Search This Blog

8.4.08

சீதை ஆத்திரமடைந்து ஒரு அளவுக்கு தந்திரமாக தனது கற்புத் தவறை ஒப்புக்கொள்கிறாள்!

இதைக் கேட்ட சீதை அகங்காரத்துடனும், ஆணவத்துடனும், கணவனிடம் பேசுகிறோமே என்பதுகூட இல்லாமல், கணவனைக் கண்டித்துரைக்கிறாள்.

அற்பனைப்போல் பேசிவிட்டாய்!

'ஏதோ ஊரும் பேரும் அற்ற சாதாரண ஸ்திரீயைப் பார்த்துப் பேசுவது போல் பேசி விட்டீர்களே!

வீரனுக்கழகா உன் வார்த்தைகள்!

சுத்த வீரனென்று பெயர் வைத்துக் கொண்டிருக்கும் தங்களுக்கு இது அழகா?'

குறிப்பு : இராமனை இவ்விதம் சீதை கடும் கோபத்தால் 'நீ பேசியது அற்பனைப் போல் பேசினாய்; வீரநனுக்குள்ள பேச்சுகளைப் பேசவில்லை' எனறு கூறி இராமனை, அற்பன், வீரமில்லாத கோழை என்று நிந்தித்தும் பேசுகிறாள். பதிவிரதைப் பட்டியலில் சேர்க்கப்பட்டவள் கணவனைப் பேசுகின்ற வார்த்தைகள் இவைகள் தானா என்பதைச் சிந்தியுங்கள்.

இது மட்டுமா? சீதை, 'இராவணனுக்கு சம்மதித்தேன்' என்று துணிச்சலோடு இராமனிடம் கூறிவிடுகிறாள் என்பதையும் காணலாம்.

இராமன் சீதையிடம் சந்தேகப்பட்டு அவளை ஏற்றுக் கொள்ள மறுத்தவுடன், சீதை இராமனைக் கடிந்து பேசி, 'நீ அற்ப மனிதனைப் போல் என்னைப் பேசிவிட்டாயே' என்று பேசி மேலும் அவளே இராமனிடம் துணிவோடு 'நான் இராவணனுக்கு சம்மதித்தேன்' என்கிறாள்.

'என்னை இராவணன் தொட்டெடுத்தான் என்கிறீர்கள்; வாஸ்தவமே' (பக்கம் 490)

குறிப்பு : சீதையை இராவணன் தொட்டு எடுத்தான் என்பதால்தான் சீதை இராவணனுக்கு நிச்சயம் உடன் பட்டிருக்கவேண்டும் என்பதை இராமன் நிச்சயிக்கிறான். ஏனெனில் இராவணன் இஷ்டப்படாத எந்தப் பெண்ணையாவது தொட்டான் என்றால் அவன் உடல் நெருப்புப் பற்றி எரியவேண்டும்; அல்லது தலை வெடித்து விடவேண்டும். இந்த இரண்டும் சாபங்களும் இராவணனுக்கு இருக்கையில், அவன் சீதையைத் தொடும்பொழுது அவனுக்கு ஒரு சாபமும் நிறைவேறவில்லை. ஆகவேதான் இராமனுக்குச் சந்தேகம்; இதைத்தான் சீதையும் குறிப்பிடுகிறாள் 'தொட்டு எடுத்தான் என்று சந்தேகப்படுகிறீர்கள்' என்று கூறுகிறாள்.

மேலும் அவள் கூறுகிறாள்; 'நான் ஸ்திரீ; ஒண்டி; அநாதை; அவனோ ராட்சதன்; அளவற்ற பலசாலி; க்ரூரன்; ஆயுதபாணி; சகாயமுள்ளவன் என்னால் கூடியவரை தடுத்தேன். எனக்கு எள்ளளவாவது அவனுடன் போக வேண்டும் என்று ஆசை இருந்ததா?'

(மேற்படி பக்கம்)

குறிப்பு : எப்படி தந்திரத்தால் தப்பித்துக் கொள்கிறாள் பாருங்கள். இராவணன் அபபடிப்பட்டவன், இப்படிப் பட்டவன், நான் பெண் பிள்ளை, ஒண்டியாக இருந்தேன். ஆகவே நான் என்ன செய்வேன் என்கிறாள். அது மட்டுமா? இன்னமும் தந்திரத்தைப் பாருங்கள்.

'என் தேகம் பிறர்க்கு வசப்பட்டது. சுதந்திரமற்ற நான் என்ன செய்ய முடியும்? என் வசத்திலிருந்த என் இருதயம் அப்பொழுதும், இப்பொழுதும், எப்பொழுதும் தங்களிடத்திலேயே நாடி இருக்கிறது.

(மேற்படி பக்கம்)

குறிப்பு : என் திரேகம் மட்டும் அவனிடம் மாட்டிக் கொண்டது. ஆனால் என் இருதயம் எப்பொழுதும் உங்களிடம் தான் இருக்கிறது என்கிறாள். இதன் கருத்தென்ன? சிந்தியுங்கள். என் உடலை அவன் அனுபவிக்கையில் என் மனது உங்களிடம் தான் இருந்தது. இதன்படி, உடலை மட்டும் அவன் சுகித்தான் என்பதுதானே பொருள்? எனவே சீதையை தான் இராவணனுக்கு இசையும்படி ஆகிவிட்டது என்று ஒப்புக்கொள்கிறாள்.

----- தந்தை பெரியார் அவர்களால் (எல்லா ஆதாரங்களைப் பொறுத்தே)
தொகுக்கப்பட்டவை -நூல்: "இராமயணக் குறிப்புகள்" பக்கம் 58-60

இப்படிப்பட்ட அயோக்கியத்தனத்தைத்தான் சன் தொ(ல்)லைக்காட்சி காசுக்காக ஒளிபரப்பி வருகிறது. முரசொலிமாறன் உயிரோடு இருந்திருந்தால் இவர்களின் இந்தச் செயல்களைக் கண்டு மனம் வருந்தி கண்டித்திருப்பார். தமிழ் மக்களை எப்போதும் சன் தொலைக்காட்சி நிர்வாகம் மதித்ததேயில்லை;அது எங்களுக்கு தேவையுமில்லை.ஆனால் பெற்றெடுத்த தகப்பனின் கொள்கைக்கு மதிப்புக் கொடுத்து உடனே இராமாயண ஒளிபரப்பை நிறுத்த வேண்டுகிறோம். இதுதான் மகன்களின் கடமை.

0 comments: