இன்று அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 118 ஆம் ஆண்டு பிறந்த நாள் (1891). உலகின் மிகப்பெரிய அறிவாளி யான அண்ணல் அவர்களின் பெருமைபற்றி புதிதாகச் சாற்றுவதற்கு ஒன்றுமில்லை. அதேநேரத்தில், காலத்தால் அழிக்கப்பட முடியாத அவர்தம் சிந்தனைகளை மக்கள் மயமாக்குவதுதான் நம்முன் உள்ள முக்கிய கடமையாகும்.
குறிப்பாக, சமூகநீதிப் பிரச்சினை - நீதிமன்றங்களின் போக்குகள் குறித்து அவர் கூறிச் சென்றுள்ள கருத்துகள் இன்றைக்கும் முழுமையான அளவில் பொருந்துகின்றன என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும்.
ஊருக்கு இளைத்தவர்கள் ஒடுக்கப்பட்ட மக்கள் - குறிப்பாக பிற்படுத்தப்பட்ட மக்கள் என்கிற தோரணையில் நீதிமன்றத் தில் நாற்காலிகளில் உட்கார்ந்து இருப்பவர்கள் ஆளுக்கு ஆள், பிற்படுத்தப்பட்டவர்களுக்கான - சட்ட ரீதியான - நியாய ரீதியான இட ஒதுக்கீடு குறித்து மனம்போன போக்கில் விமர் சனம் செய்திருப்பதைச் சற்றே எண்ணிப் பார்க்கவேண்டும்.
பிற்படுத்தப்பட்டவர்களில் பிளஸ் டூ படித்திருந்தாலே அவர் கல்வியில் முன்னேறிய சமுதாயம் என்று ஒரு நீதிபதி எழுதுகிறார்.
இல்லை, இல்லை, பட்டம் பெற்றிருந்தால் அவர் கல்வியில் முன்னேறிவிட்டவர் ஆகிவிடுகிறார் என்று இரண்டு நீதிபதிகள் எழுதியுள்ளனர்.
மக்கள் தொகையில் 52 விழுக்காடு (மண்டல் குழுப் பரிந்துரை அறிக்கையில் கூறியுள்ளபடி) உள்ள பிற்படுத்தப் பட்ட மக்களுக்கு வெறும் 27 விழுக்காடுதான் முதன்முதலாக மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் அளிக்கப்படு வதற்கான சட்டம் இயற்றப்பட்டுள்ள நிலையைச் சற்றும் காதில் வாங்கிக் கொள்ளாமலும், கவனத்தில் கொள்ளாமலும் படித்தவர் ஏட்டைக் கெடுத்தார் என்கிற பாணியில் நீதிபதிகள் எழுதலாமா?
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் சமூகநீதி என்பது உறுதிப் படுத்தப்பட்டுள்ளதே - இந்த நிலையில், சமூகநீதிபற்றிய உரத்த சிந்தனை உச்சநீதிமன்றத்துக்கு இருக்கவேண்டும் என்று குடிமக்கள் எதிர்பார்ப்பதில் நியாயம் உண்டு.
சென்னை - மாநிலத்தில் 1928 ஆம் ஆண்டுமுதல் அமலில் இருந்த இட ஒதுக்கீட்டை, இந்தியாவின் புதிய அரசமைப்புச் சட்டத்தைக் காட்டி, செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் தீர்ப்பு அளித்த போது, தமிழ் மண்ணை எரிமலையாக்கியவர் தந்தை பெரி யார். மாநாடு, ஊர்வலம், புறக்கணிப்பு என்று நாடே கொந் தளித்து எழுந்தது. அதன் காரணமாக, இந்திய அரசமைப்புச் சட்டத்தில் முதல் திருத்தம் கொண்டு வரப்பட்டது.
அதுபற்றி நாடாளுமன்றத்தில் விவாதப் போர் நடந்தது. அன்றைய சட்ட அமைச்சர் மாண்புமிகு டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அவர்கள் வெளிப்படுத்திய கருத்துகள் சர்ச்சைப் புயலினைத் தட்டி எழுப்பியதுண்டு.
நீதிபதிகளின் தீர்ப்பு திருப்தியளிப்பதாக இல்லை. சட்டத்தின் விதிகளுக்கு ஒத்ததாக பொருத்தமானதாக அத்தீர்ப்பு அமையவில்லை. தீர்ப்புக்குக் கட்டுப்பட்டு நடக்கக் கடமைப் பட்டுள்ளேன். ஆனால், அதை மதிக்கக் கடமைப்பட்டவ னல்ல என்று அழுத்தந்திருத்தமாக நாடாளுமன்றத்தில் சட்ட அமைச்சர் என்ற நிலையில் பேசியது சாதாரண மானதா? உறுப்பினர்களில் பலர் ஒழுங்குப் பிரச்சினையை எழுப்பினார்கள்.
அவைத் தலைவர்கூட சட்ட அமைச்சர் அம்பேத்கரை நோக்கி, நீதிபதிகள் குறித்து அத்தகைய சொற்களைப் பயன்படுத்தவேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். ஆனால், அண்ணல் அம்பேத்கர் அவற்றை சற்றும் பொருட் படுத்தவில்லை. தன் சிந்தனையின்படியே, சொற்களைப் பயன்படுத்தினார். நாடாளுமன்றக் குறிப்பேட்டில் அவை என்றும் நிலைத்து நிற்கின்றன.
1951- உச்சநீதிமன்றத் தீர்ப்பும், சரி, 2008. உச்சநீதி மன்றத் தீர்ப்பும் சரி, கிட்டத்தட்ட தொப்புட்கொடி உறவு கொண்டவைகளாகத்தான் இருக்கின்றன.
உச்சநீதிமன்றத்தின் தற்போதைய தீர்ப்பு சட்ட விரோதம் என்று தமிழர் தலைவர் தெரிவித்துள்ள கருத்தும், அன்று அண்ணல் அம்பேத்கர் அவர்கள் நாடாளுமன்றத்தில் தெரிவித்த கருத்தும் ஒரு நாணயத்தின் இருபக்கங்களே!
அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளில், அவர்தம் புரட்சிகரச் சிந்தனைகள் வெடித்துக் கிளம்பட்டும். வாழ்க அண்ணல் அம்பேத்கர்!
----------- "விடுதலை" தலையங்கம்-14-4-2008
Search This Blog
15.4.08
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment