Search This Blog

6.4.08

இன்று நம்மால் செய்யப்படும் காரியங்கள் முழுமையும் ஜாதி ஒழிப்புக்காக

இராமன் படத்தை "இழிவுப்படுத்தியதை"ப் பற்றி பார்ப்பனப் பத்திரிக்கைகள் கற்பனைச் செய்திகளை உண்டாக்கிக் கொண்டு தேர்தலில் வெற்றி பெற இமாலயப் பிரயத்தனம் செய்து மானங் கெடும்படியான தோல்வியை அடைந்தார்கள். "அதன் பயனாக" என்று சொல்லத்தக்க அளவில் வெற்றி பெற்ற தி.மு.கழகத்தார். இராமனைக் காப்பாற்றி அய்ந்து வருடம் ஆளலாம் என்கின்ற நிலைக்கு வரவேண்டியவர்களாகி விட்டார்கள். இராமனை இழிவுப்படுத்தியதாக சொல்லப்பட்ட கற்பனைக் குற்றச்சாட்டிற்கு எந்தவித பதிலும், சமாதானமும் சொல்லவில்லை. காரணம், தி.மு.க. விஷயத்தில் தாட்சண்யம் கொண்டேதான்.இராமனை இழிவுப்படுத்தியதை யாரும் மறுக்காமலிருந்தும், இழிவுப் பிரச்சாரம் பலமாக, அதி பலமாக செய்யப்பட்டு வந்தும், எதிரிகள் (பார்ப்பனர்) படுதோல்வி அடைந்திருப்பது யாவரும் அறிந்திருப்பதேயாகும்.

இப்போது எனது நிலை என்ன என்பதைப்பற்றி சிந்திக்க வேண்டியவனாக இருக்கிறேன். இராமன் என்கின்ற பெயரையோ, உருவத்தையோ பார்ப்பனர்கள் பார்ப்பனரல்லாதவர்களை கடவுளாகக் கருதும்படியும் அதன் பயனாகவே பார்ப்பனரல்லாதவர்கள் (திராவிடர்களை) சூத்திரர், இழிஜாதி மக்கள் என்று ஏற்றுக் கொண்டு அதற்கேற்ப நடத்தும்படியும் செய்துவிட்டார்கள்.இதை மாற்ற வேண்டுமென்கின்ற பிடிவாதக் கொள்கையில் அய்ம்பது ஆண்டாகத் தொண்டு செய்து வருகிறேன். அதன் பயனாய் இராமன் கடவுள் படம் செருப்பால் அடிக்கப்படவில்லை என்றாலும் பலவிதமான அவமானச் சின்னங்கள் செய்யப்பட்டே வந்திருக்கின்றன. ஆதலால் இப்போதும் அது தொடர்ந்து செய்யப்பட வேண்டியிருக்கிறது.

தேர்தலுக்குப் பிறகு நமது மக்களுக்கு இக்காரியம் செய்யப்பட வேண்டும் என்பதில் அதிகமான உற்சாகமும், ஊக்கமும் இருந்து வருகிறது. ஆங்காங்கு கூட்டம் நடத்தி அதில் செய்யவும், மக்கள் துடிக்கிறார்கள். நானும் மக்கள் அந்தப்படியே நடக்க வேண்டும் என்றே அறிக்கை விட்டு இருக்கிறேன்; சொற்பொழிவுகளிலும் வேண்டுகோள் விட்டிருக்கிறேன்.இந்தப்படி செய்ய ஏற்பாடு செய்யப்பட்ட சில இடங்களில் நம் தோழர்களைப் போலீசார் அழைத்து ஊர்வலத்தில் இக்காரியம் செய்வதை நிறுத்திவிடும்படிக் "கேட்டுக் கொண்ட"தாகத் தெரிகிறது. போலீசார் கேட்டுக் கொள்வதும் தடை விதிப்பதும் இரண்டும் ஒன்று என்பது தான் எனது கருத்து.ஆதலால், நமது ஜாதிமத, கடவுள் ஒழிப்புச் பிரச்சாரத்தில் இப்போதைக்கு அதை மாத்திரம் நிறுத்தி வையுங்கள் என்று தோழர்களை நான் கேட்டுக் கொண்டிருக்கிறேன் என்றாலு, நமது எதிரிகள் (பார்ப்பனர்) ஜாதி, மதம், கடவுள் காப்பாற்றப்படும், பரப்பும் பிரச்சாரத்தால் தொடர்ந்து செய்து கொண்டே இருக்கிறார்கள்.

உதாரணமாக வடநாட்டில் "இராம லீலா" நடக்கிறது. அதில் இராவணன் எரிக்கப்படுகிறான். தமிழ்நாட்டில் சமணர்களைக் கழுவேற்றிய உற்சவம் நடக்கிறது. சூரசம்ஹார உற்சவம்; இவை தவிர கந்தன், கணபதி, இராமன், கிருஷ்ணன் முதலிய கடவுள்கள் பிறந்த நாள் உற்சவங்கள் சில விடுமுறைகள் நடக்கின்றன. இவைகளையெல்லாம் எதிர்ப்பில்லாமல் நடக்கவிட்டு, எதிர்க்காரியம் செய்யாமல் சும்மாவும் இருப்பது என்றால் பிறகு எப்படித்தான், என்றைக்குத்தான் என்றைக்குக்தான் நமது இழிவு நிலையை – ஆடநம்பிக்கையைப் போக்கிக் கொள்வது என்பது எனக்குப் புரியவில்லை.நாட்டில் ஆயிரக்கணக்காண கோயில்கள் இருப்பதுடன், பல நூற்றுக்கணக்கானவற்றில் ஏராளமான உற்சவங்கள், நாட்கள், நட்சத்திரங்கள் நடந்த வண்ணமிருக்கின்றன. எதிரிகளுக்கு புராணங்கள், பத்திரிக்கைகள், பிரச்சாரங்கள், காலட்சேபங்கள், நாடகங்கள், சினிமாக்கள், பண்டிகைகள் முதலியவைகள் ஏராளமாக நடந்து வருகின்றன. இந்த நிலையில் நமக்கு பரிகார மார்க்கம் என்ன இருக்கிறது? இவைகளை ஒழுங்காய் நடத்திக் கொடுக்கும் ஆட்சிதானே நம்மிடம் இருக்கிறது!இப்போது மக்கள் நமக்கு அனுகூலமாய் இருக்கிறார்கள். இதுபோல் எப்போதும் இருந்ததில்லை. இனி இருக்கப் போகிறார்களா என்பது சொல்ல முடியாத செய்தியாகும்.

என்னவென்றால் "இராமனை தார் பூசி நெருப்பிட்டுக் கொளுத்தியதோடு, இராமன், முருகன் முதலாகிய கடவுள்களை செருப்பாலடித்ததாக" உருவகப்படுத்தி படம் எழுதி சுவற்றில் ஒட்டி பல லட்சம் பத்திரிக்கைகளில் வெளியிட்டு இந்தியா முழுவதும் தெரியும்படி, அறியும்படிச் செய்த பிறகு தமிழ்நாட்டிலும், ஆந்திரம், மைசூர் நாட்டிலும் மற்றும் இந்தியாவில் பல இடங்களிலும், நாம் இமாலய வெற்றியும், பார்ப்பனர், ஆத்திகர் படுதோல்வியும் அடையும்படியான நிலை ஏற்பட்டதென்றால் இந்த வெற்றி செருப்படிக்கா அல்லது அது கூடாது என்பதற்காக என்று ஆட்சியாளரையும் மற்றும் பார்ப்பனரையும் கேட்கிறேன்.

நாட்டின் பட்டிதொட்டி, மூலை மூடுக்குகளிலெல்லாம் ஆள் உயர செருப்படி சுவரொட்டிப் படங்களும், இராஜாஜியும் காமராஜர் முதலிய பெருந்தலைவர்கள் என்பவர்களும் பிரச்சாரம் செய்தும் (எதிரிகளுக்கு) செய்தவர்களுக்கு வெட்கப்படத்தக்க தோல்வி என்றால், மக்கள் செருப்படியை விரும்புகிறார்கள் என்று அர்த்தமா? வெறுக்கிறார்கள் என்று அர்த்தமா? என்று கேட்கிறேன். இந்த இடத்தில் நான் ஆத்திக – நாத்திகப் பிரச்சாரம் செய்யவரவில்லை. மான- அவமான சுயமரியாதைப் பிரச்சாரம் செய்கிறேன். இராமன், கந்தன், கிருஷ்ணன், கணபதி என்பவர்கள் கடவுள்களா? கதைப்படி யோக்கியர்களா? நமக்கும் இவர்களுக்கும் நம்மை இழிவுபடுத்தியதல்லாமல் வேறு சம்பந்தம் என்ன என்று கேட்கிறேன்.

எது எப்படி இருந்தாலும் இன்றைய தினம் நமது மக்களுக்கு ஜாதி ஒழிய வேண்டும், பார்ப்பனர் ('பார்ப்பனர்') ஒழிய வேண்டும் என்பது தான் முக்கிய இலட்சியமே ஒழிய, கடவுள் காப்பாற்றப்பட வேண்டும் மரியாதை செய்யப்பட வேண்டும் என்பது முக்கியமல்ல. ஆதலால் அதற்கேற்ற காரியங்கள் செய்யப்பட வேண்டியது அவசியமாகும். ஆகவே "கடவுள்" விஷயத்தில் இன்று நம்மால் செய்யப்படும் காரியங்கள் முழுமையும் ஜாதி ஒழிப்புக்காக, நமக்குள்ள ஜாதி ஒழிப்புக்காக, நமக்குள்ள ஜாதி இழிவு நீக்கத்திற்காகவே ஒழிய, யாருடைய மனமும் புண்பட வேண்டும் என்பதற்காகவோ, யாருக்கும் மனச் சங்கடத்தை உண்டாக்க வேண்டும் என்பதற்காகவோ அல்ல என்பதை அரசாங்கத்திற்குத் தெரியப்படுத்தி கொள்கிறேன்.

மக்களும் இதை நல்லவண்ணம் உணர வேண்டுமென்று வேண்டிக் கொள்கிறேன். நமது எண்ணமெல்லாம் இந்த ஆட்சிக் காலத்திலாவது ஜாதி மூட நம்பிக்கை ஒழிய வேண்டுமென்பதேயல்லாமல், எப்படியாவது இந்த ஆட்சி அய்ந்தாண்டுக்கு இருக்க வேண்டும் என்பதே அல்ல.ஆகையால், ஆட்சியாளர்கள் இந்த வாய்ப்பைக் காலம் கடத்துவதற்குப் பயன்படுத்திக் கொள்ளாமல், காரியம் நடப்பதற்கு ஏற்ற வண்ணம் நடந்து கொள்ள வேண்டுமென்பது எனது ஆசை. மக்கள் ஆதரவைப்பற்றி ஆட்சியாளர்கள் சிறிதும் சந்தேகப்பட வேண்டிய அவசியமில்லை. மக்களைப்பற்றி ஆட்சியாளருக்குத் தெரிந்த அளவுக்குக் குறையாமல் எனக்கும் தெரியும். இப்போது நான் சும்மாயிருந்துவிட்டால் மக்கள் என்னைக் கைவிட்டு விடுவார்கள் என்ற பயம் எனக்கு இருந்து வருகிறது. ஆகையால் எப்படியாவது நம் கடமையைச் செய்யாமல் நழுவிவிடுவது நமக்கு நல்லதல்ல என்றுதான் கருதிக் கொண்டிருக்கிறேன்.

--------- 28-03-1971 "விடுதலை" நாளிதழில் தந்தை பெரியார் அவர்கள் எழுதிய தலையங்கம். "பெரியார் களஞ்சியம்" - தொகுதி:2 … பக்கம்: 43

0 comments: