1899 ஆம் ஆண்டில் இருந்த நிலை
என்னுடைய கையிலே இருப்பது 1899 ஏறத்தாழ 109 ஆண்டுகளுக்கு முன்னாலே உங்களை அழைத்துப் போகின்றேன்.
சென்னையிலே ஒரு நாடகம். அந்த நாடகத்தை ஒட்டி ஒரு நோட்டீஸ் போடப்பட்டிருக்கின்றது. அதுவும் சென்னை தியேட்டரிலே. சென்னை இந்து விநோதசபை. அபிராம சுந்தரி சரித்திரம். செனை யானை கவுனியை அடுத்த வால் டாக்ஸ் ரோட்டில் அமைந்திருக்கும் ஸ்ரீ லட்சுமி விலாச நாடக சலையில் 1899 மார்ச் 21 செவ்வாய் கிழமை இரவு 9 மணி முதல் அபிராம சுந்தரி சரித்திர நாடகம் நடைபெறும். இது ஒரு புராண ராஜாக்கள் மாதிரியான நாடகம். அந்த காலத்திலே நோட்டீஸ் அடித்துப் பாட்டுக்கள் எல்லாம் போட்டிருப்பார்கள்.
நாடக விளம்பர நோட்டிஸ்
மக்களை மிகப் பெரிய அளவில் ஈர்ப்பதற்காக நாடக விளம் பர நோட்டிஸ். அந்த கதைகளை கொஞ்சம் எடுத்துக்காட்டி மக்கள் வரவேண்டும் என்பதற்காக போட்டிருப்பார்கள். அதில் போடப்பட்டிருந்த கட்டணம். ஷோபா ஒரு ரூபாய், அதாவது ஷோபாவில் அமருவதற்கு ஒரு ரூபாய் என்றால், நீங்கள் கற்பனை செய்து பாருங்கள். அடுத்து ரிசர்வ் சேர் 12 அணா, இண்டர்மீடியம் சேர் 8 அணா, அன் ரிசர்வேசன் 6 அணா, கேலரி 4 அணா, ஸ்ரீகளுக்கு பாய் 3 அணா.
அந்த காலத்தில் இப்படி எத்தனை வகையறா இருக்கிறது என்று பாருங்கள். பத்து வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு அரை டிக்கெட் 2 அணா. சண்டை சச்சரவு செய்பவர்களையும், சுருட்டு, லாகிரி வஸ்துகளுடன் வருபவர்களையும் பழைய டிக்கெட் இவைகளைக் கொண்டு வருபவர்களையும் போலிசாரிடம் ஒப்படைக்கப்படும். இதெல்லாம் நாடக நோட்டிசில் உள்ள கண்டிசன். விளம்பரத்தில் போட்டுவிட்டு, அடுத்ததுதான் மிகவும் முக்கியம். பஞ்சமர்களுக்கு இடமில்லை.
சென்னை தலைநகரில் நடந்த கொடுமை
இது எங்கே நடந்தது? சென்னை தலைநகரத்தில் நடந்த சம்பவம். ஒரு நூற்றாண்டுகளுக்கு முன்னாலே. நினைத்தால் எவ்வளவு பெரிய கொடுமையாக இருக்கிறது பாருங்கள்.
காசு கொடுத்து நாடகத்தைப் பார்க்க வருகின்றான். இலவசமாக அல்ல, ஒரு ரூபாய் இருந்தால் அவன் ஷோபாவில் போய் உட்காரலாம். பாய் வரையில் உண்டு. ஆனாலும் பொருளாதாரத்தில் இப்படி எல்லாம் வசதி இருந்து அவன் போனால்கூட அவன் பஞ்சமன் என்று சொன்னால், பஞ்சமர் களுக்கு நாடகம் பார்க்க இடம் இல்லை, அனுமதி இல்லை.
ஜாதிச் சான்றிதழோடு போகவேண்டுமா?
அப்படியானால் என்ன அர்த்தம்? இவன் ஜாதி சர்டிபி கேட்டோடு போகவேண்டும். சென்னை தலைநகரத்திலே பஞ்சமர்களுக்கு இடம் இல்லை. இப்படி இருந்த காலகட்டம். இதுதான் தமிழ்நாடு. சுயமரியாதை இயக்கம் பிறப்பதற்கு முன்னால் பெரியாருடைய மகத்துவமான தொண்டு உருவாவதற்கு முன்னால் சென்னை நகரத்திலே இருந்த நிலை. இன்னமும் இந்த நாட்டிலே பல இடங்களில் இரட்டை குவளைகள் இருக்கிறதே என்பதை எண்ணும்பொழுது நமக்கு உறுத்தல்களாக இருக்கின்றன.
பேதத்தை ஒழிக்கப் போராடிக் கொண்டிருக்கின்றோம்
அதையே உடைத்து நொறுக்க வேண்டும். இன்னமும் சுடுகாட்டில் கூட, கல்லறைகளில் கூட பேதம் இருக்கிறது. ஒழிக்கப்பட வேண்டும் என்று இன்றைக்குப் போராடிக் கொண்டிருக்கின்றோம். ஒரு நூற்றாண்டுக்கு முன்னாலே இருந்த நிலை இது இன்றைக்கு இப்படி ஒரு அறிக்கையை வெளியிட முடியுமா? பஞ்சமன் என்று சொல்லி இப்படி ஒரு துண்டறிக்கை அடித்தாலே அடித்தவனும் சரி, இதை விநியோகித்தவனும் சரி, அவன் குற்றவாளியாக கருதப்பட்டு கூண்டுக்குள்ளே சிறைச் சாலைக்குள்ளே தள்ளப்படக் கூடிய சூழ்நிலை ஏற்படும்.
சுயமரியாதை இயக்கம் செய்த புரட்சி
தாழ்ந்த ஜாதிக்காரன் என்று சொன்னாலே மிகப் பெரிய குற்றம் என்று ஆக்கப்பட்டிருக்கின்றது. தாழ்ந்த ஜாதிக்காரன் என்பது எப்படி வந்தது? இது என்ன வரம் கொடுத்து வந்ததா? அல்லது திடீரென்று சத்திய சாயிபாபா கையைத் தூக்கினால் பொத்தென்று விழுந்தது என்று ஏதாவது மாய மந்திரத்தில் வரவழைத்தது போன்று வந்ததா என்றால் இல்லை.
சுயமரியாதை இயக்கம் செய்த மகத்தான புரட்சிகளிலே தலையாய புரட்சி. அதுமட்டுமல்ல, நண்பர்களே, நீங்கள் சுருக்கமாகத் தெரிந்துகொள்ள வேண்டுமானால், இங்கே ஒரு சிறிய நூல் கிடைக்கும். பெரிய நூல் என்றால் பலர் படிப்ப தில்லை. படிப்பதற்குக் கூட கொஞ்சம் சோம்பல். அதற்காக உங்களுக்குத் தெரியுமா? என்று நாங்கள் வெளியிட்டிருக்கின்ற ஒரு சிறிய நூலிலே பல்வேறு சூழ் நிலைகளை எடுத்துக் காட்டியிருக்கின்றோம். இவைகளை நீங்கள் படிக்கவேண்டும். தெரிந்துகொள்ள வேண்டும். நாடகக் கொட்டைக்குள் போகக் கூடிய வாய்ப்பு மட்டும் கிடைக்கவில்லை என்று எண்ண வேண்டாம்.
பொருளாதாரமா? சமுதாயமா?
சுயமரியாதை இயக்கத்தினுடைய தாக்கம் ஏற்படுவதற்கு முன்னால 1935லே இன்றைக்கு ஏறத்தாழ 73 ஆண்டுகளுக்கு முன்னாலே என்ன சூழல் என்று சொன்னால் தமிழ் நாட்டிலே பேருந்துகளில் பஞ்சமர்களுக்கு இடமில்லை. பேருந்துகளில் பஞ்சமர்கள் ஏறக்கூடாது.
பொருளாதாரமா? சமுதாயமா? என்று கேட்பதற்கு சுலபமான விடை பொருளாதார மாற்றம் ஏற்பட்டால் எல்லாம் சரியாகப் போய்விடும் என்று ரொம்ப நாள் தவறாகச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். அவனிடம் காசு இருக்கிறது. ஆனால், அவனுக்கு காசு கொடுக்கக் கூடிய கட்டணம் கொடுக்கக் கூடிய தகுதி இருந்தாலும் அவனுக்கு இடமில்லை. ஜாதியினாலே அவன் கீழ்ஜாதி, அதற்கு ஏதாவது அடை யாளம் உண்டா? ஒன்றும் கிடையாது. ஜாதி என்பது ஒரு கற்பனை. அந்த கற்பனையை மனதிலே ஏற்றி ஏற்றி மிகப் பெரிய அளவுக்கு ஒரு மோசமான சூழ்நிலையை ஏற்படுத்தி விட்டார்கள்.
பேருந்தில் பஞ்சமர்களுக்கு இடமில்லை
பேருந்துகளுக்குரிய டிக்கெட்களிலும் பஞ்சமர்களுக்கு இடம் இல்லை என்று அச்சிட்டிருந்தார்கள். இதை மாற்றிய பெருமை தந்தை பெரியார் அவர்களுடைய கொள்கையிலே ஈடுபாடு கொண்ட சுயமரியாதை இயக்கத்திற்கு நிறுவனத் தலைவராக தந்தை பெரியார் அவர்கள் இருந்தாலும் டபிள்யூ பி.ஏ., சவுந்தர பாண்டியன் அவர்களை சுயமரியாதை இயக்கத்தினுடைய தலைவராக ஆக்கினார் பெரியார். சென்னையிலே பாண்டி பஜார் என்று அழைக்கப்பட்டு வந்தது. நம்முடைய முதல்வர் கலைஞர் அவர்கள் சவுந்திரபாண்டியன் அங்காடி என்று இப்பொழுது பெயர் வைத்திருக்கின்றார் (பலத்த கைதட்டல்). யாரோ பாண்டி என்று நினைக்கக்கூடிய ஒருவர்அல்ல என்று அண்மையிலே அந்த மறுமலர்ச்சியை நமது முதல்வர் அவர்கள் செய்திருக்கின்றார்கள்.
பேருந்துகளிலே பஞ்சமர்கள் ஏறக்கூடாது என்பதை டபிள்யூ பி.ஏ. சவுந்திரபாண்டியன்தான் அவர்கள் அதை ஒழித்தார்கள். சிறு சிறு நூல்களிலே இந்த இருக்கின்றன.
பல வகையில் உரிமை இல்லை
தெருக்களிலே நடக்க உரிமை இல்லை. படிக்க உரிமை இல்லை. ஒருவரைப் பார்க்க உரிமையில்லை. வாழ உரிமை இல்லை என்றிருந்த இடத்திலே சமுதாயத்தை மாற்றியமைத்த பெருமை தந்தை பெரியார் அவர்களையே சாரும். (கைதட்டல்).
------------------------ சென்னை பல்கலைக் கழகத்தில் ``தமிழக வரலாறும் சுயமரியாதை இயக்கமும் என்ற தலைப்பில் சிறப்புச் சொற்பொழிவு 17.4.2008 அன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி அவர்கள் கலந்து கொண்டு ஆற்றிய சிறப்புரை : ----- "விடுதலை" 22-4-2008
Search This Blog
30.4.08
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment