உச்சநீதிமன்றம் நேற்று (10.4.2008) அளித்த தீர்ப்பு வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது என்றாலும், இந்திய அரசமைப்புச் சட்டத்தில் எந்த இடத்திலும் சொல்லப்படாத பொருளாதார அளவு கோலைத் திணித்ததுமூலம் பிற்படுத்தப்பட்ட மக்களின் வாழ்வில் ஒரு இடியைப் போட்டுவிட்டது என்றே சொல்லவேண்டும்.
அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக ஒரு சட்டம் இயற்றப்பட்டுள்ளதா இல்லையா? என்று தீர்மானிப்பதுதான் நீதிபதிகளின் பணியே தவிர, அரசமைப்புச் சட்டத்தின் எல் லைக்கு வெளியே குதித்து, தம் மனப்போக்கில் ஆணைகளைப் பிறப்பிப்பது மிகவும் ஆபத்தானதாகும். இது வேலியே பயிரை மேயும் செயலாகும்.
இட ஒதுக்கீடு என்பது தாழ்த்தப்பட்டோருக்கும், பிற்படுத்தப்பட் டோருக்கும் தனித்தனியே அளவு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அளவுகோல் என்று வரும்பொழுது இரு தரப்பினருக்கும் ஒன்றுபோலவே அமையக்கூடியது.
ஆனால், இட ஒதுக்கீட்டில் தாழ்த்தப்பட்டோருக்கு ஒரு அளவு கோலும், பிற்படுத்தப்பட்டோருக்கு இன்னொரு அளவுகோலும் வைத்திருப்பது அசல் பிரித்தாளும் தன்மையுடையதாகும்.
பிற்படுத்தப்பட்ட சமூகத்தில் உள்ள கிரீமிலேயர் என்ற வசதி படைத்தவர்களுக்கு இட ஒதுக்கீடு கிடையாது என்பது - மேம்போக்காகப் பார்ப்பவர்களுக்கு நியாயம்போல இடமாறு தோற்றப் பிழையாகத் தோன்றலாம்.
ஆண்டாண்டுகாலமாகக் கல்வியையும், உத்தியோக வாய்ப்புகளையும் தங்கள் வசமே வைத்துக்கொண்டுள்ள ஆதிக்க ஜாதியினருடன் எதிர்த்துப் போட்டியிடக் கூடிய பகுதியினரை கிரீமிலேயர் என்று கூறி வெளியே தள்ளி விடுவதன்மூலம் ஏற்கெனவே அத்துறைகளில் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்தவர்களுக்குப் பேருதவி செய்ததாக ஆகாதா என்பதை மெத்த படித்த நீதிபதிகள் சிந்திக்காமல் போனது வருந்தத்தக்கதே!
அவர்கள் சொல்லும் அந்த விவாதத்தையே எடுத்துக்கொள் வோம். மத்திய அரசு உயர்கல்வி நிறுவனங்களான அய்.அய்.டி., அய்.அய்.எம்., எய்ம்ஸ் முதலிய ஆகிய நிறுவனங் களில் சேர்ந்து படிக்க ஆகும் செலவு என்ன?
எடுத்துக்காட்டாக அகமதாபாத் அய்.அய்.எம். நிறுவனத்தில் சேர்ந்து படிக்கும் ஒரு மாணவனுக்கு ஆகக்கூடிய செலவு 11 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்.
பிற்படுத்தப்பட்டவர்களில் ஏழை, எளிய மக்களுக்காகத்தான் இந்தக் கிரீமிலேயர் நீக்கம் என்பது உண்மையானால், பிற் படுத்தப்பட்ட மக்களில் உள்ள ஏழை, எளிய மக்கள் 11 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கொடுத்து அய்.அய்.எம். நிறுவனத்தில் சேர்ந்து படிக்க முடியுமா? என்ற பொது அறிவு கேள்விக்கு நீதிபதி கள் தரப்பில் என்ன நியாயமான பதிலை வைத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை.
பொருளாதார அளவுகோலைக் கொண்டே பொருளாதாரத்தில் வசதி படைத்தவர்களையும் முட்டித்தள்ளி, பொருளாதாரத்தில் ஏழை, எளிய பகுதியைச் சேர்ந்தவர்களையும் உள்ளே புக முடியாமல் செய்த - ஒரே கல்லால் இரண்டு காய்களை வீழ்த்திய ராஜதந்திரத்தை உச்சநீதிமன்றம் செய்திருக்கிறது.
மண்டல் குழுப் பரிந்துரைகளில் ஒரு பகுதியாகிய பிற்படுத்தப் பட்டவர்களுக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீட்டுக்கான ஆணை யினை சமூகநீதிக் காவலர் மாண்புமிகு வி.பி. சிங் அவர்கள் பிறப்பித்தார். அதனை எதிர்த்துத் தொடுக்கப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் (ஒன்பது நீதிபதிகளைக் கொண்ட ஆயம்) கிரீமி லேயர் என்ற பொருளாதார அளவுகோலைக் கொண்டு வந்து திணித்தது. அதன் விளைவு என்ன தெரியுமா?
மத்திய அரசுத் துறையில் 12.5 விழுக்காடு அளவுக்கு இடங்களைப் பெற்ற பிற்படுத்தப்பட்ட மக்களின் எண்ணிக்கை பத்து ஆண்டுகளில் 5.3 விழுக்காடாக வீழ்ச்சி அடைந்துவிட்டது.
இந்த அனுபவத்துக்குப் பிறகும்கூட, உயர்நிலைக் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோரின் இட ஒதுக்கீட்டிலிருந்து கிரீமிலேயர்களை வெளியேற்றுவது எதிர் விளைவைத்தான் ஏற்படுத்தும் என்பதில் அய்யமுண்டோ?
பிற்படுத்தப்பட்டோருக்கு இந்திய அரசமைப்புச் சட்டப்படி இட ஒதுக்கீடு பெற உரிமை உண்டு என்ற வகையில், உச்சநீதிமன் றம் நடந்துகொண்டது என்பதிலே ஒரு வகையில் மகிழ்ச்சி என்றாலும், இன்னொரு வகையிலே அதனைத் தட்டிப் பறிப்பது என்பது மகிழ்ச்சிக்குரியதல்ல என்று தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் தெரிவித்திருக்கும் கருத்தின் அடிப்படையில், இந்தியா முழுமையும் உள்ள சமூகநீதிச் சக்திகள் அணிதிரண்டு போராடுவது அவசியமாகும்.
சமூகநீதிக்காக இன்னும் எத்தனை எத்தனைக் களங் களைச் சந்திக்க வேண்டுமோ தெரியவில்லை. என்றாலும், போராடுவோம் - வெற்றி பெறுவோம் - வெற்றி கிட்டும்வரை போராடுவோம்!
------- "விடுதலை" தலையங்கம் 11-4-2008
Search This Blog
12.4.08
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment