Search This Blog

4.4.08

காந்தியார் மிகவும் பிற்போக்குவாதி

பேரன்புமிக்க நாயுடுகாரு அவர்களே, பெரியோர்களே, தாய்மார்களே!

இன்றைய தினம் என்னுடைய பிறந்தநாள் பாராட்டுதல் என்ற பெயராலும் உயர்திரு. காந்தியார் பிறந்தநாள் பாராட்டுதல் என்ற பெயராலும் இந்த விழாவை நாயுடு அவர்கள் ஏற்படுத்தியுள்ளார்.

நாயுடு அவர்கள் மிக முக்கியமான காரியங்களில் விளையாட்டாக நடந்து கொள்வார். என்னையும் நடத்துவார். நான் நாயுடுகாருக்கு எப்போதும் கட்டுப்பட்டவன். அவர் என்னிடத்தில் மிக்க அன்பு கொண்டவர்.

நாயுடு அவர்கள் தன் உரையில் எனக்கும், காந்தியாருக்கும் பிறந்தநாள் விழா என்று கூறினார்.

காந்தியாருக்கும் எனக்கும் கருத்து வேற்றுமை வட துருவமும், தென் துருவமும் போன்றது. நான் காந்தியாருக்கு முக்கிய சீடனாக அன்பிற்குப் பாத்திரமானவனாகவும் இருந்து வந்தவன். அவர் எனக்கு எழுதியுள்ள கடிதத்தில் உன்னைப் போல் 3-4 பேர்கள் இருந்தால் நாடு எவ்வளவோ முன்னுக்கு வந்து விடுதலை அடைந்துவிடும் என்று எழுதி இருக்கிறார்.

மற்றும் ஒரு சமயம் சட்ட மறுப்பு இயக்கத்தை நிறுத்தும்படி சமாதான மாநாடு கூட்டி, சங்கர நாயர் காந்தியாரிடம் சட்ட மறுப்புப் போரை நிறுத்திவிட்ட பிறகு சமாதானம் பேசலாம் என்று கேட்டபோது காந்தியார் சொன்னார், "சட்ட மறுப்புப் போரை நிறுத்துவது என் கையில் இல்லை ஆனால் அது தமிழ்நாட்டிலே ஈ.வெ.ராமசாமி நாயக்கரின் மனைவி, தங்கை ஆகியோர் கையில் உள்ளது" என்று கூறினார். அந்த அளவுக்கு நானும், எங்கள் குடும்பமும் காந்தியாரின் லட்சியங்களுக்காகச் சிறை சென்றவர்கள்.

பிறகு காந்தியார் மிகவும் பிற்போக்குவாதி என்பதையும், காங்கிரஸ் நம் மக்களுக்குக் கேடுபக்கக்கூடிய ஸ்தாபனம் என்பதையும் உணர்ந்து வெளியே வந்தவன் ஆவேன்.

"காந்தியார் சுயராஜ்யம் கேட்பது வர்ணாசிரம தருமத்தைக் காப்பாற்றவே" என்று கூறியவர் ஆவார்.

இன்றைக்கு அரசியல் ஒழுக்கம், நாணயம் கெட்டு ரொம்ப காலித்தனத்தில் இறங்கி இருக்கின்றது என்றால், இதற்கு வாத்தியார் காந்தியார் தான். அவர் ஆரம்பித்தது தான் வெடிகுண்டு. அவர் ஏற்படுத்தியது தான் சத்தியாக்கிரகம், சண்டித்தம், ரகளை முதலியவை எல்லாம். எனவே எனக்குக் காந்தியார் மீது மிகவும் வெறுப்பு ஏற்பட்டுக் கொண்டே வந்துவிட்டது.

என்னுடைய தீவிர பிரச்சாரம் கண்டு ஒரு சமயம் என்னைப் பெங்களுருக்கு அழைத்து சமாதானம் பேசினார். நீ என்னமோ இப்படி மதத்தை முன்னோர் நடப்பை எல்லாம் கண்டித்துப் பேசிக் கொண்டு வருகின்றாயாமே? ஏன் என்று கெட்டார். நமது இழிநிலைக்கும், மடமைக்குக் காரணம் நமது கடவுள்களும், இந்து மதமும் தானே? இவைகளை வைத்துக் கொண்டு நாம் எப்படி முன்னேற முடியும்? என்று கேட்டேன்.

அதற்கு அவர் என்னை முதுகில் தட்டிக் கொடுத்துக் கூறினார். நீ வேறு மதம் மாறி இந்து மதத்தைப் பற்றி பேசினால் உனக்கு ஆதரவு இருக்காது. உன்னைப் பொறுத்துக் கொள்ளவும்மாட்டார்கள். இந்துமதத்தில் இருந்து கொண்டு எவ்வளவு கண்டித்துப் பேசினாலும் யாரும் எதிர்க்க மாட்டார்கள் என்று கூறினார்.

காந்தியார் கடைசிக் காலத்தில் நானே திருப்தி அடையும் அளவுக்கு மாறினார். அவர் கடைசியிலே காங்கிரசை ஒழிக்க வேண்டும் என்று அவர் வாயினாலேயே சொல்லிப் போட்டார். நாம் எந்தக் காரியத்திற்காக காங்கிரஸ் ஏற்படுத்தினோமோ அந்த சுதந்திரம் வந்துவிட்டது. இனி காங்கிரஸ் தேவையில்லை என்று கூறினார்.

பிறகு கோயில்கள் எல்லாம் விபச்சார விடுதி என்று கூறினார். விஜயராகவாச்சாரி போன்றவர்கள் எல்லாம் அவரைக் கண்டித்தார்கள்.

அது மட்டும் அல்ல. அரசியலில் மதம் கூடாது அரசாங்கக் காரியங்களில் மதத்தைக் கலக்கக்கூடாது என்று துணிந்து கூறினார்.

இப்படி அவர் கூறி 53 ஆம் நாளிலேயே அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். நான் மிக விசனப்பட்டேன்.
அவருக்கு நல்ல புத்திவந்த காலத்திலா அவருக்கு இந்த கதி என்று கூறி வருந்தினேன்.

இன்றைக்கு காங்கிரஸ்காரர்கள் காந்தியைப் பின்பற்ற வேண்டும் என்ற கருத்தில் காந்தியைப் பாராட்டவில்லை. அவர் பேரைச் சொன்னால் பாமர மக்கள் ஏமாறுவார்கள் என்ற கருத்தில் அல்லாமல் வேறு இல்லை.

தோழர்களே! நாயுடுகாரு அவர்கள் என்னைப் பற்றி ஏதேதோ கூறினார். எறத்தாழ அவ்வளவும் உண்மையாகக்கூட இருக்கக்கூடும்.

என்னைக் கஞ்சன் என்று பலர் கூறுவது உண்டு. நமது நாட்டில் அநேகர் ஏதோ செலவு செய்ய வேண்டும் என்று செலவு செய்கின்றார்களே ஒழிய அவசியம் கருதிச் செய்வதில்லை.

எனது தொண்ட மனித சமூதாயத் தொண்டு ஆகும். மனித சமூதாயத் தொண்டு செய்கின்றவனுக்கு எந்தவிதமான பற்றுதலும் இருக்கக்கூடாது. கடவுளிலோ, மதத்திலோ, சாதியிலோ, மொழியிலோ, நாட்டிலோ பற்று வைப்பவர்களால் எந்தவிதமான சமூதாயத் தொண்டும் செய்ய முடியாது. இப்படிப்பாடுபட்ட்டால் வேகமாகப் பலன் கிட்டாவிட்டாலும் ஏதோ சிறிதளவாவது ஏற்பட்டே தீரும்.

என் கொள்கையில் இருக்கின்ற பெரிய வெற்றி என்ன என்றால் கடவுளை, மதத்தை, சாஸ்திரத்தை, சாதியைக் கண்டிக்கக் கூடிய எனக்கு இப்படி பெரிய மரியாதை ஏற்பட்டு இருக்கின்றது என்றால் அதுவே எனது கொள்கைக்குப் பெரிய வெற்றி என்று நானே திருப்தி அடைகின்றேன்.

எனது தொண்டு எப்படிப்பட்ட பிடிவாதக்காரர்களையும் ஓரளவுக்கு மாற்றித்தான் இருக்கின்றது. வெள்ளைக்காரன் இன்னும் 25 ஆண்டுகள் இருந்து இருப்பானேயானால் இன்னும் எவ்வளவோ மறுதல்கள் எல்லாம் அடைந்து இருப்போம்.

உலகமே இன்றைக்கு விஞ்ஞான அதிசய அற்புதங்களால் எவ்வளவோ முன்னுக்கு வருகின்றது. ஆனால், மேனாட்டானின் விஞ்ஞானச் சாதனங்களை இந்த நாட்டுக்காரன் அனுபவிக்கிறானேயொழிய இவனாக ஒன்றும் கண்டுபிடிக்கவே இல்லையே.

இந்த நாட்டில் தோன்றிய மகான் மகாத்மாக்கள், ஆனந்தாக்கள் எவனும் இந்த நாட்டின் சாதி இழிவின ஒழிக்கவே இல்லையே. நான் ஆரம்பத்தில் கூறிய பற்றுகள் அனைத்னைத்தையும் ஒழித்தவனால் தான் முடியும்.

தோழர்களே! இந்த நாட்டில் பணக்காரனுக்கு வீடு வந்தால் போதுமா? குச்சு வீட்டில் இருக்கின்றவர் கதி என்ன என்று எந்த அரசியல்வாதி சிந்திக்கின்றான். எனவே அடிதளத்தில் உள் மக்களின் கஷ்டங்களுக்குப் பரிகாரம் தேட முற்பட வேண்டும்.

(02-10-1968 அன்று கோவையில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு விடுதலை 28-10-1968) (பெரியார் களஞ்சியம் தொகுதி - 18)

0 comments: