“பெண் அடிமை என்பது மனித சமூக அழிவு என்பதை நாம் நினைக்காததாலேயே, வளர்ச்சி பெற வேண்டிய மனித சமூகம் பகுத்தறிவு இருந்தும் நாள்தோறும் தேய்ந்து கொண்டே வருகிறது” - என்பார் தந்தை பெரியார் (‘குடிஅரசு’ 16-06-1935) இன்றைக்கு 71 ஆண்டுகளுக்கு முன்பு பெரியார் அவர்களின் கணிப்பு இது.
ஆண் - பெண் என்ற இரு பிரிவுகளில் சில உறுப்புகளில் வேறுபாடுகள் இருக்கலாம். அதற்காக ஆண் எஜமானன், பெண் அடிமை என்பது எப்படி?
இந்தப் பிரச்சினையை பெரியார் எடுத்துப் பேசியது போல இந்தியத் துணைக் கண்டத்தில் வேறு யாரும் பேசியது இல்லை. தன்மான இயக்க மாநாடுகளில் எல்லாம் பெண்ணுரிமை குறித்த சிந்தனைகளை தீர்மானங்களாக வடித்துத் தந்திருக்கிறார். 1928-இல் சென்னையில் தந்தை பெரியார் தலைமையில் நடைபெற்ற தென்னிந்திய சீர்திருத்தக்காரர்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் 78 ஆண்டுகளுக்கு முன்பே இத்திசையில் அவர்தம் சிந்தனைகளைத் தீர்மானிக்கப் பெரிதும் உதவுகின்றன.
1) மக்கள் பிறவியிலும் ஆண், பெண் என்ற தன்மையிலும் உள்ள உயர்வு தாழ்வு என்கின்ற வித்தியாசங்கள் கண்டிப்பாய் ஒழிக்கப்பட வேண்டுமென்று இம்மாநாடு தீர்மானிக்கிறது.
அ) குடும்பச் சொத்தில் பெண்களுக்கு ஆண்களைப் போலவே சம உரிமை அளிக்கப்பட வேண்டுமென்று இம்மாநாடு தீர்மானிக்கிறது.
ஆ) புருஷன் மரணமடைந்துவிட்டால் அவன் சொத்து முழுமையும் பெண் சாதிக்கு சர்வ சுதந்திரமாய் அனுபவித்துக் கொள்ள உரிமை அளிக்கப்பட வேண்டுமென்றும் இம்மாநாடு தீர்மானிக்கிறது.
இ) பாகம் பிரியாத குடும்பங்களில் கணவன் இறந்து போனால் அக்கணவனுக்கு உள்ள சகல உரிமைகளும், சொத்துகளும் அவனது மனைவிக்குச் சர்வ சுதந்திரமாய் அனுபவித்துக் கொள்ள உரிமை அளிக்கப்பட வேண்டும் என்று இம்மாநாடு தீர்மானிக்கிறது.
2) எல்லாப் பொதுப் பள்ளிக்கூடங்களிலும் ஆண் - பெண் என்கின்ற வித்தியாசம் இல்லாமலும், உயர்வு - தாழ்வு என்கின்ற வித்தியாசம் இல்லாமலும் கட்டாயப் படிப்பு கற்றுக் கொடுக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று இம்மாநாடு தீர்மானிக்கிறது. இத்தீர்மானங்களுள் சில இன்றைக்குச் சட்ட வடிவம் பெற்று விட்டன; சில இன்றைக்கும் சர்ச்சைக்கு இடம் கொடுத்துக் கொண்டும் இருக்கின்றன.
உலக நாடுகளில் கணவனை இழந்த பெண்கள் இருக்கிறார்கள்; விதவைகளும் இருக்கிறார்கள். ஆனால் விதவைக் கோலம் என்பது இந்தியாவை தவிர இந்து மதத்தைத் தவிர வேறு எந்த நாட்டிலும், எந்த மதத்திலும் கிடையாது. தந்தை பெரியாருக்கே உரிய மனித நேயக் கண்ணோட்டத்தில் இதனை அணுகுகிறார்.
கணவன் இறந்தவுடன் மனைவியையும் உடன் எரித்து விடுகிற சதி என்பது இந்து மதத்தில் இருந்து வந்த ஒன்று - வட மாநிலங்களில் இப்பொழுதும் கூட அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தட்டுப்படுகின்றது.
இந்த உடன்கட்டை ஏ(ற்)றுதல் என்கிற கொடுமைக்கு வெள்ளைக்காரர்கள் ஆட்சியில் ராஜாராம் மோகன்ராய் முயற்சியால் சட்ட ரீதியாக முற்றுப் புள்ளி வைக்கப்பட்டது.
‘சதி’க்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டாலும் இன்னும் இந்த நாட்டில் விதவைத் தன்மை கொடூரமாக அனுசரிக்க வைக்கப்படுவதைச் சகியாத பெரியார் கூறுகிறார்:
“என்னைக் கேட்டால் இந்தக் கொடிய நாட்டில் விதவைகளுக்குத் துன்பத்தை இழைத்தவர் நமது ராஜாராம் மோகன்ராய் அவர்கள் என்பதே எனது அபிப்ராயம். ஏனெனில், அவரால்தான் நமது விதவைகள் இருக்கவும், கஷ்டப்படவும் ஏற்பட்டு விட்டது. எப்படியென்றால் ராஜாராம் மோகன்ராய் அவர்கள் உடன்கட்டை ஏற்றும் வழக்கத்தை நிறுத்தாதிருப்பாரானால் ஒவ்வொரு பெண்ணும் புருஷன் இறந்தவுடனே அவனோடு கூடவே அவனது பக்கத்தில் “மாங்கல்ய ஸ்திரி”யாகவே உயிருடன் கட்டையில் வைத்து சுடப்பட்டு ‘கற்புலோகத்தை” அடைந்து ‘மோட்சத்தி’ லிருப்பாள்.
கற்பு லோகமும், மோட்ச லோகமும் புரட்டாயிருந்தாலும் ஒன்று மாத்திரம் நிச்சயம் - அதாவது சுடப்பட்ட பெண்ணுக்கு ஒரு மணி நேரம்தான் கஷ்டமிருக்கக் கூடும். ஆனால் அந்தப்படி சுடாமல் காப்பாற்றப்பட்ட பெண்ணுக்கு அவள் ஆயுள் கால முழுவதும் அங்குலம் அங்குலமாக, சித்திரவதை செய்வது போன்ற கஷ்டத்தை வினாடிதோறும் அனுபவித்து வர நேரிடுகின்றதா இல்லையா என்று கேட்கிறேன்” என்கிறார் (19-10-1929 அன்று சென்னை விதவா விவகா சகாய சபையின் சார்பில் சென்னை பிரம்மசமாஜ கட்டடத்தில் நடந்த நிகழ்ச்சியில் இவ்வாறு பெரியார் பேசியுள்ளார்).
தந்தை பெரியார் தம் இயக்கத்தின் மூலம் சுழல விட்ட சிந்தனைகள் மகளிர் சிந்தனையில், சமுதாய உள்ளீட்டில் பல மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கின்றன.
குறிப்பாக சுயமரியாதைத் திருமண மேடைகளை இந்த வகையில் அவர் பயன்படுத்திக் கொண்டது புரட்சிகர சிந்தனைகளுக்கும், மாற்றங்களுக்கும் வித்திட்டது.
பெண்களின் உரிமைக்குப் பாடுபட்ட தந்தை பெரியார் பெண்களுக்குக் கூறிய கருத்துரைகள் கசப்பாக பெண்களால் உணரப்பட்டாலும் கூட, அவை அன்றைக்கு மட்டுமல்ல இன்றைக்குக் கூட மிகவும் தேவையானவையே!
“பெண்கள் மதிப்பற்றுப் போவதற்கும், அவர்கள் வெறும் போகப் பொருள்தான் என்று ஆண்கள் கருதி நடப்பதற்கும் முக்கிய காரணமே பெண்கள் ஆபாசமாகத் தங்களைச் சிங்காரித்துக் கொள்வதேயாகும்.” (‘விடுதலை’ 15.6.1943)
“தங்களை நாகரிக நாரிமணிகள் என்று கருதிக் கொள்ளும் பெண்கள் எல்லாம் கூட நல்ல முறையில் ஆடை அலங்காரம் செய்து கொள்வதையும், நைசான நகைகள் போட்டுக் கொள்வதையும், சொகுசாகப் பவுடர் பூசிக் கொள்வதையும் தான் நாகரிகம் என்று கருதி வருகிறார்களே தவிர - ஆண்களுக்குச் சரி நிகர் சமானனாக வாழ்வதுதான் நாகரிகம் என்பதை உணர்ந்திருக்கவில்லை” (‘விடுதலை’ 11.10.1948).
பெண்கள் நகை மாட்டும் ஸ்டாண்டா என்றெல்லாம் பெண்கள் மத்தியிலே வினா எழுப்பியிருக்கிறார். பெண்கள் பிள்ளை பெறும் எந்திரமா என்று கேள்வி கேட்டிருக்கிறார்.
உச்சக்கட்டமாக பெண்களே உங்கள் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும் கர்ப்பப்பையையே தூக்கி எறியுங்கள் என்கிற அளவுக்குச் சென்றிருக்கிறார்.
“மற்றவர்கள் பெண்களின் உடல் நலத்தை உத்தேசித்தும், குடும்பச் சொத்து குறையாமல் இருக்க வேண்டுமென்பதை உத்தேசித்தும் கர்ப்பத் தடை அவசியம் என்று கூறுகின்றார்கள். பெண்கள் விடுதலை அடையவும், சுயேச்சை பெறவும் கர்ப்பத் தடை அவசியமென்று நாம் கூறுகிறோம்” (‘குடிஅரசு’ 6.4.1930)
தந்தை பெரியாரின் சிந்தனைகள் எப்படியெல்லாம் விரிந்து நிற்கின்றன என்பதைப் பெண்கள் சிந்திப்பார்களாக!
16 முழத்தில் புடவைகளை உடல் முழுவதும் சுற்றிச் சுற்றிக் கட்டுவது என்பது பெண்களுக்கு வசதிக் குறைவு. ஒரு அவசர நேரத்தில் தப்பிப் பிழைக்க, வேகமாக வெளியேறிட இது தடையாக இருக்கிறது. பெண்கள் ஆண்களைப்போல உடை உடுத்த வேண்டும். ஆண் - பெண் வித்தியாசம் காட்டத் தேவையில்லை; பெயரை வைத்தேகூட ஆணா பெண்ணா என்று தெரிந்து கொள்ளக் கூடாது என்கிறார். பெண்கள் உடை சம்பந்தமாக தந்தை பெரியார் கூறிய கருத்து எவ்வளவு ஆக்கப்பூர்வமானது என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு.
1997-இல் தஞ்சாவூர் பெருவுடையார் கோயில் குட முழக்குக்காக யாகங்கள் செய்தபோது பந்தல் தீ பற்றி எரிந்து, தீயில் சிக்கி 41 பேர் பரிதாபகரமாக மரணமடைந்தனர். இந்த 41-இல் 31 பேர் பெண்கள்.
இதற்கான காரணம் என்ன?
சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் விபத்துக் கட்டுப்பாடு மையம் (centre for disaster mitigation) ஒன்று இருக்கிறது. அது ஆய்வு செய்து பெண்கள் உடுத்திய புடவைதான் அவர்களால் விரைந்து ஓடி தப்பிக்க முடியவில்லை (‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ 10.6.1997) என்று அந்த மையம் கூறியுள்ளது.
பொதுவாகக் கட்டுமானப் பணிகளில் ஈடுபடும் பெண்கள் கூட அதிகமாக இயந்திரங்களில் சிக்கிக் கொள்வதற்கு அவர்கள் அணியும் புடவைதான் காரணம் என்றும் அந்த ஆய்வு மைய இயக்குநர் டாக்டர் ஏ.ஆர். சாந்தகுமார் கூறியுள்ளார்.
70 ஆண்டுகளுக்கு முன் இதுபற்றியெல்லாம் பெரியார் பேசி இருக்கிறார் என்பது அவர் தொலைநோக்குப் பார்வைக்கு அழுத்தமான ஆதாரங்களாகும்.
நம் நாட்டில் வருணாசிரம அமைப்பில் பெண்கள் தாழ்த்தப்பட்டவர்களை விடக் கீழாகத்தான் வைக்கப்பட்டனர் என்பது தந்தை பெரியாரின் கருத்து.
தாழ்த்தப்பட்டவர்கள் முழங்காலுக்குக் கீழ் வேட்டி கட்டுவது, பெண்கள் நாகரிகமாக உடை உடுத்துவதெல்லாம் வளர்ச்சியின் அறிகுறி என்று தந்தை பெரியார் பூரித்துச் சொன்னதெல்லாம் உழுதவன் விளைச்சலைக் கண்டு மகிழும் தன்மையையொத்தது. தந்தை பெரியார் பெண்ணுலகுக்கு ஆற்றிய அரும் பெரும் தொண்டினையும் சமூகப் புரட்சியையும் நன்றியுணர்வுடன் நினைவு கூரும் வகையில் பெண்கள் ஒன்றுகூடி பெண்கள் மாநாடு நடத்தி பெரியார் என்ற பட்டத்தை வழங்கினார்கள் (13.11.1938).
“இந்தியாவில் இதுவரையும் தோன்றின சீர்திருத்தத் தலைவர்கள் செய்ய இயலாமற்போன வேலைகளை இன்று நமது தலைவர் ஈ.வெ. ராமசாமி அவர்கள் செய்து வருவதாலும், தென்னாட்டில் அவருக்கு மேலாகவும், சமமாகவும், நினைப்பதற்கு வேறொருவரும் இல்லாமையாலும் அவர் பெயரைச் சொல்லிலும், எழுத்திலும் வழங்கும் போதெல்லாம் ‘பெரியார்’ என்ற சிறப்புப் பெயரையே வழங்குதல் வேண்டுமென அம்மாநாடு எல்லோரையும் கேட்டுக் கொள்கிறது” என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வரலாற்றின் இந்தப் பெருமையைத் தமிழகப் பெண்கள் தட்டிச் சென்றனர்.
-----கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்கள் "உங்கள் நூலகம்" மே-ஜுன் 2006 இதழில் எழுதிய கட்டுரை
Search This Blog
21.4.08
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment