Search This Blog

18.4.08

இராமன் சீதையை சோரம் போனவளாகவே தீர்மானித்துவிட்டான்!

கோபம் அதிகரித்த இராமன் சீதையைப் பார்த்து

(சர்க்கம் 117;பக்கம் 488 ) கூறுகிறான்;

உன் இஷ்டமான இடத்திற்குப் போ !

'இதோ பத்துத் திக்குகளிலும் தடையில்லாமல் நீ (சீதை) சஞ்சரிக்கலாம்; நான் உத்திரவு கொடுத்து விட்டேன்; இஷ்டமான இடத்திற்கு நீ போகலாம்.'

(சர்க்கம் 117, பக்கம் 488)

எவன் உன் நடத்தையைச் சகிப்பான்!

'உத்தமமான வம்சத்தில் பிறந்து, நிகரற்ற தேஜசும் வீர்யமும் பொருந்தி, புருஷன் என்று பெயர் வைத்துக் கொண்டிருக்கும் எவனாவது துஷ்டனுடைய கிரகத்தில் பத்து மாதங்கள் வரையில் அவனுடைய அதிகாரத்திற்கும், சக்திக்கும் கட்டுப்பட்டு வசித்த தன் பார்யையை மறுபடியும் சேர்த்துக் கொள்வானா?'

உன்னைத் தொட்டான், மடியின் வைத்தான் ஆசையோடு!

'ராவணன் உன்னைத் தொட்டு மடியில் வைத்துக் கொண்டு போனான்; ஆசை பொழியும் நேத்திரங்களால் உன்னைப் பார்த்தான்.'

உன்னை ஏற்றால், பார்ப்போர் சீ!சீ! என்று நிந்திப்பர்!

'களங்கமற்ற இட்சவாகு குலத்தில் பிறந்தவனென்று பெயர் வைத்துக் கொண்டு உன்னை இப்போது சேர்த்துக் கொண்டால், ஒவ்வொரு பிராணியும் சீ! சீ! என்று நிந்திக்காதா?'

உன் மீது பிரியமில்லை, எங்காவது போய்விடு!

'என் குலதர்மத்தையும், கவுரவத்தையும் காப்பாற்ற உன்னைச் சத்ருவிடத்திலிருந்து மீட்டேன்; விசேஷ கீர்த்தியைச் சம்பாதித்தேன்; உன்னிடத்தில் எள்ளளவும் எனக்கு ஆசை இல்லை; நீ இஷ்டமான இடத்திற்குப் போகலாம்'

இது ஆலோசித்து செய்த முடிவு!

'நான் கோபத்தால் பதறிச் சொல்லவில்லை; இது சாந்தமாய் நெடுநேரம் ஆலோசித்து செய்த முடிவு.

லட்சுமணன், பரதன், சத்துருக்கனன், சுக்ரீவன், விபீஷணன் முதலியவர்களுடைய கிரகங்களில் எங்கே இஷ்டமோ அங்கே நீ வசித்துக்கொண்டிருக்கலாம்.'

ஏன் நீ இராவணனுக்கு வசப்பட்டு விட்டாய்

'நீ நிகரற்ற அழகுள்ளவள்; பார்ப்பவர்களுடைய மனத்தை அபகரிப்பவள்; இராவணன் உன்மேல் ஆசை வைத்து எடுத்துக்கொண்டு போனான்; சகலவிதத்திலும் அவனுடைய வசத்தில் இருந்தாய். அவனுக்கு நீ சுவாதீனப்படாமல் இருக்கமுடியுமா?' இப்படிக் கர்ணகடூரமான வார்த்தைகளைச் சொன்னான்.

குறிப்பு : இப்படி இராமன் ஆத்திரம் மிகுந்து பேசுகிறான். 'இராவணன் உன்னை அனுபவித்துவிட்டான். நான் உன்னைச் சேர்த்துக்கொள்ள மாட்டேன். எக்கேடு கெட்டு எங்காவது போய்விடு என் முன் நிற்காதே' என்று ஏசுகிறான்.ராமன் தன்னைப் பற்றிய உண்மைகளை எல்லாம் எப்படியோ அறிந்துவிட்டானே என்று சீதை உணர்ந்து விட்டாள். அவள் என்ன செய்வாள்? கண்ணீர் தாரை தாரையாகப் பெருகக் காட்டில் மதயானையால் முறுக்கப்பட்ட இளமரத்தைப் போல் தவித்தாளாம். வேறு என்ன செய்ய முடியும்? குற்றமுள்ளவளின் மனத்தில் வேறென்ன புலப்பட முடியும்?

------------- தந்தை பெரியார் - நூல்:"இராமாயணக் குறிப்புகள்" (எல்லா ஆதாரங்களைப் பொறுத்தே தொகுக்கப்பட்டவை )

0 comments: