Search This Blog

19.4.08

பெரியார் பற்றி சின்ன சின்ன சேதிகள்

பெரியாரும் இந்து பத்திரிக்கையும்

குத்தூசி குருசாமி விடுதலையில் பணியாற்றிக் கொண்டிருந்த சமயம். பெரியாரிடம் வந்தார் குத்தூசி, ‘அய்யா.. இன்னைக்கு செய்தி போடுவதற்கு ஏதும் சிறப்பான செய்தி இல்லையே என்ன செய்யலாம்? என்று கேட்டாராம்.

‘இவ்வளவு தானா… காலையில வந்த ‘இந்து’ பத்திரைக்கையை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் எது எல்லாம் சரி என்று வந்திருக்கிறதோ.. அந்த கட்டுரைகள் அனைத்தும் தவறு என்று பதில் எழுதுங்கள். எது எல்லாம் தவறு என்று வந்திருக்கிறதோ.. அந்த கட்டுரைகள் எல்லாம் சரி என்று பதில் கட்டுரை எழுதுங்கள்.’ என்றாராம் பெரியார்.

பெரியாரும் வள்ளலார் வாழ்விட அறிவிப்புப் பலகையும்

பெரியாரை வடலூரில் இருக்கும் வள்ளலாரின் வாழ்விடத்தைச் சுற்றிக் காண்பிப்பதற்காக அழைத்துச் செல்கிறார்கள். நடக்கவே சிரமப்பட்டு தட்டுத் தடுமாறி ஒவ்வொரு இடமாகப் பார்த்தபடி வந்தார் பெரியார். அம்மண்டபத்தின் ஒவ்வொரு பகுதியையும் விளக்கியபடி ஊரன் அடிகளும் மற்றவர்களும் உடன் வருகிறார்கள். ஒரு பிரதான அறைக்குள் மற்றவர்கள் நுழைய, வாசலிலேயே நின்று விடுகிறார் ஈ.வெ.ரா.

உடன் நடந்து கொண்டிருந்தவர்களுக்கு குழப்பம். ஏன் நின்றுவிட்டார்.. காரணத்தை ஈ.வெ.ராவிடமே கேட்க, அந்த அறையின் முகப்பில் மாட்டப்பட்டிருந்த அறிவிப்பினைக் காட்டுகிறார் பெரியார்.

அதில் கொலை,புலை, தவிர்த்தவர்கள் உள்ளே வரலாம் என்று எழுதி இருக்கிறது.

பெரியாரோ சுத்த அசைவம். அறிவிப்பை மீறி எப்படி உள்ளே போக முடியும்?! ஊரன் அடிகளோ கட்டாயப்படுத்தி, ”பரவாயில்லை. நீங்கள் வாருங்கள். உங்கள் மீது எங்களுக்கு
மிகுந்த மரியாதை உண்டு” என்கிறார்.

”உண்மைதான் .. அதைப் போலவே நீங்கள் வைத்திருக்கும் அடிப்படைக் கொள்கைகளையும், நான் மதித்தால் அல்லவா, நீங்கள் எனது கருத்துக்கள் மீதும் மரியாதை வைப்பீர்கள்? மற்றவர்கள் உங்களிடம் எப்படி எப்படி எல்லாம் நடந்து கொள்ள வேண்டும் என்று நீங்கள் எதிர் பார்க்கிறீர்களோ… அப்படி நீங்களும் மற்றவர்களிடம் நடந்து கொள்வதற்குப் பெயர்தான் ஒழுக்கம். வாங்கய்யா.. மற்ற பகுதிகளைப் பார்ப்போம்..” என்று அவரின் அழைப்பையும் மீறி திரும்பி நடக்கலானார் ஈ.வெ.ரா.

பெரியாரும் -ஜி.டி.நாயுடுவும்

ஒரு முறை ஜி.டி.நாயுடுவை சந்திக்க அவர் வீட்டிற்கு ஈ.வே.ரா., சென்றிருந்த போது, ஈ.வெ.ரா.வின் பையில் வைத்திருந்த மணி பர்ஸை வெடுக்கென பறித்த நாயுடு அதிலிருந்த ரூபாய் நோட்டுக்களை தன் ஆய்வுக்கு வேண்டுமென எடுத்துக்கொண்டார்.
வெறும் சில்லரைகள் நிறைந்திருந்த பர்ஸை ஈ.வே.ரா.விடம் திரும்பக்கொடுத்தார்.

அடுத்த முறை நாயுடுவை சந்திப்பு நிகழ்ந்த போது, பழையபடி பர்ஸை பறித்த நாயுடு ஏமாற்றம் அடைந்தார். உள்ளே சில்லரை காசுகளே இருந்தது. நாயுடுவை சந்திக்கப்போகிறோம் என்று தெரிந்தாலே ரூபாய் நோட்டுக்களை எடுத்து பத்திரப்படுத்தி விடுவார் ஈ.வெ.ரா.

நன்றி: "blog.balabharathi.net"

0 comments: