பார்ப்பனர் தங்கள் குழந்தைகளை சிறு பிராயம் முதற் கொண்டே நம்மை தாழ்ந்த ஜாதியார் என்று நினைக்கும்படி பழக்கி வருகிறார்கள். அதாவது, தங்கள் குழந்தைகளை "அடி!அடி!! அவள் மீது படாதடி; அவள் சூத்திரச்சிடி; அவள் மீது பட்டு விட்டையே! போய் பாவாடையை நனைத்து குளித்து விட்டுவா" என்று பெண் குழந்தைகளுக்கும், அடே சூத்திரன்கள் மேலெல்லாம் பட்டு அவன் களை தொட்டுட்டு வந்துட்டையே! போ! போ! போயி குளிச்சுட்டு வா என்றும், பள்ளிக்கூடத்திலிருந்து வீட்டுக்குப் போனவுடன் பாவாடையை அவிழ்த்து வை, துண்டை அவிழ்த்து வை என்றும் சொல்லி நம்மிடம் அதுகளுக்கு ஒரு இழிவைச் சொல்லி கற்பிக் கிறார்கள். அந்தக் குழந்தைகள் ஏதாவது ஏனம்மா பள்ளிக்கூடத்திற்கு போனதற்காக துண்டை அவிழ்த்து வைக்கச் சொல்லுகிறாய் என்று கேட்டால், "என்னடி அங்கு போய் சூத்திரக் குட்டிகளோடு நெருங்கி உட்கார்ந்து அவர்களை எல்லாம் தொட்டுவிட்டு இங்கு வந்து வீட்டிற்குள் புகலாமா?" என்கிறார்கள்.
இதிலிருந்து அந்தக் குழந்தைகளுக்கு முளையில் இருந்தே பிராமணரல்லாதாரிடம் அருவருப்பும், அவர்கள் தொடக் கூடாத ஜாதி என்கிற உணர்ச்சியும் ஏற்பட்டு விடுகிறது. இந்தக் கொடுமைகளையெல்லாம் நமது பெரியவர்கள் அறிந்தேதான் பார்ப்பனன் என்பது அமங்கலவஸ்த்து வென்றும், அவனைக் காண்பதே சகுனத் தடை, அதாவது கெட்ட சகுனம் என்றும், நாம் போகும் காரியங்கள் அவன் கண்ணுக்குத் தெரிந்தால் கூட அவற்றைக் கெடுத்துதான் வாழப் பார்ப்பான் என்கிற எண்ணமும் அதில் வைத்து அவ்வளவு தாழ்மையாய் கருதி அனுபவத்தில் நமது பிள்ளைகளுக்கும் கற்றுக் கொடுத்து வந்தார்கள். ஆனால், நாம் அவற்றையெல்லாம் மறந்து அதற்கு நேர் விரோதமாய் பார்ப்பனர் எழுதி வைத்ததை ஒப்புக்கொண்டு நாமும் நம்ம குழந்தைகளுக்கு அய்யர் மேல் பட்டுவிடாதே, அம்மாமி மேல் பட்டு விடாதே, அவர்கள் உயர்ந்தவர்கள் என்று சொல்லுவதுடன் நாமும் நம்மைத் தாழ்ந்தவர்கள் என்றே நினைத்துக் கொள்கிறோம்.
ஆதலால் நமது குழந்தைகளுக்கும் பள்ளிக்கூடப் படிப்பிலிருந்தே இதை ஒரு பாடமாய் வைத்து இவைகளின் உண்மைகளைப் பற்றி சொல்லிக் கொடுத்து அவர்கள் உயர்ந்தவர்கள் என்ற எண்ணத்தை மாற்ற தகுந்த ஏற்பாடு செய்து வந்தால்தான் நமது சுயமரியாதையையாவது அடைய முடியும்.
------------ தந்தைபெரியார் - "குடி அரசு" 5.9.26
Search This Blog
8.4.08
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment