சிந்தியுங்கள்...
நான் சொல்வதற்கு முன்பு உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்வது என்ன வென்றால், நான் சொல்வதை நம்பாதீர்கள்; அதன் படி நடக்க வேண்டுமென்று உடனே இறங்கிவிடாதீர்கள்; என்ன செய்ய வேண்டுமென்றால் சொல்லுவதைச் சிந்திக்க வேண்டும். சரியா, தப்பா என்று ஆராய வேண்டும். உங்களுக்கு எது சரி என்று பட்டதோ அதை ஒத்துக் கொள்ள வேண்டும் மற்றும் எந்தக் காரியம் செய்ய வேண்டும் என்று தோன்று கிறதோ அதைச் செய்ய வேண்டும். நாங்கள் சொன்னோம். நான் சொன்னேன் என்பதற்காக ஒன்றையும், எதையும் ஏற்றுக்கொள்ளக்கூடாது.
ஏன் சிந்திக்க வேண்டும்?
ஏன் என்பதை வலியுறுத்தி முதலில் சொல்லுகிறேன். நாங்கள் பகுத்தறிவுப் பிரசாரம் செய்து மக்களையெல்லாம் பகுத்தறிவுடையவர்களாக ஆக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறவர்கள். நாங்கள் சொல்லுவதைக் கேளுங்கள் என்றால் என்ன அர்த்தம்? நாங்கள் ஒன்றும் மூட நம்பிக்கைப் பிரசாரகர்கள் அல்ல; கடவுளைப் பற்றியோ, மதத்தைப் பற்றியோ, சாஸ்திரம் சம்பிராதாயங்களைப் பற்றியோ, கடவுளுடைய பிள்ளை, அவதாரம், குமாரர், தூதர் என்று சொல்லுகிறவர்கள் சொல்லுவதைப் போல் நாங்கள் ஒன்றும் சொல்லுவது இல்லை. நாங்கள் சொல்லுகிறோம்.
எங்கள் புத்திக்கு எட்டியதைச் சொல்லுகிறோம். எங்களைப் போலவே உங்களுக்கும் புத்தி இருக்கிறது. உங்கள் புத்திக்கு அது படுகிறதா? சரி என்று தோன்றுகிறதா? என்று சிந்தியுங்கள். இந்த உணர்ச்சி வந்து இருந்தால் மக்களுக்கு வேறு ஒன்றுமே தேவையில்லை. உணர்ந்திருப்பார்கள்.
சொந்தப் புத்தி!
இதே மாதிரி உணர்ச்சி மக்களுக்கு ஏற்பட இடமில்லாமலும் ஏற்பட விடாமலும் நாங்கள் சொல்லுவதைக் கேளுங்கள். எனக்குக் கடவுள் சொன்னார்; நான் கடவுள் அவதாரம்; நான் கடவுளாக இருக்க வேண்டும்’’ என்று இப்படி எல்லாம் சொல்லி மக்களை ஏமாற்றி அவர்கள் அவரவர்களின் கருத்தைப் புகுத்திய தன் பயனால் உங்களுக்குச் சொந்தப் புத்தியைப் பயன்படுத்த வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது. இன்றைக்கல்ல நேற்றைக்கல்ல; 2000, 3000 வருஷங்களாக இப்படி, மனிதன் என்பவன் அருமையான அறிவைப் படைத்தவன்; அப்படிப்பட்டவன் இன்றைக்குத்தான் பகுத்தறிவைப் பயன்படுத்து என்று கேட்டுக் கொள்ள வேண்டியவனாக ஆகி இருக்கிறான். பகுத்தறிவாளர் கழகம் இன்றைக்கு ஆரம்பமாகிறது. பகுத்தறிவாளர் கழகம் ஆரம்பமாகிறது என்று சொன்னால் மனிதர்களுடைய கழகம் இன்று ஆரம்பமாகிறது என்று அர்த்தம். மனிதர்கள் என்பவர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதைப் பற்றி இன்றைக்குப் பேசப்படுகிறது.
மனிதனும் மிருகமும்!
பகுத்தறிவு சிந்தனையே இல்லாதவர்களுக்கு மிருகம் என்றுதான் பெயர். ஏன்? அறிவிலே பகுத்தறிவு இல்லாத ஜீவன் மிருகம், பகுத்தறிவுடையவன் மனிதன். அறிவிலே பிரிவுபட்டிருக்கிறபடி ஓரறிவு, ஈரறிவு, மூன்றறிவு, நாலறிவு, அய்ந்தறிவு, ஆறறிவு என்பது புல்பூண்டுகளையெல்லாம் ஓரறிவு என்று சொல்லலாம். அதற்கு ஒன்றும் தெரியாது. உண்ண வேண்டியது தான். பூச்சிப் புழுக்கள் அப்புறம் மூன்றறிவு என்பார்கள். குணம் கொஞ்சம் கொஞ்சம் மாறும். சிலதுக்கு நாலு அறிவு இருக்கும். சிலதுக்கு அஞ்சு அறிவு இருக்கும்.
ஆனால் சிந்தித்துச் செயல்படுவது என்பது ஆறாவது அறிவு. அது மனிதனுக்குத்தான் அதிசயமான காரியங்கள் செய்யக்கூடிய ஜீவன்கள் உண்டு. நம்மால் செய்ய முடியாத காரியங்கள் எல்லாம் சில ஜீவன்கள் செய்யும். ஒரு எறும்பை எடுத்துக் கொண்டால், நமக்குத் தெரியாத வாசனை அதற்குத் தெரியும். ஒரு குருவியை எடுத்துக் கொண்டால், நம்மால் பறக்க முடியாமல் இருக்கும்போது அது பறக்கும். ஒரு குரங்கை எடுத்துக்கொண்டால் நாம் தாவமுடியாத அளவுக்குத் தாவும். யானையை அடிக்கும் சிங்கம். இப்படி இந்த மாதிரி மனிதனுக்கு மேற்பட்ட, மனிதனால் முடியாத சில விஷயங்கள் மற்ற அறிவுள்ளவைகளுக்கு உண்டு. சிந்தித்து, வளர்ச்சிக்கேற்ற வண்ணம் தன்னுடைய வாழ்வு நிறைவு பெறும் வண்ணம் பயன்படுத்துகிற அளவு மனித னுக்குத்தான் உண்டு. வேறு யாருக்குமே இல்லை.
மதியை இழந்த மனிதன்!
அப்படிப்பட்ட மனிதன் மதியை இழந்துவிட்டான். அதைப் பயன்படுத்தாமல் போய்விட்டான். பல காலங்களில், அதனால் மனிதன் வளர்ச்சியடையவில்லை. ஆனால் மனிதன் நம் நாட்டைப் பொறுத்தவரையிலும் மான உணர்ச்சியைப்பற்றிக்கூட லட்சியம் பண்ண முடியவில்லை. சாதாரணமாக நாம் பகுத்தறிவுடையவர்கள். உலகத்தை எல்லாம் கூட தெரிந்திருக்கிறோம். பார்க்கிறோம். செய்தி எல்லாம் வருகிறது. நாம் மாறவில்லை.
நாம் சூத்திரர்களா?
நமக்குப் பெயர் சூத்திரன், நாம் என்றால் - சூத்திரன் என்றால் பார்ப்பானின் வைப்பாட்டி மகன்; எப்படி என்றால், சாத்திரப்படி! யாரோ சொன்னாங்கன்னா என்றால், கடவுள் சொன்னார். இதை எல்லாம் நம்புவதன் மூலம் மானம் ஈனம் எல்லாம் இழந்துவிட்டு நம்முடைய வளர்ச்சியைப் பாழாக்கிவிட்டோம்; வயிற்றுப் பிழைப்பைத்தான் பிரமாதமாக எண்ணி விட்டோம். அது மிருகங்களுக்குத் தான் உண்டு. நாம் அதைத் தான் பின்பற்றி வந்திருக்கிறோம். இது வரைக்கும் முன்னால் பேசிய நண்பர் கூட சொன்னார்.
சிந்தனையும் பகுத்தறிவும்!
இந்த நாட்டில் எவனுமே பகுத்தறிவைப் பற்றிப் பேசவே இல்லை. இன்றைய தினம் வரைக்கும். யாராவது பேசினார்களென்றால் 3000, 2000 வருடங்களுக்கு முன்னே அதுவும் அந்தக் காலத்துப் பகுத்தறிவுதான். அதுவும் இன்றைக்குச் சரியானபடி பின்பற்றுவது இல்லை. வேறு யாரும் இவைகளைப்பற்றிச் சிந்திக்கவும் இல்லை. ஏன் அப்படி ஆகிவிட்டது என்றால் அவைகள் பகுத்தறிவுக்கு விரோதமான கொள்கைகள், செயல்கள், கடவுள்! அவர் உண்டாக்கினார்; அவர்தான் சக்தி உடையவர்; அவர் இப்படிச் சொன்னார்; அப்படிப் பண்ணினார்! அவருடைய மகன் இப்படிச் சொன்னார்; அவருடைய தூதன் இப்படிச் சொன்னார்.
அவருடைய அவதாரம் அப்படிச் சொன்னது! இந்த மாதிரி புத்திகளைக் கொண்டு வந்து மக்களுக்கிடையே புகுத்தியதால் இவனுடைய அறிவுக்கு வேலையே இல்லாமல் போய்விட்டது. அவர்களே எல்லாம் சொல்லிவிட்டார். அந்தப்படியே நடந்தால் போதும்; அதனாலே மனி தன் வளர்வதற்கு வாய்ப்பில்லை. எப்படி வாய்ப்பில்லை என்று கேட்பீர்கள். பகுத்தறிவைப் பயன்படுத்த முன் வந்தவர்கள் எந்த அளவுக்கு முன்னேற்றம் அடைந்திருக் றார்கள்! மற்ற நாட்டார் இன்றைய தினம் ஆகாயத்தில் 2 லட்சத்து 30,000 மைல் தாண்டி சந்திர மண்டலம் என்ற ஒரு உலகத்திலே உலாவிவிட்டு வருகிறார்கள். மணிக்கு 5000 மைல் 6000 மைல் பறக்கிறார்கள். இதில் எதைப் பண்றான் நம்மவன்?
ரிஷிகள், முல்லாக்கள், பாதிரிகள்
நமக்கு நண்பர்கள், கட்டுப்பட்டு நடக்கவேண்டியவர்கள், அறிவைச் சொல்பவர்கள் என்று ஆயிரக்கணக்கான தலைவர்கள், ஆயிரக்கணக்கான ரிஷிகள்; ஆயிரக்கணக்கான முல்லாக்கள்; ஆயிரக்கணக்கான பாதிரிகள்; ஆயிரக்கணக்கான பண்டார சன்னிதிகள் இருக்கிறார்கள். இவர்களைத் தவிர மதங்கள் இருந்தும் நாம் அடைந்த பயன் என்ன? ஒன்றும் முடியவில்லையே! காரணம் மனுஷன் தோன்றி எத்தனை வருஷங்கள் இருக்கும்! நம்மாலே கணக்கு எடுக்க முடியவில்லை. எவனோ ஆராய்ச்சிக்காரன் கணக்கெடுக்கிறான்; ஒருத் ன் லட்சம் வருஷங்கள் என்கிறான். ஒருத்தன் 18 லட்சம் வருஷங்கள் என்கிறான்.
அதற்கு முன்னே “உலகம் என்றைக்குத் தோன்றியதோ அன்றே மனிதன் தோன்றி னான்’’ என்கிறான். கடவுள் உண்டாக்கினான் என்கி றான். அன்று முதல் இன்று வரைக்கும் கண்ட பலன் என்ன? சாதாரணமாக ஒரு 100, 105 வருஷத்திலே உலகம் எவ்வளவு மாறியிருக்கிறது. நம் நாட்டிலேயே எவ்வளவு வளர்ச்சிக்கான சாதனங்கள் ஏற்பட்டிருக்கின்றன. 100, 105 வருஷத்திலேயே இவ்வளவு வளர்ச்சியிருந்தால் மனுஷன் தோன்றிய லட்சக்கணக்கான வருஷத்திலே அல்லது 3000, 4000 வருஷத்திலே எவ்வளவு வளர்ந்திருக்க வேண்டும்? ஏன் வளரவில்லை? நம்ம நாட்டில் என்ன கடவுள் இல்லை? பல்லாயிரக்கணக்கான கடவுள்கள் இருக்கின்றன. மகான்கள் இல்லையா?
மூடநம்பிக்கை!
ஏராளமான மகான்கள், நினைச்சவனெல்லாம் சாமியார்; நினைச்சவன் எல்லாம் மகாத்மா; நினைச்சவனெல்லாம் அந்த பக்தன்; இந்தப் பக்தன். இத்தனை பேர் இருந்தும் ஒரு சாதனை கூட நம்மால் ஏற்பட்டது என்று சொல்ல முடியவில்லையே! அவதாரங்களும், அதிசயங்களும் நாம் இன்றைக்கு அனுபவிக்கின்ற அதிசயமான பொருளெல்லாம் மற்றவன் செய்து நாம் அனுபவிக்கிறோம். உங்க கடவுள் மகனும் பொறந்தான்; கடவுள் தூதன் பொறந்தான்; கடவுள் அவதாரங்கள் ஒரு வண்டி பொறந்தார்கள்; தினமும் மாட்டு ரிஷி களென்றும், முனிவர்கள் என்றும் நினைச்சா சாபம் கொடுக்கிறவனும் நினைச்சா மலையைத் தூக்கி மலை மேல் போடறவனும், எவ்வளவு அற்புதமான மனிதர்களெல்லாம் தோன்றினார்கள்! அப்பொழுதும் ஒரு அற்புதம் கூட இன்னும் நடக்கவில்லையே.அறிவின் மேன்மை!
நெருப்புக் குச்சிகூட வெள்ளைக்காரன் வாரதிருந்தால் நமக்கு வந்திருக்குமா? இருட்டில்தான் உட்கார்ந்திருப்போம். சிக்கிமுக்கிக் கல்லில்தானே நம்ம வாழ்வு இருக்கும். பூமியில் எருமையில் ஏறி சவாரி செய்து வந்தவனுக்கு ஆகாசக் கப்பல் வந்தாச்சு. இதெல்லாம் எப்படி வந்தது? தொழுதா வருமா? ஜபம் பண்ணினா வருமா? இல்லை. யாகம் பண்ணினா வருமா? இல்லை, கடவுளே என்று சொன்னா வருமா? ஆகவே மனிதன் மனிதனாக இருந்து அதனாலே அடைய வேண்டிய காரியங்களைச் செய்து, கொள்ள முடியாமல், கடவுள், மதம், சாஸ் திரம், வேதம், தர்மம், பெரிய வர்கள், மகான்கள், இந்த மாதிரியான முட்டாள்தனமான பேச்சுகளுக்கெல்லாம் நாம் காது கொடுத்து இன்றைய தினம் நாம் மிருகமாக இருக்கிறோம் எப்படீன்னு கேட்பீங்க!
மூட நம்பிக்கையும், முட்டுக்கட்டையும்!
எனக்கு முன்னால் பேசிய தோழர்கள் எல்லாம் சொன்னார்கள் - “நமக்கு எங்கே அய்யா அறிவு இருக்கிறது?’’ எதை எடுத்தாலும் சாஸ்திரம், சம்பிரதாயம், முன்னோர்கள் சொன்னது, வேதத்தில் சொன்னது என்று அது எவன் சொன்னானோ என்பதைப்பற்றியெல்லாம் கவலையே இல்லை! நண்பர்கள் சொன்னார்கள், பூனை குறுக்கே போனால் உட்கார்ந்துக்குவான், அப்புறம் போகலாமென்று ஏன்டான்னா, சகுனம் சரியா இல்லை என்பான். காக்கா கத்துதுன்னா வெளியே போகக்கூடாதுன்னு உட்கார்ந்துக்குவான். குளிச்சிப் போட்டு வெளியே போகலாம் என்பான். முன்னெச்சரிக்கையாக ஒருத்தனையும் தொடமாட்டான். கட்டின வேட்டியோட குளிப்பான்.
மனுஷன்தான், மாடல்ல இதெல்லாம் செய்கிறவன்? என்ன இருக்கிறது! மற்றும் இந்தக் கிழமையாகாது. அந்தக் கிழமையாகாது; இந்த நேரம் தப்பு; இது நல்ல நேரம் என்பதெல்லாம் எதுல சேர்ந்தது? அறிவைப் பற்றிப் பேசறதுக்கே ஆள் இல்லை. அறிவின் பயனை, அதன் பலனைப்பற்றி எடுத்துச் சொல்ல துணிவு எவனுக்கும் வரவில்லை. இது பெரிய காட்டுமிராண்டி நாடு, நாம் அப்படியே இருக்கிறோம். இதுதான் சொல்ல முடியும்.
அன்னியராட்சி!
இப்பத்தான் நல்ல வாய்ப்பா நம்ம நாட்டுக்கு அன்னியன் வந்தான். சில மாறுதலைப் பண்ணினான். அவனை நம்ம மதத்துக்கு விரோதி என்று விரட்டி அடிச்சிட்டாங்க. அப்புறம் வெள்ளைக்காரன் வந்தான்; அவன் பல மாறுதல்களை உண்டு பண்ணினான். அவனையும், மதத்திலே பிரவேசித்தான். சாத்திரத்திலே பிரவேசித்தான். அதுலே அப்படி இப்படின்னு அவனை ரகளை பண்ணினாங்க; அதோட நின்னு போச்சே தவிர அதுக்கு மேலே ஏறலே; நம்ம நாட்டில் இதுவரைக்கும் அவன் இல்லாதிருந்தால் ரொம்பப் பின்னேறி இருப்போம்.
அதிலே ஒன்றும் ஆட்சேபனை இல்லை. அவனாலே அமைப்பு கெட்டுப் போகுதுன்னு மக்களை ஏமாற்றிப் பிழைக்கிற அயோக்கியர்கள். அவன் இருந்தால் நாம், வாழ முடியாதென்று அவனுக்கு மோசமெல்லாம் பண்ணினாங்க. அப்புறம் எவனுமே தோணல்ல! துணிஞ்சு நாங்கதான் தோன்றினோம். துணிஞ்சு தோன்றினோம். இருக்கிற கொடுமையைப் பார்த்து அரசியலின் பெயராலே மதத்தின் பெயராலே மக்களுக்குச் செய்யும் கொடுமையைப்பார்த்து நம்ம மக்களுக்குப் புத்தி இல்லாமல் அவர்கள் மடையர்களாக இருக்கிறதைப் பார்த்து, இதற்கு ஒரு பரிகாரம் பண்ண வேண்டும். இந்த முயற்சியைப் பண்றவன் தான் மனுஷன். மத்த முயற்சி பண்றவனெல்லாம் வயிற்றுப் பிழைப்புக்காரன் அப்படீன்னு முடிவு பண்ணி நாங்கள்தான் ஆரம்பிச்சோம்.
சுயமரியாதை இயக்கம்!
என்ன ஆரம்பிச்சோம்? சுயமரியாதை இயக்கம் என்றுதான். மனுஷனுக்கு மானம் என்கிற உணர்ச்சி ஊட்ட வேண்டுமென்று! எத்தனையோ பேர் எல்லாம் எங்களோட சண்டை போட்டாங்க; சுயமரியாதை இயக்கம் ஆரம்பித்தபோது ஒரு பெரிய மந்திரியே என்னிடம் வந்து, “என்னையா சுயமரியாதைன்னா நமக்கெல்லாம் மானமில்லை, மரியாதை இல்லை என்றா அர்த்தம்? இந்தப் பேரே வெட்கக்கேடா இருக்குது! எவனாவது கேட்டா கேலி செய்யமாட்டானா?’’ அப்படி என்று என்னை வந்து கேட்டார். அப்புறம் திருப்பிச் சொன்னேன்; “வருத்தமாக இருக்குது எங்களுக்கு, தயவு செய்து சொல்லுங்க. நீங்க யாரு? எனக்குத் தெரியணும்’’ “என்னத்துக்காகக் கேட்கிறீர்’’ என்றார். கேட்கிறேன்,
சமுதாயத்திலே நீங்க யாரு? எத்தனாவது? உங்க அந்தஸ்து என்ன? உங்க தொழில் என்ன? ‘ரெட்டியாருன்’’னாரு, “மந்திரியா இருந்தா என்ன? நீங்க யாரு? ரெட்டியாருங்கறது. சும்மா நாம் வெச்ச பேரு. நாம் ஏற்படுத்திக்கிட்ட பேரு. சும்மா கவுண்டன், செட்டியார் இந்த மாதிரியெல்லாம். பொதுவாக சாஸ்திரப்படி, சம்பிரதாயப்படி, மதப்படி, சமயத்துப்படி, நீங்க யாரு? எத்தனையாவது ஜாதி?’’
அவர் ஒன்றும் பேச முடியவில்லை. சிரிச்சிட்டாரு. “சிரிக்காதீங்க! நீங்க எத்தனாவது ஜாதி?’’ 4-ஆவது ஜாதிதானே; அது சாத்திரப்படி நீண்ட நாளாக இருக்குது.’’ நாமெல்லாம் அந்த நீண்ட நாளாக இருக்கறதைத்தான் ஒழிக்கணும்னுதான், உங்களுக்கு மானம் வரவேண்டுமென்று தான் இதை நாங்க ஆரம்பித்தோம்.
மேல்ஜாதியும், கீழ்ச் ஜாதியும்!
“அப்படீன்னா உங்க ஜாதி என்ன?’’ “சூத்திரன்’’, சூத்திரன்னா என்ன? “பார்ப்பானுக்கு வைப்பாட்டி மகன்.’’ எத்தனாவது ஜாதி, 4-ஆவது ஜாதி உங்களுடையது! நீங்க பி.ஏ., பி.எல்., படிச்சீங்க. நீங்க மூன்று வருஷம் மந்திரியாப் பார்த்துட்டீங்க! இப்ப மறுபடியும் மந்திரியா இருக்கீங்க! நீங்க மந்திரிப் பதவியில் இருந்தும் இப்ப சூத்திரன், தேவடியா மகன்! ஆனா, உங்ககிட்டே பிச்சை எடுக்கிறவன், உங்களுக்கு வேணும்னாலும் கூட்டிக் கொடுக்கத் தயாராக இருக்கிறவன், அவன் தன்னை மேல் ஜாதிங்கறான். நீங்களும் அவனை மேல் ஜாதின்னு ஒத்துக்கறீங்க! நீங்க அவன் காலில் விழுகறீங்க! அவன் காலைக் கழுவித் தண்ணீரைக் குடிக்கிறீங்க?’’ இதற்குப் பதில் இதைத்தான் சொன்னார்.
அதனால்தான் இவ்வளவு கடுமையான முயற்சி நாம் செய்யவேண்டி இருக்கிறது. இன்று ஏற்பட்ட புண்ணா இருந்தா ஒரு கட்டுப்போட்டால் போதும், வெகு நாளா ஏற்பட்ட புண்ணு! நாத்தமும் எடுத்து புழுத்தும் போயிருக்கிறது! அந்தப் புண்ணை அறுத்துத்தானே ஆகணும். அதனால்தான் ரொம்ப நாளாச்சுங்கறதுனால இப்ப அறுக்க ஆரம்பிச்சிருக்கோம்’’, அப்படின்னு சொல்லி அந்த மாநாட்டை நடத்தினோம்.
-------------தந்தைபெரியார் -நூல்: "சிந்தனையும் பகுத்தறிவும்" பக்கம் 1 - 7
Search This Blog
27.4.08
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment