Search This Blog

26.4.08

விவேகானந்தர்பற்றி...

சென்னை - காமராசர் கடற்கரை சாலையில் உள்ள விவேகா னந்தர் இல்லம்பற்றி பிரச்சினை எழுப்பப்பட்டுள்ளது. அந்த இல்லத்தை வேறு இடத்திற்கு மாற்றவேண்டும் என்று தமிழ்நாடு அரசு வற்புறுத்துவதாக ஒரு சேதி; அந்த நினைவுக் கட்டடத்தை இடிக்கப் போகிறது அரசு, மற்றொரு சேதி - இப்படி பல்வேறு சேதிகள் கிளம்பின.

உடனே சோ ராமசாமி, இல. கணேசன் உள்ளிட்ட அக்ரகார வட்டாரமும், துணை போகும் கூட்டமும் வரிந்து கட்டிக்கொண்டு கோதாவுக்குத் தயாரானதுபோல காட்டிக் கொண்டன.
டில்லியில் நிலத்தை வாங்கி அதில் பெரியார் மய்யத்தை முறைபபடி பெரியார் அறக்கட்டளை கட்டியிருந்தது. சட்ட விரோத மாக நியாய விரோதமாக பாரதீய ஜனதா ஆட்சியில் இடித்துத் தரை மட்டமாக்கினார்கள் - அதைப்பற்றி ஒரு வரி பேசாத, எழுதாத கூட்டம், அரசுக்குச் சொந்தமான இடத்தை அரசு எடுத்துக்கொள்ளப் போகிறது (உண்மை இல்லையென்றாலும்) என்று கூக்குரல் போடுவதை எண்ணிப் பார்க்கவேண்டும்.

சட்டமன்றத்தில் பல்வேறு கட்சிக்காரர்கள் இதுபற்றிக் கருத்து களை எடுத்துக்கூறி, அவரவர்களும் அவர்களின் அடையாளங் களைக் காட்டிக் கொண்டு விட்டனர். அதுவும் ஒரு வகையில் நன்மைக்கே.

முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்கள் மிகவும் சாதுரியமாக அவர்களை எல்லாம் பேசவிட்டு வேடிக்கை பார்த்துள்ளார்; இரசித்தும் உள்ளார். தமது உரையில் விவேகானந் தரையும் வெளிப்படுத்தியுள்ளார்; இன்னொரு வகையில் அவர் ஒரு பார்ப்பன எதிர்ப்பாளர் என்பதையும் தமக்கே உரித்தான பாங்கில் பேசி, சட்டமன்ற நடவடிக்கைக் குறிப்பிலும் பதிவு செய்துவிட்டார்.

இது அவருடைய பழுத்த அனுபவத்தையும், சாதுரியத்தையும், நம் கொள்கையில் இருக்கும் பிடிப்பினையும்தான் வெளிப்படுத்தும்.
சந்தோடு சந்தாக விவேகானந்தர் புகை பிடிப்பவர், இறைச்சி சாப்பிடக் கூடியவர் என்பதையும் சொல்லிவிட்டார்.

விவேகானந்தர் இல்லத்திற்காகப் பார்ப்பனர்கள் வக்காலத்து வாங்கியது விவேகானந்தருக்காக அல்ல - அவர் என்னவெல்லாம் பார்ப்பனர்களைப்பற்றித் தோலுரித்துக் காட்டியுள்ளார் என்பது அவாளுக்குத் தெரியாதா? பின் ஏன் கோபம் என்றால், சரியாகவோ, தவறாகவோ விவேகானந்தர் என்றால் இந்துமதத் துறவி - அமெரிக்காவரை இந்து மதம்பற்றி கித்தாப்பாகப் பேசி வந்தவர் என்ற நிலையில் அவர் பெயரால் உள்ள நினைவு இல்லம் பறிபோனால், அது இந்து மதத்தின் தலையில் விழுந்த பேரிடியாக இருக்கும் என்பதால்தான் இந்த முறுக்கு?
கீதையைப் படிப்பதைவிட கால்பந்து விளையாடு என்று சொன்னவர் விவேகானந்தர்.
கீதை, மகாபாரதத்தின்மீது தம் விமர்சனக் கணைகளைக் கூர்மையாகப் பாய்ச்சியவர் அவர்.
கீதை என்ற நூல் மகாபாரதத்தின் ஒரு பகுதியாகும். கதையைச் சரிவரப் புரிந்துகொள்ள, மிகமிக முக்கியமான பலவற்றைப் புரிந்துகொள்ளவேண்டும்.

முதன்முதலில் மகாபாரதத்தின் ஒரு பகுதியாக - அதாவது வேத வியாசர் எழுதியதா? அல்லது அதில் புகுத்தப்பட்டதா?

இரண்டாவதாக கிருஷ்ணன் என்பவர் சரித்திர ரீதியாக உயிர் வாழ்ந்த ஒருவரா?
மூன்றாவதாக கீதையில் கூறப்படும் குருக்ஷேத்திரப் போர் உள்ளபடியே நடந்ததா?
நான்காவதாக அர்ஜுனனும், ஏனையவர்களும் உள்ளபடியே உயிர் வாழ்ந்தவர்கள்தானா? என்பன; கீதையை சங்கராச்சாரியார் எழுதி மகாபாரதத்தில் புகுத்தினார் என்று சிலர் கருதுகிறார்கள்.

எது எப்படியாகயிருந்தாலும் சரி, யார் கீதையை வெளியிட்டி ருந்தாலும் சரி - குருக்ஷேத்திர யுத்தம் நடைபெற்றது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

யுத்தத்தில் கிருஷ்ணன், அர்ஜுனனுடன் எல்லையற்ற விவா தத்தில் இறங்கினான் என்றால், இதை எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடி யும்? அப்படியே உரையாடினார்கள் என்றால் பக்கத்தில் ஒரு சுருக்கெழுத்தாளரை வைத்துக்கொண்டா என்ற பிரச்சினை எழுகிறது.
அர்ஜுனன் ஏனைய பெயர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளனவே தவிர, இவர்கள் இருந்தனர் என்றோ, குருக்ஷேத்திர யுத்தம் செய்தனர் என்றோ கூறுவதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை என்று ஓங்கியடித்து மட்டை இரண்டு கீற்றாகக் கீதையையும், மகாபாரதத்தையும் கிழித்துவிட்டாரே விவேகானந்தர்
(ஆதாரம்: கீதையைப்பற்றிக் கருத்துகள் என்ற நூல் - ஏ.எஸ்.கே. (அய்யங்கார்) எழுதிய பகுத்தறிவுச் சிகரம் பெரியார் என்ற நூல் பக்கம் 116, 117).
மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்கள் விவேகானந்தர் பற்றிச் சொன்ன விமர்சனத்தின் பொருள் இந்த வெளிச்சத்தில் பார்த்தால் பளிச்சென்று புரிந்துவிடுமே!


---------------நன்றி:"விடுதலை" தலையங்கம் 25-4-2008

0 comments: