Search This Blog

20.4.08

பெரியார் பார்வையில் உடை-சாயல்-மாற்றம்

உடை-சாயல்-மாற்றம்


ஒரு நாட்டிற்கும் இருக்கும் பலவிதமான வேற்றுமைகளை ஒழித்து ஒரு சமூகமாக்க வேண்டுமானால் முதலில் சாயலுக்கும், பிரித்துக் காட்டுவதற்கும் ஆதாரமாயிருக்கும் உடையை ஒன்றுபடுத்த வேண்டியது முக்கியமானதாகும். இதை உணர்ந்துதான் வீரர் கமால்பாட்சா அவர்கள் எல்லோரும் ஒரே வித உடை அணிந்து ஒரு சாயலாகவே இருக்க வேண்டும் என்று உத்திரவிட்டார். அதன் மூலம் துருக்கி நாடு சிறியதாக இருந்தாலும் அது தன்னையும் ஒரு வல்லரசு என்று மதிக்கும்படி செய்து கொண்டது.

மேல் நாட்டவரும் நாமும்!


சாயல், உடை, பழக்க, உணர்ச்சி ஆகியவைகளில் மேனாட்டார் போல் கட்டுப்படுகின்ற வழக்கமோ கவலையோ நம்மவர்களுக்குச் சிறிதும் கிடையாது. ஆதலினாலும், அவ்வித வித்தியாசங்களே இந்த நாட்டின் பெருமைக்கும், இயற்கை வனப்பிற்கும் அணிகலனாய் இருப்பதாக மக்கள் கருதி வந்தாலும் இது இப்போது பிரஸ்தாபிக்கக் கூடாததாகக் கூட பலருக்குத் தோன்றலாம்.

நம் நாட்டிலே எப்பேர்பட்ட மாறுதலாயிருந்தாலும் அது எவ்வளவு சரியானதாகவும் தேவையானதாகவும் இருந்தாலும், பயனும் பொருளும் அற்ற பழைய வழக்கம் என்னும் பேய்க்கு. அதாவது மூடப்பயத்திற்கு ஆளாகி உடனே அதைக் குற்றம் சொல்லவும், உம் எண்ணம் கற்பிக்கவும், எதிர்ப்புப்பிரச்சாரம் செய்யவும் புறப்பட்டு விடுகிறார்கள். ஆதலால்தான் ஆயிரக் கணக்கான வருடங்களாக இந்நாட்டு மக்கள் மாத்திரம் வேற்றுமைப் பட்டு. பிறந்து, துவேஷங்கொண்டு அந்நியர்களுக்கு அடிமைகளாக இருக்க வேண்டியவர்களாகி விட்டார்கள் . இதை ஒரு வழியில் போக்க முயற்சிக்க வேண்டுமென்று கருதி பல மாறுதல்களுடன் உடை மாறுதல்களைப் பற்றித் துணிந்து தெரிவிக்கிறேன்.

ஆண்களும் பெண்களும் ஒரே மாதிரியாக லுங்கி கட்ட வேண்டும் ஜிப்பா போடவேண்டும். என் மனைவி நாகம்மையே கூட என் கருத்துப்படி ஒன்றரை மாதம் வரை லுங்கி கட்டிக்கொண்டு வெட்கப்பட்டுக் கொண்டு வீட்டை விட்டு வெளியே போகவில்லை.

உடைகளில் ஆண்-பெண் வித்தியாசம் கூடாது!


உடைகளில் ஆண்-பெண் வித்தியாசம் இருக்கக் கூடாது. சுலபத்தில் இது ஆணா, இது பெண்ணா என்று மற்றவர்கள் கண்டுபிடிக்க முடியாத மாதிரியில் உடைகள் அணியவேண்டும். பெற்றோர்கள் தங்கள் பெண்களை பெண் என்று அழையாமல் ஆண் என்று அழைக்கவேண்டும் . பெயர்களும் ஆண்கள் பெயரையே இடவேண்டும்.

பெண்களே! கூந்தலை கத்தரித்துக் கொள்ளுங்கள்!


பெண்கள் எல்லாம் ஆறடி ஏழடி என்று கூந்தலை வளர்த்துக் கொள்வது அநாகரிகம்; தேவையற்ற தொல்லையுமாகும். ஆண்களைப் போலவே பெண்கள் கிராப் வைத்துக்கொள்ளவேண்டும். ஆண்களைப் போலவே கிராப் வெட்டிக் கொள்ளும் பெண்களுக்கு
500 ரூபாய் பணம் கூட பரிசாகத் தருகிறேன் என்று சொல்லி யிருக்கிறேன். நடை-உடை சாயல்களில் ஆண்களைப் போலவே பெண்களும் மாற்றம் பெறுவது அவசியத்திலும் அவசியமாகும்- பெண்ணடிமை ஒழிவதற்கு ஒரு நல்ல வழியுமாகும்.


ஆடம்பரம்-அலங்காரம் கூடாது!


ஒரே மாதிரி உடை என்று சொல்லுகிறபோது அனாவசியமான ஆடம்பரத்தை ஒழிக்கவேண்டும் ஆண்களைப் போலவே தாங்களும் ஆகவேண்டுமே என்றில்லாமல், வீண் அலங்காரம் செய்து கொண்டு திரிவது பெண்கள் சமுதாயத்தின் கீழ்ப்போக்குக்குத்தான் பயன்படும் என்று வருந்துகிறேன்.

நம் நாட்டுப் பெண்களின் முன்னேற்றத்தை வேகமாகத் தடுத்து வருவது அவர்களது சீலை, நகை , துணி, அலங்கார வேஷங்கள் தான் என்பதை அவர்கள் உணர வேண்டும்.

டீசன்சி -சுத்தம்-கண்ணுக்கு வெறுப்பில்லாத ரம்மியம் வேண்டாம் என்று சொல்லுவதாக யாரும் கருதக்கூடாது அது அவசியம் வேண்டும். ஆனால் அது அதிக பணம்கொண்ட, மக்கள் கவனத்தை ஈர்க்கத்தக்க பேஷன் ; அலங்காரத்தால் அல்ல என்றும், சாதாரண குறைந்த தன்மையில் முடியும் என்றும் உணரவேண்டும்.

------------கவிஞர்.கலி.பூங்குன்றன் அவர்கள் தொகுத்த "பெரியார்-ஒரு வாழ்க்கை நெறி" என்ற நூலிலிருந்து -பக்கம் 7-9

0 comments: