Search This Blog

12.4.08

பெரியார் செய்து வைத்த நமது நிதிஅமைச்சர் ப. சிதம்பரம் திருமணம் சீர்திருத்த திருமணமா? வைதீகத் திருமணமா?

இன்று காலை ஆறரை மணிக்கு ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் சென்னை கொங்கு வேளாளர் சமுதாய உயர் நீதிமன்ற நீதிபதி திரு. கைலாசம் (கவுண்டர்) அவர்களின் மகள் செல்வி நளினிக்கும் தனவைசிய ( நாட்டுக்கோட்டை) சமூதாயம் திரு.சில.தெ.லெ. பழனியப்ப செட்டியார் மகனும் நாட்டுக்கோட்டை நகரத்தார் "ஜாதித்தலைவர்" ராஜாசர் முத்தையா செட்டியார் உடன் பிறந்தாள் மகனுமான செல்வர் சிதம்பரம் அவர்களுக்கும் ( சீர்திருத்த திருமணம் அல்ல) காதல் திருமணம் (வைதீக முறைப்படி) நடந்தேறியது.
இது மிகவம் பாராட்டத்தக்கத் திருமணம் ஆகும் ஏனெனில் இப்படி இதற்கு முன் எனது தலைமையிலேயே பலப்பல நடந்திருந்தாலும் பெரிய இடம் எனறு சொல்லத்தக்க குடும்பங்களில் நடந்தது என்பதில் குறிப்பிடத்தக்க திருமணமாகும்.

இதில் பரிகசிக்கக்கூடிய விஷம் என்னவென்றால் இருமணங்கள் குடும்பத்தை ஜாதிகளைச் சேர்ந்த குறிப்பிடத்தக்கவர்கள் பலர் வந்து கலந்து கொள்ளவில்லை என்பதுதான்.

இத்திருமணம் கலப்புத் திருமணமல்ல. ஜாதி முறைப்படி பேசுவதானால் மணமக்கள் இருவரும் ஓரே ஜாதிதான். மனுசஜாதி என்து மாத்திரமல்லாமல் இருவரும் ஜாதி முறைப்படி 4 ஆம் (சூத்திரர்) ஜாதிதான். 4 -ஆம் ஜாதியாக சூத்திர ஜாதியான இருப்பதைப் பற்றிச் சிறிதும் வெட்கப்படாத ஜாதி என்று சொல்லலாம்.

கவுண்டமார்கள் சமூகத்தார் சரிவர வந்து கலந்து கொள்ளவில்லை என்பது பற்றி நான் கவலைப்படவில்லை. நாட்டுகக் கோட்டை ஜாதியார் கலந்து கொள்ளாதது தான் அற்பஜாதிக்கே துர்ப்பாக்கியமான சம்பவமாகும்.

நான் "பறையனுக்கும் பார்ப்பனத்திக்கும்" "பறைச்சிக்கும் பார்ப்பானுக்கும்" முதல் "ஜாதி" கலப்பு என்னும் பேரால் இந்த நாட்டுக்கோட்டை சமுதாயம் உள்பட பல நூற்றுக்கணக்கான திருமணங்கள் செய்து வைத்திருக்கிறேன். இந்த நாட்டுக்கோட்டை செட்டிமார் சமுதாயத்தில் பல திருமணம் செய்து வைத்திருக்கிறேன். நாட்டுக்கோட்டை செட்டியார் வகுப்புப் பெண்ணுக்கும் மற்ற ஜாதி ஆணுக்கும் திருமணம் செய்து வைத்திருக்கிறேன்.
மற்றும் பல கலப்பு ஜாதி என்று சொல்லக்கூடிய நூற்றுக்கணக்கான திருமணங்கள் செய்து வைத்திருக்கிறேன்.

நாட்டுக்கோட்டை செட்டியர் ஜாதி என்பது அவ்வளவு "உயர்ந்த ஜாதி" என்பதில் சேர்ந்ததல்ல. பணக்கார ஜாதி என்று சொல்லலாம்.

வெள்ளாள ஜாதி என்பது 4 ஆம் ஜாதியில் "உயர்ந்த ஜாதி" யாகும். இன்று முதல் நேற்று முதல் அல்ல - ஜாதிப் பாகுபாடு ஏற்பட்ட காலம் முதலேயாகும்.

நாட்டுக்கோட்டை ஜாதி என் அனுபவப்படி 60 70 ஆண்டுகளாகத் தான் புழங்கக் கூடிய ஜாதி என்பதாக ஆயிற்று. அவர்கள் செல்வத்தினாலும் அவர்கள் செய்த திருப்பணி தர்மத்தினாலும் உயர்ந்தவர்கள் ஆனார்கள். பழங்கதையைப் பேசிப் பயனில்லை என்கின்ற தன்மைப்படி பழக்கதை பேசுவது முட்டாள்தனமாகும். ஜாதியை உண்டர்கி ஜாதியை வளர்த்து ஜாதியால் மக்களை வஞ்சித்துப் பிழைக்கின்ற பார்ப்பன ஜாதித் தன்மையைப் பார்த்தால் மற்ற கீழ் ஜாதியார் என்கின்ற பட்டியலில் வருபவர்கள் ஜாதி பேசுவது தங்கள் இழிவை உணராத காரியமேயாகும்.

ராஜாஜி அவர்கள் இன்னமும் நம்மைச் "சூத்திரர்" என்றே சொல்கிறார் சில இடத்தில் இதற்காக "புத்தி கற்பித்தும்" இன்னமும் நம்மைச் சூத்திரர் என்றும் ஒருவிதப் பிராமணத்தன்மையும் அவரிடத்தில் இல்லாவிட்டாலும் தன்னை பிராமணன் என்று அவரிடத்தில் இல்லாவிட்டாலும் தன்னை பிராமணன் என்று சொல்லிக் கொண்டிருப்பதுடன் ஆசீர்வாதமும் செய்கிறார்.

அவர் யோக்கியதை என்னவென்றால் அவர் மகளைச் சூத்திரனுக்கே கொடுத்தார். கொடுத்தது மாத்திரமல்ல. எல்லா பார்ப்பனரும் அவர்களைப் புழங்கவைக்க அந்தப் பிள்ளைகளையும் பார்ப்பனர்களாகவே கருதுகிறார்கள்.

டி.ஆர். வெங்கட்ராம சாஸ்திரியாரின் மகன் திருமதி. நல்லமுத்து அம்மாளைத் திருமணம் செய்து கொண்டு "பிராமணராகவே" வாழுகிறார். ஜட்ஜ் குமாரசாமி சாஸ்திரியார் மகன் வெள்ளைக்காரியைத் திருமணம் செய்து கொண்டு வாழுகிறார்.கோபால்சாமி அய்யங்கார் மகன் பார்சிக்காரியைத் திருமணம் செய்து கொண்டு வாழ்கிறார். டாக்டர் சுப்பராயன் பார்ப்பனப் பெண்ணைத் திருமணம் செய்து தன் பெண்ணைப் பார்ப்பனருக்கே கொடுத்ததார். இவை பிரபலஸ்தர்கள் சேதி - மற்றவை எத்தனை எத்தனையோ நானும் என் அண்ணன் மகளும் ஜாதி விட்டு ஜாதி திருமணம் செய்து கொண்டவர்கள் தான். மாஜி மந்திரி சுப்பிரமணியம் ஜாதி விட்டு ஜாதி திருமணம் செய்து கொண்டவரேயாவார். மாஜி கவர்னர் சந்தானம் அய்யங்கார் கொழுந்தியார் முஸ்லிமைத் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்தார். திருமணப் பத்திரிக்கையில் திரு. சந்தானம் வித் தி பெஸ்ட் காம்பிளிமென்ட்ஸ் போட்டுக் கொண்டார். ருக்மணி, அருண்டேவைத் திரமணம் செய்து கொண்டு உலகப் பிரசித்தியானார் தேவதாசி வகுப்பு சுப்புலஷ்மியை கல்கி சதாசிவம் திருமணம் செய்து கொண்டு ராஜாஜி கூட்டுறவுடன் வாழுகிறார். டி.வி.எஸ் குடும்ப சவுந்தரம் ராமச்சந்திரன் (விதவை) ஒரு ஈழத்தவரைத் திருமணம் செய்து கொண்டு வாழுகிறார். இந்து தேவஸ்தான இலாகா தலைவர் சூரியராவ் நாயுடு நம் மகளை ஒரு முஸ்லிமுக்குக் கட்டிக் கொடுத்தார். அருணா என்கின்ற ஒரு பார்ப்பனப் பெண் ஆசப் அலி என்கின்ற முஸ்லிமைக் கட்டிக் கொண்டார் இவர்களையெல்லாம் குறிப்பிடக்காரணம் என்னவென்றால் குறிப்பிடத் தக்கவர்கள் என்பதாலும் ஒரு சிறுகுறைப்பாடுகூட கூறப்படாமல் வாழ்ந்தார்கள். வாழுகிறார்கள் என்பதாலுமேயாகும். மற்றும் இவை பெரிதும் காதல் திருமணமேயாகும் என்பதாலேயாகும்.


மற்றும் ராஜா சர் அவர்கள் 1930 லேயே என் தலமையில் அருணகிரிசுந்தரம் என்கின்ற கலப்புத் திருமணம் செய்து வைத்திருக்கிறார். திரு சிதம்பரம் தனவைசியரானால் திருமதி. நளினி பூவைசியர் பெண் ஆவார். ஆகவே இன்றைய 1968 இல் 40 ஆண்டு சுயமரியாதை இயக்கப் பிரசாரத்திற்குப் பின்பு இந்தப்படியான ஜாதி கருத்து குறிப்பிட்ட பெரியவர்கள் ராஜா சர் முத்தையா செட்டியார் அவர்களைப் போன்றவர்களின் உள்ளம் இன்னமும் மாறவில்லை என்றால் இதைப் பொல்லாத வாய்ப்பு என்று தான் சொல்ல வேண்டும். ராஜா அவர்கள் பணத்தில் மாத்திரம் பெரியவரல்ல. உண்மையிலேயே பெருந்தன்மை வாய்ந்த பெரியவராவார். அவர் அந்தச் சமுதாயத்தையே திருத்த வேண்டியவருமாவார். அவருக்குக் கிடைத்த நல்ல வாய்ப்பை இழந்துவிட்டார் என்றுதான் சொல்லுவேன். நாம் 4 ஆம் ஜாதியார் சூத்திரர் என்ற பட்டியலில் மதப்படி சாஸ்திரப்படி இந்துலாப்படி நடப்பிலும் இருந்து வருகிறவர்களாகிய நாம் ஜாதி வகுப்பு பார்ப்பதென்றால் நம் இழி ஜாதியை ஒப்புக் கொள்ளுகிறோம் என்று தானே பொருள்? .எனக்குப் பெண் இல்லை (குழந்தைகளே இல்லை)

இருந்தால் சிவராஜ் மகனுக்கோ மாண்புமிகு சத்தியவாணிமுத்து மகனுக்கோ கொடுத்திருப்பேன்.காதல் திருமணமானாலும் யோசனை சொல்லி இருப்பேன். தமிழன் என்றால் எரு சமுதாயமாக ஆகவேண்டாமா? இது எப்போது ஆவது?


எனவே இன்று நடந்த நளினி - சிதம்பரம் திருமணம் நம் 4 ஆம் ஜாதி மக்கள் என்கின்ற தமிழருக்கு ஒரு வழிகாட்டித் திருமணமேயாகும். இத் திருமணத்தில் வைதிகம் வழிந்தோடினாலும் வழிகாட்டித் திருமணமானதால் இதற்கு மேலும் எவ்வளவு வைதிக விலை கொடுத்தேனும் நடத்துவித்தாலும் சாலச் சிறந்ததேயாகும்.

சென்ற மாதம் நடைப்பெற்ற மாஜி அமைச்சர் சுப்பிரமணியம் அவர்களின் மகள் திருமணமும் ஓர் அளவு வழிகாட்டித் திருமணம் என்றே சொல்லலாம். ஏன்எனில் திரு. சுப்ரமணியம் அவர்களின் மகள் செல்வி அருணா - நாயுடு வகுப்புப் பெண் வயிற்றில் பிறந்த அரை வெள்ளாளப் பெண்ணே ஆகும். அதிலும் கீச்சு மூச்சு முனுமுனுப்பு சிறிது இருந்தாலும் மணமகன் துணிந்து முன்வந்து மணந்து கொண்டார். இவைச் சீர்த்திருத்தத் திருமணம் அல்ல என்றாலும் வழிகாட்டித் திருமணங்களேயாகும். இவற்றை நம் தமிழ் மக்கள் தங்களது 4 ஆம் ஜாதி தன்மை நீங்க வேண்டுமானால் துணிந்து இப்படிப்பட்ட வழிகாட்டித் திருமணங்களைப் பெரியவர்கள் என்பவர்கள் முன்வநது ஏராளமக நடத்தி ஆக வேண்டும். நமக்குள் நாமே ஜாதி பார்த்தால் பார்ப்பான் ஜாதி பார்ப்பதில் எப்படி தவறு சொல்ல முடியும்? சில நாள்களுக்கு முன் ஒரு சங்கராச்சாரி பார்ப்பனர் சூத்திரன் தொட்டதை உண்பவர்கள் நாய்க்குச் சமமானவர்கள் என்பதாகச் சொல்லி இழிவுபடுத்தியிருக்கிறார் என்பதை விடுதலையில் பார்த்திருக்கலாம். இந்த நிலையில் நாம் ஜாதி பார்க்கிறோம் என்றால் நம் நிலை என்ன என்பதைத் தமிழர் பெருமக்கள் சிந்திப்பார்களாக.

--------11-12-1968 அன்று "விடுதலை"யில் தந்தை பெரியார் அவர்கள் எழுதி வெளிவந்த தலையங்கம் --- "பெரியர் களஞ்சியம்"-தொகுதி -18 "ஜாதி-தீண்டாமை" பாகம் -12 பக்கம் 61-65

0 comments: