Search This Blog

12.4.08

இந்து மதத்தால் யாருமே வாழ முடியாது; அந்த மதமே ஓர் அழிவு மதம்

இந்த நாட்டில் நிலவும் இத்தகைய சூழல், புத்துணர்வற்ற நிலையை இனி ஆயிரம் ஆண்டு காலத்திற்கு அளித்துவிடும். இந்தச் சூழல் நிலவும் வரை, நம்முடைய முன்னேற்றத்திற்கானப் புத்துணர்வு ஒருபோதும் கிடைக்காது. இந்த மதத்திலிருந்து கொண்டு நாம் இதை எதிர்கொள்ளவே முடியாது. மநுஸ்மிருதியில் சதுர் வர்ணம் இருக்கிறது. சதுர்வர்ண அமைப்பு முறை மனித இனத்தின் முன்னேற்றத்திற்கு மாபெரும் ஊறு விளைவிக்கக் கூடியது. சூத்திரர்கள் அனைத்து வகையான இழிவான பணிகளைத்தான் செய்ய வேண்டும் என்று மநுஸ்மிருதி கூறுகிறது. அவர்களுக்கு ஏன் கல்வி அளிக்கப்பட வேண்டும்? பார்ப்பனர்கள்தான் கல்வி கற்க வேண்டும். சத்ரியன் ஆயுதங்களை எடுக்க வேண்டும். வைசியர்கள் வணிகம் செய்ய வேண்டும். ஆனால், சூத்திரர்கள் தொண்டூழியம் செய்ய வேண்டும். இந்த அமைப்பு முறையை யார் அழித்தொழிப்பது? இந்த அமைப்பு முறையில், பார்ப்பனன், சத்ரியன், வைசியன் எல்லோருக்கும் ஏதோ ஒரு வகை பயன் இருக்கிறது. ஆனால், சூத்திரர்களுக்கு என்ன இருக்கிறது? இந்த மூன்று வர்ணத்தைத் தவிர, பிற சாதியினருக்குப் புத்துணர்வு எப்படி வரும்? சதுர்வர்ண முறை என்பது ஒரு வழக்கமல்ல. அதிலிருந்து தப்பித்துக் கொள்ளவே முடியாது, அதுதான் மதம்.

இந்து மதத்தில் சமத்துவம் இல்லை. நான் ஒரு முறை காந்தியை சந்தித்தபோது, அவர் சொன்னார், ‘நான் சதுர்வர்ணத்தை நம்புகிறேன்.’ நான் சொன்னேன்: உங்களைப் போன்ற ‘மகாத்மா’க்கள்தான் சதுர்வர்ணத்தை நம்புகிறார்கள். ஆனால், இந்த சதுர்வர்ணம் என்பது என்ன? சதுர்வர்ணம் என்பது மேல் அல்லது கீழ் என்று உள்ளது. அது எங்கு தொடங்கி எங்கு முடிகிறது? இந்தக் கேள்விக்கு காந்தி பதில் சொல்லவில்லை. அவர் என்ன பதில் சொல்ல முடியும்? நம்மை அழித்தவர்களும் இந்த மதத்தால் அழிக்கப்படுவார்கள். நான் தேவையில்லாமல் இந்து மதத்தைக் குற்றம் சொல்லவில்லை. இந்து மதத்தால் யாருமே வாழ முடியாது; அந்த மதமே ஓர் அழிவு மதம்.

இந்து மதத்தில் படிநிலைப்படுத்தப்பட்ட சாதி முறையில், மேலிருக்கும் வர்ணத்தைச் சார்ந்தவர்கள்தான் பயன் பெற்றார்கள். மற்றவர்களுக்கு என்ன பயன்? ஒரு பார்ப்பனப் பெண் குழந்தை பெற்றால், அவருடைய மனம் ஓர் உயர் நீதிமன்ற நீதிபதி பதவி எப்பொழுது காலியாகும் என்பது பற்றி சிந்திக்கிறது. ஆனால், இதற்கு நேர் மாறாக நம்முடைய துப்புரவுத் தொழிலாளர் பெண்மணி குழந்தை பெறும்போது, அரசாங்கத்தில் ஒரு துப்புரவுப் பணி எப்பொழுது காலியாகும் என்று நினைக்கிறார். இந்து மதத்தின் வர்ண அமைப்பு முறை தான் இத்தகைய விந்தையான சமூக அமைப்புக்கு காரணம். இதிலிருந்து என்ன வகையான மேம்பாட்டை நாம் காண முடியும்? பவுத்த மதத்தின் மூலமே நீங்கள் எதையும் சாதிக்க முடியும்.

பவுத்த மதத்தில் 75 சதவிகித பிக்குகள் பார்ப்பனர்களாக இருந்தார்கள். 25 சதவிகிதம் சூத்திரர்களும் மற்றவர்களும் இருந்தனர். ஆனால், புத்தர் சொன்னார் ‘பிக்குகளே! நீங்கள் பல்வேறு நாடுகளிலிருந்தும் பல்வேறு சாதிகளிலிருந்தும் வந்திருக்கிறீர்கள். அந்தந்தப் பகுதிகளில் ஓடும் ஆறுகள் தனித்தனியாகப் பெயரிட்டு அழைக்கப்பட்டாலும், அவை கடலில் சங்கமிக்கும்போது, தங்களின் அடையாளத்தை இழந்து விடுகின்றன. அவை ஒன்றாகக் கலந்து விடுகின்றன. பவுத்த சங்கம் கடலைப் போன்றது. இந்த சங்கத்தில் அனைவரும் சமம். எல்லாரும் கடலில் கலந்த பிறகு கங்கை நதி தண்ணீரையோ, மகாநதி தண்ணீரையோ தனியாக அடையாளப்படுத்திப் பார்க்க முடியாது. அதேபோல, நாம் பவுத்த சங்கத்தில் சேர்ந்த பிறகு நாம் நம்முடைய சாதிகளை இழந்து சமமாகிறோம்.’ இத்தகைய சமத்துவத்திற்கான கொள்கைப் பிரச்சாரத்தை மாமனிதர் புத்தர் மட்டுமே செய்தார்.

சிலர் என்னைக் கேட்கிறார்கள்: மதம் மாறுவதற்கு இவ்வளவு நாட்களாக நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? இது ஒரு முக்கியமான கேள்வி. ஒரு மதத்தை வலியுறுத்துவது அவ்வளவு எளிதான செயல் அல்ல. அது தனி ஒரு மனிதனின் பணியும் அல்ல. மதத்தைப் பற்றி சிந்திக்கும் யாரும் இதைப் புரிந்து கொள்ள முடியும். உலகில் யாரும் சுமக்காத அளவுக்கு நான் பாரத்தை சுமந்து கொண்டிருக்கிறேன். நான் நீண்ட நாட்கள் வாழ்ந்தால், நான் திட்டமிட்ட இந்தப் பணியை முடித்தே தீருவேன். ஒரு மகர் பவுத்தராக மாறினால் என்ன நடக்கும் என்று சிலர் கேட்கிறார்கள். நீங்கள் இவ்வாறு கேட்கக் கூடாது. அது ஆபத்தானது. உயர்ந்த வசதியான வகுப்பினருக்கு மதம் தேவையில்லாமல் இருக்கலாம். அவர்களுக்கு பெரிய பங்களாக்களும், அவர்களுக்கு வேலை செய்ய வேலையாட்களும், பணமும், சொத்தும், மரியாதையும் கிடைக்கும். இத்தகைய மனிதர்கள் மதத்தைப் பற்றி சிந்திக்க வேண்டியதில்லை. ஆனால், ஏழை மக்களுக்கு மதம் தேவையாக இருக்கிறது. ஒடுக்கப்பட்ட மக்களுக்கு மதம் தேவையாக இருக்கிறது. ஏழை மனிதன் நம்பிக்கையில்தான் வாழ்கிறான். அவனுடைய வாழ்க்கையின் வேரே நம்பிக்கைதான். அந்த நம்பிக்கையை அவன் இழக்க நேரிட்டால், அவனுடைய வாழ்க்கை என்னவாகும்? மதம் ஏழை மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் பயப்படாமல் இருக்க, நம்பிக்கையான வாழ்க்கையை அளிக்கிறது. எனவேதான் ஏழை ஒடுக்கப்பட்ட மக்கள், மதத்தின்பால் ஈர்க்கப்படுகிறார்கள்.

--------பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர்
--- நன்றி:தலித்முரசு

0 comments: