Search This Blog

20.4.08

கபாலீஸ்வரன் "கோவிந்தா!"

சென்னை - மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் என்றால், பிரசித்தி பெற்றது.
இந்தக் கோயிலின் கும்பாபிஷேகத்தின்போதுதான் மேயர் - வெள்ளுடை வேந்தர் சர்.பிட்டி தியாகராயர் (அவரும் பக்திமான்தான்) அவமானப்படுத்தப்பட்டார்.

இவ்வளவுக்கும் அந்தக் கோயில் கும்பாபிஷேகத்துக்காக ரூபாய் பத்தாயிரம் நன்கொடை கொடுத்தார். (அந்தக் காலத்தில் பத்தாயிரம் ரூபாய் என்றால், சாதாரணமா?)
விழா மேடையில் வெள்ளுடைவேந்தரின் பியூனுக்கு இருக்கை இருந்தது; மேயர் தியாகராயருக்கோ அது சித்திக்கவில்லை. என்ன காரணம்?

அந்தப் பியூனின் தோளில் தொங்கிய பூணூல் வணக்கத்திற்குரிய சென்னை மாநகரத் தந்தையின் தோளில் தொங்கவில்லையே!


சரி... அது இருக்கட்டும்! அந்த பிரசித்தி பெற்ற மயிலை கபாலீஸ்வரர் கோயில் செய்தித் தாள்களில் அமர்க்களப்படுகிறது.

அந்தக் கோயில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை போய்விட்டதாம். இரண்டு தனி போலீஸ் படை கொள்ளையர்களைக் கையும் களவுமாகப் பிடிக்கப் புறப்பட்டு விட்டதாம்.
மோப்பநாய் வரவழைக்கப்பட்டு, கபாலீஸ்வரர் மூல விக்கிரகத்திற்குக் கொண்டு போகப்பட்டு, அங்கிருந்து மோப்பம் பிடிக்க ஏற்பாடு செய்யப்பட்டதாம்.

கவனிக்கவும், கபாலீஸ்வரர் மூலக் கிரகத்திற்குள் நாய் நுழைய அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால், சூத்திரனோ, பஞ்சமனோ அங்கு போனால் சாமி தீட்டாகிவிடும்... அப்புறம் செத்துப் போய்விடுமாம்.

இப்பொழுது செத்துப் போயிருக்கிறது! மனிதர்களும், நாய்களும் தேடுகிறார்கள்.

இந்த அமளியில் காணாமல் போனது உண்டியல் பணம் மட்டுமல்ல - கபாலீஸ்வரனின் சக்தியும்தான்.

யார் இந்தக் கபாலீஸ்வரன்? சாதாரணமா?

பிரம்மனுக்கு சிவனைப்போல அய்ந்து தலைகளாம். இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு ஆள் மாறாட்டம் செய்து தன் மாமன் சிவனின் பாரியாளாகிய மாமி பார்வதி அம்மையாரிடம் சரச லீலை நடத்தியிருக்கிறான் பிரம்மா. (படைப்புக் கடவுளின் யோக்கியதை. இந்த யோக்கியதையில் இருந்தால், இந்தக் காலத்து மைனர்கள் சைட் அடிப்பது பெரிய குற்றமோ!).
தகவல் சிவனுக்கு எட்டியது. ஆத்திரம் அலை மோதாதா? கோபம் பொத்துக் கொண்டு கிளம்பாதா? கோபாக்னியாகக் காட்சியளித்தான். என்னைப் போலவே உனக்கும் அய்ந்து தலைகள் இருப்பதனால்தானே என் பெண்டாட்டியிடம் சில்மிசம் செய்தாய்? இதோ பார்! என்று கூறி, பிரம்மனின் ஒரு தலையைக் கிள்ளி, அந்த மண்டை ஓட்டை தன் கையில் வைத்துக் கொண்டானாம், சிவன். அதுதான் கபாலமூர்த்தி அல்லது கபாலீஸ்வரன் என்பது.
அன்றுமுதல் பஞ்ச முகத்தான் என்று அழைக்கப்பட்ட பிரம்மா, சதுர்முகத்தான் என்று அழைக்கப்பட்டானாம்.
சரி, அது போகட்டும்.

விஷயத்துக்கு வருவோம்.

பிரம்மாவின் தலையையே கிள்ளும் அளவுக்கு பேராற்றல் படைத்த - கோபாக்கினியாக மாறிய அந்தக் கபாலீஸ்வரன்தானே மயிலைக் கோயிலில் குந்தியிருக்கிறான்.
அவன் கண்முன்தானே உண்டியலை உடைத்து ரூபாய்களை, நகைகளைக் கொள்ளையடித்துப் போயிருக்கிறார்கள்.

அந்தக் கபாலீஸ்வரன் என்ன பண்ணினான்? அன்று பிரம்மாவின் தலையை ஒரே கிள்ளாகக் கிள்ளியெடுத்த சிவனின் அந்தப் பராக்கிரமம் எங்கே? பஞ்சர் ஆகிவிட்டதா? அந்தக் கொழுந்துவிட்டு எரிந்த கோபாக்னிக்கோலம் எங்கே? கூழ்முட்டையாயிற்றா?
மோப்ப நாய் வந்துதான் கொள்ளையர்களைப் பிடிக்கவேண்டுமா?
அப்படியானால் யாருக்குச் சக்தி? கடவுளுக்கா - நாய்க்கா?
கேட்கவேண்டிய இந்தக் கேள்வியை கேட்கவேண்டியவரிடம் கேட்காமல், அதற்குத் துப்பு இல்லாமல், இந்து முன்னணி ராமகோபாலான் ஆர்ப்பாட்டம் நடத்துவது யாரை ஏமாற்ற - எதைத் திசை திருப்ப
?

ஒன்றுமட்டும் மிக நன்றாகவே தெரிகிறது. ராமகோபாலன் போன்றவர்களே கபாலீஸ்வரனிடம் விண்ணப்பம் போடாமல், காவல்துறைக்குத்தானே விண்ணப்பம் போடுகிறார்கள்.
எங்குச் சுற்றினாலும் எல்லோரும் வந்து சேரவேண்டிய ஒரு இடம் இருக்கிறது - அதுதான் ஈரோடு.

கடவுளை மற - மனிதனை நினை! என்றாரே தந்தை பெரியார். அது இப்பொழுது உண்மையாகிவிட்டதே!

இராம.கோபாலன் வகையறாக்கள் கபாலீசுவரனிடம் கோரிக்கை வைப்பதை விட்டுவிட்டு, போலீஸ் கமிஷனரைத்தானே நாடுகிறார்கள்?

குறிப்பு: கோயிலில் கொள்ளை நடந்திருப்பதாலும், மூலஸ்தானத்திற்கு நாய் சென்றதாலும் தோஷம் ஏற்பட்டுவிட்டது என்று கூறி, தோஷம் கழிக்க சுத்திகரிப்பு, பிராயசித்தம் என்ற பெயரில் பல்வேறு சடங்குகளைச் செய்ய ஆரம்பித்துவிடுவார்கள். சிறப்புப் பூஜைகளையும் நடத்துவார்கள். அந்த வகையிலும் அர்ச்சகப் பார்ப்பனர்களுக்கு கொழுத்த வருமானம்தான்! எது நடந்தாலும் பார்ப்பனர்களுக்கு இலாபம் - வருவாய் என்ற சூட்சமத்தில்தானே இந்து மதமே கட்டப்பட்டுள்ளது என்பதைக் கவனிக்கத் தவறக்கூடாது.
கல்யாணம் என்றாலும், கருமாதி என்றாலும் பார்ப்பான் வயிற்றில்தானே அறுத்து வைக்கப்படுகிறது! இந்த சூழ்ச்சிகளை என்றைக்குத்தான் நம் பக்தத் தமிழர்கள் உணர்வார்களோ!


------------- மயிலாடன் அவர்கள் 19-4-2008 "விடுதலை" நாளிதழில் எழுதியது.

0 comments: