Search This Blog

16.4.08

எது பகுத்தறிவு - எது பாசிசம்?

இன்றைய "தினமணி" ஏட்டின் தலையங்கத்துக்கு
திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் அளித்துள்ள பதில் வருமாறு
:-


ஆர்.எஸ்.எஸின் "அதிகாரப்பூர்வ" நாளேடாகவே மாறிவிட்ட "தினமணி" ஏடு - பா.ஜ.க.வுக்கு நாளேடு இல்லாத குறையை நூறு விழுக்காடு போக்கி வருகிறது. பா.ஜ.க.வின் மாநிலக் கூட்டத் திலேயே கூட "தினமணி"க்கு "நம்மவர்" ஒருவர் ஆசிரியராகக் கிடைத்துள்ளார்; நமக்குப் பத்திரிகை இல்லாத குறை இப்பொழுது பூர்த்தி செய்யப்பட்டுவிட்டது என்று கூறிச் சிலாகித்துள்ளனர். இன்றைய "தினமணி" (15.4.2008) தலையங்கம் அதனை உறுதிப்படுத்தியுள்ளது. சித்திரை முதல் நாள் - சர்வதாரி வருடம் அது தொடர்பான கோயில் பூஜை - பஞ்சாங்கம் படிப்பது போன்றவைபற்றி திருவாளர்கள் ராமகோபாலனும், இல. கணேசனும் என்ன கூறி யிருக்கிறார்களோ - அதன் மறுபதிப்பாகவே இன்றைய தினமணி தலையங்கம் சீறியிருக்கிறது.

பகுத்தறிவல்ல, பாசிசம் என்ற தலைப்பில் தனது ஆத்திரத் தைக் கொட்டித் தீர்த்துள்ளது.
தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம் என்று மான மிகு மாண்புமிகு கலைஞர் தலைமையிலான அரசு ஆணை பிறப் பித்துள்ளது - அக்கிரகாரமே தீயில் விழுந்ததுபோல துடியாய்த் துடிக்கிறார்கள்.

தினமணி வைக்கும் குற்றச்சாட்டுகள்

(1) தைத் திங்கள் முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்று அரசு அறிவித்துவிட்டது என்பதால், சர்வதாரி ஆண்டு தை முதல் நாள்தான் பிறக்கவேண்டும் என்று கூறும் வேடிக்கை அரங்கேறு கிறது - இது தினமணியின் முதல் குற்றச்சாட்டு.
தைத் திங்கள் முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்று அரசு சட்ட ரீதியாக அறிவித்துவிட்ட பின், பிரபவ என்று தொடங்கி அட் சய என்பதில் முடியும் என்கிற 60 ஆண்டுகளும் காலாவதியாகி விட்டன என்பது சொல்லாமலே விளங்கும்.
நாரதன் என்கிற ஆண் கடவுளுக்கும், கிருஷ்ணன் என்கிற ஆண் கடவுளுக்கும் பிறந்ததுதான் 60 தமிழ் வருஷங்கள் என்கிற ஆபாசத்தை இந்த 2008-லும் ஏற்கவேண்டுமா?
உண்மையிலே இந்த ஆபாசத்தை ஏற்பதுதான் பாசிசம் - நிராகரிப்பதுதான் பகுத்தறிவு - ஆனால், பார்ப்பன தினமணியோ இதனைத் தலைகீழாகப் புரட்டிச் சொல்கிறது.


அழிச்சாட்டியமா?


(2) அரசு அறிவித்தது என்பதற்காக சமயச் சடங்குகளை மாற்றவேண்டும் என்று அழிச்சாட்டியம் செய்வதும், அதிகாரம் இருக்கிறது என்பதற்காக அந்த ஆணைப்படிதான் ஆலயங்களில் வழிபாடுகள் நடத்தப்படவேண்டும் என்று கட்டாயப்படுத்துவதும் ஆட்சியாளர்களின் பாசிச மனப்போக்கைப் படம் பிடித்துக் காட்டுகிறது என்பது மட்டுமன்றி மக்களாட்சித் தத்துவத்தில் இவர்களுக்கு எந்த அளவுக்கு நம்பிக்கை இருக்கிறது என்பதையும் தெளிவுபடுத்துகிறது.

- இது இரண்டாவது குற்றச்சாட்டு.

தமிழ்நாட்டில் தமிழன் கட்டிய கோயில்களில் புகுந்துகொண்டு, தமிழையும், தமிழர்களையும் வெளியேற்றி, தங்கள் கைக்குள் கோயில்களைப் பார்ப்பனர்கள் வைத்துக் கொண்டிருப்பதும். அதில் தலையிட்டால், அவர்களாகவே எழுதி வைத்துக்கொண்டு இருக்கிற சாஸ்திர சம்பிரதாயங்களைக் காட்டி எதிர்ப்புக் குரல் கொடுப்பதும் பார்ப்பனர்களின் விஷமும், அசல் அழிச்சாட்டியமுமாகும்.

கோயில்களில் சமஸ்கிருதம் புகுந்ததும், பார்ப்பனர்கள் மட்டுமே அர்ச்சகர்கள் என்பதும்கூட, இவையெல்லாம் நடைமுறைக்கு வருவதற்கு முன்பாக இருந்த நிலைகளை மாற்றி அமைத்ததுதானே - தமிழ்நாட்டு அரசர்களின் ஆணையும், ஏற்பாடும்தானே!
முடியரசனால் ஒரு ஆணையைப் பிறப்பிக்க முடியுமானால், குடி யரசின் ஆட்சியால் வேறு ஒரு ஆணையை காலத்தின் தேவையைக் கருதி நிறைவேற்றுவது எப்படி குற்றமாகும்? எப்படி மக்களாட்சித் தத்துவத்துக்கு விரோதமாகும்?
பழனி கோயிலில் பூசை செய்த தமிழர்களான பண்டாரங்களை வெளியேற்றியதும் பார்ப்பன அமைச்சரின் உத்தரவுதானே?


அரசமைப்புச் சட்டம் என்ன கூறுகிறது?


(3) மக்கள் சர்வதாரி ஆண்டு சித்திரையில் பிறக்கிறது என்று நம்பினால், அந்த நம்பிக்கைக்கு ஏற்ப ஆலயங்களில் பூஜை செய்ய விரும்பினால், அதைத் தடுக்கும் உரிமையோ, மக்களின் மத நம்பிக்கைகளில் தலையிடும் உரிமையோ எந்த அரசுக்கும் இந்திய அரசமைப்புச் சட்டம் வழங்கவில்லை. நமது அரசியல் அமைப்புச் சட்டம் இறை மறுப்புக் கொள்கையை ஏற்றுக்கொள்ளவில்லை என்பது மட்டுமல்ல; மக்களின் வழிபாடு மற்றும் மத நம்பிக்கைகளில் ஆட்சியாளர்கள் தலையிடுவதையும் ஏற்றுக்கொள்ளவில்லை.

- இது மூன்றாவது குற்றச்சாட்டு.

இந்திய அரசமைப்புச் சட்டம் மதச் சார்பற்ற தன்மை உடையது. அதற்கு இறை மறுப்புக் கொள்கை மட்டுமல்ல; இறை நம்பிக்கை கொள்கையும் கூடக் கிடையாது என்கிற பால பாடத்தைக் கூட அறியாமல் தினமணி தலையங்கம் தீட்டியிருப்பது பரிதாபமே!
கோயிலுக்குள் நடக்கும் எந்த மதச் சடங்கை தமிழ்நாடு அரசு தடை செய்தது? ஆறுகால பூஜையையா? பகவானைப் பள்ளிய றைக்குள் கூட்டிச் செல்லும் நடைமுறையையா? எதில் தலையிட்டது? அதுபற்றி எல்லாம் கூறாமல் பஞ்சாங்கம் படிக்கக் கூடாது என்று வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது என்று அங்கலாய்க்கிறது "தினமணி"!


வாய்மொழி உத்தரவாம்


வாய்மொழி உத்தரவு என்பதும், கூறப்படுகிறது என்பதும் எவ்வளவு பலவீனமானவை. இதனை வைத்துக்கொண்டு ஒரு பத்திரிகை தலையங்கம் தீட்டுகிறது என்றால், தினமணிக்கு தமிழக அரசையும், முதல் அமைச்சரையும் பழி கூறவேண்டும் என்கிற வெறியைத்தானே இது காட்டுகிறது?

மரபு, சாஸ்திரம் - பூஜை, சம்பிரதாயம்பற்றியெல்லாம் தினமணி மூச்சைப்பிடித்து எழுதுகிறதே! ஆங்கிலப் புத்தாண்டுக்கு இரவு முழுவதும் கோயில்களைத் திறந்து வைத்து சிறப்புப் பூஜைகள் நடத்துகிறார்களே - அது எப்படி? பணம் வருகிறது என்றால் மட்டும் இந்தப் பார்ப்பனர்களுக்கு மரபுகள், சாஸ்திரங்கள் எல்லாம் பஞ்சாய்ப் பறந்திடுமோ? அதுபற்றி எல்லாம் தினமணி எழுதாதது ஏனோ? பார்ப்பனர்களுக்கு வருவாய் என்றால் பஞ்சாங்கமாவது - சாத்திரமாவது!

(4) இறை மறுப்புக் கொள்கையை பகுத்தறிவு என்று கொள்வதே கூடத் தவறு. உலகின் மிகப்பெரிய விஞ்ஞானிகளும், உலக மக்கள் தொகையில் ஏறத்தாழ 99 விழுக்காடு மக்களும், தலைமுறை தலைமுறையாக நமது மூதாதையரும், நம்பிக்கை விஷயத்தை மறுப்பது என்பது வள்ளுவர் வழியில் கூறுவதாகயிருந்தால், பலகற்றும் கல்லார் அறிவில்லாதவர்கள் செயல். அதைவிடப் பெரிய அறியாமை மக்களின் நம்பிக்கைகளை சட்டம் போட்டுத் தகர்த்துவிடலாம் என்கிற அதிகார மகிமை.


- இப்படியும் எழுதுகிறது "தினமணி"!


கோவணமின்றித் திரியவேண்டுமா?


நமது மூதாதையர்களின் நம்பிக்கைகளையெல்லாம் அப்படியே ஏற்றுக்கொள்வது என்றால், நாம் கோவணம்கூடக் கட்டிக் கொள்ளாமல் திரிய வேண்டியதுதான். அந்த நம்பிக்கைகளை யெல்லாம் தகர்த்துதான் மனித சமூகம் இன்று நாகரிகம் பெற்றிருக்கிறது.
தீண்டாமையைகூட மக்களின் நம்பிக்கை - அது க்ஷேமகரமானது என்று சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி கூறினார். அதற்காக அரசுகள் சட்டம் போடாமல் இருக்க முடியுமா?

உடன்கட்டை ஏறுதல் போன்ற நம்பிக்கைகளை உடைத்துதானே பெண்கள் நலமும், உரிமையும் காப்பாற்றப்பட்டுள்ளது?

மூதாதையர்கள் கடைபிடித்தது, பெரும்பாலான மக்களின் நம்பிக்கை என்ற மூடுதிரைகளைப் பயன்படுத்தி இந்நாட்டின் பெரும்பான்மை மக்களை சூத்திரர்களாக, பஞ்சமர்களாகக் கட்டிப் போடலாம் என்று கருதினால், அந்த எண்ணம் தூள் தூளாகும் என்கிற எழுச்சியை தினமணிகள் புத்திசாலித்தனமாக அடையாளம் காணவேண்டியது அவசியமாகும்.
திருக்குறளை வேறு எடுத்துக்காட்டுகிறார்: அதே குறள்தான் மெய்ப்பொருள் காண்பது அறிவு என்று கூறியுள்ளது. அது தெரியுமோ!

பல கற்றும் அறிவைக் கொண்டு சிந்தித்து உண்மையைக் கல்லாத தினமணிக் கூட்டம் அறிவில்லார் என்பதுதான் திருவள்ளுவர் கூற்றின் கருத்தாகும்.


விஞ்ஞானிகள் கடவுள் நம்பிக்கையாளர்களா?


உலகில் விஞ்ஞானிகள் எல்லாம் இறை நம்பிக்கையாளர்கள் என்று மார்தட்டுகிறது தினமணி. ஆனால், உண்மை நிலை என்ன? அமெரிக்காவின் நேச்சர் (Nature) இதழில் வெளிவந்த ஒரு தகவலை ராணி இதழ் (11.7.1999) வெளியிட்டதே.

கடவுள் நம்பிக்கையற்ற விஞ்ஞானிகள் 1914 இல் 72 விழுக்காடு;
1993 இல் 85 விழுக்காடு;
1999 இல் 90 விழுக்காடு என்று கூறியதே தினமணிகளுக்குத் தெரியுமா?

உலகில் கூட மக்களின் அறிவு வளர்ச்சியால் கடவுள் நம்பிக்கையற்றவர்கள் பெருகி வருகிறார்கள் என்பதைப் பல நாடுகள்பற்றி ஆய்வு செய்து, “Free Enquiry” (ஆக, செப்டம்பர் 2006) 25 நாடுகளில் கடவுள் நம்பிக்கையற்றவர்களின் எண்ணிக்கைபற்றி விரிவாக வெளியிட்டுள்ளதே!

அவ்வளவு தூரம் போவானேன்? நம் ஊரில் உள்ள இந்து ஏடு (16.9.2005) கூட ஒரு புள்ளி விவரம் வெளியிட்டதே - தினமணிக்குத் தெரியுமா?


இந்து ஏட்டின் கணிப்பு


மக்கள் மத்தியில் எந்த அளவுக்கு கடவுள், மத நம்பிக்கை கொண்டுள்ளனர் என்பதுபற்றி ஒரு கருத்துக் கணிப்பை தி இந்து வெளியிட்டது. நீங்கள் எந்த அளவு மதப் பற்றாளர்களாக இருக்கிறீர்கள் என்ற வினாவுக்கு,
ஓரளவு என 49 விழுக்காடும்,
பற்று இல்லை என 14 விழுக்காடும்,
அதிக மதப்பற்று உண்டு என்று 45 விழுக்காடும் பதில் அளித்தனர் என்று கூறப்பட்டுள்ளதே - மதம் வளர்கிறது, பக்தி வளர்கிறது என்பது இதன் பொருளா?

பக்தியின் யோக்கியதைதான் என்ன? பக்திக்கும், ஒழுக்கத்துக்கும் சம்பந்தம் இல்லை என கிருபானந்தவாரியாரும், பக்தி வணிகமாகிவிட்டது என்று ஜெயேந்திர சரஸ்வதியும் கூறியுள்ளதற்கு மேலாகவா தினமணி கூறப்போகிறது?


"துக்ளக்"கின் படப்பிடிப்பு!


இன்றைய தினமணியின் ஆசிரியர் துக்ளக் இதழிலிருந்து வந்தவர்; அந்தத் துக்ளக் இன்றைய பக்தி பற்றி சொன்ன ஒன்றை எடுத்துக்காட்டினால், அவருக்கு மகிழ்ச்சியாக இருக்குமே!

வினா: வேத மந்திரத்தை இந்த மாதிரி விலை பேசலாமா?

புரோகிதர் பதில்: எல்லாம் காலக் கோளாறுதான். காலம் ரொம்பத் தப்பாப் போச்சு. நாங்கள்ளாம் இந்த மாதிரி வந்துட்டோம். இப்ப பிராமணனும் இல்லே - பிராமண தர்மமும் இல்லை.

வினா: நீங்க முன்னே பார்த்த மாதிரி ஜனங்களிடம் பக்தி இருக்கிறதா இப்போது?
புரோகிதர்: பக்தியாவது ஒண்ணாவது? கோயிலுக்கு வந்தவன் சாமி தரிசனத்துக்கா வர்றான்? சைட் அடிக்கன்ன வர்றான்? பொம்மனாட்டிகள் மட்டும் என்ன யோக்கியம்? அவாளும் புடவை, நகை, நட்டு இதெல்லாம்போக, நேரம் இருந்தா சுவாமி அம்பாளை நெனைச்சிக்கிறா!


("துக்ளக்", 1.6.1981, பக்கம் 32).


பக்தியைப் பிரஸ்தாபிக்கும் தினமணி அய்யர்வாளுக்கு, அவாளின் பூர்வோத்திரமான துக்ளக்கே பதில் சொல்லிவிட்டதே!

பகுத்தறிவு - அறிவியல் ரீதியான சிந்தனைகளை மக்களின் எண்ணிக்கையை வைத்துக் கணக்கிடக் கூடாது - நம்பிக்கை என்பது அறிவியலுக்கு எதிரானது என்பது கூடவா தெரியாது?


பஞ்சாங்கப் பாட்டு



பஞ்சாங்க விற்பனை குறையவில்லையாம் - பெருமைப்படுகிறது தினமணி.
நாட்டிலே நோயாளிகள் அதிகம் உள்ளனர். கைதிகள் எண்ணிக்கை பெருகிவிட்டது என்று பெருமைப்படுவது போன்றது இது!

பஞ்சாங்கம் போன்ற மூடத்தனத்தை எதிர்த்து எழுதி மக்களிடம் பகுத்தறிவு உணர்வை வளர்ப்பதுதான் அறிவாளித்தன்மை என்கிற பாலபாடம் தெரியாதவர்கள் எல்லாம் தலையங்கம் தீட்டுவது பரிதாபமே!

பஞ்சாங்கத்தின் யோக்கியதை எப்படிப்பட்டது தெரியுமா? ஒவ்வொரு பஞ்சாங்கமும் வெவ்வேறு மாதிரியாகக் கதையளக்கும். எதை நம்புவது?
குடும்பத்தைத் திருத்துவது பற்றியெல்லாம் ஏகடியம் செய்கிறது தினமணி.

பகுத்தறிவு என்பது திணிக்கப்படுவதல்ல; நம்பு அப்பொழுதுதான் மோட்சம்! நம்பாவிட்டால் நரகம் என்று அச்சுறுத்துவதல்ல பகுத்தறிவு. அது வீட்டாராகயிருந்தாலும், நாட்டாராகயிருந்தாலும் அதுதான் நிலை.

அதேநேரத்தில் குடும்பம் குடும்பமாகப் பகுத்தறிவுவாதிகளாக, நாத்திகர்களாக வாழும் இலட்சக்கணக்கான குடும்பங்கள் தினமணியின் கண்களுக்குத் தெரியவே தெரியாது - அப்படி ஒரு கண் மூடிப் பார்வை அந்தக் கூட்டத்துக்கு.


கவிஞர் கண்ணதாசன் பாட்டு


(5) கவிஞர் கண்ணதாசன் கவிதை ஒன்றை எடுத்துக்காட்டி தினமணி மங்களம் பாடியிருக்கிறது.

நதி போகும் திசையை மாற்றி
நடக்கட்டும் வடக்கே என்பான்
மதியும் தன் வானைவிட்டு
மண்ணிலே விழட்டும் என்பான்
இதுமுதல் கடல் நீரெல்லாம்
இனிக்கட்டும் தேன்போல் என்பான்
அதிகாரி போடும் ஆணைக்கு
அடங்காமல் வேறென் செய்ய?

ஆச்சாரியார் (ராஜாஜி) போட்ட குலக்கல்வித் திட்டத்தை மனதில் வைத்து ஒருக்கால் கண்ணதாசன் எழுதியிருக்கலாம்.

ஆச்சாரி என்று போடக்கூடாது; ஆசாரி என்றுதான் பெயருக் குப்பின் பட்டம் போட வேண்டும் என்று பார்ப்பனத் தனத்தோடு குறிப்பிட்ட ஜாதியினருக்காக ஆணை பிறப்பித்ததும் ஆச்சாரி யார்தானே. அதெல்லாம் கவிஞர் கண்ணதாசனுக்கும் தெரியாதா?

அதே கண்ணதாசன் இன்னொரு கவிதையையும் வடித்துள் ளார். தினமணிக்கு மட்டுமல்ல, அதன் கூட்டத்துக்கும் அதைக் காணிக்கையாக்குகிறோம்.

ஆடுமாடுகள் முன் நடந்திட
ஆரணங்குகள் பின் தொடர்ந்திட
காடு யாவையும் கடந்து சிற்சிலர்
கன்னித் தாயக எல்லை தொட்டனர்;
மஞ்சள் மேனியும் வஞ்ச நெஞ்சமும்
மான மென்னும் ஓர் எண்ணம் இன்மையும்
கொஞ்சும் வார்த்தையும் கொண்டவர் தமிழ்க்
கோட்டை வாசற் படியை மிதித்தனர்;
சொந்தமாக ஓர் நாடி லாதவர்
தொட்ட பூமியில் சூழ்ந்து வாழ்பவர்
எந்த நாடுமதம் சொந்த நாடென
ஏற்று மாந்தரை மாற்றி ஆள்பவர்
சொத்து என்பதோ தர்ப்பை ஒன்றுதான்
தூய்மை என்பதோ துணியும் இன்மையாம்
வித்தை யாவையும் சூழ்ச்சிப் பள்ளியில்
விரும்பிக் கற்றதாம்; வேறு என் சொல!
நச்சரவுகள் மனித மேனியில்
நடமிடும் கதை இவர்கள் கதையாம்
அச்சம் மிக்கவர் கோழையர்; ஆயினும்
அடுத்து வீழ்த்திடும் திறமை மிக்கவர்!
அடியெடுத்து வைத்ததும், கண்ணெதிர்
அங்கு நின்றவோர் தமிழனைப்பார்த்து, இப்
படி அமர்ந்திடும் பண்புடை தென்னவ!
பாரில் உம்புகழ் பரவக் காண்கிறோம்!
மிடிமை இல்லதாம் உங்கள் தாயகம்!
வீரர் தேயமாம்! கேள்வி யுற்றனம்!
எனில் உமக்கொரு தெய்வம் இல்லையாம்!
என்ன மோசம், இஃதாண்டவன் ஏற்பரோ!
என்றதும் தமிழ் ஏறு கூறுவன்;
ஏன் இலை! கதிரோன் ஒரு தெய்வமாம்!
எழில் நிலாவும் யாம் போற்றிடு தெய்வமாம்
என்றுகூற அவ்வீணர்கள் யாவரும்
எழுதபதாயிரம் கடவுள்கள் கூறி, அக்
கடவுள் யாவரும் வானில் உண்டெனக்
கதைய ளந்தனர் கற்பனை பொங்கிட!
பொய்ய லால்சிறு மெய்யுமி லாமலே
புவியில் வாழும் திறம்மிகு ஆரியர்
சொன்ன யாவையும் தமிழன் ஏற்றனன்!
சூழ்ச்சி வென்றது! நாடு சாய்ந்ததே!
கடவுள் வாசலை காத்தனர் ஆரியர்!
கன்னியர் விழிக் கடலைக் காட்டினர்!
வீரம் முற்றும் ஒழிந்தது ஏட்டிலே!
தீரம் மாண்டு ஆரியர் சாத்திரத்
தீக்குழி யிடைச் சாய்ந்தனர் தென்னவர்!


வெறியாட்டத்தை அடக்குவோம்!


இன்னும் கவிஞர் கண்ணதாசன் அவர்கள் சங்கராச்சாரியார் பற்றி கூறியவை எல்லாம் உண்டு. தேவைப்பட்டால் வெளியிடப்படும். நஞ்சினைத் தொட்டு தினமணியின் பேனா வெறியாட்டம் போட ஆரம்பித்துள்ளது. இதனை அடக்கிட தமிழர்களால் முடியும். இப்போதைக்கு இவ்வளவு போதும்.


-------------- "விடுதலை" 15-4-2008

0 comments: