Search This Blog

10.4.08

அடுத்த இருபது வருடத்தில் என்னையே பிற்போக்குவாதி என்று அன்றைய உலகம் கூறுமே!

ஒரு குழவிக் கல்லுக்கு 1000 - மனைவிகள் இருக்கலாம். 10.000 - தாசிகளும் இருக்கலாம். இருந்தாலும் அதைத் தெய்வம் என்று தொழுவார்கள். நமது முதன் மந்திரியார் அன்றாடம் போற்றிப் புகழ்ந்துவரும் ராமபிரானின் தந்தை தசரதருக்கோ ஒன்றல்ல, ஆயிரமல்ல, 60.000 - மனைவியர்கள் இருந்தாலும் இராமாயணம் ஒரு பக்தி நூலாகக் கருதப்படும்.கீதையை உபதேசித்த கிருஷ்ணனுக்கோ 10000- மனைவியர்! 1 லட்சம் வைப்பாட்டிகள், இவ்வளவு மோசமாக இருந்தாலும், கிருஷ்ணனுடைய நடத்தை இதற்காக கீதை படிப்பவர் யாரும் வெட்கப்படமாட்டார்கள்! ஏன்? அவர்களெல்லாம் மகான்கள்; என்ன வேண்டுமானாலும் செய்யலாம்! நம்மவர் தொழும் கடவுள்களில் 100 - ல் 90- க்கு இரண்டு மனைவிகளுக்கு குறையாமல் இருக்கும், இரண்டு மனைவிகள் போதாமல் தாசி வீட்டிற்கு வேறு அழைத்துச் செல்லப்படும். இருந்தாலும் கடவுள் பூஜிக்கப்பட வேண்டியவைகள். கடவுளைத் தொழும் அன்பர்கள் எப்படி ஒழுக்கமாக இருப்பார்கள்? இத்தகைய ஒழுக்கக்கேடான கடவுளைத் தொழுகிறோமே என்கிற நினைப்பாவது எப்போதாயினும் தோன்றுகிறதா உங்களுக்கு? மதமும், கடவுளும் ஒழுக்கத்தைக் கொடுக்க உண்டாக்கப்பட்டனவா அல்லது உள்ள ஒழுக்கத்தையும் கெடுக்க உண்டாக்கப்பட்டனவா? இதைக்கூட உணராது மிருக வாழ்க்கை வாழ்ந்து வருகிறீர்களே! இது நலமா? எனவே திராவிடத் தோழர்களே! உங்களுக்கு ஒழுக்கம் ஏற்பட வேண்டுமானால், நீங்கள் மனிதத் தன்மை பெற வேண்டுமானால், சாஸ்திர புராண சம்பிராயாதயங்களிலும், மதங்களிலும் உங்களுக்குள்ள பற்றுதலை பக்தியை நீங்கள் உடனே விட்டொழியுங்கள்!

இன்று நடைமுறையில் இருந்து வரும் கடவுளும், மதமும், சாஸ்திரமும், சட்டமும் அவற்றின் வழிவந்த சம்பிரதாயமும், உங்களை இழிவுபடுத்தவும், அடிமைப்படுத்தவும் ஆரியர்களால் உண்டாக்கப்பட்டவை. மோட்ச லோகங்களும், நரகலோகங்களும் உங்களை ஏமாற்றவும், பயமுறுத்தவும் உண்டாக்கப்பட்டவை. எனவே அவற்றை நம்பி மோசம் போகாதீர்கள். மந்திரிகள் என்னதான் ஆரிய அடிமைகளாகி இவற்றிற்காகப் பிரசாரம் செய்தாலும் நீங்கள் மந்திரிகளாயிற்றே என்று அவர்கள் கூற்றை நம்பிவிடாதீர்கள் இது மிகமிகப் பரிதாபமான காலம் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். அமெரிக்க விஞ்ஞானிகள் சந்திரமண்டலத்திற்கு எப்படிச் செல்வது என்று ஆராய்ச்சி செய்து வரும் இந்தக் காலத்தில் நாம் காட்டுமிராண்டி காலக் கடவுளுக்கு காணிக்கை செலுத்திக் கொண்டிருக்கிறோம் என்பதை சற்றே ஊன்றிப் பாருங்கள். சிக்கி முக்கிக் கல்லால் நெருப்பையுண்டாக்கிய காலத்தில் தோன்றிய இந்தக் கடவுள்களும், மதங்களும், சாஸ்திரங்களும், வேதங்களும் இன்றைக்கும் பயன்படக்கூடிய தன்மையுடையவைகளா என்பதையும், இவற்றால் நமது முன்னேற்றம் எவ்வளவு காலமாக தடைப்பட்டு வந்திருக்கிறது என்பதையும் சிந்தித்துப் பாருங்கள்!

உண்மையான கடவுள் பக்தி உடைய ஒருவரையாவது உன்னால் காட்ட முடியுமா? என்னதான் சிவ, சிவ, சிவ என்று ஓதி வந்தாலும் ராமா, ராமாவென்று ராமபஜனை செய்து வந்தாலும் எவனும் சிவனை நம்பியோ, ராமனை நம்பியோ நோய் வரும் போது டாக்டரை அழைக்காமல் இருப்பதில்லையே! பழமை பழமை என்று யாரும் மோட்டார் வண்டி ஏறாமல் இருப்பதில்லையே! 1000- மைல் வேகத்தில் ஆகாய விமானம் பறக்கும் காலம் இது. 6000 - மைலுக்கப்பால் உள்ளவனோடு அருகிலிப்பது போன்றே சம்பாஷித்து வரக்கூடிய காலம் இது.இவற்றிற்கெல்லாம் தவம் செய்ய வேண்டியதில்லை. தேங்காய் உடைக்க வேண்டியதில்லை. மந்திரமும் ஜபிக்க வேண்டியதில்லையே! எந்த சாதாரண பிச்சைக்காரன்கூட இந்தச் சாதனங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாமே! இப்படிப்பட்ட இந்தக்காலத்தில் நீ கல்லை கடவுளென்று பிரச்சாரம் செய்து வருகிறாயே! நாங்கள் செய்கின்ற முன்னேற்ற முயற்சியை எல்லாம் கடவுள் பேராலும் மதத்தின் பேராலும் மடமையைப் பரப்புவதன் மூலம் கெடுத்து வருகிறாயே! மக்களை எப்படி அறிவாளிகளாக்குவது என்பது பற்றிச் சிறிதும் கவலை இல்லாது உனது பேருக்காகவும், புகழுக்காகவும் அவர்களை மேலும் மடையர்களாக்கி வருகிறாயே! இது நியாயமா? இதுபோன்ற அறிவு விளக்கப் பிரச்சாரத்திற்கு ஏற்பாடு செய்வதில் பெருமையடைவதை விட்டு, இவள் வந்தாள் பாடினாள், அவள் வந்தாள் ஆடினாள் என்று கூறிக் கொள்வதில் பெருமைடைகிறாயே! இது உனக்கு ஏற்குமா? மானமுள்ள ஒரு சிலராவது (தோழர் ஷண்முகம் அவர்களைப் போல) இம்மாதிரி சீர்திருத்தக் காரியங்கள் செய்ய முன்வர வேண்டாமா? பயனற்றக் காரியங்களை விட்டொழித்துப் பயனுள்ள முற்போக்கான காரியங்களைச் செய்தல் அவசியமல்லவா!

தோழர்களே! நான் யாரையும் இம்மாதிரிதான் செய்ய வேண்டுமென்று கட்டாயப்படுத்தவில்லை. சமாதானமாகத்தான் என்னுடைய கருத்துக்களை எடுத்துச் சொல்லி வருகிறேன். உங்களுக்குள்ள அறிவைக் கொண்டு ஆலோசித்து பாருங்கள். உங்களை உயர்த்திக் கொள்ள வேண்டுமென்றால் தயவு செய்து அருள்கூர்ந்து நான் கூறுவதை செவிமடுத்துக் கேளுங்கள்.முன்னோர் கூறியது என்றோ, முன்னோர் செய்தது என்றோ, எதையும் அப்படியே ஏற்றுக் கொள்ளாதீர்கள். நெருப்பென்பதே என்னவென்று தெரியாத காலத்தில், சிக்கி முக்கி கற்களால் நெப்பை உண்டாக்கினவன் அந்தக் காலத்துக் கடவுள் தான் அந்தக் காலத்து எடிசன் (Edison) தான். அதைவிட மேலான வத்திப்பெட்டி வந்துவிட்ட பிறகு எவனாவது சிக்கி முக்கிக் கல்லை தேடிக் கொண்டு திரிவானா- நெருப்புண்டாக்க? எவனாவது திரிகிறானா? அப்படித்திரிந்தால் அவனை பைத்தியக்காரன் என்றல்லவா உலகம் மதிக்கும்.அக்காலத்திய புத்தி எவ்வளவு - இக்காலத்தில் புத்தி எவ்வளவு? இரண்டையும் ஒப்பிட்டுப் பார்க்க முடியுமா? அக்காலத்தில் எது பெருமையாகப் பேசப்பட்டதோ அதையே இக்காலத்தில் பெருமையாகப் பேச முடியுமா? பலூனில் பறந்த முதல் மனிதனின் பெருமை அன்று எவ்வளவோ இன்று எவ்வளவாக இருக்கிறது? கிராமபோனுக்கு அன்றிருந்த பெருமை எவ்வளவு? ரேடியோ வந்த பிறகு அதற்குள்ள பெருமை எவ்வளவு? இதையெல்லாம் நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா? இதே போல் ஒரு காலத்திய கடவுள் எப்படி இக்காலத்திற்கு உதவும் - இக்காலத்திற்கு பயன்படும்?

நான் சொல்லும் சில கருத்துக்கள் இன்று தலைகீழ் புரட்சியாக சிலருக்குத் தோன்றுகிறது. அடுத்த 20 - வருடத்தில் என்னையே பிற்போக்குவாதி என்று அன்றைய உலகம் கூறுமே! அறிவு வளர்ச்சியின் வேகம் அவ்வளவு அதிகமாயிருக்கிறதே! மாறுதலுக்கு கட்டுப்பட்டதன்றோ உலகம் மாறுதலுக்கு வளைந்து கொடாத மனிதன் மாள வேண்டியதுதானே! இதுவரை மாறுதலை எதிர்த்து வெற்றிபெற்றவர்களே கிடையாதே! நமது போக்குவரத்துச் சாதனங்கள் நமது வாத்தியங்கள் நமது உடைகள் நமது ஆபரணங்கள் இவை எல்லாம் இன்று எவ்வளவு மாறுபட்டு விட்டன. 20 -வருடத்திற்கு முன் எத்தனை பேர் கிராப் வைத்திருந்தார்கள்? இன்று எத்தனை பேர் குடுமி வைத்துள்ளார்கள்? இப்பெரிய கூட்டத்தில் குடுமி வைத்துள்ளார்கள் எத்தனை பேர் என்று சுலபத்தில் எண்ணிவிடலாமே!இயற்கை மாறுதலால் ஏற்பட்டதா இது அல்லது எல்லோர் வீட்டிலுமே 16 – வது நாள் காரியம் நடந்ததா? அல்லது சர்க்கார் தான் குடுமி வைத்திருக்கக்கூடாது என்று உத்தரவு போட்டதா? இல்லையே!இன்று எத்தனை பேர் நெற்றியில் பூச்சுடன் காணப்படுகிறார்கள்? விரல் விட்டு எண்ணிவிடலாமே. பூச்சுடன் காணப்பட்டால் அபராதம் விதிக்கப்படும் என்று உத்தரவு போட்டா பூச்சுக்கள் மறையும்படி செய்யப்பட்டன? இல்லையே!

------------- 17-10-1948 அன்று திருவொற்றியூரில் நடந்த சுயமரியாதைத் திருமணத்தில் தந்தை பெரியார் அவர்கள் பேசியது "குடிஅரசு" - 24-10-1948 இதழில் வெளியானது. நூல்: "பெரியார் களஞ்சியம்" தொகுதி:2 -பக்கம்:215

0 comments: