Search This Blog

27.4.08

புரட்சிக் கவிஞரைச் சுற்றி ஒரு பொய் வலை

அண்மையில் பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் புரட்சி கவிஞர் பாரதிதாசனைப் பற்றி ஒரு கருத் தரங்கு நடைபெற்றுள்ளது. இக்கருத்தரங்கில் `பாரதிக்குப் பின் பாரதிதாசன் என்ற தலைப்பில் முனைவர் சிவத்தம்பி பேசிய சில செய்தி களைத் `தினமணி ஏடு (9.2.2008) வெளியிட்டுள்ளது. முனைவர் சிவத்தம்பி, இடது சாரிச் சிந்தனையாளர் என்பது குறிப்பிடத் தக்கது.

பொதுவாக இடதுசாரிச் சிந்தனையாளர்கள் பாரதிக்குப் பின் யாரையும் கவிஞர் எனக் கண்டு பாராட்ட மாட்டார்கள். பாரதியைப் போல வேறு எவரையும் அவர்கள் புகழ்ந்து பேசவும் மாட்டார்கள். பாரதி மார்க்சீயத்தின் மறுபதிப்பு என்பது அவர்கள் கருத்து. பொதுவுடைமையை யும் லெனினையும் பாரதி எப்படியெல்லாம் தரக் குறைவான சொற்களால் வசைமாரி பொழிந்துள்ளார் என்பதைப் பலரும் எடுத்துக் காட்டியுள்ளனர். சோவியத் ஒன்றியத்தில் ஏற்பட்ட புரட்சி `மாகாளி பராசக்தியின் கடைக்கண் பார்வையால் கிடைத்த பரிசு என்று கூறி யவர் பாரதியார்.

முனைவர் சிவத்தம்பி`

பாரதிக்குப் பின் பாரதிதாசன் என்ற தலைப்பில் உரையாற்றிய முனைவர் சிவத்தம்பி ``சமூக மாற்றத் துக்கான படைப்புகளில் பாரதிதாசனால் ஒரு கட்டத்துக்கு மேல் செல்ல முடியாதது ஏன் என்பது குறித்து மாணவர்கள் ஆய்வு மேற்கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தில் ஆராய்ச்சி இரு வகைப்படும். ஒன்று ஆய்ந்தாய்ந்து அந்த ஆய்வின் வாயிலாகக் கிடைக்கும் தரவுகளைக் கொண்டு முடிவுகளைச் சென்றடைவது. டாக்டர் கால்டுவெல் பேராசிரியர் சதாசிவ பண்டாரத்தார், தேவநேயப் பாவாணர், டாக்டர் வ. சுப. மாணிக்கம் முதலானோர் இவ்வகையினர்.

இரண்டாவது வகை ஆய்வு, முதலிலேயே முடிவு செய்து கொண்டு அந்த முடிவிற்கேற்றவாறு காரணங் களைத் தேடி அலைவது! (பேரா. வையாபுரியார் இதற்கு எ-டு). முனைவர் சிவத்தம்பி, பாரதிதாசன் ஒரு கட்டத் துக்கு மேல் செல்லவில்லை என்ற முடிவை முதலிலேயே எடுத்துக் கொண்டு விட்டுப் பின்னர், `ஏன் செல்லவில்லை என்பதைப்பற்றி மாணவர்கள் ஆராய வேண்டும் என்கிறார். அதாவது இந்தக் கோணத்தில்தான் ஆய்வு நிகழ்த்த வேண்டும் என்று சிவத்தம்பி ஆய்வாளர்களைக் கட்டாயப்படுத்துவது நேர்மையான அணுகுமுறையாகத் தோன்றவில்லை.

பொதுவாகத் திராவிடர் இயக்கப் படைப் பாளிகளை, இடதுசாரிகள் சரியாக மதிப்பீடு செய்வதில்லை என்பது வருந்தத்தக்க உண்மையாகும். அறிஞர் அண்ணா, கலைஞர், புரட்சிக் கவிஞர் முதலான திராவிடர் இயக்கப் படைப்பாளிகள் வெறும் படைப்பாளிகள் மட்டுமல்லர்; தமிழ்ச் சமூகத்தில் நிலவிய ஏற்றத் தாழ்வுகளை எடுத்துக் காட்டி அவற்றை ஒழிப்பதற்காகக் கலை இலக்கியத் தளங்களிலும் நேரடிப் போராட்டங்களிலும் ஈடு பட்டுச் சிறையில் துன்பம் அனுபவித்து வெளிவந்த போராளிகளும் ஆவர். ஆகவே இவர்கள் படைப் பாளிகள் மட்டுமல்லர்; போராளிகளும் ஆவர். தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, புரட்சிக் கவிஞர், புலவர் குழந்தை, கலைஞர் ஆகியோருடைய நூல்கள் கொடுங்கோல் அரசுகளால் தடை செய்யப் பட்டன. இந்தப் பெருமை இந்தியத் துணைக் கண்டத்தில் வேறு எந்த இயக்கத்தினர்க்கும் இல்லை என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். சமூக இழிவு களை ஒழித்துச் சமநிலை காண்பதற்காகத் திராவிடர் இயக்கப் படைப்பாளிகள் செய்த ஈகம் அளப்பரியதாகும்.

சமூகத்துக்கான முழுப் புரட்சி சிந்தனை

தந்தை பெரியார், எல்லைக் கோடுகளைக் கடந்து மானிடத்தை நேசித்த உலகளாவிய சிந்தனையாளர். மனித நேயத்தை மய்யப் பொருளாகக் கொண்ட அவருடைய சிந்தனைகள் - சமூக மாற்றத்திற்கான சிந்தனைகள் என்பதைவிடச் சமூகத்தின் முழுப் புரட்சிக்கான சிந்தனைகள் என்பதே பொருந்து வதாகும். பொதுவுடைமைச் சிந்தனைகளைத் தமிழ் மக்களுக்கு அறிமுகப்படுத்தியவர் தந்தை பெரியார். சோவியத் ஒன்றியம் விரும்பி அழைத்த தலைவர் பெரியார்! மாவீரன் லெனினோடு பணியாற்றிய இந்தியப் பொதுவுடைமைவாதிகள் பெரியார் காலில் விழுந்து வணங்கிவிட்டுப் போயிருக்கிறார்கள்.

இத்தகைய பெருமைகளுக்குரிய பெரியார் பெண் விடுதலை, தீண்டாமைக் கொடுமை இரண்டையும் ஒரு சேர வைத்துப் போராடி வெற்றி கண்டவர். கடவுள் மறுப்பு, கைம்பெண் மறுமணம், பெண் கல்வி, பெண்களுக்குச் சொத்துரிமை, மூடநம்பிக்கை ஒழிப்பு, சாதி ஒழிப்பு, வருணாசிரம முறை தகர்ப்பு, பார்ப்பனீய ஒழிப்பு - என்று பல்வேறு தளங்களில் நின்று பெரியார் போராடினார்; வெற்றி கண்டார்.



தந்தை பெரியார் வழியில் புரட்சிக் கவிஞர்


தந்தை பெரியாரின் கொள்கைகளை அப்படியே கவிதையில் வடித்தவர் புரட்சிக் கவிஞர்.

`கோரிக்கையற்றுக் கிடக்குதண்ணே இங்கு
வேரில் பழுத்த பலா! - மிகக்
கொடிய தென்றெண்ணிடப் பட்டதண்ணே
குளிர்வடிகின்ற வட்ட நிலா!


என்று கைம்பெண்களுக்காகக் குரல் கொடுத்தவர் புரட்சிக் கவிஞர். கைம்பெண் மறுமணத்தை வலியுறுத்திப் பாடிய முதற்கவிஞர் பாரதிதாசனேயாவார்.

இந்தியத் துணைக் கண்டத்தில் குடும்ப நலம்பற்றி யாரும் சிந்திக்காத தொன்மைக் காலத்திலேயே அதுபற்றிச் சிந்தித்தவர் தந்தை பெரியார். குடும்பக் கட்டுப்பாடு ஆண் - பெண் இருபாலார்க்கும் பொது வானது. பெண்களைவிட ஆண்கள் செய்து கொள் வது எளியது; நல்லது. மேலும் குடும்பக் கட்டுப்பாடு என்பது மக்கள் தொகைப் பெருக்கத்தைக் கட்டுப் படுத்துவதற்காகவோ, உணவுப் பற்றாக் குறைக் காகவோ அல்ல; பெண்ணின் உடல் நலம் பேணப் படுவதற்காகவும், பெண் விடுதலை பெறுவதற்காக வும் சமுதாயப் பொதுப் பணிகளில் பெண்கள் ஈடுபட வேண்டும் என்பதற்காகவும் தந்தை பெரியார் குடும்ப நலத்தை வலியுறுத்தி ஊர்தோறும் சென்று மக்களை நல்வழிப்படுத்தி வந்தார்.

``காதலுக்கு வழி வைத்துக் கருப்பாதை சாத்தக்
கதவொன்று கண்டறிவோம் இதிலென்ன குற்றம்?


என்று புரட்சிக் கவிஞர். தந்தை பெரியாரின் கருத்துக் களைக் கவிதைகளாக்கினார். இந்தியாவில் முதன் முதலாகக் குடும்ப நலம் பற்றிப் பாடிய கவிஞர் பாரதி தாசனே யாவார்!
புரட்சிக் கவிஞரின் `குடும்ப விளக்கு!


குடும்ப விளக்கில் பாரதிதாசன் படைத்துள்ள பெண், கல்வியறிவு பெற்றவள்; தன் குழந்தைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுக் கும் நல்ல ஆசிரியர்; தன் வாழ்வினையர் மீதும் குடும் பத்தின் மூத்த உறுப்பினர் மீதும் அன்பைப் பொழியும் அன்புப் பெட்டகம்! `இந்தப் பெண் பாரதி கண்ட புது மைப் பெண்ணைப் போல இல்லை; சமூக மாற்றம் பற் றிய சிந்தனை, குடும்ப விளக் குப் பெண்ணிடம் இல்லை என்கிறார் சிவத்தம்பி. காலங் காலமாகக் கல்வியறிவின்றிக் கிடந்த குடும்பப் பெண்களிடம் கல்வியறிவு மிக்க ஒரு சிறந்த பெண் மணியைப் பாரதிதாசன் படைத்துக் காட்டியிருக்கிறார். ஈராயிரம் ஆண்டுகளாக இருண்டு கிடந்த வீடு களில் ஒரு பெண் படித்தவளாகப் படைக் கப்பட்டிருப்பது பார்ப்பனர்க்குப் பிடிக்காமற் போகலாம்; சிவத்தம்பிக்குமா அப்படி?

தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் தெரசா மகளிர் பல்கலைக் கழகத்தில் உரையாற்றும்போது குறிப் பிட்டதைப்போலப் பாரதி கண்டது புதுமைப் பெண்ணாக இருக்கலாம்; ஆனால் தந்தை பெரியார் கண்டது புரட்சிப் பெண்! சமூக அவலங்களைக், கொடுமைகளை எதிர்த்து வீதிக்கு வந்து போராடும் நெஞ்சுரம் கொண்ட பெண்கள் கூட்டத்தை உருவாக் கியவர் தந்தை பெரியார்! அத்தகைய புரட்சிப் பெண்களைத் தாம் புரட்சிக் கவிஞர் தம் கவிதை களில் வைத்துப் போற்றி மகிழ்கிறார்!
தமிழர்களின் விருந்தோம்பல் பண்பு!

தமிழ் மக்களின் மிக உயர்ந்த பண்பு விரும் தோம்பல்; மானிடப் பற்றும் மனித நேயச் சிந்தனை யும் இதில் அடங் கிக் கிடக்கின்றன. விருந்தளிக்கும் செயலில் சிறந்து விளங்கும் குடும்ப விளக்குத் தலைவியை, மனித நேயச் சிந்தனையாளராகப் பார்க்க மறுக்கும் பார்வை பழுதுபட்ட பார்வை!

``அய்தீக ஆதர்ஷிக்கப்பட்ட (இந்தச் சமற்கிருதச் சொற்றொட ருக்கு நேர் எதிரானவர் பாரதிதாசன் என்பதைச் சிவத்தம்பி ஏன் புரிந்து கொள்ள வில்லை) பாரம்பரிய வழியானவராகவே பாரதிதாசன் காணப்படு கிறார் என்று சிவத்தம்பி குறிப்பிடுவ திலிருந்து அவர் எந்த இடத்தில் நின்று திறனாய்கிறார் என்பது விளங்கும். சிவத்தம்பி தமிழக வரலாற்றையும் தமிழ்ச் சமூக வரலாற்றையும் நன்கு கற்க வேண்டும். ஒரு நடுநிலைப் பார்வையோடு அருள்கூர்ந்து பாரதி தாசனைப் பாருங்கள்.

புரட்சிக் கவிஞரின் கோட்பாடுகள் தந்தை பெரியாரிட மிருந்து பெற்றுக் கொள்ளப்பட்டவை. `சமூக மாற்றத் துக்கான படைப்புகளில் பாரதிதாசனால் ஒரு கட்டத்துக்குமேல் செல்ல முடியவில்லை என்பதற்குப் பதிலாகப் `பெரியாரால் செல்ல முடிய வில்லை என்று உங்களால் சொல்ல முடியுமா? சொல்லிப் பாருங்களேன்!

பாரதிதாசன் ஒரு மட்டத்துக்கு மேல் செல்ல வில்லை என்று சிவத்தம்பி கூறுவது ஒரு சார்பு டையது. `சுருட்டுகின்றார் தம்கையில் கிடைத்த வற்றைச் சொத்தெல் லாம் தமக்கென்று சொல்வார் தம்மை வெருட்டுவது பகுத் தறிவே...

என்றும் ``எல்லார்க்கும் எல்லாமும் என்றிருப்ப தான இடம் நோக்கி நடக் கின்றது இந்த வையம் என்றும் பாடு கின்ற புரட்சிக் கவிஞரைப் பற்றியா இவ்வாறு கூறுவது? பாரதி அடிப்படையில் ஓர் இந்துத்துவவாதி; ஆரியர் களுக்காகப் பரிந்துபேசும் ஆரியக் கவிஞர்.

`பிச்சை வாழ்வுகந்து பிறனுடை ஆட்சியில்
அச்சமுற்றிருப்போன் ஆரியன் அல்லன்

என்று வெளிப்படையாகவே பாடியவர். இந்துத் துவப் பார்வை யோடுதான் சோவியத் ஒன்றியத்தை யும் பொதுவுடை மைக் கொள்கையையும் பார்த்தவர் பாரதி. ஆனால் பாரதி தாசன் அப்படியா?

``பொதுவுடைமைக் கொள்கை திசையெட்டும் சேர்ப்போம்;
புனிதமோடு அதை எங்கள் உயி ரென்று காப்போம்! என்று பாடியவராயிற்றே பாரதிதாசன்!

``பாரடா உனது மானிடப் பரப்பை;
``மக்களை ஒன்று சேர்!
மக்கள் கடலில் சங்கமமாகு

என்றெல்லாம் பாடிய புரட்சிக் கவிஞரை ஒரு கட்டத்துக்கு மேல் செல்லவில்லை என்று கூறுவது வேடிக்கையாக இருக் கிறது. சிவத்தம்பி, பாரதிதாசனைச் சரியாகப் படிக்க வில்லை என்றே தோன்றுகிறது. ஆனால் ஒன்று மட்டும் உண்மை இத் தகைய திறனாய்வுகளால் புரட்சிக் கவிஞரின் புகழை எவராலும் கெடுக்க முடியாது.

பாரதிதாசனைப்பற்றிய ஓர் எதிர்மறைச் சிந்தனை, பாரதிதாசன் பல்கலைக் கழகத்திலேயே, பாரதி தாசன் உயராய்வு மய்யத்திலேயே ஒலித்திருப்பது வருந்துவதற்குரியது! பாரதிதாசன் ஒரு புரட்சிக் கவிஞர்! மனிதநேயர்! தமிழ் இனத்தின் மேம் பாட்டிற்காக அல்லும் பகலும் பாடுபட்ட ஒரு மாபெருங் கவிஞன்! அவன் காலத்தை வென்று வாழும் கவிஞன்! காரிரு ளால் அவனை மறைத்துவிட முடியாது!
நெல்வயலில் ரோசா கூட்டங்களைதான்
பாரதிதாசன் புகழைப் பரப்பவும் நிலைநிறுத்தவும் தோற்றுவிக்கப்பட்ட துறைகளிலேயே அவருக்கு எதிரான கருத்துரைகள் முளைவிடத் தொடங்கி விட்டன. இவை களையப்பட வேண் டியவை! நெல்வயலில் ரோசாச் செடிகள் கூடக் களைகள் தானே! பாரதிதாசனைப் போல ஒரு புரட்சிக் கவிஞர் அவருக்கு முன்னும் இல்லை; பின்னும் இல்லை என்னும் தந்தை பெரியாரின் மதிப்பீட்டைச் சிவத்தம்பியைப் போன் றோர் ஊன்றிக் கற்க வேண்டும். பத்தாயிரம் ஆண்டுத் தமிழ் இலக் கிய வரலாறு தந்தை பெரியாரின் கூற்றில் அடங்கி இருக்கிறது.


-----------டாக்டர் ப. காளிமுத்து எம்.ஏ; பி.எச்.டி., -- 26-4-2008 "விடுதலை" ஞாயிறு மலரிலிருந்து.

2 comments:

ஏகலைவன் said...

நல்லதொரு பதிவு. பேரா.சிவதம்பி போன்றோர் பாரதியைப் புகழ்வதுவும், அதற்கு எதிர்மறையாக பாரதிதாசனை இகழ்வதும் ஏன் என்று சற்று கவனித்து அறியவேண்டுமென்றே கருதுகிறேன். பார்ப்பன/இந்துவெறியன் பாரதியின் மீதான் குற்றச்சாட்டுக்களை மறுப்பதற்கு வக்கற்ற இவர்கள், பாரதிதாசனைப் புறம்பேசுவது மிகவும் கண்டிக்கத்தக்கதுதான்.

"இந்த அறிஞர்கள் பாரதியைத் தாமாக உணர்ந்து செயலாற்றுவதன் வெளிப்பாடுதான் அது" என்கிறார் தோழர்.மருதையன். தம்முடைய "பாரதி'ய ஜனதா பார்ட்டி" கட்டுரைகளின் மூலம் பல ஆனித்தரமான வாதங்களை பாரதியின் பச்சையான பார்ப்பன சார்பு நிலைக்கு எதிரே நிறுத்தியுமிருக்கிறார் வே.மதிமாறன்.

அதற்கு இன்று வரை பதில் சொல்லத் திராணியற்றவர்களாகத்தான் இந்த மேன்மைதங்கிய பேராசிரிய பெருமக்கள் இருக்கிறார்கள். பாரதியைக் காப்பாற்றவே இவர்கள் பாரதிதாசனைத் தூற்றுகிறார்கள்.

பார்ப்பனீயத்தை அதன் வேருக்கு அமிலம் பாய்ச்சும் கவிதைப் படைப்புகளைத் தந்த புரட்சிக் கவிஞரை அவமதிப்பதன் மூலமாகத்தான், பார்ப்பனிய சார்புடைய பாரதியை உயர்த்திப் பிடிக்கமுடியும் என்பது இவர்களின் கணக்கு போலும்.

இப்பணியை பேரா.சிவத்தம்பி தொடங்கி இங்கே இருக்கிற எஸ்.வி.ராசதுரை வரை அனைவரது பஜனையும் சமீபகாலமாக இப்படியேதான் ஒலிக்கிறது.

அதிலும் எஸ்.வி.ராசதுரையின் பங்கு இதில் சற்று அதிகம் என்றே தோன்றுகிறது. 'புதுவிசை' என்ற இதழில் அவர் பாரதிதாசனை, பெண் பித்தன், பெண்ணுடல் சார்ந்த வக்கிர எழுத்தாளன் என்கிற அளவுக்கு மிகவும் இழிவுபடுத்தி எழுதியிருக்கிறார்.



பார்ப்பன பயங்கரவாதம் தலைதூக்கி ஆட்டம்போட்டுக் கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில் இவர்களின் இத்தகைய செயல்பாடு பார்ப்பன கைக்கூலித்தனத்தையே நமக்கு எடுத்துக்க்காட்டுகிறது.

இதற்குத் தொடர்புடைய சமீபத்தில் பதியப்பட்ட பதிவுக்கள்:
http://yekalaivan.blogspot.com/2008_04_02_archive.html

http://kedayam.blogspot.com/2008/03/blog-post_31.html

http://poar-parai.blogspot.com/2008/04/blog-post_14.html

மற்றும் http://mathimaran.wordpress.com/


தோழமையுடன்,
ஏகலைவன்.

தமிழ் ஓவியா said...

நன்றி தோழரே. தொடர்ந்து விமர்சித்து ஊக்கப்படுத்துங்கள்.ஆலோசனைகளையும் தெரிவிக்க வேண்டுகிறேன்.