Search This Blog

1.4.08

சீதையின் பஜாரித்தனம்!

சீதை தன் கணவனைப் பேடி, மனைவியைக் கூட்டிக் கொடுக்கும் கூத்தாடி என்று பேசுதல்!

இராமன் தன்னுடன் சீதையைக் காட்டிற்கு அழைத்துச் செல்ல விருப்பம் இல்லாது சீதையை அயோத்தியிலேயே இருக்கும்படி சொன்னதற்கு, சீதை மொழிந்த மறுமொழி.

'ராமா! உன்னிடத்தில் அழகு மாத்திரமே இருக்கிறது. அதைக்கண்டு அனைவரும் மயங்கி விடுகிறார்கள். உனக்கு ஆண்மை என்பது சிறிதும் இல்லை. என் ஒருத்தியைக் காக்க முடியாமல் நிறுத்தி நீ காட்டுக்குப் போனாய் என்று எனது தந்தையார் கேள்விப்படின், 'ஹா! புருஷவேஷத்துடன் வந்த ஒரு பெண் பிள்ளை (பேடி)க்கா என் புதல்வியைக் கொடுத்தேன்!' என்று தம்மை நொந்து கொள்வார். இம் மடவுலகர், இராமனிடம் சூர்யனைப் போன்ற தேஜஸ் ஜொலிக்கின்றது என்று கூறுகின்றனர். இது முழுப் பொய்யான வார்த்தை மனைவியைப் பிறர்க்கு ஒப்படைத்துப் பிழைக்கும் தன்மையான கூத்தாடியைப் போல் நீயாகவே என்னைப் பிறர்க்குக் கொடுக்க விரும்புகின்றனை' (அயோத்தியா காண்டம் 30 ஆவது சர்க்கம்; 229 ஆவது பக்கம், பிரதிவாதி பயங்கரம் அண்ணங்காராச்சாரியார் மொழி பெயர்ப்பு)

பதிவிரதைப் பட்டியலில் சேர்க்கப்பட்ட சீதை தன் கணவனிடம் கூறும் வார்த்தைகளா இவைகள்? கடை வீதிப் பஜாரி கூட இப்படிப் பேசப் பயப்படுவாளே!

சீதை தன் கொழுந்தனிடம் நடந்து கொண்ட மரியாதையின் லட்சணம்

சீதை இலக்குமணனை, 'சக்களத்தி மகன், த்ரோஹி பரமசத்துரு, என்னைக் கைப்பற்ற வந்தவனே, வஞ்சகா, துஷ்டா, இரக்கமற்றவனே, மஹாபாவி, குலத்தைக் கெடுக்க வந்த பிதிருத்ரோஹி, ருத்ராட்சப் பூனையைப் போன்றவனே, எந்த பாபத்தையும் செய்பவனே, மஹா யோக்கியனைப் போல் வந்தவனே, என்னைக் கைப்பற்ற உன்னைப் பரதன் அனுப்பினானோ, அல்ப ஜந்துவே' என்று ஒரு பெண் என்ற லட்சணத்துக்கே கொஞ்சங்கூடப் பொருத்தமின்றிக் குடிவெறியில் உளறிய குடிகாரியைப்போல் இலக்குமணனைப் பேசுகிறாள். இவைகள் கீழே ஆதாரங்களுடன் தரப்படுகிற்ன.

(சி. ஆர். சீனிவாசய்யங்கார் மொழி பெயர்ப்பு)

ஆரண்ய காண்டம், சர்க்கம் 45ல் 122-123-124-125 ஆம் பக்கங்களில் காணப்படுவன :

சீதை : 'இராமன் தாய்க்கு சக்களத்தி மகனான துரோஹி! மித்ரனைப் போல் அவரைப் பின் தொடர்ந்து வந்த பரம சத்ரு, என்னைக் கைப்பற்ற விரும்பி அவருடைய மரணத்தைக் கோரி இருக்கிறாயோ? உன் அண்ணனிடத்தில் உனக்கு எவ்வளவு ஸ்நேகமுமில்லையென்று இப்பொழுதல்லவா தெரிகிறது. எந்தக் கெட்ட எண்ணங்கொண்டு இங்கே நிற்கிறாயோ. என்னைக் காப்பாற்ற இங்கே இருக்கிறேன் என்று சொல்லுவது வஞ்சக வார்த்தை.'

இலக்குமணன் : தாயே ...... தாங்கள் இப்படிச் சொல்லத்தகாது...... தங்களை இந்த வனத்தில் ஒண்டியாய் விட்டுப் போக எனக்கு மனம் வரவில்லை.

சீதை : 'துஷ்டா! இரக்கமற்றவனே! க்ரூர ஸ்வாபமுள்ள மகா பாவி! இட்சவாகு குலத்தைக் கெடுக்கவந்த பிதிருத்ரோஹி! என்மேல் ஆசை கொண்டு ராமனுக்கு இந்த அபாயம் எப்பொழுது நேரப்போகிறதென்று எதிர் பார்த்துக் கொண்டிருக்கிறாயோ?..... உன்னைப் போன்ற சக்களத்தி மகன்கள் இப்படிச் சொல்வது ஆச்சர்யமா? நீங்கள் கொடியவர்கள், துஷ்டர்கள், ருத்ராட்சப் பூனையைப்போல் நிஜஸ்வபாவத்தை மறைந்து நடப்பவர்கள் எந்தப் பாவத்தையும் செய்வீர்கள். மகாயோக்கியனைப் போல எங்களுடன் வனத்திற்கு இதற்காகவா வந்தாய்? என்னைக் கைப்பற்ற எண்ணி வந்தாயோ? அல்லது பரதன் உன்னை அனுப்பினானோ? உங்களுடைய எண்ணம் பலிக்காது. உங்களைப் போன்ற அல்ப ஜந்துக்களை மனசாலும் நினைப்பேனோ?'...

இலக்குமணன் : 'தாயே .... முற்றிலும் உசிதமல்லாத வார்த்தைகளைச் சொல்லுவது ஸ்தீரிகளுக்கு ஆச்சரிய மில்லை, அவர்களுடைய சுபாவம் எப்பொழுதும் இப்படியே அடக்கம், பொறுமை, வினயம் முதலிய நற்குணங்கள் இல்லாமல் சபல சித்தத்துடன் கூர்மையான வார்த்தைகளால் புருஷர்களின் ஹிருதயத்தைப் பிளப்பது, பரம ஸ்நேகமுள்ளவர்களை விரோதிகளாக்குவது, அவர்களுடைய தொழில் ..... உங்கள் வார்த்தையைக் கேட்டு என் மனம் பதறுகிறது. மகா ஞானியான ஜனகருக்கு நீ எங்கே வந்து பிறந்தாய்! உத்தம குணங்களால் அலங்கரிக்கப்பட்ட விதேக சக்ரவர்த்திகளின் வம்சத்தில் எங்கே தோன்றினாய்?..... என்னிடத்தில் சந்தேகித்து இப்படிப்பட்ட கோரமான பாபத்தை என் தலையிலே சுமத்தினால் உன்னைச் சுட வேண்டும்! சீ,சீ, இப்படிப்பட்ட நீ இப்பொழுதே இறந்தால் லோகங்கள் சுகப்படும். ஸ்திரீகளுக்கே துஷ்டத்தனம் ஸ்வபாவமோ?..... இந்த வார்த்தைகளைச்

சொல்லும் நீயும் ஒரு ஸ்திரியா? நல்லது, இராமன் இருக்குமிடம் போகிறேன்!'

சீதை : 'பாபி வஞ்சகா த்ரோஹி. இப்படியாவது பேசிக் கொண்டு இன்னும் சற்று நேரம் என்னைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம் என்று எண்ணுகிறாயோ?'

லட்சுமணன் : (மனதிற்குள்) 'இந்தக் கோரமான வனத்தில் இவளை இப்படி அனாதையாக விட்டுப் போகிறோமே' என்று நினைத்துகொண்டு அவ்விடம் விட்டு அகன்றான்.

குறிப்பு : 'பதிவிரதை' 'லட்சுமியின் அவதாரம்' என்பவளுக்கும் அவளின் கொழுந்தன் 'கடவுளின் அவதாரம்' 'விஷ்ணுவின் மறுபிறவி' இராமனின் தம்பி இலட்சுமணன் என்பவனுக்கும் நடந்த உரையாடலின் லட்சணம் இது! பதிவிரதை தன் கொழுந்தனைப் பேசும் பேச்சுகளா இவைகள்?

அற்பபுத்தி கொண்ட பஜாரிப் பெண்கள் கூட இப்படிப் பேசப் பயப்படுவார்களே! அப்படிப்பட்ட பேச்சுகள் பதிவிரதை பட்டியலில் சேர்க்கப்பட்ட சீதையின் வாயால் வருகின்றன!

----------------- தந்தைபெரியார் - நூல்:"இராமாயணக்குறிப்புகள்"

0 comments: