Search This Blog

20.4.08

தேவையை எண்ணு! செலவையும் சிக்கனமாக்கு!

செழுமையில் ஆசைப்படாதே! உன்னுடைய தேவையை அனாவஸ்யமாக அதிகரித்துக் கொள்ளாதே! மற்றவர்களின் ஆடம்பரத்தைக் கண்டு, அவ்வாடம்பரத்தில் மோகம் கொள்ளதே! இன்று வெறும் ஆசைக்கென்று விரும்பப்படும் பொருளானது நாளைக்கு அடைய முடியாமற் போனால் நமக்குத் துன்பத்தையே விளைவிக்கும்! ஆனதால் அவசியமில்லாத பொருளைத் தேவையென்று கருதிவிடாதே! எளிய வாழ்க்கை நடத்து! ஏமாந்து போகாதே! என்று எச்சரிக்கை செய்து நம் வறுமையை மறக்க வழிசெய்து தந்தவரும் பெரியார்தான்.

அவரது பொருளாதார சிக்கனமும் சற்று அலாதியானதுதான். முழுக்கை சட்டையில் மோகம் கொள்ளாதே! நாலு முழுக்கைச் சட்டைகளுக்கு வேண்டிய துணியில் 5 அரைக்கைச் சட்டைகள் தைத்துக் கொள்ளலாமே! வேலை செய்யவும் சவுகரியமாயிருக்குமே! என்று கூறி சட்டை தைத்துக் கொள்வதில்கூடச் சிக்கனத்தை அனுஷ்டிக்கும்படி செய்வார். அதனால்தான் அவர் எப்போதும் அரைக்கைச் சட்டைகளை அணிந்து வருகிறார் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

அவரது சிக்கனத்திற்கு மற்றோர் உதாரணம் கூறுகிறேன். கவனித்துக் கேளுங்கள். அவர் ஒரு சமயம் கும்பகோணம் சென்றிருந்த போது தோழர் சின்னத்தம்பி வீட்டிற்கு விருந்துண்ணச் சென்றிருந்தாராம். அவர் வீட்டில் ஒரு ரேடியோ இருக்கக்கண்டு என்ன விலைக்கு வாங்கினீர்கள் என்று கேட்டாராம். அவர் ரூபாய்எண்ணூறுக்கு வாங்கியதாகச் சொன்னாராம். அதைக் கேட்டதும் அவர் பாத்தீங்களா இந்த திருட்டுப்பசங்க செய்கிற வேலையை! சாதாரண நாட்டுக் கள்ளிப் பலகையில் இந்தப் பெட்டியைச் செய்தால், இன்னும் 200 ரூபாய் குறைய விற்கலாமே! இந்தப் பளபளப்புக்காக நாமும் 200,300 அதிகம் தர வேண்டியிருக்கிறதே! விலை சரசமாயிருந்தால் இன்னும் அதிகம் பேர்கூட வாங்கச் சவுகரியமாக இருக்குமே! என்று கூறினாராம். மலர் மாலை அணிவதும் வாழை இலையிலுண்பதும் மக்கள் உழைப்பை மதிக்கும் செயலன்று.

இப்படி எதற்கெடுத்தாலும் சிக்கனந்தான். ஆம்! மண்ணும் விண்ணும்கூட இவருக்குச் சிக்கனம் செய்யப்பட வேண்டியவைதான். காரணமின்றி அவர் நமக்கு சிக்கனம் போதிக்கவில்லை. சிக்கனம் அனைவருக்கும் அவசியமானது; அதுவும் நம்மைப் போன்ற ஊதாரி மக்களுக்கு சிக்கனக் கருத்து மகா மகா அவசியமானது. எதையும் வேஸ்ட் செய்வதுதான், வீண்செய்வதுதான் நமது பழக்கம். பாருங்கள்! இந்த மேஜை மீது குவிந்து கிடக்கும் இம்மலர் மாலைகளால் யாருக்கு என்ன லாபம்? இம்மாதிரி எத்தனை மாலைகள் அன்றாடம் பழாகின்றன? நம் நாட்டில் மாலை அணிவித்தல் என்ற அர்த்தமற்ற சடங்கால் தினம் எத்தனை ஆயிரம் ரூபாய்கள் பாழாகின்றன என்பதை நீங்கள் அறிவீர்களா? இதற்காக எத்தனை பேருடைய உழைப்பு எத்தனை ஏக்கர் பூமிகள் வீணாக்கப்படுகின்றன என்பது பற்றி நீங்கள் சிந்தித்ததுண்டா?

அடுத்த அதிசயம் என்னவென்றால், வேறெந்த நாட்டிலும் இல்லாத வாழை இலையிலுண்பதென்ற பழக்கம் நம் நாட்டில் இருந்து வருகிறது. கோப்பையில் சாப்பிடுவது அநாசாரம். வாழை இலையில் உண்பது நமக்குப் பெருமை. இப்பெருமைக்காக லட்சக்கணக்கான ரூபாய் பெறுமான இலைகள் அன்றாடம் வீதியில் எறியப்பட்டு வீதியை அசிங்கப்படுத்தி வரவேண்டியதா? பகுத்தறிவுக் கொண்டு சிந்திக்க வேண்டாமா நீங்கள்? வாழைத் தோட்டங்கள் இல்லையானால் அவ்விடங்களில் எவ்வளவு அவசியமான உணவுப் பொருள்கள் பயிரிடக்கூடும்? வாழைக்காயென்ன அத்யாவசியப் பொருளா? வாழையிலை அறுப்பதால் வாழைக்காய் அதிகம் காய்க்கப்படுவதில்லை. ஆகவே இலைக்கென்று தனித் தோட்டங்கள் சிலர் வைத்து வருகிறார்கள். வாழையுற்பத்தி குறைக்கப்பட வேண்டும். மலர்கள் உற்பத்தியும் குறைக்கப்பட வேண்டும். மக்களும் வாழையிலையில் உண்ணும் பழக்கத்தைக் கைவிட்டுத் தட்டுகளில் உண்ணல் வேண்டும். மலர் மாலை அணிவித்தலை விட்டுத் துணி மாலையாவது நூல் மாலையாவது அணிவித்தல் வேண்டும். மற்றவர்கள் செய்யாவிட்டாலும் பகுத்தறிவுப் பாதை வழிச்செல்லும் நாமாவது நாசகரமான இப்பழக்கங்களைக் கைவிடல் வேண்டுவது முக்கியம். இவற்றையெல்லாம்கூட நமக்கு விளக்கிக் காட்டியவர் பெரியார்தான்.

இதை நான் கூறாவிட்டாலும் நமது சரித்திர ஆசிரியர்கள் கூறுவார்கள். நமது தற்கால ஆசிரியர்கள் கூறாவிட்டாலும் பிற்கால ஆசிரியர்களாவது இந்நாட்டில் பகுத்தறிவொளியை வீசியவர் பெரியார் என்பதை மறக்காமல் பொறிப்பார்கள், அவர்கள் பொறிக்க மறந்து விடுவார்களானால் அவர்களைச் சரித்திர ஆசிரியர்கள் என்று உலகம் மதிக்காது.

---------------நூல்: பட்டுக்கோட்டை கே.வி. அழகிரிசாமி யின் "இதோ பெரியாரில் பெரியார்" பக்கம் 10-13

0 comments: