்கள் அலறுவதில் அர்த்தம் உண்டா?

கடந்துபோன 1400 ஆண்டுகளில் சிறிது சிறிதாக கால இடைவெளி நீண்டுக் கொண்டே போய்க் கொண்டே இருக்கிறது. இதற்கும் பஞ்சாங்கக் கணக்குக்கும் 23 நாள்கள் இடைவெளி உள்ளதாக அறிவியல் கூறுகிறதே! அப்படியானால் பஞ்சாங்கத்தின் நிலைப் பாடு என்ன? அறிவியல் காற்றின் முன் பஞ்சாய் பறக்கும் பஞ்சாங்கத்துக்காக இன்றைக்கு வக்காலாத்தா? இந்த வரிசையில் திராவிட இயக்க போர்வை யினரும் எசப்பாட்டா?


- மயிலாடன் அவர்கள் எழுதிய கட்டுரை --"விடுதலை" 13-4-2008

0 comments: