Search This Blog

12.4.08

ஜஸ்டிஸ் கட்சி உத்தியோக வேட்டைக் கட்சியா?

ஜஸ்டிஸ் கட்சி உத்தியோக வேட்டைக் கட்சி யெனவும், மந்திரிகள் தம் நண்பர்களுக்கும் உற்றார்களுக்குமே பதவிகளை வழங்கி வருகிறார்களெனவும், சுயராஜ்யக் கட்சியார் சொல்லாத நாளே கிடையாதெனலாம். ஆனால் உண்மை என்ன? உத்தியோக வேட்டை யாடுபவர்கள் யார்? நண்பர்கட்கும் உற்றார்கட்கும் பாரபட்சமாய் இருப்பவர்கள் யார்?

வேலூரில் ஜில்லா கோர்ட்டுக்குப் பப்ளிக் பிராசிகியூட்டர் பதவிக்கு ஓர் பார்ப்பனர் சமீபத்தில் நியமிக்கப்பட்டி ருக்கிறார். அவர் பெயர் திரு. நரசய்யர். ஏற்கனவே இரண்டு முறை களில் இவ்வுத்தியோகங்களிலிருந்தவர். இப்போது மூன்றாம் முறையும் நியமிக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு வயதோ 57. வேலூரில் இவரைத் தவிர தகுதியான வேறு வக்கீல்கள் இல்லையா? இவரை மூன்றாம் முறையும் நியமிக்க வேண்டிய காரணமென்ன? தவிரவும் 50 அல்லது 55 வயதுக்கு மேற்பட்டவர்களை பப்ளிக் பிராசிகியூட்டர்களாக நியமிக்கப்படாது என்ற அரசாங்க உத்திரவுமொன்று இருக்கிறதென்று அறிகிறோம். அஃது உண்மையாயின் 57 வயதுள்ள திரு. நரசய்யர் மீண்டும் நியமிக்கப்படுவானேன்? அந்த அய்யர் சட்ட இலாகா அங்கத்தவருக்குப் பந்துவென்று சொல்லப்படுகிறது. அதுதான் காரணமோ? பிராமணர்கள் இவ்வாறு இரண்டு அல்லது மூன்று தடவைகள் கூட நியமிக்கப்படுகையில் பிராமணரல்லாதார்களுக்கு மட்டும் ஏன் அவ்வாறு செய்யக்கூடாது? திவான் பகதூர் எம். கோபால சாமி முதலியாருக்கு மிகுந்த கஷ்டத்துடன் ஆறு மாதகாலம்வரைதான் உத்தியோகம் நீடிக்கப்பட்டது. ஆனால் தஞ்சாவூரில் இப்போதுள்ள பிராமணப் பப்ளிக் பிராசிகியூட்டர் மூன்று ஆண்டுகளாய் வேலை பார்த்து வருகிறார். உத்தியோக வேட்டையாடுபவர்களும் நண்பர் களுக்கும் உற்றார்களுக்கும் பாரபட்சமாய் நடந்துகொள்பவர்களும் யார்? நாமா அல்லது பார்ப்பனர்களா?

----------- தந்தைபெரியார் - "குடிஅரசு" 8.8.26

0 comments: