இதிகாசங்களில் சிறந்தவையாக இராமாயணமும், பாரதமும் விளக்கப்படுகின்றன.இவை பக்தியை அடிப்படையாய்க் கொண்டவையா? அல்லது மனிதன் நடந்து கொள்ள வேண்டிய நடத்தைகளை, ஒழுக்கத்தை அடிப்படையாகக் கொண்டவையா? என்று சொல்ல முடியாத தன்மையில் - இரண்டிற்கும் பயன்படாத தன்மையில் தான் அமைக்கப்பட்டிருக்கின்றன.இவ்விரண்டு நூல்களில் எது முந்தியது? எது பிந்தியது? என்பது விவாதத்திற்குரியதாகவே இருந்து வருகிறது. (Evolution Theory) எவாலுஷன் தியரி என்னும் வளர்ச்சிக் கொள்கைப்படி பார்ப்போமானால், பாரதக் கதை முந்தியதாகவும், இராமாயணக் கதை பிந்தியதாகவும் தான் சொல்லி ஆக வேண்டும்.ஆனால் எந்தக் காரணத்தாலோ இராமாயணக் கதை முந்திய நடத்தையாகவும், பாரதக் கதை பிந்திய நடத்தையாகவும் புனையப்பட்டு விட்டது. இந்தக் கட்டுரையில் அதைப்பற்றிய விவாதத்தை ஒதுக்கி வைத்து விட்டு, அந்தக் கதைகளால் ஏற்படும் பயன் என்ன என்பதைப்பற்றி ஆராயலாம் என்றே கருதி இதை எழுதுகிறேன்.
இதை வலியுறுத்த விஷ்ணுவுக்கு- விஷ்ணு மனிதனாகப் பல சாபங்கள் பல சம்பவங்களால் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. அச்சம்பவங்கள் யாவும் ஒழுக்கம் அற்றவையாகவே கற்பிக்கப்பட்டிருக்கின்றன. ஆதலால் விஷ்ணுவுக்குக் கடவுள் தன்மையோ, இராமனுக்கு மனிதத் தன்மையோ இராமாயணத்தில் கற்பிக்கப்படவில்லை என்று உறுதியாய்க் கூறலாம். எப்படியெனில் விஷ்ணு மனிதனாகப் பிறப்பதற்கு புராணங்களில் பல காரணங்கள் சொல்ல்பட்டிருக்கின்றன.
அவைகளில்,ஒன்று : விஷ்ணு ஒரு கற்புள்ள அசுரப் பெண்ணைக் கற்பழித்து விட்டதால் அந்தப் பெண்ணின் சாபத்தால் மனிதாகப் பிறந்தான். (இது கந்தப்புராணம் தக்க காண்டத்தில் உள்ளது)மற்றொன்று: விஷ்ணு தன் மனைவியுடன் ஒரு பிரதோஷ வேளையில் சுகித்துக் கொண்டிருக்கும் போது ( புணர்ந்து கொண்டிருக்கும் போது) அற்புதர்க்கன் என்னும் சிவகணங்களின் தலைவன் அங்கு சென்று, என்ன நீ இப்படி செய்கிறாய் என்று கேட்டான். அதற்கு விஷ்ணு நீ யாரடா இப்படிக் கேட்பதற்கு? என்றான். இதை அந்த சிவகணத்தலைவன் நந்தியிடம் தெரிவித்தான். நந்தி உடனே விஷ்ணுவுக்கு, பூமியில் பிறந்து மனைவியைப் பிரிந்து தவிக்கும்படி சாபம் கொடுத்தான் (இது 'சிவ ரகசிய'த்தில் இருக்கிறது)மற்றொன்று: இதுபோலவே மாலை நேரத்தில் விஷ்ணு தன் மனைவியைப் புணர்ந்து கொண்டிருப்பதைப்பார்த்த பிருகு முனிவர் மேலும் சென்ற போது விஷ்ணு நீங்காமலும் முனிவரை வரவேற்காமலும் இருந்ததால் பிருகு முனிவர் சாபமிட்டார். (இதுவும் 'சிவ ரகசிய'த்தில் இருக்கிறது)மற்றொன்று : ஒரு முனிவன் மனைவியை விஷ்ணு கொன்று விட்டான். அதனால் அந்த முனிவன் விஷ்ணுவுக்கு (ராமன்) தன் மனைவியை இழந்து வருந்தும்படி சாபமிட்டான். (இது இராமாயணம் உத்தரகாண்டத்திலும், ஸ்கந்த புராணம் உபதேசகாண்டத்திலும் இருக்கிறது) இந்த சாபங்கள் பலவிதமாகும். தேவர்களுக்காக அதைப் பயன்படுத்திக் கொண்டு மனிதனாகப் பிறந்தார் என்பது இராமாவதாரக் கருத்து.
இந்தப் பிறப்பு "தசரதனுக்குப் பிள்ளை" என்னும் பெயரில் "யாகப் புரோகிதப் பார்ப்பனருக்குத் தன் தாய் கர்ப்பமடையப்பிறந்தான்." அப்படிப் பிறப்பதிலும், பல இழிதன்மை நடப்புக்களும் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. உலக ஷேமத்திற்காக இராமனாக விஷ்ணு வந்தான் என்றால் இப்படி ஒழுக்கக்கேடும், இழிவும், அவமானகரமானதும் அசாத்தியமானதுமான நடத்தைகள் ஏன் ஏற்பட்டிருக்க வேண்டும்?
இந்த மாதிரி நூல்களால் (அவதாரங்களால்) மக்களுக்கு என்ன நன்மை ஏற்படும்? மற்றும் இராமன், யாகக் கொலையைத் தடுத்த தாடகையைக் கொல்லுவது எதற்காக? இதனால் மக்களுக்கு ஏற்படும் படிப்பினை என்ன? மற்றும் இராமன் எதற்காக நாடு கடத்தப்பட்டு காட்டுக்கு போனான்? அவன் நாடு கடத்தப்பட்டதற்குக் காரணம் இராமனின் துரோகமும் இழிதன்மையுமான காரியம் தானே இராமாயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது அயோத்திய அரசு தசரதனுக்குப் பின் தனக்கு இல்லை என்பதும், அது பரதனுக்கு உரித்தாக்கப்பட்டது என்பதும் இராமனுக்குத் தெரியும். அப்படி இருக்க அயோத்தியின் ஆட்சியை இவன் (இராமன்) இச்சிக்கலாமா?தகப்பன் அயோக்கியத்தனமாய் நடந்து கொண்டாலும் அவதார புருஷனாகிய இவன் (இராமன்) தகப்பனுக்குப் புத்தி சொல்லித் திருத்த வேண்டாமா?இவன் எப்படி ஆசைப்படலாம்? இந்த ஆசையில் மக்களுக்கு ஏற்படும் பயன் என்ன? மற்றும் அரசு கிடைக்காமல் போய்விட்டதே என்றும் விசனப்படலாமா? அதற்காக உரியவனாகிய தம்பியையும் தம்பியின் தாயையும் குறைக் கூறலாமா? வசவு மொழி கூறலாமா? இந்தச் செய்கையால் மக்களுக்கு என்ன படிப்பினை கிடைக்கும்?காட்டில் வசிக்கையில் "முனிவர்களக்கு - பிராமணர்களுக்கு எதிரானவர்களைக் கொல்லத்தான் நான் காட்டுக்கு வந்தேன்" என்று சொல்லுகிறானே, இதனால் மக்களுக்கு என்ன படிப்பினை உண்டாகும்?வாலியை முதுகுப்புறம் அவனுக்குத் தெரியாமல் நின்று, அவன் வேறு ஒருவனிடம் போராடிக் கொண்டிருக்கும் போது அம்பை எய்திக் கொன்றானே இதனால் மக்களுக்கு என்ன படிப்பினை – ஒழுக்கம் - வீரம் ஏற்படக்கூடும்?தன் ஆட்சிக்கு உள்ள குடிமகன் ஒருவன் (சம்பூகன்) "பார்ப்பானைக் கடவுளாக வணங்காமல் கடவுளை நேரில் வணங்கிப் பயன்பெற முயற்சித்தான்" என்று அவனைத் துண்டு துண்டாக வெட்டிச் சித்தரவதை செய்தானே, இதனால் மக்களுக்கு என்ன படிப்பினை ஏற்படக்கூடும்?இராமனால் கொல்லப்பட்ட ஒரு மனிதனின் தாயாரை, அவள் "தன்னைப் புணரும்படிக் கேட்டாள் - பலாத்தாரத்தில் பிரவேசித்தாள் என்று ஒரு இராஜஸ்திரீயை மூக்கும், முலையும், காதும் அறுக்கச் செய்தானே, அதனால் மக்களுக்கு என்ன படிப்பினை ஏற்படக்கூடும்?வால்மீகி இராமாயணக் கதையின் உட்கருத்துப்படி இராமன் மனைவி சீதை தானாக இராவணன் பின் சென்றிருக்க, அதை இராமனும் தெரிந்திருக்க வேண்டியவனாக இருக்க, இராவணன் மீது குற்றம் சுமத்திக் கொன்றதன் பயனாய் மக்களுக்கு என்ன ஒழுக்கம் படிப்பினை ஏற்பட முடியும்?இராவணனோடு சீதை பத்து மாதம் அவன் அரண்மனையில் அந்தப்புரத்தில் இருந்தும், அவனுக்கு சீதை கர்ப்பமாகி இருந்தது தெரிந்ததும் அவளைத் தன் விட்டிற்கு அழைத்து வந்து பிறகு அவளைக் கண்ணைக்கட்டி ஆளில்லாத காட்டில் கொண்டு போய்விட்டுவரச் செய்ததால் மக்களுக்கு ஏற்படும் படிப்பினை என்ன? கடைசியாக, இராமன் எல்லா மக்களைப் போலவே ஆற்றில் இறங்கி செத்து மேல் உலகம் போனான் என்பதனால் மக்களுக்கு ஏற்படும் படிப்பினை என்ன? இவ்வளவு பயனற்றதும் கேடானதுமான கருத்தை வைத்து ஒரு கதையை அதுவும் மற்றொரு (கந்தப்புராண) கதையிலிருந்து எடுத்துக் கொண்ட கதையை கடவுளுடன் சம்பந்தப்படுத்தி, மத நூலாக்கி, இலக்கியமாக்கி, கடவுள் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தி உலக மக்களையே மடையர்களாக்கிவிட்டு அதை தேவாரம் என்று கூறி "பக்திக்காக" – ஒழுக்கத்திற்காக மக்கள் படிக்க வேண்டுமென்றால் இது எவ்வளவு பெரிய மோசடியான காரியம் என்று சிந்திக்க வேண்டுகிறேன்.
மேலும் இராமன் மனிதனாகப் பிறந்தான், சீதை மனுஷியாகப் பிறந்தாள் இராமன் தம்பிமார் மனிதராகப் பிறந்தார்கள் என்று எழுதிவிட்டு இவர்கள் 1000- வருஷம், 10.000 -வருஷம் வாழ்ந்தார்கள் அரசு செலுத்தினார்கள் என்று அதில் - இராமாயணத்தில் எழுதி இருப்பது எப்படி பொருத்தமானதும் உண்மையானதுமாக இருக்க முடியும்? அறிவாளிகள் சிந்திக்க வேண்டும்.
------------- 22-06-1972 "விடுதலை" நாளிதழில் தந்தை பெரியார் அவர்கள் எழுதிய தலையங்கம்."பெரியார் களஞ்சியம்" - தொகுதி:2 … பக்கம்:67
Search This Blog
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment