Search This Blog

16.4.08

இராமர், இராமாயணம் - வரலாற்று அறிஞர்கள் கூறுவது என்ன? (3)

அவருடைய ஆய்வில் இராமன் என்ற ஒருவர் இருந்தது, படையெடுத்தது என்பன போன்ற செய்தி களுக்கும் புதை பொருள் ஆதாயம் ஏதும், தொல்லியல் ஆதாரம் ஏதும் இல்லை என்பதனைத் தொல்லியல் துறைக் கொண்டு மெய்ப்பித்தார்.

வரலாற்று அறிஞர்கள் எவரும் குரங்குப்படை கொண்டு ராமர் போரிட்டார் என்பதையோ, இராவணன் பத்துத் தலை அரக்கன் என்பதையோ இன்றுவரை ஏற்றுக் கொள்ளவில்லை.
எச்.டி. சங்காலியாவின் ஆராய்ச்சிதான் இன்றைய நாளில் சேதுக் கால்வாய்த் திட்டம் நிறைவேறச் செய்யத் தகுந்த ஆதாரமாக விளங்குகிறது.

எச்.டி. சங்சாலயா, இராமாயணம் குறிப்பிடும் லங்கா எனப்படும் இலங்கை இன்றைய சிறீலங்கா இல்லை. ஆம்! இலங்கைத் தீவு இல்லை. சோட்டா நாகபுரிப் பகுதியில் உள்ள ஜப்பல்பூர்தான் இலங்கை. அங்கே சாலா மரங்கள் ஏராளமாக விளைகின்றன என்று குறிப்பிடுகிறார்.

இராவணன் கோண்டு மரபைச் சேர்ந்த அரசன் எனவும் பெரிய ஏரியின் மய்யத்தில் அமைந்துள்ள சிறிய குன்றை ஆண்டு வந்தவனே இராவணன் என்றும் கூறுகிறார் எச்.டி. சங்காலியா.

இராமாயணத்தில் அனுமன் தூது செல்கையில் இராமனின் கணையாழியைக் கொண்டு சென்று, இராமனின் தூதனாகத் தன்னை அடையாளம் காட்டியதாகக் கூறப்படும் நிகழ்ச்சியைப் பற்றிக் கூறும் எச்.டி.சங்காலியா, இராமாயணத்தில் வரும் இந்தக் கணையாழி சம்பவம் - பழைய இராமாயணக் கதையில் இடம் பெறவில்லை என்பதோடு, கணையாழியை இந்திய அரசர்கள் முத்திரை மோதிரமாக அணிகின்ற பழக்கமே இந்தோ-கிரேக்க அரசர்களின் காலத்திலும், அதற்குப் பின்னும் தோன்றிய பழக்கமே என்று ஆதாரத்துடன் காட்டுகிறார்.
இராமாயணத்தில் கூறப்படும் மது, மங்கையர், பொன் ஆகியன எல்லாம் ரோமானியரின் தொடர்பிற்குப் பின்னரே இந்தியாவில் வழக்கத்திற்கு வந்தவை என்றும் சுட்டிக் காட்டுகிறார்.
இந்த ஆதாரங்கள் எல்லாம் - பதினேழரை இலட்சம் ஆண்டுகளுக்கு முன், பதினெட்டு லட்சம் ஆண்டுகளுக்கு முன் இராமாயணம் நடைபெற்றது என்று கூறிவரும் பொய்களைப் புனை சுருட்டுகளைத் தவிடு பொடியாக்குகின்றன.

சரி, அயோத்தியின் நிலைமை என்ன வென்பதையும் தொல்லியல் அடிப்படையில காண்போம்.
கங்கைச் சமவெளி - மனிதர்கள் வாழத் தகுந்த நிலப் பரப்பாக ஆனது சுமார் 8000 ஆண்டுகளுக்கு முன்புதான். கங்கைச் சமவெளியில் வாழ்ந்த மனிதன் உலோகங்களின் பயனை அறிந்து கொண்டதே சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்தான்.

சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன் அயோத்தி அதிக மனித நடமாட்டம் இல்லாத பகுதியாக இருந்தது. எனவே பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு அயோத்தி எனும் ஒரு நகரம் இருந்தது, அங்கு நாகரிகம் மிக்க மக்கள் வாழ்ந்தனர், ஓர் அரசு இருந்தது, உலோகங்களால் உருவானஅணிகலன் களை அணிந்தனர் என்பனவெல்லாம் பொய்யும் புனை சுருட்டுமாக உலா வரும் கற்பனைகள் என்பது வெளிப்படும். அதற்கு ஆதாரமாகத் தான் கணையாழி பற்றிய செய்தியை மேலே கூறினோம்.

அயோத்திப் பகுதியில், தொல்லியல் ஆய்வு மேற் கொண்ட சங்காலியா, அயோத்திப் பகுதியில் கிடைத்த மட்பாண்டங்களை ஆய்வு செய்து - கி.மு. எட்டாம் நூற்றாண்டில்தான் அயோத்தி உருவாகி இருக்கலாம் என்றும் முடிவிற்கு வருகிறார்.

ஆனால், மரபு வழியாக என்ன கூறுகிறார்கள்? இராமர் திரேதா யுகத்தில் வாழ்ந்தவர், மகாபாரத வீரர்களுக்கு முற்பட்ட காலத்தவர் என்றெல்லாம் கற்பனையாகக் கூறி வருகிறார்கள். ஆனால் அயோத்தியில் கிடைத்த பொருள்களின் காலத்தை அறிவியல் அடிப்படையில் ஆய்வு செய்தால், கி.மு. 8 ஆம் நூற்றாண்டிற்கு மேல் செல்ல எவ்வித ஆதாரமும் இல்லை.

நிலவியல் அறிஞரும், இந்திய அரசின் ஆலோசகராக விளங்கியவருமான புவியியல் அறிஞர் டி.என். வாடியா பாரதீய வித்யாபவன் வெளியிட்டுள்ள கூந ழளைவடிசல யனே உரடவரசந டிக வாந ஐனேயை ஞநடியீடந தொகுதி ஒன்று பக்கம் 83 இல் மனிதன் வாழ்வதற்கேற்றதாக கங்கைச் சமவெளி உலர்ந்து உறுதியானது 5000 முதல் 7000 ஆண்டுகளுக்கு முன்னர்தான் என்று குறிப்பிட்டுள்ளார்.

இப்படி ஆய்வு வெளிப்படுத்துகையில் பதினேழரை இலட்சம், பதினெட்டு இலட்சம் ஆண்டுகள் என்று பூ சுற்றும் வேலையைப் பொய்யைப் புனை சுருட்டை விற்பனை செய்யும் வழக்கத்தை சேது சமுத்திரத் திட்டத்திற்கு முட்டுக் கட்டை போடுபவர்கள் கைவிடுவார்களா? என்பதே நமது கேள்வி.

இராமர் வரலாற்று மானுடன், இராமாயணம் வரலாற்று நிகழ்வுதான் என்று எந்த வரலாற்று அறிஞரேனும் எங்கேனும் குறிப்பிட்டிருக்கிறார்களா? என்று தேடித் தேடிப் பார்த்தோம். எந்த ஒரு வரலாற்று அறிஞரும், எந்த ஒரு நூலிலும் அவ்வாறு கூறவில்லை.
அக்காலத்திய வரலாற்று அறிஞர்கள் தாம் கூறவில்லை. இக்காலத்திய புகழ் பெற்ற வாழும் - வரலாற்றறிஞர்களாவது - இராமாயணம் வரலாறுதான் என்று கூறியிருக்கிறார்களா? என்று தேடிப் பார்த்தால், அவ்வாறு கூற எவரும் முன் வரவில்லை. இது எல்லாம் அரசியல் சித்து விளையாட்டுக்காரர்களின் ஜிகினா வேலை என்றுதான் வெளிப்படுகிறது.

அரசியல் ஆதாயம் தேட, இராமர் பெயரை, மக்கள் மத்தியில் பரவியிருக்கின்ற பக்தி உணர்வைத் தூண்டி விட்டு அந்தப் பக்தி நெருப்பில் குளிர் காய்கின்ற முயற்சியாகவே விளங்குகிறது.

டெல்லியில் நடைபெற்ற இந்திய வரலாற்றுக் காங்கிரசின் 68-ஆவது மாநாட்டில் பங்கேற்கச் சென்றபோது, அங்கே பாரதிய ஜனதா வடபுலத்து இளைஞர்களை ஊர்வலமாக அழைத்துச் சென்று, இல்லாத ஒன்றைக் காப்பாற்றப் போவதாக ஒரு மாயையைக் கடந்த டிசம்பர் 30 ஆம் தேதி ஏற்படுத்தியது. எனவே வரலாற்று அறிஞர்களின் சேது பற்றிய, இராமர், இராமாயணம் பற்றிய கருத்துகளைத் திரட்டும் முயற்சியை மேற்கொண்டேன்.

மாநாட்டில் சந்தித்த வரலாற்று அறிஞர்கள் திருமதி சுகிர்தா ஜெயஸ்வால், முனைவர் இர்பான் ஹபீப், முனைவர் கே.எம். சிறீமாலி, முனைவர் ஷெரீன் முஸ்வி ஆகிய அனைவரும் ஒட்டு மொத்தமாக இராமரும், இராமாயணமும் நாடறிந்த கற்பனைக் கதையே யன்றி வரலாற்று உண்மை துளியேனும் கிடையாது என்று தெளிவு படக் கூறியதுடன், தங்கள் கருத்துகளைக் கைப்பட முன் வந்து எழுதிக் கொடுத்தனர். அரசியல்வாதிகளின் சித்து விளையாட்டு இது, அரசியல் ஆதாயம் கருதிச் செய்யும் திருவிளையாடல் இது என்பதையும் கூறத் தயங்கவில்லை.

இந்தியாவிலேயே மூத்த பேராசிரியையாக விளங்கும் பேராசிரியை ரோமிலா தாபர் 2007 செப்டம்பர் 28 ல் இந்துப் பத்திரிகையில் தம் கருத்தைப் பதிவு செய்திருந்தார்.
இராமனின் வரலாற்றை உறுதியாக முடிவு செய்வதற்கு வரலாறு, தொல் பொருள் ஆராய்ச்சியின் பார்வையில் கண்ணுற்றால், இன்று வரையில் எந்த வித ஆதாரமும் இல்லையென்றும், இதனை இந்தியத் தொல் பொருள் ஆய்வுத் துறை அறிவித்தது சரியே எனவும் குறிப்பிட்டிருந்தார்.

பேராசிரியை முனைவர் சுகிர்தா ஜெயசுவால் 75 வயது கடந்த பேராசிரியை. டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக வரலாற்றுத் துறைத் தலைவராக விளங்கியவர்.

இந்திய வரலாற்றுக் காங்கிரசின் தலைவியாகத் தேர்ந்தெடுக்கப் பெற்று இந்தியாவை உருவாக்குவதில் சாதி, பால், கோட்பாடு ஆகியன வகிக்கும் பங்கு என்னும் புரட்சிகரமான உரையை நிகழ்த்தியவர்.

கடந்த ஆண்டு கோழிக்கோட்டில் நடைபெற்ற 67-ஆவது இந்திய வரலாற்று மாநாட்டில் இராமதாசரதி என்னும் தலைப்பில் இராமனின் கதையை ஆராய்ந்து அரிய உரை நிகழ்த்திய வரலாற்று மூதறிஞர். ஆங்கிலத்தில் அவர் கைப்பட எழுதித்தந்த செய்தியைத் தனியே காணலாம். அச்செய்தியின் தமிழாக்கம் இதோ:

விஷ்ணுவின் அவதாரமாக மாறிய இராமனின் கதை, தெற்கு நோக்கி இராமன் அவருடைய வானர சேனையின் படையெடுப்புப் பற்றிய வால்மீகியின் வருணனை பொதுவாக வரலாற்று அறிஞர்களாகல் கவியின் கற்பனை என்று பொதுவாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது. இன்றைய அரசியல் சூழ்நிலையில், அறிவியல் வரலாற்று முறைமையில் கூறப்படும் இத்தகு கருத்துகளை, வலது சாரிப் பிரிவினர் மார்க்சிய வரலாற்று அறிஞர்களின் ஒரு சார்பான கருத்து என்று விமர்சிக்கப்படுகிறது. ஆனால் முந்தைய தலைமுறையைச் சேர்ந்த வரலாற்றறிஞர்கள், மார்க்சிய வாதிகள் என முத்திரை குத்தப்படாதவர்கள் இராமனின் இலங்கைப் படையெடுப்புக்கு வரலாற்று அடிப்படை ஏதும் இல்லை என்று சுட்டிக் காட்டுகின்றனர்.

ஒருவர் இத்தருணத்தில் பேராசிரியர் கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி, பேராசிரியர் டி.சி.சர்க்கார், பேராசிரியர் எச்.டி. சங்காலியா, ஆந்திராவின் முனைவர் பி.பி. சாஸ்திரி ஆகியோரின் எழுத்துக்களை மேலே கூறிய கருத்துகளுக்குச் சான்றாகக் காட்டலாம்.

---------------- முனைவர் பேராசிரியர் ந.க.மங்கள முருகேசன் அவர்கள் "விடுதலை" 6-2-2008 இதழில் எழுதியது

0 comments: