Search This Blog

22.4.08

தமிழ்நாடு பெரியார் நாடு

தமிழகத்தில் சாதி வெறி, மதவெறி தலை விரித் தாடும் நிலை வரும்போதெல்லாம் அதைக் கட்டுக்குள் வைத்திருந்தவர் தந்தை பெரியார்தான். மதவெறி மேலோங்கும் போதெல்லாம் அரணாக நின்று, ஓர் இசுலாமியனுக்கும் எனக்கும், ஒரு கிறித்தவனுக்கும் எனக்கும், நாம் யார்? நாம் தமிழர்கள் என்று உணர்த்தி நமக்குள் ஓர் உறவுப் பாலத்தை ஏற்படுத்தினார்.


குஜராத் சம்பவங்களை யாராலும் மறந்திட முடியாது. ஓர் இசுலாமிய கர்ப்பிணிப் பெண்ணின் வயிற் றைக் கிழித்து, குழந்தையை எடுத்து அதை நெருப்பில் போட்ட கயவனின் செயல் யாராலும் மறந்திட முடியாது. அப்படிப்பட்ட கொடுந்துயரம் தமிழகத்தில் நிகழாமல் தடுத்து, அரணாக இருந் தவர் நம் பெரியார் தான். அவர் இறந்து இத்தனை ஆண்டுக்காலம் ஆனா லும் அவர்தாம் இன்னும் அரணாக உள்ளார்.

இன்றைய இளைஞர்களுக்குப் பெரியாரைப் பற்றி ஏதாவது தெரியுமா? அப்படித் தெரியாமலே போய் விட்டால் நம்முடைய இனம் என்னவாகும்? நாம் மிகவும் கடினப்பட்டுப் பெற்றிருக்கும் மதிப் பீடுகள் என்னவா கும்? மீண்டும் ஆதிக்கச் சமு தாயத்தை நோக்கிப் போய்விடுமோ என்று அச்சமாகவே இருக்கிறது. நிச்சயமாக நம் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு பெரியார் என்றால் யார் என்று தெரியாது!

பாடப்புத்தகங்கள் அவரைப் பற்றிப் பெரிதாக எதையும் சொல்வதும் கிடையாது. சொல்லிக் கொடுப்பவர்களுக்கும் அவரைப் பற்றித் தெரியுமோ, தெரியாதோ. அவர்களுக்கு அவர் பற்றிய அக்கறையும் கிடையாது.

பெற்றோர்களுக்கும் நம் பிள்ளைகள் நல்ல மதிப்பெண்கள் பெற்றுக் கல்லூரியில் போய்ச் சேர்ந்தால் போதும் என்ற குறிக் கோளோடுதான் இருக்கிறார் களே தவிர, சமூக நீதி என்றால் என்ன? இட ஒதுக்கீடு என்றால் என்ன? போன்ற செய்திகளை எல்லாம் சொல்வதே இல்லை. இதனால் என்ன ஆனது? என் கண் முன்னால், 100 பேர் அமர்ந்துள்ளார்கள். இவர்கள் பெரியாரைப் பற்றி அறிந்ததால் தான் எழுத்தாளர்களாக உருவாகி இருக்கிறார்கள்.

நாம் யார் என்ற அடிப்படை புரிதல் கூட இன்றைய இளைய தலைமுறை உருவாகும்போது அவர்கள் தெரிந்து வைத்திருக்கும் கருத்துகளும் என்னவாக இருக்க முடியும்? பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இட ஒதுக்கீடு என்றால் என்ன என்று கேட்கிறார்கள். இட ஒதுக்கீட் டிற்கு என்ன அவசியம்? தகுதியின் அடிப் படையில்தான் இடஒதுக்கீடு ஒத்துவரும் என்று அறியாமை யோடு பேசி வருகிறார்கள். இடஒதுக்கீடு அடிப்படையில் பயன்பெற்ற இளைய சமுதா யம் பெரியாரைப் பற்றியும், திராவிட இயக்கப் போராட்டங்கள் பற்றியும் அறியாமல் வளர்ந்தால் இப்படித்தான் பேசும்.

தமிழ்ச் சமூகம் என்று சொல்லப்படும் வார்த்தைகூட ஆங்கிலத்தை முன்னிறுத்தும் பள்ளி களில் ஏளனமாகப் பார்க்கப்படும் நிலைதான் இன்று உள்ளது. நம்முடைய அடையாளம் என்ன? நம்முடைய மொழி தமிழ் என்கி றோம். ஒவ்வொரு தமிழருக்கும் ஓர் உறவு இருந்தது. ஏதோ ஒரு மூலையில் தமிழன் தாக்கப்படு கிறான், அழிக்கப்படுகிறான் என்றால் எனக்குத் தெரிந்து இந்தச் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் பலர், அதுவும் சாதாரண இளைஞர்கள் அல்ல... இந்த நாட்டை மாற்றக்கூடிய கருத்து களை உடைய இளைஞர்கள் பலர் அதைக் கேலிக்குரிய விசய மாகப் பார்க்கத் தொடங்கி விட்டார்கள். தொப்புள் கொடி உறவு என்பதே ஒரு கிண்டலுக்குரிய விசயமாக மாறிக் கொண்டிருக் கிறது. இது எல்லாம் மறு உருவாக்கம் ஆவதற்கு என்ன காரணம் என்றால் நாம் பெரியாரை மறந்த ஒரு காரணமே. அதைத் தவிர வேறு எதுவாகவும் இருக்க முடியாது.

நாம் பெரியாரை மீண்டும் புரிந்து கொள்ளவேண்டும். மறுபடியும் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டும். பெரியாரை எதிர்மறையாகப் பார்ப்பதும், அவரைப் பற்றி கேள்விகள் கேட்பதும் என மாறி உள்ளனர். ஆனால் அவரைப் பற்றிய விமர்சனங்களையும், கேள்விகளையும், எதிர்ப்புகளையும் தாங்கித் தாண்டி வந்தவர்.

இதுபற்றிய விவாதம் வந்தால் அவரைப் பற்றிய கருத்துகள் அழிந்து விடும் என்ற கவலை கிடையாது. அதைத் தாங்கி நிற்கும் செழுமையான, அழுத்தமான சிந்தனையாளர் அவர். குறைந்த பட்சம் இந்த மாதிரி விவாதங்களையாவது நாம் உருவாக்க வேண்டும். பெரி யாரைப் பற்றியும், நம் சமூகத்தைப் பற்றியும், நாம் யார்? என்பதைப் பற்றியும் புரிய வைக்க வேண்டும். அதைச் செய்ய வைக்க வில்லை என்றால், தமிழினம் மறுபடியும் தன் முகத்தை, தன் அடையாளத்தை இழந்து விடும்.


---------------- கவிஞர் கனிமொழி - "தாகம்" அக்டோபர் 2006 இதழில்

0 comments: